கடந்த மாதம் வங்கக் கடலில் ஏற்பட்ட நீலம் புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டிருந்த அதே வேளையில், அட்லாண்ட்டிக் பெருங்கடலில் சாண்டி எனப் பெயரிடப்பட்ட புயல் கரீபிய நாடுகளிலும், அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரை மாகாணங்களிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. 

வட அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் 80க்கும் மேற்பட்டோரும், ஹைய்தி, கியூபா, டொமினிக் குடியரசு, ஜமைய்க்கா உள்ளிட்ட கரீபிய நாடுகளில் சற்றொப்ப 70 பேரும் இப்புயலுக்கு பலியானார்கள். 

இதில், ஹைய்டி நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் 54 பேர் ஆவர். ஜமைக்கா நாட்டில் 70 விழுக்காட்டு மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கியூபாவில் 15,000 பேர் வீடுகளை இழந்தனர். ஹைட்டி நாட்டின், 2 இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர். அங்கு பயிரிடப்பட்ட 70 சதவிகித விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கின. இதனால் கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. லியோகேன்(Leogâne) நகரில், மக்கள் உணவுக்காக சாலைகளில் இறங்கிப் போராடினர். 

காலரா நோய்க்கு சற்றொப்ப 7,500 பேரை பலிகொடுத்த அந்நாட்டில், தற்போது நிரம்பி வழியும் தண்ணீரால் மீண்டும் அது போன்ற அபாயத்தை சந்திக்கும் நிலையுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பிலிருந்தே இன்னும் முழுமையாக மீண்டுவராத நிலையில், தற்போது ஹைட்டியில், ஏற்பட்டிருக்கும் புயல் பாதிப்புகள் ஹைட்டிக்கு, பெரும் சவாலாக அமைந்துள்ளன. 

இந்நிலையில் தங்கள் நாட்டின் பேரழிவை சரிசெய்ய உலக நாடுகள் உதவ வேண்டும் என அந்நாட்டுப் பிரதமர் லாரண்ட் லாமோத் கோரிக்கை விடுத்தார். 

பொருளியல் மந்தத்தால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் நியூயார்க் நகரில், சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட எளிய மக்கள் பலர் கடைகளை சூறையாடினர். புயலுக்குப் பின்னான நாட்களில், “திருட்டு”களின் எண்ணிக்கை அதிகரித்தது என நியூயார்க் மாநகரக் காவல்துறை அறிவித்தது. 

தமிழகத்தில் நீலம் புயலின் சூறாவளிக் காற்றால், மரங்கள் வீழந்தும், மின்கம்பிகள் அறுந்தும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த வேளையில், அது குறித்த எந்த செய்திகளையும் போடாமல், வடநாட்டு இந்தி ஊடகங்கள் அமெரிக்காவின் சாண்டி புயலை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தன. 

அதே போல், கியூபா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைக் கொண்ட கரீபியப் பிரதேசத்தில், சாண்டி புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து எவ்வித செய்திகளும் வெளியிடாமல், அப்புயல் அமெரிக்கா நோக்கி நகர்ந்த பிறகு, அதை நொடிக்கு நொடி வர்ணனை செய்து படம்பிடித்தன, அமெரிக்க செய்தி ஊடகங்கள். 

வட அமெரிக்காவில் சாண்டி புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தான செய்திகளை அடுத்து, அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியாளர்களான சனநாயகக் கட்சி வேட்பாளர் பாரக் ஓபாமா – குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோம்னி ஆகியோர் புயல் குறித்த கூறியவைகள் மட்டுமே பரபரப்பு செய்திகளாக வந்தன. “பிற நாடுகளிலும்” இப்புயல் பாதிப்பை ஏற்படுத்தியது என சில ஊடகங்கள் ஒருவரிச் செய்தி வெளியிட்டன. 

முதலாளிய செய்தி ஊடகங்கள், கியூபாவில் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை இருட்டடிப்பு செய்த போதிலும், கியூப முன்னாள் அதிபர் பிடல் காஸ்த்ரோ, புயலால் பாதிக்கப்பட்ட அமெரிக்க மக்களுக்கு உதவ நாங்கள் மருத்துவர்களை அனுப்புகிறோம் என மனித நேயத்துடன் கூறினார். 

இது போன்ற புயல்களின் போது, மீட்புப் பணிகளில் ஈடுபடும் வட அமெரிக்கக் கூட்டரசின் நிறுவனமான, ஃபீமா என்றழைக்கப்படும் அவசரகால மேலாண்மை கூட்டு நிறுவனத்தை (Federal Emergency Management Agency – FEMA) அரசே நடத்தாமல், அதை தனியார் முதலாளிகளை வைத்து நடத்தலாம் என கடந்த ஆண்டு, குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோம்னி கூறியிருந்த கருத்தை, தி நியூயார்க் டைம்ஸ் ஏடு மீண்டும் எடுத்து வெளியிட்டு, அவருக்கு தேர்தல் நேரத்தில் “நெருக்கடி”யை கொடுத்தது. 

