தமிழகத்தில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் நாத்திகர்களை எளிதில் காணலாம். இதற்குப் பெரியாரும் அவரைத் தொடர்ந்து வந்த அவரது கொள்கைப் பற்றாளர்களும் செய்துள்ள பரப்புரைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அவர்களிடம் பேசுகையில் நாத்திகமா? ஆத்திகமா? என்ற வாதுரைகளுக்கு நடுவே தமிழா? ஆங்கிலமா? என்ற விவாதமும் தலைதூக்கும்.

அடிப்படையில் எல்லா மாயைகளுக்கும் புரிதலின்மையும், அதனால் ஏற்படும் அச்ச உணர்வுமே காரணம் ஆகும். இறை நம்பிக்கை, ஆங்கில நம்பிக்கை ஆகிய இரண்டுக்குமே அடிப்படைக் காரணமாக இருப்பது இயற்கை அறிவியல், சமூக அறிவியல் ஆகிய இரண்டிலும் மக்களுக்குள்ள புரிதலின்மையே என்பதால், இவ்விரு நம்பிக்கைகளுமே அவர்களிடத்தில் அச்ச உணர்வை உருவாக்கிப் பல மாயைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன.

மொழி என்பது இயற்கை வழியில் மூளையிலும், சமூக வழியில் மக்களிடத்தும் என்றென்றும் சுரந்து கொண்டிருக்கும் ஓர் அறிவு ஊற்று என்னும் அறிவியல் உண்மை குறித்து மக்களிடம் உள்ள புரிதலின்மையே ஆங்கில நம்பிக்கையாக மாறுகிறது,

இதன் கெடுவிளைவாக மக்களிடம் ஆங்கிலம் குறித்து உருவாகியுள்ள மாயப் பிம்பங்கள் எண்ணிலடங்காதவை.

நம் தமிழர்கள், பலநேரம் நமது பகுத்தறிவுவாதிகள் தமிழை விட ஆங்கிலம் ஏன் சிறந்த மொழி என வாதிட்டு வருகிறார்கள்.

பெரியாரும் சரி, அவரைத் தொடர்ந்து வந்த பெரியார்ப் பற்றாளர்களும் சரி, தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனக் காட்ட மூன்று முக்கிய வாதங்களை முன்வைக்கிறார்கள். அதாவது தமிழ் வருணபேதத்தை ஞாயப்படுத்தும் சாதிய மொழி, பெண்ணடிமைத்தனத்தைப் பாதுகாக்கும் ஆணாதிக்க மொழி, அறிவியல் கருத்துகளைப் புறக்கணிக்கும் மூடநம்பிக்கை மொழி, எனவே தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்பதே அவர்களின் வாதம்.

தமிழில் சாதியம், ஆணாதிக்கம், மூடநம்பிக்கை ஆகிய மூன்றுக்கும் ஆதரவான சிந்தனைகள் இருப்பது உண்மைதான். ஆனால் இந்த மூன்றும் ஆங்கிலத்தில் இல்லை எனச் சொல்லி ஆங்கிலத்தை ஒரு சமூகநீதி மொழியாக, பெண்ணிய மொழியாக, அறிவியல் மொழியாக அவர்கள் நிறுவப் பார்க்கிறார்களே, இது பகுத்தறிவு வாதமா? அல்லது மாயா வாதமா? எனக் கண்டறிவதே இந்தக் கட்டுரையின் ஆய்வுப் பொருளாகிறது.

மாயை 1: தமிழைப் போன்று மனிதரிடத்து உயர்வு தாழ்வு கற்பிக்காத சனநாயக மொழி ஆங்கிலம்

சில மாதங்களுக்கு முன்பு ஆனந்த விகடன் (31.12.2010) ஏட்டில் மீனா கந்தசாமி எழுதினார்: "இந்தியாவின் அனைத்துப் பிராந்திய மொழிகளிலும் சாதியக் கறை படிந்து இருக்கிறது. ஒருவர் 10 நிமிடங்கள் தமிழில் பேசினாலே அவரது சாதியை யூகித்து விட முடியும். ஆங்கிலத்தில் இந்த மாதிரியான சாதியக் குறியீடுகள் எதுவும் இல்லை. அதனால்தான் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் ஆங்கிலத்தை ஆதரித்தனர். 'தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி' எனப் பெரியார் சொன்னதை நான் இந்தக் கோணத்தில் இருந்துதான் பார்க்கிறேன்."

