(சென்ற இதழ் தொடர்ச்சி) 

உலகமே திரும்பி பார்க்கும் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை கூடங்குளம் பகுதியில் வழி நடத்தி வரும் முனைவர் சு.ப.உதயகுமார் அக்னிப் பரிட்சை என்ற புதிய தலைமுறை தொலைகாட்சியின் நேர்காணல் நிகழ்ச்சியில் 01/09/2012 அளித்த அறிவார்ந்த, உணர்ச்சி ததும்பும் பதிலுரைகள் கீழே தரப்படுகின்றன. நேர்கண்டவர் : திரு. குணசேகரன் 

தமிழ்நாட்டில் உள்ள பிரதான கட்சிகள் அ.தி.மு.க.வான ஆளும் கட்சியும் ஆதரிக்கவில்லை, எதிர்கட்சியான தி.மு.க.வே அதற்கு அடுத்தபடியாக உள்ள தே.மு.தி.க.வோ ஆதரிக்கவில்லை, தேசியக் கட்சி எடுத்து கொண்டால் காங்கிரசும் ஆதரிக்கவில்லை, பாரதிய சனதாவும் ஆதரிக்கவில்லை, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரிக்கவில்லை , பெரிய கட்சிகள் ஆதரவு எதுவும் இல்லாமல் சின்னஞ் சிறிய தமிழ்த்தேசிய குழுக்கள், மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் அவர்களின் ஆதரவு சார்ந்த போராட்டமாக சுறுங்கியுள்ளதே? 

பெரிய கட்சிகள் நடத்தப்படுவது அந்தந்த கட்சிகளின் ஆதாயத்துக்காக என்பது இந்திய அரசியலை புரிந்துக் கொண்டவர்களுக்கு எல்லோருக்கும் தெரியும் இங்கே மக்களும் கிடையாது, மக்களின் நலனும் கிடையாது அந்த கட்சியின் தலைவர் பெரிய பதவிக்கு வரவேண்டும் அந்த கட்சியின் உறவினர்கள், உறுப்பினர்களும் கொள்ளையடிக்க வேண்டும், பெரிய பெரிய மாட மாளிகைகள் கட்ட வேண்டும், குழந்தைகளுக்கெல்லாம் கோடி, கோடியாக பணம் சொத்து வைக்க வேண்டும் இந்திய அரசியல் அசிங்கப் பட்டு கிடக்கிறது எனவே அந்த பெரிய கட்சிகளைப் பற்றி கவலைப்படுவதில் அர்த்தமில்லை அதைதான் நாங்கள் சொல்கிறோம். ஆபத்தான ஆறு கட்சிகள் ஆதரவாக நூறு கட்சிகள் என்று இந்த ஆபத்தான் ஆறும் அவர்களுக்காக வேலைசெய்பவர்கள் அவர்களை பற்றி நாங்கள் கவலைப்படுவ தில்லை. அவர்களை நாங்கள் கணக்கிலே எடுப்பதில்லை. ஆனால் ஆதராவன இந்த நூறும் மாற்று அரசியல், மாற்று வளர்ச்சி, மாற்று விஞ்ஞானம் பற்றிப் பேசுபவர்கள் எனவே நாங்கள் அவர்களோடு கை கோத்துப் போராடிக் கொண்டு இருக்கிறோம் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். 

நீங்கள் பேசுவதில் அரசியல் நெடி இருக்கிறது . பெரிய கட்சிகளை பகைத்து கொள்ளும் போக்கு கூட தெரிகிறது இது உங்கள் போராட்டத்திற்கு வலு சேர்க்குமா?  

