இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற உண்மையை இதற்குப் பிறகும் புரிந்து கொள்ளவில்லையென்றால் தமிழர்களைப்போல ஏமாளிகள் யாரும் இருக்க மாட்டார்கள்.

கச்சத்தீவு குறித்த உச்ச நீதிமன்ற வழக்கில் இந்திய அரசு 30.8.2013 அன்று முன் வைத்த உறுதி உரையையே (பிரமாணப்பத்திரம்) இங்கு குறிப்பிடுகிறோம்.

கச்சத்தீவையும் இந்தியப் பெருங்கடல் பரப்பில் தமிழகத்தை ஒட்டியப் பகுதிகளில் தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையையும் இலங்கைக்கு அளித்த 1974 ஒப்பந்தம், 1976 ஒப்பந்தம் ஆகியவற்றை எதிர்த்து தமிழக அரசு 2008 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இதன் விசாரணை 30.8.2013 அன்று நீதிபதிகள் பி.எஸ். சவான், எஸ்.ஏ.பாப்தே ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. இதில் தனது உறுதி உரையை தாக்கல் செய்த இந்திய அரசு “இந்தியாவுக்குச் சொந்தமான எந்த ஆட்சிப் பரப்பும் இவ்வொப் பந்தங்களில் மூலம் இலங்கைக்கு பிரித்து அளிக்கப்படவில்லை.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒத்துக் கொள்ளபட்ட எல்லை வரையறுப்பு இல்லாத நிலையில் கச்சத்தீவும் அதை தொடர்ந்துள்ள கடல் பரப்பும் விவாதத்திற்குரிய ஆட்சிப் பரப்பாகவே இருந்தன. 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்கள் இச்சிக்கலைத் தீர்த்து எல்லை வரையறுப்புச் செய்ய வழி ஏற்படுத்தின. இக்கடற் பரப்பில் இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடி உரிமைக் கோரமுடியாது” எனக்கூறியது.

பொய்யிலேயே ஈவு இரக்கமற்ற பொய் என்பது இதுதான். கச்சத்தீவும் அதைத் தொடர்ந்த கடற்பரப்பும் பன்னெடுங்காலமாக தமிழர்களின் பரப்பாக இருந்ததை மறுக்கும் அப்பட்டமானப் பொய்யுரை இது.

இச்சிக்கலில் இந்திய அரசின் தமிழ்ப்பகைச் சூதை புரிந்துகொள்ள கச்சத்தீவு குறித்த 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களை அறிந்துகொள்வது தேவையானது.

1974 ஒப்பந்தமும் 1976 ஒப்பந்தமும் தனித்தனியானவை. ஒன்றின் துணை ஒப்பந்த மாக இன்னொன்றைப் புரிந்துகொள்ளக் கூடாது.

இந்தியாவின் தமிழகத்திற்கும் இலங்கைக்குமிடையே உள்ள கடற்பரப்பு மூன்று பகுதிகளைக் கொண்டது.

1.            இராமேசுவரத்திற்கும் இலங்கையின் (ஈழத்தின்) தலைமன்னாருக்கும் இடையில் ஆதம்பாலம் வரை உள்ள பாக் நீரிணைக் கடற்பரப்பு. இப்பரப்பில் இராமேசுவரத்திலிருந்து வடகிழக்கில் 12 கடல் மைல் தலைமன்னாரிலிருந்து வட மேற்கில் 18 கடல் மைல் தொலைவில் கச்சத்தீவு உள்ளது.

2.            ஆதம் பாலத்திற்குத் தெற்கே மன்னார் வளைகுடா வரை உள்ள கடற் பரப்பு.

3.            பாக் நீரிணை, மன்னார் வளைகுடா தவிர்த்த வங்காள வளைகுடாவில் பிற பகுதிகள்.

கச்சத்தீவு ஒப்பந்தம் என்று பொது வழக்கில் நாம் பேசுகிற 1974 ஒப்பந்தம் பாக் நீரிணை கடல் எல்லை வரையறுப்பு ஒப்பந்தமாகும். இதற்குள் கச்சத்தீவு வருகிறது. இவ்வொப்பந்தத்தின் மையச் சிக்கலும் அதுதான். அன்றைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி 1974 சூன் 26 அன்றும், இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டார நாயக்கா 1974 சூன் 28 அன்றும் கையொப்பமிட்டு 1974 சூலை 8 முதல் செயலுக்கு வந்த ஒப்பந்தம் இது.

