இப்படித்தான் நடக்கப் போகிறது என்று நாம் எச்சரித்தபோது, அப்படியெல்லாம் நடந்து விடுமா என்ன என்று நம் கூற்றை அலட்சியப் படுத்தியவர்கள் உண்டு.  ஆனால் இன்று அப்படியே நடந்து விட்டது. 

உரிமை என்ற அடிப்படையில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழகத்திற்குத் தராது கர்நாடகம் என்று 1990களிலிருந்தே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழர்களை எச்சரித்து வருகிறது. பல்வேறு வடிவங்களில் உரிமைப் போராட்டங்களை நடத்தி வருகிறது. 

24.8.2010 அன்று புதுதில்லியில் நடந்த காவிரிக் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், “ஒரு சொட்டுத் தண்ணீர் கூட விட முடியாது; மழை பெய்தால் பார்க்கலாம்” என்று கர்நாடக அரசு கூறிவிட்டது. 

இவ்வாண்டு ஒரு போக நெல்லும் சாகுபடி செய்ய முடியாது. குறுவை சாகுபடியை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 

ஆடிப்பெருக்கை முன்னிட்டு 28.07.2010 அன்று இவ்வாண்டுக்கான பாசன நீர் மேட்டூரில் திறக்கப் பட்டது.  அன்று அணையின் நீர்மட்டம் 82.6அடி அன்று 6000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இப்பொழுது 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடுகிறார்கள். 18ஆயிரம் கனஅடி திறந்தால்தான் கடைமடைப் பகுதி உட்பட எல்லாப் பகுதிக்கும் போதிய அளவு தண்ணீர் போய்ச் சேரும். 8 ஆயிரம் கன அடி நீரைக் கொண்டு காவிரிப் பாசனப் பரப்பில் வேளாண்மை செய்ய முடியாது.  எனவே உழவர்கள் யாரும் ஒரு போகம் சம்பா சாகுபடியில் ஈடுபடவில்லை. முழுக்கமுழுக்க நிலத்தடி நீரை நம்பிப் பயிரிடுவோர் மட்டுமே சாகுபடி செய்துள்ளனர்.  அவர்களுக்கும் மிகக் கடுமையான மின்வெட்டு. 

உணவு உற்பத்தியில் ஏற்கெனவே பற்றாக்குறை மாநிலமாக உள்ள தமிழகம், இப்பொழுது அதில் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வீழ்ச்சிக்கு காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு நீர் கிடைக்காததால் தரிசாகிப் போன நிலப்பரப்பு முதன்மைக் காரணியாக உள்ளது.  

இந்திய உணவுக் கழகம் பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் கொள்முதல் செய்யும் அரிசியைத்தான் தமிழக அரசு பெரிதும் சார்ந்துள்ளது. சராசரியாக ஒரு மாதத்திற்கு 1லி இலட்சம் டன் அரிசியை உணவுக் கழகத்திடமிருந்து தமிழக அரசு வாங்குகிறது. 

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகள் தமிழ் நாட்டை, அரிசிக்கு அயல் மாநிலங்களில் கையேந்தும் ஓட்டாண்டி நாடாக்கிவிட்டன. வடக்கிலிருந்து வருவது நின்றால் தமிழகம் மிகப் பெரும் உணவுப் பஞ்சத்தில் சிக்கிக் கொள்ளும். 

உழவர் குடும்பங்கள் நலிந்து விட்டன.  பிழைப்புத் தேடி ஊரைவிட்டுப் போய்விட்டவர்கள் ஏராளம். குடும்பத்தில் ஒருவராவது வேறு ஏதாவது தொழிலோ அல்லது அலுவலோ பார்க்கக் கூடியவராய்  இருந்தால் மட்டுமே ஊரில் தங்கிக் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. உழவுத் தொழிலாளிகளில் கணிசமானோர் உழவுத் தொழிலை விட்டு வெளியேறி வேறு வேறு கடின உழைப்பிற்குப் போய்விட்டனர்.  இன்னொரு பக்கம் இரண்டுங் கெட்டான்களாக அல்லல்படும் உழவர்கள் ஏராளம். 