பெரிய கட்சிகள் எங்களுடன் வரவில்லையே, காங்கிரஸ் கட்சி எங்களை தேசத் துரோகி என்கிறார்கள், பி.ஜெ.பி யும் எங்களை தேசத் துரோகி என்கிறார்கள். இவர்கள் எல்லம் தேச பக்தர்கள். இந்தியாவில் செய்தியை பார்க்க கூடியவர்களுக்கு தெரியும் யார் தேச பக்தர், யார் தேசத் துரோகி என்று. பெரிய கட்சிகள் தி.மு.க. என்ன செய்கிறார்கள் எங்களுக்கு ஆதரவாக எதுவும் பேசியதில்லை. சி.பிஎம், சி.பி.ஐ கட்சிகள் இன்னும் குழப்பத்திற்குள்தான் இருக்கிறார்கள் எங்களுக்கு இவர்கள் எந்த உதவியும் செய்ய வில்லை நாங்களும் எந்த உதவியும் எதிர்பார்க்கவில்லை. தமிழக முதல்வர் சற்று அனுசரனையோடு பேசினார் நான் 45 நிமிடம் ஆங்கிலத்திலே பேசினேன் ரொம்ப தெளிவான நிலைப்பாடு எடுத்தார். ஆனால் பின்பு என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை அவர் நிலைப்பட்டை மாற்றியிருக்கிறார். இந்த நிலையிலே அவரிடமிருந்து எந்த உதவியும் நாங்கள் எதிர்பார்க்க முடியாது. உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்று சொன்னார். இன்றைக்கு எங்களை கைவிட்டு விட்டார் நாங்கள் மக்களிடம் செல்கிறோம். 

முதலமைச்சரை பொறுத்தவரையிலும், தமிழக அரசைப் பொருத்த வரையிலும் உங்கள் போராட்டத்திற்கு அனுசரனையாக இருந்து பிறகு உங்களை கைவிட்டுள்ளதாக நினைக்குகிறீர்களா? 

முதல்வர் அணுசக்திக்கு எதிரானவர் நிலைப்பாடு உள்ளவர் என்பது முன்பே தெரியும் காரணம் யு.எஸ்.எஸ் நிமிட் என்ற கப்பல் சென்னைக்கு வந்த போது எதிர்த்தார். இந்தியா , அமெரிக்க அணுசக்தி ஒப்பந்ததை கடுமையாக எதிர்த்தார். எஙகளின் போராட்டத்தில் ஓரளவு ஆதரவாக நடந்து கொண்டிருக்கும் போதே அணுசக்தியை ஆதரித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை மாற்றுத் திட்டங்கள் பற்றி பேசினார். மத்தியஅரசிடம் நிதியுதவி கேட்டார் திட்டங்கள் கேட்டார் . இப்போது தனது நிலையை மாற்றியும் கூட இந்தியாவுக்கும் , தமிழ்நாட்டிற்கும் அணுசக்திதான் ஒரே வழி என்று பேசிய தி.மு.க,வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியது போல இதுவரைக்கும் அவர் பேசியது இல்லை ஒரு நிலைப்ப்பாடு எடுக்கவில்லை. ஆனால் முதல்வருக்கு ஏதோ நிற்பந்தம் இருக்கிறது அல்லது முதல்வர் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தால் அணுசக்திக்கு எதிராக நிற்கமுடியாதே என்ற கவலையாலும் கூட இந்த நிலைப்பட்டை எடுத்திருக்கலாம். 

நாங்கள் என்ன சொல்கிறோம் நீங்கள் தான் தமிழ்நாட்டிலே மிகப் பெரிய கட்சி இந்த மீனவ மக்கள் , இந்த விவசாய மக்கள் எல்லோரும் வாக்களித்து தான் சக்தி வாய்ந்த அரசியல் தலைவாராக இருக்கிறீர்கள். இந்த மக்களுக்கு பதில் சொல்லுங்கள் உதயகுமாரோ இல்லை இயக்கத்தில் இருப்பவர்களோ முக்கியமானவர்கள் கிடையாது. நாங்கள் எல்லாம் இந்த மக்களின் சேவகர்கள் நீங்கள் பதில் சொல்வது இந்த மக்களுக்கு. 