1976 ஒப்பந்தம் என்பது ஆதம் பாலத்திற்குத் தெற்கே மன்னார் வளைகுடா பரப்பு மற்றும் வங்காள வளை குடா பரப்பு ஆகியவற்றில் இந்தியாவிற்கும் இலங்கைக் கும் உள்ள உரிமைகளையும், கடல் எல்லைகளையும் வரையறுத்துக் கொள்ளும் ஒப்பந்தமாகும். 26.3.1976 அன்று இந்திய அரசின்வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங் இலங்கை அரசு பாதுகாப்புத்துறைச் செயலாளர் டபிள்யூ. ட்டி ஜெய சிங்கே ஆகியோர் கையெழுத்திட்டனர். மன்னார் வளைகுடா பகுதியிலும் வங்காள வளைகுடா கடல் பரப்பிலும் இந்திய (தமிழ்நாடு) மீனவர்கள் மீன்பிடிக்க மாட்டார்கள். இந்தியக் கடல் எல்லையை ஒட்டியே அவர்கள் புழங்குவார்கள் என இவ்வொப்பந்தம், வரையறுக்கிறது.

இந்த இரு ஒப்பந்தங்களுமே தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதரத்தையும், உயிர் வாழும் உரிமையையும் பாதிக்ககூடியவையாகும். ஆயினும் கச்சத் தீவு குறித்த 1974 ஒப்பந்தம் மீனவர்களை வாழ்வுரிமைச் சிக்கல் மட்டுமின்றி தமிழ்நாட்டின் தாயக உரிமை பறிப்பும் ஆகும்.

எனவே கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்தே இங்கே முதன்மையாக விவாதிக்கிறோம்.

தமிழினத்திற்கெதிரான வன்மத்தோடு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும் இது. இந்திய அரசின் தமிழினப்பகைக் கொள்கை வரலாறு நெடுகிலும் சாரத்தில் ஒரே நிலையிலேயே உள்ளது என்பதை இவ்வொப்பந்தமும், இது குறித்த இந்திய அரசின் நீதிமன்ற உறுதியுரையும் தெளிவுப்படுத்தும். இந்திய அரசின் இந்த இனப்பகைப் போக்கு இந்திரா காந்திக்கு முன் இந்திரா காந்திக்குப் பின் எனப் பிரித்துப்பார்க்க முடியாதது என்பதையும் இது உறுதிப்படுத்தும்.

“1974 ஒப்பந்தத்தின் வழியாக இந்தியாவின் ஆட்சிப்பரப்பில் எந்தப் பகுதியும் பிரித்தெடுக்கப்பட்டு இலங்கைக்கு வழங்கப்படவில்லை.” என்று இந்திய அரசுக் கூறுவது அப்பட்டமானப் பொய்யுரை என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை எடுத்துக்காட்ட முடியும்.

கச்சத்தீவு இராமநாதபுரம் சேதுபதி அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததையும், சுதந்திர இந்தியாவில் சமீன் முறை ஒழிக்கப்பட்ட பிறகும் அது இராமநாதபுரம் எல்லைக்குட்பட்ட பகுதியாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருப் பதையும் முதல் நிலை ஆதாரங்களோடு புலவர் செ. இராசு உறுதிப்படுத்தி யிருக்கிறார்.

(“நமது கச்சத்தீவு” என்ற புலவர் செ. இராசு அவர்களின் நூல் முதல் பதிப்பாக 1997 இல் வந்த போது அதன் வெளியீட்டு விழாவை மாபெரும் எழுச்சிக் கூட்டமாக 12.4.1997 அன்று தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தியது. இந்நூலின் விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு 2009 இல் ஈரோடு புதுமலர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.)

•             1605 முதல் குத்துக்கால் தீவு, இராமசாமித்தீவு, மண்ணாளித் தீவு, கச்சத்தீவு, குருசடித் தீவு, நடுத்தீவு, பள்ளித்தீவு ஆகிய தீவுகளும் 69 கடற்கரை கிராமங்களும் சேது அரசர்க்கு உரியதாக இருந்தன.

