இலத்தீன் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா நாட்டில், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் ஃபார்க் (Revolutionary Armed Forces of Colombia - FARC)) அமைப்பின் தலைவர் அல்போன்சோ கனோ 04.11.2011 அன்று கொலம்பிய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

தனது கைப்பாவை ஆட்சியாளர்களைக் கொண்டு, கொலம்பியாவைச் சூறையாடி வரும் வட அமெரிக்க வல்லரசை எதிர்த்து கடந்த 1960லிருந்து அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு எதிராக 'பார்க்' அமைப்பு ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகின்றது. 

வட அமெரிக்க ஆதரவு பொலிவிய ஆட்சியாளர்களுக்கு எதிரான, புரட்சியாளர் சே குவேராவின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு 1960களில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு மார்க்சிய இலெனினியத்தை தம் வழிகாட்டு நெறியாகக் கொண்ட கொரில்லாப் போர்முறை அமைப்பாக செயல்படுகின்றது. இவ்வமைப்பில், தற்போது 18,000 போராளிகள் உள்ளனர். 

கொலம்பிய நாட்டின் வளங்களை சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களையும், வட அமெரிக்க வல்லரசின் இராணுவத் தலையீட்டையும் எதிர்த்துப் போராடி வருகிறது இவ்வமைப்பு. 

பார்க் இயக்கத்தை அழித்தொழிக்க வட அமெரிக்க அரசு, தொடர்ந்து கொலம்பிய இராணுவத்துக்கு ஆயுத உதவிகளை செய்து வருகின்றது. மேலும், பார்க் அமைப்பை இல்லாதொழிக்க பல சட்ட விரோத ஆயுதக் குழுக்களை இவ்வரசுகள் உருவாக்கின. 

கடந்த 01.03.2008 அன்று பார்க் அமைப்பின் சர்வதேச செய்தித் தொடர்பாளரும், அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவருமான ரவுல் ரயீஸ் உள்ளிட்ட 20 போராளிகளை கொலம்பிய இராணுவம் கொன்றது. அதனைத் தொடர்ந்து அமைப்பின் பல்வேறு தலைவர்களும் போராளிகளும் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அமைப்பின் தலைவரான அல்போன்சோவும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

வட அமெரிக்க மற்றும் கொலம்பிய அரசுகளின் உலகமய ஆதரவுப் பொருளியல் கொள்கையையும், சூறையாடல்களையும் எதிர்த்துப் போராடிய, தோழர் அல்போன்சோ கனோவுக்கு வீரவணக்கம்! ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பார்க்கின் போராட்டம் தொடர்கிறது!

Pin It