அணுவிஞ்ஞானம் என்பது படித்தவர்களாலயே புரிந்து கொள்ள முடியாத ஒரு சிக்கலான விசயமாக இருக்கிறது. நீங்கள் அமெரிக்காவில் இருந்திருகிறீர்கள் இது பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் உங்கள் மீது மற்றவர்கள் கூறும் புகாரே ஏழை எளியமக்களை, மீனவமக்களை, சாமானிய மக்களை தவறாக வழி நடத்துகிறீர்கள் அவர்களுக்கு ஆக்கபூர்வமாக எதையும் சொல்லாமல் பீதியை உண்டாக்கி தவறான வழியை காட்டிகிறீர்கள் அதற்கு உங்கள் பதில் என்ன? 

ராஜஸ்தான் மாநிலத்தில் ராவட்பாட்டாவி 10,000த்திற்கும் மேலான மக்கள் கூடிப் போராட்டம் நடத்தினர் நான் ராவட்பாட்டாவிற்கு போனதில்லை, பத்தேகபாத் விவசாயிகள் பல ஆண்டுகள் போராடி வருகிறார்கள் நான் பத்தேகாபாத்துக்கு போனது கிடையாது இந்தியாவில் பல இடங்களில் போராட்டம் நடை பெறுகிறது அப்படி என்றால் இந்தியாவில் நடக்கும் போராட்டங்களுக்கு உதயகுமார் தான் காரணமா? கூடங்குளம் போராட்டத்திற்கு 25 வருடமாக எழுதிக் கொண்டும். பேசிக் கோண்டும் வருகிறேன் இந்த மக்களின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படுவதால், எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுவதால் அவர்கள் கேட்கிறார்கள். 

 மக்களை கண்டு ஏன் அஞ்ச வேண்டும் மக்களுக்கு நல்லது செய்கிறீர்கள் என்றால் நேரடியாக வந்து இந்த திட்டம் நல்லத்திட்டம் உதயகுமார் சொல்வதெல்லாம் பொய் அவர் கேட்கிற அறிக்கைகள் எல்லம் இதோ இருக்கிறது, தள ஆய்வறிக்கை, பாதுகாப்பு ஆய்வறிக்கை, அத்தனை அறிக்கைகளும் தமிழிலே மொழிபெயர்த் துள்ளோம். நீங்கள் படியுங்கள். உதயகுமார் ஒரு தேசத் துரோகி, புஷ்பராயன் ஒரு தேசத் துரோகி இவர்களை எல்லாம் விரட்டியடிங்கள் என்று சொன்னால் இந்த மக்கள் உடனடியாக செய்வார்கள் ஏன் செய்ய வில்லை, அதனால் தான் மக்கள் எங்களை நம்புகிறார்கள். 

நீங்கள் எழுப்பிய எல்லா கேள்விகளுமே அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் பதிலளித்துடன். நீங்கள் எழுப்பிய கேள்விகள் அடிப்படை முகாந்திரம்மற்றவை, அறிவியல் பூர்வமானது அல்ல என்று கூட சொல்லியிருக்கிறது அதற்கு உங்கள் பதில் என்ன? 

டாக்டர் முத்துநாயகம் குழுவில் உள்ள அந்த அறிக்கை கொடுத்தார்கள், அந்த அறிக்கையில் என்ன சொன்னார்கள் என்றால் கூடங்குளம் அணுஉலை செயலிழக்க செய்வதற்கு அருமையானத் திட்டம் வைத்துள்ளோம், அற்புதமானத் திட்டம், ஒழுங்காற்று வாரியத்தின் பற்றி தணிக்கைக் குழு அறிக்கை சொல்லியிருக்கிறார்கள் இந்தியாவில் உள்ள எந்த ஒரு அணுமின்நிலையத்தையும் செயலிழக்க வைப்பதற்கு இவர்களிடம் எந்த திட்டமும் கிடையாது. பொய் சொல்கிறார்கள் தணிக்கை குழு பொய் சொல்கிறதா அல்லது முத்துநாயக்ககுழு பொய் சொல்கிறதா. இருவரில் ஒருவர் பொய் சொல்கிறார்கள். அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்கள் இந்த பாமர வர்க்கத்தை, இந்த சாதாரன மக்களை ஏமாற்றுகிறார்கள் இது இந்த நாட்டில் நடக்கிறது. 