இந்தியத் துணைக் கண்டத்தின் தேசிய இன மக்கள் பேசும் மொழிகளை 'பிராந்திய மொழிகள்' என மீனா கந்தசாமி தாழ்த்துவது அவர் மனத்தில் இந்தியக் கறை படிந்திருப்பதையே நமக்கு உணர்த்துகிறது. ஒருவர் தமிழ் பேசுவதை வைத்து அவரது சாதியை அறியலாம் என நடைமுறை உண்மைக்கு மாறாகக் கூறுகிறார் மீனா. தமிழகத்தில் அவாள், இவாள் எனப் பேசும் பார்ப்பன மொழி மட்டுமே உண்டு, மற்றபடி அந்தந்தப் பகுதி மக்களின் வட்டார மொழிதான் உண்டே தவிர, சாதிகளுக்கெனத் தனி வழக்கு மொழியேதும் கிடையாது.

அடுத்துதான் நமது முக்கியச் சிக்கலுக்கு வருகிறார். தமிழ் போல் ஆங்கிலத்தில் சாதிக் குறியீடுகள் இல்லை என்கிறார். அம்பேத்கர், பெரியாரின் ஆங்கில ஆதரவுக்கு இதுவே காரணம் எனக் கூறுகிறார். எனவே 'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என்ற பெரியாரின் கருத்தை இவரும் ஆமோதிக்கிறார். மீனாவும் பெரியாரின் இடத்துக்கு, பெரியார் ஆதரவாளர்களின் இடத்துக்கு வந்து சேர்கிறார்.

ஏற்கெனவே கூறியது போல், சாதி அழுக்குகள் தமிழில் படிந்திருப்பது உண்மையே. கீழ்ப்படுத்தப்பட்டுள்ள சாதிகளின் பெயர்களையே வசைச்சொல்லாக, இழிச்சொல்லாகப் பயன்படுத்துவது இன்றளவும் தொடர்வது கொடுமைதான். குறிப்பாக 'சண்டாளன்' என்ற சொல்லைக் கருணாநிதி போன்ற பெரிய அரசியல் தலைவர்களே எதிர்க் கட்சியினரைத் திட்டுவதற்கு மேடைகளில் சாதாரணமாகப் பயன்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது.

தலித் முரசு இதழ் இது ஒரு வசைச்சொல்லன்று, ஒரு தாழ்த்தப்பட்ட சாதியின் பெயர் என எடுத்துக் கூறியும் எவரும் அசைந்து கொடுக்கவில்லை. ஒருமுறை நரேந்திர மோடியை ஜனசக்தி நாளிதழ் 'சண்டாளன்' என விமர்சித்த போது அதனை எதிர்த்து தலித் முரசு எழுதியது. கொடுங்கோலர்களைத் திட்டுவதற்கு இந்தச் சொல்லைப் பயன்படுத்தினால் தவறில்லை என அலட்சியமாகப் பதில் சொன்னது ஜன சக்தி. திரைப்படங்களில் 'சண்டாளன்' என்னும் சொல்லை நகைச்சுவை நடிகர்கள் பெருமளவில் பயன்படுத்துகிறார்கள்.

இதேபோல் 'கேப்மாரி' என்னும் தாழ்த்தப்பட்ட சாதிப் பெயரும் திரைப்படங்களில் அடிக்கடி இடம்பெறுகிறது. இந்தச் சாதி வசைபாடலைச் சமுதாயத்தை விட்டும், ஊடகங்களை விட்டும் உடனடியாக ஒழித்துக் கட்டியாக வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.

ஆனால் இத்தகைய சாதிச் சாயம் தமிழுக்கு மட்டுமே உரியது, ஆனால் ஆங்கிலத்துக்குக் கிடையாது என மீனா போன்றவர்கள் கூறுவதுதான் இங்கு கேள்விக்குரியது.

முதற்கண் சாதி என்னும் அமைப்பே இல்லாத ஆங்கில நாடுகளில் சாதிக்குரிய குறியீடுகள் எப்படி இருக்க முடியும். ஆங்கில நாடுகளில் சாதிவெறி இல்லையே தவிர ஆப்பிரிக்க இன மக்களுக்கு எதிரான இனவெறி (racism) உண்டு.