•             கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது எனக் கூறுகிறது.

•             1803 முதல் சென்னை மாகாணத்தில் சமீன்தாரி முறை செயலுக்கு வந்தது. இராணி மங்களேசுவரி நாச்சியார் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதரவோடு 1803 முதல் 1812 வரை சேதுபதி சமீன்தாரிணியாக இருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட சமீன் உரிமைப்பட்டயத்தில் கச்சத்தீவுக் குறிக்கப்பட்டது.

•             1822 இல் கிழக்கிந்தியக் கம்பெனி சேதுபதி சமீனிடமிருந்து கச்சத்தீவை குத்த ககைக்குப் பெற்றது அதற்கான பத்திர ஆவணங்கள் உள்ளன.

•             1858 இல் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்து பிரித்தானிய ஏகாதிபத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியாக் கொண்டு வரப்பட்டது.

இது குறித்து விக்டோரியா பேரரசி வெளியிட்ட பேரறிக்கையில் கச்சத்தீவு சேதுபதி மன்னர்களுக்கு உரிய பகுதியாகவே குறிக்கப்பட்டது. இலங்கை அரசுச் செயலாளராக 1966 இல் இருந்த பி.பி. பியரிஸ் இதனை உறுதி செய்திருக்கிறார்.

•             1913 சூலை 1 முதல் 15 ஆண்டுகளுக்கு கச்சத்தீவு உள்ளிட்ட சில தீவுகளை சென்னை மாகாண அரசு குத்தகைக்குப் பெற்றது. இராமநாதபுரம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இத்தீவுகள் இராமநாதபுரம் அரசர்களுக்கு உரியவை என தெளிவாக்கப்பட்டுள்ளது.

•             1947 இல் பதிவான இன்னொரு குத்தகைப் பத்திரத்திலும் “இராமநாதபுரம் ஜில்லா இராமேசுவரம் சப் ரிஜிஸ்டிரேசனுக்கு தனுஸ்கோடிக்கும் தலை மன்னாருக்கும் இடையே இருக்கும் சமஸ்தானத்திற்குப் பாத்தியமான கச்சத்தீவு” என்று இருக்கிறது.

•             1957 இல் வெளியான இராமநாதபுரம் பதிவாளர் மாவட்டம் குறித்த அரசின் ஆவணக் குறிப்பில் பக்கம் 107 இல் தனுஸ் கோடி கிராம நிர்வாகத்திற்கு உட்பட்டதாக கச்சத் தீவு குறிக்கப்பட்டுள்ளது.

இந்திராகாந்தியும் சிறீமாவோ பண்டாரநாயக்கா ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாக 1972 இல் வெளியான இராமநாதபுர மாவட்ட விவரச் சுவடியில் (இராமநாதபுரம் கெசட்டியர்-1972) “கச்சத்தீவு இராமேசுவரத் திற்கு வட கிழக்கில் 10 மைல் தொலைவில் இருக்கும் அம்மாவட்ட பகுதி” என்றும் அதன் சர்வே எண்:1250 என்றும் அத்தீவின் பரப்பளவு: 285.20 ஏக்கர் என்றும் அங்குள்ள கத்தோலிக்க ஆலயத்தில் தங்கச்சி மடம் பங்குத் தந்தை வழிபாடு நடத்திக் கொடுப்பார் என்றும் குறிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி இராமேசுவரம் கர்ணம் (அன்றைய கிராம நிர்வாக அலுவலர்) நிர்வாகத்தில் கச்சத் தீவு இருக்கிறது என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

அதாவது 1974 ஒப்பந்தம் கையொப்பமிடும் காலத்தில் சர்வே எண் 1250 எனக் குறிக்கப் பட்ட இராமநாதபுர மாவட்ட பகுதியைத்தான் தமிழகத்தின் இசைவின்றி இலங்கைக்கு சட்டவிரோதமாக இந்தியா அளித்துள்ளது.

ஆனால் அப்படி ஒரு பகுதியே இந்தியாவின் எல்லைக் குட்பட்டு இல்லையென்று இப்போது உச்ச நீதிமன்றத்தில் சத்தியம் செய்கிறது.