தவறு, தவறுலேந்து படிப்பினை பெருவது விஞ்ஞானம், மீண்டும் தவறு நடைபெறாமல் தவிற்பது விஞ்ஞானம், விமானத்தில் பயணம் செய்யும் போது விபத்து நடைபெருகிறது என்பதால் விமானத்தில் பயணம் செய்யாமல் இருக்கி றோமா , இரயில் விபத்து நடக்கிறது என்பதால் இரயிலை நிறுத்தி விட்டோமா, டைட்டானிக் முழ்கி விட்டது என்பதால் கப்பல் போக்குவரத்து நிறுத்தி விட்டோமா எல்லாதுறைகளிலுமே ஏதோ ஒரு நிலையில் ஆபத்து இருக்கும். ஆனால் நீங்கள் அணு உலை பற்றி பேசும் போது ஆபத்தை பற்றியே பேசுகிறீர்கள்? 

முழுக்க முழுக்க சரி. இதே கருத்தை அய்யா அப்துல்கலாம் அவர்கள் சொல்லியிருந்தார் டைட்டானிக் கப்பல் மூழ்கினால் அதில் உள்ளவர்கள் மட்டுமே சாவார்கள், இரயில் விபத்து நடந்தால் இரயிலில் உள்ளவர்கள் மட்டும் சாவார்கள், விமான விபத்து என்றால் விமானத்தில் உள்ளவர்கள் மட்டும் சாவார்கள் . கூடங்குளத்தில் விபத்து நடந்தால் நீங்களும், நானும் மட்டும் அல்ல நமது நான்காவது, ஐந்தாவது தலைமுறையினர் குரங்குபோல் வருவார்கள் அதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டும். 

ஏன் செர்னோபியில் அணுவிபத்து நடந்ததே அங்கு அப்துல்கலாமை போய் தங்க சொல்லுங்க அணுசக்திதான் பாதுகாப்பனாது. செல்கிராங்கலே அணுசக்தி விஞ்ஞானிகளை ஒரு பத்து நாள் செர்னோபில் போய் தங்க சொல்லுங்கள் . உள்ளவே போக முடியாது ஏன் போகமுடியாது விபத்து நடந்தது 1986 ஆண்டு ஏப்ரல் 26ல் ஆனால் இன்று வரையில் மனிதர்களை யாரையும் விட வில்லை, பிக்குஷிமாவில் விபத்து நடந்த போது 250 கி.மீ உள்ள டோக்கியோ நகரத்தில் அத்தனை பெயரும் முகமூடி அணிந்து சுத்தினார்கள் நான் நேரில் சென்று வந்தேன் விபத்து நடந்து 2 மாதங்கள் கழித்து. ஏன் இப்படி செய்கிறோம் எதிர்காலம் பாதிக்கப்படும். 

இது சாதாரன தொழிற்சாலையல்ல தமிழ் மக்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும், தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள், ஏதோ கடலை மிட்டாய் கடையில் விபத்து நடந்தால் எல்லவற்றையும் கழுவி பயன்படுத்தாலாம் என்பது போல் சொல்கிறார்கள். அணுமின் விபத்து என்பது விமானவிபத்து அல்ல, இரயில் விபத்தும் அல்ல, கப்பல் விபத்து அல்ல, அடுத்த இருநூறு, ஐநூறு ஆண்டுகளை அழிக்கும் விபத்து அணுவிபத்து, எதிர்கால சந்ததியினரை கருவருக்கும் விபத்து. 