எனவே இயல்பாகவே அவர்களை வசைபாடுவதற்கான சொற்களும் மலையளவு உண்டு. ஆப்பிரிக்க இன மக்களின் இயற்கையான கருமை நிறத்தையும், சுருள் முடியையும், தடித்த உதட்டையும் வைத்து வெள்ளையர்கள் செய்யும் பகடிகளுக்கு அளவே இல்லை. அந்த இழிச்சொற்கள் பட்டியலில் சிலவற்றைத் தருகிறேன் பாருங்கள். 

Macaca            (மகாகா)

Thicklips          (திக் லிப்ஸ் - தடித்த உதடர்)

Teapot             (டீ பாட் - தேச்சட்டி)

Sooty            (சூடி)

Quashie     (குவாஷி)

Nig Jig      (நிக் ஜிக்)

Nigger             (நிக்கர்)

Nigra       (நிக்ரா)

Mosshead   (மோஸ்ஹெட்)

Jim Fish     (ஜிம் ஃபிஷ்)

Gable            (கேபிள்)

Coon       (கூன்)

Dundie           (டன்டி)

Sambo            (சாம்போ)

Boogie      (பூகி)

Buffie      (பஃபி)

Ape        (ஏப் - குரங்கு)

Golliwogg (கோலிவாக்)

Niglet              (நிக்லெட் - கறுப்பு இளைஞனுக்கு எதிரானது)

Spade      (ஸ்பேட்)

Colored     (வருணத்தார்)

இப்படிக் கறுப்பின மக்களுக்கு எதிராக ஆங்கில வெள்ளையர்கள் பயன்படுத்தும் இழிச்சொற்கள் ஆயிரக்கணக்கானவை. இப்போது குறிப்பான வேறு சில இழிச்சொற்களைப் பார்ப்போம்.

Uncle Tom - ஏரியட் பீச்சர் ஸ்டோவ் எழுதிய அங்கிள் டாம்ஸ் கேபின் (டாம் மாமாவின் அறை) என்னும் புதினத்தின் கதாபாத்திரம். வெள்ளையர்களிடம் கூழைக்கும்புடு போட்டுப் பிழைக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களையும் இலத்தீன் அமெரிக்கர்களையும் ஆசியர்களையும் இழிவுபடுத்தப் பயன்படும் சொல்.

Bluegum - வேலை செய்ய அலுத்துக் கொள்ளும் சோம்பேறியாகக் கருதப்படும் கறுப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்க வெள்ளையர் பயன்படுத்தும் நையாண்டிச் சொல்லே ப்ளூ கம்.

Coconut - வெள்ளையரைப் போல் நடந்து கொள்ளப் பார்க்கும் கறுப்பினத்தவருக்கு எதிரான பகடிச் சொல்லே கோகனட். 

Eggplant - 1979இல் வெளிவந்த ஜெர்க் என்னும் புகழ்பெற்ற ஆங்கிலப் படத்தில் ஒரு வசனத்தில் இடம்பெறும் சொல்லே எக்பிளான்ட். இதுவே பின்னர் கறுப்பர்களைக் குறிக்கும் இழிச்சொல்லாயிற்று.

Fuzzies - 1964இல் வெளிவந்த சூலூ திரைப்படத்தில் ஒரு பிரித்தானிய அதிகாரி சூலு மக்களை ஃபஸ்ஸி என அழைப்பார், இதுவே கறுப்பின மக்களைக் குறிக்கும் இழிச்சொல்லாகவும் ஆனது.

Jigaboo - கருந்தோல், அகண்ட மூக்கு எனத் தமக்கே உரிய பண்புக்கூறுகளைக் கொண்ட கறுப்பினத்தவர். அமெரிக்க அதிபர் நிக்சன் தனிப்பட்ட முறையில் பேசுகையில் கறுப்பர்களை 'ஜிகாபு' எனக் கிண்டலடிப்பாராம்.

Kaffir - தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் கறுப்பர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் கடும் இழிச்சொல்.