இந்திய எல்லைக்குட்பட்ட தமிழகத்தின் தாயகப் பகுதியான கச்சத்தீவை இரு பிரதமர் களின் ஒப்பந்தத்தின் மூலம் மட்டுமே கொடுத்தது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரானது. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக தான் செய்துள்ள இந்தக் குற்றச் செயலை மறைப்பதற்காக கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக இருந்ததே இல்லை என நெஞ்சாரப் பொய்சொல்கிறது.

இது போன்ற ஒரு பொய்யை மேற்கு வங்கம் தொடர்பாக இந்திய அரசு உச்சநீதி மன்றத்தில் சொன்ன போது அப்பொய்யை உச்சநீதிமன்றம் கடுமையாக நிராகரித்த வரலாறு உண்டு. பெருபாரி குறித்த வழக்கு அது.

மேற்கு வங்கத்தின் பகுதியாக இருந்த பெருபாரி யூனியன் என்ற 8.75 சதுரமைல் பரப்புள்ள பகுதியை 1958 செப்டம்பரில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியா பாகிஸ்தானுக்கு அளித்தது. அன்று மேற்கு வங்காள முதலமைச்சராக இருந்த காங்கிரசு கட்சியின் பி.சி. இராய் இந்த ஒப்பந்தம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என எதிர்ப்புக் கிளப்பினார்.

இது குறித்து சட்ட நிலையை விளக்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவர் உச்சநீதி மன்றத்தை அணுகினார். 7 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆயம் இது குறித்து விசாரித்து 1960 மார்ச்சில் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கிலும் இந்திய அரசு “சர்ச்சைக்குரிய எல்லைச் சிக்கலை தீர்த்துக் கொள்வ தற்கான ஒப்பந்தம்தானே தவிர இந்திய ஆட்சிப் பகுதி எதையும் பாகிஸ்தானுக்கு அளிக்கவில்லை” என்று வாதிட்டது. இது முற்றிலும் பொய் எனக் கடுமையாகச் சாடி உச்சநீதிமன்றம் தீர்ப்புரைத்தது. இந்திய ஆட்சிப் பரப்பாக பெருபாரி யூனியன் இருந்ததை உறுதி செய்து, அப்பகுதியை பாகிஸ்தானுக்கு அளித்தது. அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனத் தெளிவுப்படுத்தியது.

இவ்வொப்பந்தம் சட்ட ஏற்பு பெற வேண்டுமானால் அரசமைப்புச் சட்டக் கூறு 368 இன்படி, அரசமைப்புச் சட்ட கூறு 1 இல் திருத்தம் செய்ய வேண்டும். என வழி காட்டியது.

இதே நிலைதான் கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கும் உள்ளது. 1974 இல் ஒப்பந்தம் செய்யப் பட்டாலும் இன்று வரை அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் எதுவும் செய்யப் படவில்லை. அரசமைப்புச் சட்டக் கூறு 3 இன் படி மாநில எல்லை மாற்றம் பற்றி செய்யப்படும் சாதாரணச்சட்டம் கூட நாடாளுமன்றத்தில் இயற்றப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரு மாதம் கழித்து 1974 சூலை 23 அன்று நாடாளு மன்ற மக்களவையில் இவ்வொப்பந்தம் குறித்து ஒரு விவர அறிக்கை தாக்கல் செய்ததோடு முடித்துக் கொண்டது.

அன்றைக்கு தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி மேற்கு வங்கத்தின் பி.சி.இராயைப் போல வலுவாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் அரசமைப்புச் சட்டத் தில் திருத்தம் செய்யாமல் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தியிருக்கவே முடியாது.

அன்று இருந்த சூழலில் அரசமைப்புச் சட்ட திருத்தத்திற்குத் தேவையான 3 இல் 2 பங்கு பெரும்பான்மை என்பது இந்திராகாந்திக்கு கடினமான ஒன்றாகும் இருந்திருக்கும்.