இந்தியாவில் படித்த விஞ்ஞானிகள் யாரும் உங்கள் கருத்தை எற்பதாக தெரியவில்லை, மத்தியஅரசும் பிடிவாதமாக இருக்கிறது அதற்கு மாநில அரசாங்கமும் துணைப் போகிறது, இப்படி படித்த பல பேர்கள் உங்கள் கருத்த ஏற்பதாக இல்லை? 

இல்லை, அப்படி கிடையவே கிடையாது மெத்தப் படித்தவர்கள் நிறைய பெயர்கள் இருக்கிறார்கள், அணுசக்திக்கு ஒழுங்காற்று வாரியத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் இதை பற்றி பேசியிருக்கிறார், முன்னாள் கப்பல் படை தளபதி அட்மினரல் இராமதாஸ், எங்களின் மிக நெருக்கமான போராளி முன்னாள் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் வி.கே.சிங் இதை பற்றி பேசியிருக்கிறார் அடுத்த வாரம் இங்கே வருகிறார், டாக்டர் எம்.ஜி.தெய்வசகாயம், முன்னாள் பவர் மினிஷ்டர் செயலாளர் இ.ஏ.ஷர்மா, இந்தியாவில் உள்ள பலரும் பேசுகிறார்கள் பொறியாளர்கள், சமூக சேவகர்கள் பேசுகிறார்கள். இதை பற்றி நானோ அல்லது என்னுடன் இருப்பவர்களோ மட்டும் பேசவில்லை. இந்தியாவில் உள்ள பல பெயர்கள் பேசுகிறார்கள். 

ஒரு நாட்டு நலன் கருதி எந்த ஒரு பெரிய வளர்ச்சித் திட்டம் வந்தாலும் அதனால் சிலர், சில அசம்பாவிதங்கள் ஏற்படுவது இயல்பு அதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

நான் காந்தியவாதி நான் அனைவரும் அனைத்தும் பெற வேண்டும் என்று நினைக்கிறவன் இங்கு மீனவர்கள் எல்லாம் சாகட்டும், பெங்களூரிலே அரை குரை ஆடையுடன் கூடிய பெண் படம் வைத்து 24 மணி நேரமும் அதற்கும், மின்சாரம் வைத்து அதுதான் வளர்ச்சி இந்த வளர்ச்சிக்கு இந்தியாவில் தெற்கே உள்ள மீனவர்கள், தலித் தொழிலாளர்கள் எல்லாம் சாகட்டும் என்று சொல்வதில்லே நம்பிக்கை கிடையாது. நாங்கள் முழுமையாக எங்கள் சக்திக்கு எட்டும் வரை எதிர்ப்போம். 

இந்தியா ஒரு வல்லரசாவதை தடுக்க நினைக்கிற தேச விரோத சக்திகள், அவர்கள் எல்லாம் உங்கள் போராட்டத்திற்கு பின்னணியிலே இருக்கிறார்கள், அவர்களிடமிருந்து உங்களுக்கு உதவி வருகிறது என்று உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் எல்லாம் உங்கள் மீது குறறம் சாற்றினார்கள் இந்த குற்றச் சாட்டிற்கு உங்கள் பதில்

