இருபதாம் நூற்றாண்டில் படைப்பிலக்கியத் துறையில் சிறுகதை, புதினம் ஆகியவற்றில் உலகத் தரத்திற்குத் தமிழை வளர்த்தவர்களில் புதுமைப்பித்தனுக்கு அடுத்து ஜெயகாந்தன் ஒளி உமிழும் சிகரமாக விளங்குகிறார். அவரது இறப்பு (08.04.2015) தமிழ் மக்களின் துயரத்திற்குரியது.

தமிழ் இன உணர்வு, தமிழ்மொழி உணர்வு ஆகியவை குறித்து ஜெயகாந்தன் கொச்சையான சில கருத்துகளைக் கூறியிருந்தாலும், தமிழ் மொழியைப் படைப்பிலக்கியத் துறையில் அவர் மேம்படுத்தியிருப்பதை நாம் ஏற்க வேண்டும்; அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். தமிழ்த் தேசியம் என்பது, தமிழ் இனத்தின் எல்லாப் பரிமானங்களின் கொள்கலன் ஆகும்.

கதைப்போக்கில் செறிவான தருக்கங்களை உரையாட விட்டவர் ஜெயகாந்தன். புதுமைப்பித்தனின் பொன்னகரம் ஒரு பாய்ச்சல் என்றால், ஜெயகாந்தனின் “அக்கினிப் பிரவேசம்” அதை விஞ்சிய இன்னொரு பாய்ச்சல்! அதற்குள் ஒன்றுக் கொன்று முரணான பற்பல உளவியல் போக்குகள் ஊடாடி இணங்கிச் செல்லும்!

“யாருக்காக அழுதான்” கதைதான் - ஜெயகாந்தனை நோக்கிப் படிப்பாளர் பார்வையை ஈர்த்தது. அதன்பிறகு எத்தனையோ படைப்புகள்!

“ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” - “சில நேரங்களில் சில மனிதர்கள்” போன்ற புதினங்கள் மனித உளவியலின் ஆயிரம் குறுக்குவெட்டுப் போக்குகளை சித்தரித்தவை! ”சாத்தான்கள் வேதம் ஓதட்டும்” என்ற சிறுகதை அவருடைய மாறுபட்ட பார்வைக்கு ஓர் எடுத்துக்காட்டு!

இளம் தமிழ்ப் படைப்பாளிகள் ஜெயகாந்தனிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய செய்திகள் இருக்கின்றன. கற்றுக் கொள்ளக்கூடாத சில குணங்களும் இருக்கின்றன.

சமகாலத் தமிழின் மாபெரும் படைப்பாளி ஜெயகாந்தன் மறைவுக்குத் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது!

Pin It