தமிழர் தன்மானப் பாசறையின் நிறுவனர், தோழர் ஆவடி மனோகரன் 30.10.2011 அன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60. மறைவதற்குச் இரு நாட்களுக்கு முன்னதாகத் தான், உடல் நலக் குறைவால் சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்றிருந்தார். பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டு, திராவிடர் கழகத்தின் செயல் வீரராக, மாவட்டச் செயலாளராக தொடர்ந்து பணியாற்றி வந்த தோழர் ஆவடி மனோகரன், ஈழ விடுதலைக்காக ஈகங்கள் பல புரிந்தவர் ஆவார்.

ஈழத்தில் நடந்த இறுதிப்போரின் போது, ஆட்சியிலிருந்து தி.மு.க.வுடன் கொஞ்சிக் குலாவிய திராவிடர் கழகத்தின் செயலைக் கண்டு வெறுத்து, அதிலிருந்து விலகி தமிழர் தன்மானப் பாசறை என்ற அமைப்பை ஏற்படுத்தினார். திராவிட மாயையிலிருந்து விடுபட்டு தமிழ்த் தேசியத்தை நாம் முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் இது எனத் தொடர்ந்து கூறி வந்தார். 1990 பிப்ரவரி 25 அன்று சென்னை பெரியார் திடலில் நடந்த தமிழ்த்தேசிய தன்னுரிமை மாநாட்டிற்கு பேருதவியாய் இருந்தார். அது முதல் த.தே.பொ.க. வுடன் தோழமையுடன் இருந்தார்.

இந்திய அரசு ஆவடியில் நடத்தி வரும் திண்ணூர்தி தொழிற்சாலையில், அயல் மாநிலத்தவர்களை அதிகமாகப் பணிக்கு அமர்த்தியதைக் கண்டித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கடந்த மார்ச் மாதம் ஆவடியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் ஆவடி மனோகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

01.11.2011 அன்று நடந்த, தோழர் ஆவடி மனோகரன் அவர்களின் இறுதிச் சடங்கு நிகழ்வில், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு, தமிழகத் துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன் வழக்கறிஞர் குப்பன், தி.க. தென்மண்டலச்செயலர் தோழர் ஞானசேகரன், ஆவடி நகராட்சித்தலைவர் திரு நாசர், நாம்தமிழர் இயக்கம் அன்பு தென்னரசு, உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் திரளான தமிழுணர்வாளர்களும் கலந்து கொண்டனர். தோழர் ஆவடி மனோகரன் அவர்களுக்கு வீர வணக்கம்!

Pin It