நீங்களும் என்கூட வேலை செய்கிறீர்கள் என்று குற்றம் சாட்டு சொல்லலாம் ஆதாரம் வேண்டும். நீங்கள் கொலைகாரன் என்று கூட நான் சொல்லலாம் ஆதாரம் வேண்டுமல்லவா. நீங்கள் இந்திய அரசு அனைத்து வல்லமைக் கொண்ட இந்தியரசு ஆதாரம் என்ன? மன்மோகன் சிங்கும் சொன்னார் நான் வழக்குத் தொடுத்தேன் ஏன் பதில் சொல்லவில்லை என்றால் உண்மையில்லை. இந்தியா வளரக்கூடாது என்று நாங்கள் விரும்பவில்லை, இந்தியாவுடன் மீனவர்களும், விவசாயிகளும், தலித் தொழிலாளர்கலும் சேர்ந்து வளர வேண்டும் என்பது தான் எங்கள் வாதம், நாங்களும் இந்தியர்கள் இல்லையா நாங்களும் சேர்ந்து வளரனும். இந்திய வல்லரசு ஆகவேண்டாம் ஒரு நல்லரசாக வேண்டும் ,கோடி கோடியாக கொள்ளையடித்து கொண்டிருக்கிறீர்கள், இந்திய மக்களை திட்டம் மிட்டு கொள்ளையடிக்கிறீர்கள். இந்திய மக்கள் இப்படி கஷ்டபடுவதற்கு, பல பிரச்சினைகளிடையே இருப்பதற்கு இந்த சோக்கால் தேசபக்திகாரர்கள் தான். 

ஒரு ஆண்டுக்கு முன்னால் இருந்த வீரியம், இப்பொது இல்லை என்றும் கூட சொல்ல்லாம், முன்பு பல்லாயிரக்கணக்கில் வந்தார்கள் இன்று ஆதரவாளர்கள் குறைந்துள்ளது இது மாநில அரசு மனம் மாற்றத்திற்கு இது கூட காரணமாக இருக்கலாம்? 

எங்களுடைய போராட்டம் இன்று பலம் அடைந்திருக்கிறது நாங்கள் இந்த போராட்டத்தை ஆரம்பிக்கும்போது இந்த பகுதி மக்கள் மட்டும் தான் ஆதரவு அளித்தார்கள், இன்றைக்கு சிந்திக்கிற ஒவ்வோரு தமிழக ஆணும் , பெண்ணும் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள் இந்தப் போராட்டம் பலம் அடைந்திருக்கிறது. 

உங்கள் போராட்டம் தோற்கவில்லை என்கிறீர்களா? 

நிச்சயமாக இல்லை எங்கள் போராட்டம் வெற்றியடைந்துள்ளது, எங்கள் போராட்டம் வெற்றியடைந்தே தீரும் இந்தியாவின் சரித்திரத்திரத்தை மாற்றப் போகிறது, மாற்றும் இதில் கடுகு அளவும் சந்தேகம் வேண்டாம், இந்திய மக்கள் விழித்து கொண்டார்கள், இந்திய மக்கள் சிந்திக்கிறார்கள், தமிழக மக்கள் எழுந்து விட்டார்கள், இனியும் நாம் ஏமாறக்கூடாது என்று சுதாரித்துக் கொண்டார்கள், எங்களுடையப் போராட்டம் இந்தியாவின் வளம்மிக்கதாக, பாதுக்காப்பாக, சுதந்திர மாக வைத்திருக்க உதவும். இந்தியாவை அமெரிக்கனிடமோ, இரசியாவிடமோ, பிரான்சிடமோ விற்க விடமாட்டோம். 

கோரிக்கை வைப்பவர்களுக்கும் அதை நிறைவேற்றுபவர்களுக்கும் ஒரு சந்திக்கின்ற புள்ளி இருக்கும். ஒருவர் பத்து கோரிக்கை முன் வைத்தால் , இரண்டு நிறைவேறினால் ஒப்புக்கொள்வார் போராட்டத்தை வாபஸ் பெருவதற்கு குறைந்தபட்ச கோரிக்கை என்று இருக்கும் அதிகபட்ச கோரிக்கை என்று இருக்கும். ஆனால் உங்கள் கோரிக்கை ஒற்றை கோரிக்கை, உங்கள் குறைந்த பட்ச கோரிக்கையே அணு உலையை மூடு என்பதாக இருக்கிறது.? 