இதை அமைதியாக இரசித்துக் கொண்டே, தனது தேர்தல் பரப்புரையை மேலும் வேகப்படுத்தினார் பாரக் ஒபாமா. இம்முறை, தமது பரப்புரைக்கு ஒபாமா செய்தி ஊடகங்களைவிட அதிகமாக நம்பியது சமூக ஊடகங்களான ட்விட்டரையும், பேஸ்புக்கையும் தான். தனது சொந்த ட்விட்டர் பக்கங்களில் அவர் தொடர்ந்து இணைப்பிலிருந்து பரப்புரையை தீவிரப்படுத்திக் கொண்டே வந்தார். 

சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மனிதநேயப் பணிகளில், “வால்ஸ்ட்ரீட் கைப்பற்று” இயக்கத்தினர் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், அதிபர் வேட்பாளர்களோ, சில நாட்கள் பரப்புரையை நிறுத்திவிட்டு, அதன்பின் தங்கள் பரப்புரையைத் தொடங்கினர். 

அமெரிக்காவில், சான்டி புயலின் பாதிப்புகள் மறைவதற்குள் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியை நகரங்களை, ஏதேனா என்ற மற்றொரு புயல் தாக்கியுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஏற்பட்ட தானே, நீலம் மற்றும் அமெரிக்காவின் காத்ரினா, சாண்டி உள்ளிட்ட மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய புயல்கள் அனைத்தும், இவ்வளவு வீரியமாக இயங்குவதற்கு, புவிவெப்பமயமாதலையே முன்னிறுத்து கின்றனர் அறிவியலாளர்கள். இது குறித்து, அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் இருவருமே மூச்சு விடவில்லை. 

இறுதியில் அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

ஒபாமாவும், ரோம்னியும் நேரடியாக பங்கேற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் போது, ஒரு படித்த இளைஞர் தனக்கு வேலை கிடைக்குமா எனக் கேள்விக் கேட்டார். அதற்கு பதிலளித்த ஒபாமா, ஜெனரல் மோட்டார்ஸ், கிறைஸ்லர் போன்ற பெரு நிறுவனங்கள் நட்டமடைந்த போது, அந்நிறுவனங்களைத் தூக்கி நிறுத்த மக்கள் வரிப்பணத்தை தூக்கிக் கொடுத்ததை பெருமையுடன் மேற்கோள் காட்டி பதில் சொன்னார். 

இந்த இரு வேட்பாளர்களும் தமது தேர்தல் பரப்புரைக்கு சற்றொப்ப 200 கோடி டாலருக்கும் மேலாக செலவு செய்துள்ளனர் என செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஓபன் சீக்ரெட்ஸ் என்ற இணையதளம், அதிபர் ஒபாமாவுக்கும், ரோம்னிக்கும் முதலாளிய நிறுவனங்கள் அதன் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் பெயரைக் கொண்டு கொல்லைப்புறமாக அளித்த நிதி குறித்த பட்டியலை வெளியிட்டது. 

பெரும் பணக்கார்ர் பில்கேட்சின் மைக்ரோசாப்ட் கணினி நிறுவனம் மட்டும் சற்றொப்ப 7 இலட்சத்து 61,343 டாலர் நிதியை ஒபாமாவிற்கு வழங்கியுள்ளது. கோல்ட்மென் சாசஸ் நிறுவனம், 9,94,139 டாலர்களும், பேங்க் ஆப் அமெரிக்கா வங்கி 9,21,839 டாலர்களும், ரோம்னிக்கு வழங்கியுள்ளன. இதைப்போன்ற, அனைத்து வேட்பாளர்களுக்கும் எந்தெந்த நிறுவனங்கள் நிதி வழங்கின, எவ்வளவு நிதி வழங்கின என்பதும் அப்பட்டியில் வெளியாகியுள்ளது. (காண்க: http://www.opensecrets.org/pres12/contriball.php

இவ்வாறு, அமெரிக்க நிறுவனங்களும், முதலாளிகளும் வேட்பாளர்களுக்கு அளித்த நிதியை, அந்நிறுவனங்கள் மீண்டும் திருப்பி எடுப்பதற்கான பணியையே புதிய அதிபராகவும், மற்ற பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளும், தமது பதவிக்காலத்தின் போது மேற்கொள்வார்கள். 

ஆகவே தான், அமெரிக்க அதிபராக எவர் வந்தாலும், அதன் ஆட்சித் தன்மையும், அடுத்த நாட்டை ஆக்கிரமித்துக் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய குணநலனும் ஒரு போதும் மாறாது என நாம் உறுதியாகச் சொல்கிறோம்.

Pin It