இதற்கு நேர் மாறாகக் கர்நாடகத்தின் நிலை உள்ளது.  உணவு உற்பத்தி அங்கு அதிகரித் துள்ளது. அரிசியில் மிகை உற்பத்தி கண்டு அயல் மாநிலங்களுக்கு விற்கிறது.  கரும்பு உற்பத்தி கடந்த 15 ஆண்டுகளில் இருமடங்கு கூடியுள்ளது. 

கர்நாடகத்தில் காவிரிப் பாசனப் பரப்பு 1926- இல் கிருஷ்ணராஜசாகர் அணை திறக்கப் படுவதற்கு முன் - 1,90,000 ஏக்கர். 1990 -இல் கர்நாடகத்தின் காவிரிப் பாசனப் பரப்பு 21,38,000 ஏக்கர். 

தமிழகத்தின் நிலை என்ன? 

1934 -இல் மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன் தமிழகக் காவிரிப் பாசனப் பரப்பு 14,44,000 ஏக்கர். 

1968-86இல் தமிழகக் காவிரிப் பாசனப் பரப்பு 25,80,000 ஏக்கர். 

தமிழகம் இன்று இதில் பாதியளவு சாகுபடி செய்யுமா என்பது ஐயமாக உள்ளது.  காவிரிச் சமவெளியில் நிலத்தடி நீர் சாகுபடி தவிர, காவிரி நீரை நம்பி சாகுபடி செய்யும் பரப்பு மேலும் மேலும் சுருங்கி வருகிறது.  இவ்வாண்டு பெரும்பாலான நிலங்களில் சாகுபடி தொடங்கவில்லை.  மேட்டூரில் 8 ஆயிரம் கனஅடி திறந்து விட்டால் எப்படிச் சாகுபடி செய்யத் துணிச்சல் வரும்? 

மழை பெய்தால் தண்ணீர் தருவோம் என்று கர்நாடகம் சொல்வதன் பொருள், பெரு வெள்ளம் வந்து கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்தால் வேறு வழி யில்லாமல் தண்ணீர் திறந்து விடுவோம் என்பதாகும். கடந்த பத்தாண்டுகளாக இந்த நடை முறையைத்தான் கர்நாடகம் கடை பிடிக்கிறது. 

1970களில் நடந்த பேச்சு களில் தமிழகம் குறுவை சாகுபடி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது கர்நாடகம். அப்போது தமிழகம் மறுத்தது. இப்போது தமிழகத்தில் காவிரிப் பாசனத்தை நம்பி யாரும் குறுவை சாகுபடி செய்வதில்லை. காரணம் குறுவைக் காலத்தில் கர்நாடக அணைகள் நிரம்பி வழியாததே! 

அடுத்து ஒரு போகச் சம்பா சாகுபடியும் கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்தால்தான் செய்ய முடியும் என்ற மனநிலைக்குத் தமிழக உழவர்கள் வந்து விட்டார்கள். 

2010 ஆகஸ்ட் மாதம் கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ண ராஜசாகர், ஏமாவதி, ஏரங்கி, கபினி, சுவர்ணவதி அணைகள் முக்கால் பாகத்திற்கு மேல் நிரம்பியுள்ளன.  ஆனால் தீர்ப்பாயத்தின் இடைக் காலத் தீர்ப்புப் படி வாராவாரம், மாதாமாதம் தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரைத் திறந்து விடக் கர்நாடகம் மறுக்கிறது. 

கர்நாடக அணைகளில் நீர்மட்டம் எவ்வளவு உள்ளது என்ற விவரத்தை அன்றாடம் திரட்டு வதற்கான உரிமை தமிழக அரசுக்கு இருக்கிறது.  மைசூரில் தமிழகப் பொதுப் பணித்துறை அலுவலகம் செயல்படுகிறது. மேட்டூர் அணை நீர் மட்டத்தை ஏடுகளில் வெளியிடுவது போல் கர்நாடக அணைகளின் நீர் மட்டத்தையும் அன்றாடம் வெளி யிடலாம்.  தமிழக அரசு அவ்வாறு வெளியிடாதது ஏன்? 

கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும் தனக்குரிய பங்கை வாங்கத் திராணியற்ற தமிழக ஆட்சியாளர்களின் இனத் துரோ கத்தை மக்கள் கண்டு கொள்வார்கள் என்ற அச்சமா? 

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்துக் கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத் துள்ளன.  எனவே அத்தீர்ப்பு இப்போது செயலில் இல்லை.  உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை தீர்ப்பாயத்தின் இடைக் காலத் தீர்ப்புதான் செயலில் இருக்கிறது. 

இடைக்காலத் தீர்ப்பின் படி பின்வருமாறு மாதாமாதம் கர் நாடகம் தமிழகத்திற்குக் காவிரி நீர் திறந்து விட வேண்டும். 

சூன்  - 10.16 ஆ.மி.க. (ஆயிரம் மில்லியன் கனஅடி -கூMஇ) 

சூலை - - 42.76 

ஆகஸ்ட்     - 54.72 

செப்டம்பர்   - 29.36 

அக்டோபர்   - 30.17 

நவம்பர்     - 16.05 

டிசம்பர்     - 10.37 

சனவரி      - 2.51 

பிப்ரவரி     - 2.17 

மார்ச்சு      - 2.40 

ஏப்ரல்       - 2.32 

மே         - 2.01 

இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கு, 1998 ஆகஸ் டில் பிரதமர் தலைமையில் தமிழக, கர்நாடக, கேரள புதுவை முதல்வர் களை உறுப்பினர்களாகக் கொண்ட நிரந்தர ஆணையம் அமைக்கப் பட்டது.  அப்போது பிரதமர் வாஜ்பாயி, தமிழக முதல்வர் கருணாநிதி.  அந்த ஆணையம் அமைக்கப்பட்டதற்காக, கருணா நிதிக்குத் தஞ்சைத் திலகர் திடலில் மாபெரும் பாராட்டுவிழா நடந்தது. ‘ஆணையம் கொண்டானாக’ அப்போது அவரும், அவரின் காக்கைப் பாடிகளும் எழுப்பிய ஆரவாரம் சொல்லிமுடியாது. 

2006லிருந்து அந்த ஆணை யத்தைக் கூட்டும்படி தமிழக முதல்வர் கருணாநிதி ஏன் கோரவில்லை.  அதன் வழியாகத் தானே இடைக் காலத் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும்?  

இப்பொழுது திடீரென்று கண்விழித்தது போல் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டச் சொல்லியிருக்கிறார் கருணாநிதி.  நடுவண் நீர்வளத் துறைச் செயலாளர் தலைமையில் உள்ள அக்கண் காணிப்புக் குழுவில் நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையில் நான்கு மாநிலப் பாசனப் பொறியாளர்களும் உறுப்பினர்கள். 

24.8.2010 அன்று புது தில்லியில் நடந்த கண்காணிப்புக் குழுக் கூட்டத்திற்குக் கர்நாடகம் தனது தலைமைச் செயலாளரை அனுப்பி வைத்துள்ளது.  தமிழகமோ தனது தலைமைச் செயலாளரை அனுப்பாமல் பொறியாளர்களை மட்டும் அனுப்பி வைத்துள்ளது. 

இடைக்காலத் தீர்ப்பின் படி சூன், சூலை, ஆகஸ்ட் மாதங் களுக்குத் தரவேண்டிய தண்ணீர் பாக்கி, 60 ஆ.மி.க. என்றும் உடனடியாக 26 ஆ.மி.க. திறந்துவிட வேண்டும் என்றும் தமிழகப் பொறியாளர்கள் அக்கூட்டத்தில் கேட்டனர்.  கர்நாடகத் தலைமைச் செயலர் உதட்டைப் பிதுக்கி உயரே பார்த்து “வருண பகவானை வேண்டிக் கொள்ளுங்கள்;  வெள்ளம் வந்தால் தண்ணீர் வரும்” என்று சொல்லி முடித்துக் கொண்டார். 

வெளியில் வந்த தமிழகக் காவிரித் தொழில் நுட்பக் குழுத் தலைவர் பொறியாளர் சுப்பிர மணியம், ஆணையத்தைக் கூட்டு மாறு இந்திய அரசிடம் கோரி யுள்ளதாகச் செய்தியாளர்களிடம் சொன்னார். 