நாங்கள் நடத்துகின்ற போராட்டம் சம்பள உயர்வுக்கானப் போராட்டம் அல்ல, நாங்கள் நடத்துகின்ற போராட்டம் சலுகைகள் கேட்டு நடத்துகின்ற போராட்டம் அல்ல, உயிருக்காகப் போராட்டம். இதில் நீங்கள் கொஞ்சம் உயிர் வைத்துகொள், மீதி நான் எடுத்து கொள்கிறேன் என்று சொல்லமுடியாது, முழு உயிரும் வேண்டும். 

எதிர்காலத்திற்கான போராட்டம் , எதிர்கால சந்ததினருக்கானப் போராட்டம் இதில் எந்த விட்டுக்கொடுத்தலுக்கும் இடம் இல்லை. இது எப்படி என்றால் கொஞ்சம் மானத்தை வைத்து கொள் என்று மீதியை உறிஞ்சிக்கமுடியாது அதைப் போல் தான் எந்த சமரசத்திற்கும் இடம் இல்லை. 

ஓராண்டுகாலம் போராட்டம் நடத்தி வந்தாலும் கூட ஒரு வன்முறை இல்லாத போராட்டம் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வளவு பெரிய மக்களை திரட்டி போராடும் போராட்டம் எந்த வன்முறையும் இல்லாம் நடைபெருவது பாராட்டபட வேண்டிய விஷயம் இந்த அளவுக்கு போராட்டத்தை பக்குவமாக நடத்த தெரிந்த நீங்கள் தமிழ்நாடு ஒரு பக்கம் இருளில் மூழ்கியுள்ளது, மின்சாரம் இல்லாமல் தொழிற்சாலைகள் முடப்படுகின்றன தொழிலாளர்கள் தவிக்கிறார்கள், மாணவர்கள் பாதிக்கிறார்கள் ஏன் பிற பகுதி மக்களை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் என்ற கேள்வி உங்களுக்கு முன் வைக்கப்படுகின்றது? இதற்கு உங்களுடைய பதில் ? 

அதற்கு முழு பொறுப்பு எங்கள் மக்கள், எங்கள் மக்கள் கோப்படக் கூடியவர்கள், உணர்ச்சிவசபடகூடியவர்கள் என்றேள்ளம் தவராக புரிந்து கொள்ளப் பட்டவர்கள், இன்றைக்கு ஒருவருடத்திற்கு அதிகமாக மென்மைவழியிலே, அகிம்சை வழியிலே இந்த போராட்டத்தை நடத்தி கொண்டி இருக்கிறார்கள், இதில் பெண்களும், குழந்தைகளும் அதிகமாக கலந்து கொண்டு இருக்கிறார்கள், நாங்கள் மக்களாட்சி யிலே, கருத்து பறிமாற்றத்திலே நம்பிக்கையுடையவர்கள் என்பதால் யாருடனும், எந்த நிலையிலும் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். 

மற்ற பகுதியிலே உள்ள மக்கள் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படுவது போலத்தான் நாங்களும் கஷ்டபடுகிறோம், மின்சாரம் இல்லாமல் அவஸ்த்தை படுகிறோம். இதற்கு நாங்களோ தொழிற்சாலை அதிபர்களோ சண்டையிடுவது அர்த்தமில்லை. இந்த பிரச்சனை யிலிருந்து எப்படி வெளியே வருவது மின்சாரத் தட்டுப்பாடு ஒரு பிரச்சனை, இதை நிவர்த்தி செய்வதற்கு என்னென்ன செய்ய வேண்டும், எங்கள் பகுதியிலே இடிந்தகரை மக்கள் குமிழ் விளக்குகளை அகற்றி விட்டு, குச்சி விளக்குகளை பொருத்தி யிருக்கோம், இது போன்ற திட்டங்களை அரசு கொண்டு வரலாம், எங்கள் பகுதியிலே 3000 மெகாவார்ட் உற்பத்தி செய்ய கூடியக் காற்றாலை இருக்கிறது. 