மாறாக அன்று தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேறி கருணாநிதிக்கு பெரும் சவாலாக இருந்ததால், அதிலிருந்து மீள்வதற்காக காங்கிரசின் பக்கம் கருணாநிதி சாய்ந்தார். அவர் மீது எம்.ஜி.ஆர் அளித்த ஊழல் குற்றல்சாட்டுகளை பயன்படுத்தி இந்திரா காந்தியும் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் தன் பதவி அரசியலைப் பாதுகாத்துக் கொள்ள கச்சத்தீவை காவு கொடுக்க கருணாநிதி இசைந்தார். ஒப்புக்கு எதிர்ப்புதெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டார்.

மிக நீண்ட தாமதத்திற்குப் பிறகே 2008 இல் செயலலிதாவும் வழக்குத் தொடர்ந்தார்.

1974 கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி கடல் எல்லை குறித்த பன்னாட்டுச் சட்டங்களுக்கும் எதிரானது.

“பாக் நீரிணைக்கும் ஆதம் பாலத்திற்கும் இடையே உள்ள இலங்கை – இந்திய வரலாற்று நீர் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்” என்று சட்டச் சொற்களில் குறிக்கப்படும் கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தாகிறபோது 1958 ஆம் ஆண்டு ஐ.நா. சட்டம் செயலில் இருந்தது.

‘கடல் பரப்பு குறித்த ஐ.நா. ஒப்பந்தம், 1958’ (1958 UN convention on continental shelf) இரண்டு நாடுகளுக்கிடையில் கடல் எல்லையை பிரித்துக் கொள்ளும் போது கடை பிடிக்க வேண்டிய விதி முறையையும் கூறுகிறது.

இவ்வொப்பந்ததின் விதி 6(2) (article-6(2)) கீழ் வருமாறு கூறுகிறது

“இரண்டு அண்டை நாடுகளுக்கிடையில் கடல் எல்லை வரையறுப்பு நடப்பதென்றால் அவ்வாறான எல்லை ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு  அது சிறப்புச் சூழல்களை விளக்கி நிலை நாட்டாது போனால் எல்லை பிரிப்பின் போது அருகாமை எல்லையிலிருந்து சம தொலைவு என்ற கோட்பாடே பின்பற்ற பட வேண்டும். இதுதான் 1958 ஐ.நா. சட்டம் கூறும் நிபந்தனையாகும்.

அதாவது இரண்டு அண்டைநாடுகள் தங்களுக்கிடையிலுள்ள கடல் எல்லையை வரையறுக்கும் போது தங்களுக்கிடையே இருக்கிற கடல் பரப்பை சரியாக பாதி பாதியாக பிரித்துக் கொள்ள வேண்டும். இரண்டு கடற்கரையிலிருந்தும் சம தொலைவில் இந்த எல்லைக் கோடு கிழிக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக எல்லை வரையறுப்பில் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தால் அவ்வொப்பந்ததில் அதற்கான சிறப்புக் காரணங்கள் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதன் படி பார்த்தால் கச்சத்தீவு ஒப்பந்தம் பன்னாட்டுச் சட்டங்களுக்கும் எதிரானது என்பது தெளிவாகும்.

1974 ஒப்பந்தத்தில் சமதொலைவுக் கோட்பாடு (equidistance principle) பின் பற்றப் படவில்லை. இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள தொலைவு 30 கடல் மைல் சம தொலைவில் எல்லைக் கோடு வகுப்புதென்றால் 15 மைலில் அக்கோடு வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வரையறுக்கப்பட்டிருந்தால் கச்சத்தீவு இந்திய எல்லைக்குட்பட்டதாகவே நீடித்து இருக்கும். ஏனெனில் கச்சத்தீவு இராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் தலை மன்னாரிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ளது.

வேண்டுமென்றே சமதொலைவுக் கோட்பாடு மீறப்பட்டிருக்கிறது.

பெருபாரி ஒப்பந்தத்தில் கூட எல்லைப் பிரிப்பில் பரம எதிரியான பாகிஸ்தானோடு கூட சம தொலைவுக் கோட்பாடு பின்பற்றபட்டுள்ளது. எல்லைப் பகுதி கிடக்கையில் பாதிபாதியாகப் பிரிக்கப்பட்டது என உச்சநீதி மன்றமும் அதனை உறுதி செய்தது. 1976 இந்திய இலங்கை கடல் ஒப்பந்தத்தில் கூட சம தொலைவுக் கோட்பாடு பின்பற்ற பட்டிருக்கிறது.