அதே 24.08.2010 இல் சென்னையில் முற்பகல் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டிப் பல தீர்மானங்கள் போட்டார் கருணா நிதி. மாலையில் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிப் பல முடிவுகள் எடுத்தார்.  காவிரிச் சிக்கல் பற்றி பேச்சு மூச்சு இல்லை அக் கூட்டங்களில்! 

காலங்காலமாகத் தமிழகத் திற்கு இருந்து வந்த காவிரி, முல்லப் பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு உரிமைகளைக் காவு கொடுத்து விட்டு, ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற துணிச்சல் தமிழக அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது.  காவிரி, முல்லைப் பெரியாறு ஆகியவற்றில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தினால் கூட, இனத்துரோகி என்று தம்மை மக்கள் ஒதுக்கி ஓரங்கட்டி விடுவார்கள் என்ற அச்சம் கர்நாடக கேரள அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது. 

தமிழக மக்களிடம் விழிப்புணர்ச்சியும் இனத் தற்காப்புணர்ச்சியும் மிகமிகக் குறைவாக உள்ளது.  இந்த மந்த நிலை தான் கருணாநிதி, செயலலிதா போன்றோர்களுக்கு ஆடுகள வெற்றிகளை அள்ளித் தருகிறது; மக்கள்பால் அச்சமற்ற நிலையை அவர்களுக்கு உண்டாக்குகிறது. 

கர்நாடக முதல்வர் எடீயூரப்பாவை சிறப்பு விருந்தினராகச் சென்னைக்கு அழைத்துக் கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலையைத் திறந்து வைத்தபோது கருணாநிதி, இந்தியா வுக்கே வழிகாட்டியாக இரண்டு மாநிலங்களும் தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை நேரடியாகப்  பேசி சுமூகமாகத் தீர்த்துக் கொண்டன என்று அறிவித்தார்.  அது என்ன ஆயிற்று? இப்பொழுது எடீயூரப்பா காவிரி நீரைத் தடுப்பது மட்டுமல்ல. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தையும் தடுக்கிறார். அத்துடன் ஒகேனக்கல் பகுதியைக் கர்நாடகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார். கருணாநிதியின் ஏமாற்று வேலைகள் உடனுக்குடன் அம்பலமாகின்றன. ஆனாலும் அவர் மீண்டும் மீண்டும் அதையேதான் செய்கிறார். 

தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு உச்சநீதி மன்ற வழக்கில் இருக்கும் போது அது செயலுக்கு வராது.  உச்சநீதி மன்றத் தீர்ப்பு வரும் வரை தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பிற்கு முன்பிருந்த நிலையே தொடரும்.  (ண்tச்tதண் ணுதணி ச்ணtஞு) அதாவது இடைக் காலத் தீர்ப்பே செயலில் உள்ளது. அதன்படி கர்நாடகம் 205 ஆ.மி.க. தண்ணீர் தமிழகத்திற்குத் தர வேண்டியது சட்டக் கட்டாயம். 

இந்த உண்மையைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 2007லிருந்து வலியுறுத்தி வருகிறது.  முதலமைச்சர் கருணாநிதி இந்த உண்மை நிலையைக் கண்டு கொள்ளாமல் உறங்கிவிட்டுக் கடந்த சூலை19-இல்தான் முதல்முதலாக, இடைக் காலத் தீர்ப்புதான் இப்போது செயலில் உள்ளது என்று அறிக்கை வெளியிட்டார். அத்தோடு சரி. 

சட்டப்படி உள்ள இந்த நிலையில் கூட செயலலிதா முரண்பட்டு, இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று பேசி வருகிறார்.  தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு உச்சநீதி மன்ற வழக்கில் இருக்கும் போது அதைச் செயல்படுத்துமாறு அறிவிக்கை செய்து அரசிதழில் வெளியிட இந்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லை. ஒரு சிக்கலில் அக்கறை அற்று  ஒப்புக்குப் பேசும்போது இப்படித் தான் ஒன்று கிடக்க ஒன்று பேசுவார்கள். 