Powder burn – கருப்பினத்தவர் அசிங்கமானவர்கள் என்ற நிறவெறிக் கருத்தில் உருவான சொல். துப்பாக்கிச் சூட்டில் வெளியேறும் சூடான வாயுக்களால் ஏற்படும் தீப்புண்ணுக்கே 'பவுடர் பேன்' எனப் பெயர். கறுப்பின மக்களின் உடற்கட்டு ஆங்கில வெள்ளையர்களுக்குத் தீப்புண்ணில் தோய்ந்த அருவருப்புத் தேகமாகத் தோற்றமளிக்கிறது (கவுண்டமணி செந்திலைப் பார்த்து, 'டேய், தீச்சட்டி மூஞ்சியா' என்பாரே, அதைப்போல).

Jim Crow – அமெரிக்க நடிகராகிய தாமஸ் டர்ட்மவுத் ரைஸ் என்னும் வெள்ளையர் தாம் இயற்றிய ஜிம் க்ரோ என்னும் பாட்டினைக் கறுப்பர் மாதிரி வேடமிட்டுக் கொண்டு 1830களில் அமெரிக்க மேடைகளில் ஆடிக் காட்டத் தொடங்கினார். அவர் உடம்பெல்லாம் கரியைப் பூசிக் கொண்டு ஜிம் க்ரோ என்னும் கதாபாத்திரத்தில் கறுப்பர்களைக் கிண்டலடித்து ஆடிப்பாடி நடத்திய நிகழ்ச்சிகள் அமெரிக்காவெங்கும் வெள்ளையர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அவருடன் சேர்ந்து வேறு 3 வெள்ளையர்களும் கூன், சாம்போ, டன்டி ஆகிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அதே காலக் கட்டத்தில் கறுப்பின மக்களுக்கு எதிராக நடைமுறையில் இருந்த கடும் இனஒதுக்கல் சட்டங்களை ஜிம் க்ரோ என்ற கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்டே அமெரிக்கர்கள் அழைக்கலாயினர். ஜிம் க்ரோ சட்டங்கள் கறுப்பின மக்களை ஒடுக்கின.

நாய்களுக்கும் நீக்ரோக்களுக்கும் மெக்சிகர்களுக்கும் அனுமதியில்லை என்னும் உணவக அறிவிப்புகாட்டாக, கறுப்பின மக்கள் வெள்ளையர்களிடம் பேசுகையில் அவர்களுடைய முதல் பெயரைக் கொண்டு அழைக்காமல் குடும்பப் பெயரைக் கொண்டே அழைக்க வேண்டும், பெயருக்கு முன்பு 'சார்', 'மேடம்' போட்டுத்தான் அழைக்க வேண்டும், ஆனால் வெள்ளையர்கள் கறுப்பர்களை எப்படியும் அழைக்கலாம் (தமிழகத்தில் மேல் சாதியினர் கீழ்ச் சாதியினரை வாடா, போடா என அழைப்பதையும், கீழ்ச் சாதியினர் மேல் சாதியினரைப் பார்த்து 'சாமி' எனக் கும்பிடு போட வேண்டியுள்ள நிலையையும் இங்கு ஒப்புநோக்கலாம்); பள்ளி, மருத்துவமனை, உணவகம், பேருந்து, நூலகம், இடுகாடு எல்லாம் வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்கும் தனித்தனிதான், எவ்விடத்தும் கறுப்பர்கள் வெள்ளையர்களுடன் புழங்கக் கூடாது. இந்த ஜிம் க்ரோ சட்டங்கள் 1960 வரை அமெரிக்காவில் தொடர்ந்தன. அந்த நாடகத்தின் கதாநாயகன் ஜிம் க்ரோ என்ற பெயரும், கூன், சாம்போ, டன்டி ஆகிய கதாபாத்திரங்களின் பெயர்களும் (மேலே பட்டியலில் காண்க) ஆப்பிரிக்க அமெரிக்கர்களைக் கிண்டலடிக்கும் இழிச்சொற்களாயின.

Munt - தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, ஜாம்பியா நாடுகளில் கறுப்பின மக்களுக்கு, குறிப்பாகக் கறுப்பினப் பெண்களுக்கு எதிராக 'அருவருப்பு மனிதர்' எனப் பொருள்பட நாகரிகமற்ற முறையில் ஆங்கிலேயர்கள் பயன்படுத்தும் சொல்லே முன்ட்.

