அனைவருக்கும் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பின்படி நடுவண் அரசால் 2009இல் முன்வைக்கப்பட்ட “கட்டணமில்லாக் கட்டாயக் கல்விச் சட்டம் 2009”(The Right of Children to free and Compulsory Education act - 2009), தனியார் பள்ளிகளில், அப்பள்ளிக்கு அருகமையில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு 25 விழுக்காட்டு இடங்களை அளிக்க வேண்டும் எனக் கூறுகின்றது.

இச்சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் இணைத்துக் கொள்ளப்படும் அப்பகுதியைச் சோந்த 25 இடஒதுக்கீடு ஏழைக் குழந்தைகளுக்கானக் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என இச்சட்டம் தெரிவித்தாலும், “சிறப்புப் பயிற்சி, வீட்டுப் பாடம், தேர்ச்சி விகிதம்” என பல்வேறு காரணங்களைச் சொல்லி பெற்றோரிடமிருந்து கட்டாய நன்கொடையாக பெருந்தொகை வசூலித்துக் கொண்டுள்ள தனியார் பள்ளிகளுக்கு, இச்சட்டம் அச்சமூட்டியது. இச்சட்டத்தை எதிர்த்து தன்நிதிப் பள்ளிகளின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தால் 12.4.2012 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. 

எனவே, இச்சட்டத்தை அரைகுறையாகவாவது நிறைவேற்றியேத் தீர வேண்டுமென்ற நிர்பந்தம் காரணமாக தனியார் பள்ளிகள் அதைச் செயல்படுத்தின. “அனைவருக்கும் கல்வி”, “நவீன இந்தியா”, “கல்வி சேவை” என பல்வேறு முகமூடிகளையும் முழக்கங்களையும் அணிந்து கொண்டுள்ள தனியார் பள்ளிகளின் உண்மையான முகத்தை இச்சட்ட அமலாக்கம் தற்போது அம்பலமாக்கத் தொடங்கியுள்ளது.

இச்சட்டம் குறித்து தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மே 1-15 இதழில் எழுதியிருந்த நாம், “கட்டணமில்லாக் கட்டாயக் கல்விச்சட்டத்தின்படி சேர்க்கப்படும் நலிந்த பிரிவு மாணவர்களைத் தனிக் கவனம் செலுத்தி கைதூக்கிவிட வேண்டுமேயன்றி, அவர்களை தனிப் பிரிவாக (செக்சன்) தனியார் பள்ளிகள் ஒதுக்கி வைத்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என கூறியிருந்தோம். நாம் எச்சரித்தது போலவே அண்மையில் ஒரு நிகழ்வு நடந்தேறியுள்ளது. 

பெங்களுர் நந்தினி லேஅவுட் பகுதியில் இயங்கிவரும் “ஆக்ஸ்போர் ஆங்கிலப் பள்ளி” என்ற தனியார் பள்ளி, கல்வி உரிமைச் சட்டம் வழங்கிய 25 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டின் மூலம் சேர்ந்த ஏழை மாணவர்களை இரண்டாம் தர மாணவர்களாக நடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது. 

25 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டின் மூலம் வந்த 4 ஏழை மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும் வேறுபாடுகள் தெரியும் வகையில், அந்த 4 மாணவர்களுக்கு தலை முடியை வெட்டுவது, வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன் அவர்களது சாப்பட்டுப் பைகளை சோதனையிடுவது, பள்ளிக் கூட்டங்களில் இப்பிள்ளைகளை தனியாக நிற்க வைப்பது, வீட்டுப் பாடங்கள் கொடு என பல்வேறு கொடுமைகளைச் செய்துள்ளது இப்பள்ளி நிர்வாகம். 

இது குறித்து செய்தி வெளியானதும், கர்நாடக மாநில கல்வித்துறைச் செயலாளர் குமார் நாயக், அப்பள்ளியிடமிருந்து விளக்கம் கேட்டார். குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம்(National Commission for the Protection of Child Rights)மும் 15.08.2012 அன்று விளக்கம் கேட்டு அறிவிப்பு வெளியிட்டது.

 இப்பள்ளி, அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் 25 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய, கர்நாடக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு(Karnataka Unaided School Managements' Association - KUSMA)டன் இணைந்த பள்ளி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இலாபவெறியுடனும், ஏழை மாணவர்கள் மீதான பார்ப்பனிய வன்மத்துடனும் செயல்படுகின்ற இது போன்ற தனியார் பள்ளிகளை முறையாக கண்காணிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சட்டத்தை மீறி நடக்கும் தனியார் பள்ளிகளை, எவ்வித பாரபட்சமும் இன்றி அரசே ஏற்று நடத்த வேண்டும்.

Pin It