இடைக்காலத் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிடுமாறு, கர்நாடகத் திற்குக் கட்டளையிட ஆணையத் திற்கு அதிகாரமுள்ளதா? இல்லை.  அனைவரின் ஒருமித்த கருத்தின் (ஞிணிணண்ஞுணண்தண்)   அடிப்படையில் தான் காவிரி ஆணையத்தில் எந்த முடிவையும் தீர்மானிக்க முடியும்.  கர்நாடகம் உள்ளிட்டு அனைவரும் ஒத்துக் கொண்டால்தான் ஆணையத் தால் ஒரு முடிவெடுக்க முடியும் என்ற நிபந்தனையை ஏற்று 1998 ஆகஸ்டில் துரோகம் செய்தார் கருணாநிதி. இப்பொழுது ஆணையத்தைக் கூட்டுமாறு ஒரு பொறியாளரை விட்டுக் கேட்கச் சொல்கிறார். 

த.தே.பொ.க. தொடர்ந்து சொல்லிவரும் கருத்துகள்தாம்  காவிரிச் சிக்கலிலும் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன. 

இந்திய ஏகாதிபத்தியம் தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கு மே தவிர, பாதுகாத்துத் தராது. 

அண்டை மாநில தேசிய இன வெறியர்கள் தமிழர்களைப் பகையினமாகக் கருதி பழிவாங்கவே துடிக்கின்றனர். 

தமிழகக் கங்காணி அரசியல்வாதிகள் இனத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைப் பார்களே தவிர தமிழக உரிமைகளை மீட்கத் தங்களை ஒப்படைத்துக் கொள்ள மாட்டார்கள். 

மக்கள் விழிப்புற்றெழுந்து போராடினால், போராடும் ஆற்றலுக் கேற்ப சில உரிமைகளை மீட்க முடியும். 

நெய்வேலி மின்சாரம் கர்நாடகம் செல்லாமல் தடுக்க வேண்டும். கர்நாடகத்திற்கெதிராகப் பொருளியல் தடை விதிக்க வேண்டும். 

காவிரி என்ற ஓர் இயற்கை வளத்தைப் பாதுகாத்துத் தராத தில்லி ஏகாதிபத்தியம் காவிரிப் படுகையில் கிடைக்கும் பெட்ரோலியம் என்ற இன்னொரு இயற்கை வளத்தைக் கொள்ளையடிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். 

இவ்வாறான முழக்கங்களை முன்வைத்து நடத்தும் போராட்டங் களே காவிரி உரிமையை மீட்டுத் தரும். 

கொள்ளை போகும் தமிழக வளம்

      காவிரிப் படுகையில் 2009 -2010 இல் உற்பத்தியான பெட்ரோலியக் கச்சா எண்ணெய் 10,42,000 டன். ஒரு நாள் உற்பத்தி 650 டன். 

      ஒரு நாளைக்கு உற்பத்தியான எரிவளி (கேஸ்) 30 இலட்சம் டன் கன அடி. 

      இவை அனைத்தையும் இந்திய அரசு எடுத்து இந்தியாவெங்கும் கொடுக்கிறது.  காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கும் கொடுக்கிறது. 

      காவிரி என்ற ஓர் இயற்கை வளத்தைப் பாதுகாத்துத் தராத தில்லி ஏகாதிபத்தியம், காவிரிப் படுகையில் கிடைக்கும் பெட்ரோலியம் என்ற இன்னொரு இயற்கை வளத்தைக் கொள்ளை அடிக்க என்ன உரிமை இருக்கிறது? 

      பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளில் மண்ணின் மக்களுக்குக் குறைந்த விலையில் பெட்ரோல் டீசல் விற்கின்றன அங்குள்ள அரசுகள். தமிழ்நாட்டில் மண்ணின் மக்கள் தங்கள் இயற்கை வளத்தைப் பறிகொடுத்துவிட்டு உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள அதே விலைக்குப் பெட்ரோல் டீசல் எரிவளி உள்ளிட்ட பொருள்களை வாங்க வேண்டிய அவலம் உள்ளது. 

      தமிழ்த் தேசக் குடியரசு அமைந்தால்தான் இதற்குச் சரியான தீர்வு கிடைக்கும். 

Pin It