பெண்ணியம் போற்றும் முற்போக்கு மொழி ஆங்கிலம் என்கிறார்களே, கறுப்பினப் பெண்களுக்கு எதிரான சில ஆங்கிலப் பகடிச் சொற்களைப் பாருங்கள்.

Ann - வெள்ளைக்காரியைப் போன்றே நடந்து கொள்ள முயலும் கறுப்பினப் பெண்ணுக்கு வெள்ளையர் வைத்த பட்டப் பெயர் ஆன்.

Aunt Jemima - ஜெமிமா அத்தை, வெள்ளைக்காரியைக் காக்காய் பிடிக்கும் கறுப்பினப் பெண்ணைக் குறிக்கும் நையாண்டிப் பெயர், மேலே கண்ட டாம் மாமாவின் பெண் பால் பெயர்.

Mammy - பருத்த உடம்பும் கடுங்குரலும் கொண்ட நல்ல விசுவாசமான கறுப்பினப் பணிப்பெண்ணுக்கு வெள்ளையர் சூட்டிய பெயர் மேமி. (மலையாளி ஜெயராம் தமிழ்ப் பணிப்பெண்களைக் 'குண்டுப் பெண்' எனக் கிண்டலடித்து இழிபடுத்தியதை இங்கு நினைவுகூரலாம்.)

கறுப்பினச் சிறுவர்களை ஆங்கிலேய வெள்ளையர்கள் Pickaninny (பிக்காநைனி), Tar baby (தார் பையன்) என்றெல்லாம் கிண்டலடிப்பார்கள்.

அமெரிக்க நகரங்களில் வெள்ளைச் செல்வந்தர் வீட்டு முன்பக்க (Porch) சுவரில் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருக்கும் கறுப்பின இளைஞர்களை வெள்ளையர்கள் porch monkey (போர்ச் மன்கி) என்பர், அதாவது அவர்கள் முன்றில் குரங்குகளாம்.

இவற்றை விட நிறவெறிக் கொழுப்பேறிய சொற்களை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியுமா? கைப்புண்ணைப் பார்க்க பூதக் கண்ணாடி வேண்டியதில்லை என்பார்கள், ஆங்கிலத்தின் சமூகஅநீதித் திமிரை இந்தப் பட்டியலே அம்பலப்படுத்துகிறது. நாம் தனி விளக்கமேதும் கொடுக்க வேண்டியதில்லை. புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும்.

சரி, இந்த இழிச்சொற்கள் பண்டைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டவையா? இல்லை, இல்லை, இன்றுங்கூட பயன்பாட்டில் உள்ளன. ஆனால் நிறவெறிக்கு எதிராக நடந்த தொடர்ச்சியான போராட்டங்களினால் இன்று இத்தகைய சொற்களைப் பயன்படுத்துவது சமூக இழிவு என்றும், சட்டக் குற்றம் என்றும் கருதப்படுகிறது. தமிழகம் போன்றே அங்கும் இந்தச் சட்டத்துக்கு நடைமுறை மதிப்பு இல்லை என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கவலைப்படுகின்றனர். இத்தகைய சொற்களைப் பெரிய மனிதர்கள் இனவெறித் திமிருடன் வெளிப்படையாக இன்றும் பேசி வருகின்றனர்.

நாம் மேலே கண்டது போல் தமிழகத்தில் கீழ்ப்படுத்தப்பட்ட சாதிகளின் பெயர்களை வேறெந்த உயர் சாதியைச் சேர்ந்தவரைத் திட்டுவதற்கும் பயன்படுத்துவது போன்றே, மேலை நாடுகளிலும் கறுப்பின மக்களைக் குறிக்கும் இழிச்சொற்களையும் ஆங்கிலேய வெள்ளையர்கள் வேறெந்த மனிதரையும் வசை பாடுவதற்குப் பயன்படுத்துவர். சில நிகழ்வுகளைப் பார்ப்போம்.