காற்றாலைதான் பிரச்சனையே? காற்றாலை மின்சாரம் நிலையான மின்சாரம் இல்லை, ஆறு மாதம் இயங்கும்,ஆறு மாதம் தொழிற்சாலை இயங்காதே. 

அதற்கு தான் நாங்கள் சொல்கிறோம். மையப் படுத்தப்பட்ட centralized supply based electric city generation அதாவது இந்த அணிமின்நிலையம் போல மையப்படுத்தப் பட்ட விநியோக அடிப்படையிலான உபயோகம் . அது தவறு அமெரிக்காரர்கள் போல திருடுவதற்கு வாய்ப்பு உருவாக்குவதற்கு திட்டங்களை பெரும் முதலாளிகளும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் விரும்புகிறார்கள் இதில் தான் கமிஷன் அதிகமாக கிடைக்கும் திருட முடியும், நாங்கள் என்ன சொல்கிறோம் de centralized demand based அதாவது இடிந்தகரை கிராமத்துக்கு எவ்வளவு மின்சாரம் தேவையோ அதற்கான காற்றாலையை வைத்து சோலார் பிளாண்ட வைக்கலாம், இப்படி அங்கங்கே வைத்து விட்டு , தொழிற்சாலை இருக்கும் இடத்தில் மட்டும் அணல்மின் நிலையம் அமைத்து அந்த தொழிற்சாலையை நிறுவலாம். ஆனால் இங்கே நடப்பது திருடுவதற்காகவும், மக்கள் பணத்தை சுரண்டுவதற்காகவும், இந்திய இராணுவத்திற்கும், உலக இராணுவத்திற்கும் அணு ஆயுதம் தயாரிப்பதற்காக இந்த ஆளும் வர்க்கத்தை பேணுவதற்காக ஆதனால் தான் இந்த கட்டமைப்பை எதிர்த்து போராடுகிறோம் அதுதான் உண்மை. 

மத்திய , மாநில அரசுகள் கைவிட்டு விட்டது, நீதி மன்றத்திலும் பரிகாரம் கிடைக்க வில்லை, பெரிய கட்சிகளும் ஆதர்வு அளிக்க வில்லை உங்களின் போராட்டத்தின் எதிர்காலம் என்ன? 

எங்களால் முடிந்தவரை இயன்றவரை எல்லா வழிகளிலும் போராடுவோம் ஒரு அநீதி நடக்கும் போது அதற்கு குரல் கொடுப்பது உண்மையான மக்களின் கடமை. மகாத்மா காந்தி சொன்னது போல தீய சக்திக்கு எதிராக போரிட வேண்டியது கடமை, நிர்பந்தம் ஆதலால் நங்கள் அழிக்கப்படலாம், கொள்ளப் படலாம் அதைப் பற்றி நாங்கள் கவலைபட வில்லை. இறுதியாக எதிர்கால தலைமுறைக்கு, மகாத்மா காந்தியை போல, நேதாஜி சுபாஷ் சந்திர போஸையும் நினைத்து பார்ப்பதை போல இந்த போராளிகள் எல்லாம் நமது எதிர்காலத்திற்காக நமது இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக, நமது வாழ்வாதரத்தை பாதுகாப்பதற்காக போராடித் தோற்றார்கள் செத்தார்கள் என்று சொன்னாலும் அதில் கிடைக்கும் சந்தோஷம் பெரிய வெற்றியாக இருக்கும் நாங்கள் எதற்கும் கவலைபடவில்லை. எங்களுடைய ஜனநாயக்கடமையை, உரிமையை கடைசி வரை, சாவாக இருந்தால் சாவாக இருக்கட்டும் அது வரை நாங்கள் போராடுவோம், எந்த நிலையிலும் யாரோடும் எங்களுக்கு சமரசம் இல்லை.

Pin It