ஆனால் 1974 ஒப்பந்தத்தில் மட்டும் சம தொலைவுக் கோட்பாடு மீறப்பட்டு 10 மைலுக்கு 20 மைல் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. கச்சத்தீவை இலங்கையிடம் அளித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர இந்தப் பிறழ்ச்சிக்கு வேறு காரணம் எதுவும் இல்லை. 1958 ஐ.நா. சட்டப்படி இதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் இருந்தால் அதனை ஒப்பந்தத்தில் எடுத்துரைத்து நிலைநாட்டியிருக்க வேண்டும். 1974 இந்திரா சிறீமாவோ ஒப்பந்தத்தில் அவ்வாறான சிறப்புக் காரணம் எதும் சொல்லப்பட வில்லை.

”வரலாற்று ஆதாரங்களை கணக்கில் கொண்டும் இச்சிக்கலின் தன்மையை அனைத்துக் கோணங்களில் ஆய்ந்த பிறகும்” இவ்வொப்பந்தம் செய்யப்படுவதாக ஒப்பந்த ஆவணம் கூறுகிறது.

வரலாற்று ஆதாரங்களை கணக்கில் கொள்ளவே இல்லை என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். சமதொலைவுக் கோட்பாட்டிலிருந்து விலகி வளைந்து எல்லைக் கோடு வரையறுக்கப்பட்டதற்கு தெளிவான சிறப்புக் காரணம் எதையும் குறிப்பிடாமல் ‘சிக்கலின் தன்மையை அனைத்துக் கோணங்களிலும் ஆய்ந்தபிறகு’ என மொட்டை யாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புக்காரணம் என்பது இந்திய அரசின் தமிழினப் பகைக் கொள்கைதான் அதை வெளிப்படையாக ஒப்பந்தத்தில் சொல்ல முடியாது என்பதால் ’சிக்கலின் தன்மையை அனைத்துக் கோணங்களிலும் ஆய்ந்தபிறகு’ என அரச உத்தி சொற்களில் கூறிச் செல்கிறார்கள்.

1958 க்குப்பிறகு பன்னாட்டு கடல் சட்டங்களில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டிருந் தாலும் சமதொலைவுக் கோட்பாடே இன்றளவும் செயலில் உள்ளது.

எடுத்துக்காட்டாக இப்போது செயலில் இருக்கும் 1982 கடல் சட்ட ஐ.நா. ஒப்பந்தத்தின் பிரிவு 15 சமதொலைவுக் கோட்பாட்டையே அடிப்படையில் வலியுறுத்துகிறது. சம வாய்ப்புப் பகிர்வு அடிப்படையில் எல்லை வரையறுப்பு (equitable delimitation) என்பதை சிறப்புக்காரணமாக கூறுகிறது.

1969 வட கடல் வழக்கு, 1993 ஜன் மாயேன் வழக்கு 2001 கத்தார்- பாஹ்ரைன் கடல் எல்லை வழக்கு ஆகிய அனைத்திலும் சம தொலைவுக் கோட்பாடே நடைமுறைச் சாத்தியமானது என பன்னாட்டு நீதி மன்றங்கள் வகுத்துக் கூறியுள்ளன.

எந்த நிலையிலும் 1974 கச்சத் தீவு ஒப்பந்தத்தை நியாயப்படுத்தவே முடியாது.

கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; பன்னாட்டுச் சட்டங்களுக்கு முரணானது.

எந்த சட்ட மீறலில் இறங்கியாவது தனது தமிழினப் பகை நோக்கை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதிலேயே இந்திய வல்லாதிக்க அரசு குறியாக உள்ளது. 30.8.2013 அன்று உச்சநீதி மன்றத்தில் இந்திய அரசு அளித்துள்ள உறுதியுரையும் இதனை உறுதி செய்கிறது.

இனியாவது இந்திய அரசின் இந்த இனப் பகைக் கொள்கையை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடனடிப் பணியாக கச்சத்தீவை மீட்க களம் காண வேண்டும்.

Pin It