சில மாதங்களுக்கு முன்பு ஃபிரான்சில் ஓர் உணவகத்தில் ஜான் கேலியானோ என்னும் ஆங்கிலேயர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இவர் சாதாரண மனிதர் அல்ல. நவநாகரீக உடை வடிவமைப்பில் உலகின் முதலிடத்தில் இருக்கும் தையற்கலைஞர். இவருக்கு யூதர்கள் என்றால் ஆகாது. உணவகத்தில் இவருக்குத் தமது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு யூதருடன் சிறு சச்சரவு ஏற்பட, அவரை நிக்கர் எனத் திட்டி விட்டார். இது கறுப்பின மக்களுக்கு எதிரான இழிச்சொல் என மேற்கண்ட பட்டியலில் கண்டோம். இவருக்கு எதிராகப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. கடைசியில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜான் பால் க்யூவர்லேன் என்பவர் ஒரு பிரெஞ்சுக்காரர். இவர் க்யூவர்லேன் என்னும் நறுமணப் பொருள் தயாரிப்புக் குழுமத்தின் முதலாளி ஆவார். இது உலகில் நறுமணப் பொருள் தயாரிக்கும் குழுமங்களிலேயே முதலிடம் வகிக்கும் குழுமம் ஆகும். இப்படிப்பட்ட குழுமத்தின் உரிமையாளராகிய ஜான் பால் இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் இளம் வயதில் ஒரு நிக்கர் போன்று உழைத்ததால்தான் தம்மால் இந்த உயர்ந்த நிலையை அடைய முடிந்ததாகக் குறிப்பிட்டார் (பார்ப்பனர்கள் நல்ல உழைப்பாளிகளை 'சூத்திரப் பயல் போல் உழைக்கிறான் பார்' எனக் கூறுவதை இங்கு ஒப்புநோக்கலாம்). அவருக்கு எதிராகப் பெரும் போராட்டம் வெடித்தது. அவரது குழுமத்தின் நறுமணப் பொருள்கள் எதையும் பயன்படுத்தக் கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது சுமார் ஓராண்டுக்கு முன்பு நடந்த நிகழ்வு.

ரஷ் லிம்பாவ் என்பவர் ஒரு தீவிர வலதுசாரி அமெரிக்க வெள்ளையர். அமெரிக்காவில் வானொலி நிகழ்ச்சிகள் வழங்குவதில் மிகவும் பேர் போனவர். அவர் நடத்தும் நிகழ்ச்சிக்கு The Rush Limbaugh Show (தி ரஷ் லிம்பாவ் ஷோ) எனப் பெயர். இது அமெரிக்க வானொலி நிகழ்ச்சிகளிலேயே முதலிடம் வகிக்கும், அதாவது மிக அதிகமான மக்கள் கேட்டுச் சுவைக்கும் ஒரு நிகழ்ச்சி ஆகும். லிம்பாவ் தமது நிகழ்ச்சிகள் இடையே தொடர்ந்து நிறவெறிக் கருத்துகளை கூறும் வழக்கமுடையவர். இப்படி அண்மையில் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறிய கருத்தைக் கேளுங்கள்: "கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமா நேயர்களே? நம் நாட்டில் நூறாண்டுக்கு மேலாக அடிமைமுறை இல்லை. அது தவறானது எனக் கருதப்பட்டதே காரணம். ஆனால் நேர்மாறாகவும் யோசிக்கலாமே! இந்த அடிமைமுறைதான் நமது அமெரிக்க நாட்டின் தென் பகுதியைக் கட்டி எழுப்பியது. உடனே நான் உங்களைப் பழங்காலத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என நினைத்து விடாதீர்கள். அடிமைமுறையின் சில நன்மைகளைச் சொல்கிறேன், அவ்வளவுதான். இன்னொரு நன்மையையும் குறிப்பிடலாம். அந்தக் காலங்களில் எல்லாம் நகரம் இருட்டிய பின்னும் தெருக்கள் பாதுகாப்பாக இருந்தன."

"சாதி, வர்ணம் இருந்தப்போ எல்லாம் க்ஷேமமா இருந்தது, இப்போ எவா வேணாலும் எவாலோடயும் கலக்கலாம்னு ஒரே கலியுகக் கொடுமையாப் போச்சுடா சாமி" என அங்கலாய்க்கும் பார்ப்பானுக்கும் இந்த வெள்ளையனுக்கும் என்ன வேறுபாடு தோழர்களே!

தொடரும்

(16-31.10.2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியான கட்டுரை.)

- நலங்கிள்ளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 

Pin It