தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் இந்திய அரசு, அதன் நீட்சியாக தமிழீழத் தமிழர்களின் உயிரையும், உரிமைகளையும் காவு கொள்ளத் துடிப்பதை உணர்ந்து வருகிறோம்.

இதன் ஒரு பகுதியாகத்தான், செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல்லாண்டு காலமாக சிறைவைக்கப்பட்டு பின்விடுதலையாகி, தற்போது தாம்பரத்தில் வசித்து வரும் திரு ஆர்.செந்தூரன், தற்போது திருச்சி நடுவண் சிறையிலுள்ள அகதிகள் முகாமில் அடைக்கப் பட்டுள்ள திரு ஈழநேரு, சென்னை புழல் சிறையில் அடைபட்டுள்ள திரு சவுந்தரராஜன் ஆகிய மூவ ரையும் இலங்கைக்கு நாடு கடத்துகின்ற நடவடிக் கையை இந்திய அரசு தொடங்கியுள்ளது.

சிங்களப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறையி லிருந்து உயிர் பிழைத்து தமிழகத்திற்கு வந்த தமிழீழ ஏதிலிகளை, திரும்பவும் இலங்கை அரசின் இனவாதக் கொடுங்கரங்களிடம் ஒப்படைப்ப தென்பது, ஒரு கசாப்புக்கடையில் ஆடுகளை ஒப்படைப்பது போன்றது தான்; அவர்களது உயிருக்கு தெரிந்தே விளைவிக்கும் தீங்காகும்.

செந்தூரன் உள்ளிட்ட இம்மூவரும், இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் எதிரான எவ்விதக் குற்றங்களிலும் இங்கு ஈடுபடவில்லை. தம்மை பொய் வழக்குகளில் சிறைவைத்திருப்பதைக் கண்டித்தே தொடர்ந்து, அறவழிப் போராட்டங்களை நடத்தினர்.

மார்வாடி, குசராத்தி சேட்டுகள், மலையாளிகள் என வந்தவனெல்லாம் தமிழகத்தில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்க, பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து தப்பித்து தமிழகம் வரும் தமிழீழ ஏதிலிகளுக்கு சிறையும், நாடு கடத்தல் உத்தரவுகளும் வழங்கப் படுகின்றன.

திபெத், பர்மா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகளுக்கு இந்தியாவில் பெரும் சலுகைகள் அளிக்கப்படுவதும், தமிழீழ ஏதிலிகளுக்கு எந்நேரமும் கண்காணிப்பு - கெடுபிடிகளை அதிகப்படுத்தி, அவர் களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்துத் தர மறுப்பதும், இந்திய அரசின் தமிழினத்திற்கு எதிரான இனப்பாகுபாட்டையே எடுத்துக்காட்டுகிறது.

இதைச் சுட்டிக்காட்டி, இந்திய அரசு இம் மூவரையும் நாடு கடத்தும் உத்தரவினை திரும்பப் பெற வேண்டுமெனக் கோரி தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை விடுத்தார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கண்டன அறிக்கைகளை விடுத்தனர்.

இந்நிலையில், கடந்த 22.08.2013 அன்று திருச்சி அகதிகள் சிறப்பு முகாமிலிருந்து ஈழநேருவுக்காக, அவரது மனைவி சந்திர லீலா சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 23.08.2013 அன்று மற்றொரு ஏதிலியான செந்தூரன், தாங்கள் மூவரும் நாடு கடத்தப்பட்டால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரலாம் என சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு செய்தார். இதனையடுத்து, இம் மூவரையும் 27.08.2013 அன்று வரை நாடு கடத்தாமல் தற்போதைய நிலையிலேயே வைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் இம்மூவரின் உயிரையும் காக்க போராட வேண்டும். இம்மூவரையும் சூழ்ந்துள்ள ஆபத்திலிருந்து, அவர்களைப் பாதுகாக்க வேண்டும்!

Pin It