நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலம் விட்டதில் உரிய தொகைக்கு விடாமல், வேண்டியவர் களுக்கு சலுகைச் செய்யும் வகையில் குறைத்து விடப்பட்டது. சுரங்கம் வெட்டி நிலக்கரி எடுக்காத போலி நிறுவனங்கள் குறைந்த விலையில் ஏலம் எடுத்து மற்றவர்களுக்கு கொள்ளை இலாப விலையில் விற்பதற்காக காத்திருக்கின்றனர். வழக்கமான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை; என்பன உள்ளிட்ட குற்றச் சாட்டுகளை இந்தியக் கணக்குத் தணிக்கை தலைவர் தமது அறிக்கையில் கூறி யுள்ளார்.

அதன் அடிப்படையில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இவ் ஊழல் பற்றி புலனாய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி நடுவண் புலனாய்வுத் துறையை உச்சநீதி மன்றம் பணித்தது. மேற்படி ஊழல் நடந்த காலத்தில் நிலக்கரிச் சுரங்கத் துறைக்கு பொறுப்பு வகித்தவர் பிரதமர் மன்மோகன் சிங். எனவே அவர் பதவி விலகவேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தன. கடந்த 8.3.2013 அன்று நடுவண் புலனாய்வு துறை (சி.பி.ஐ) தனது விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக தன்னிடம் காட்டும்படி நடுவண் சட்ட அமைச்சர் அஸ்வனிக்குமார் கேட்டதாகவும் அதன் படி அந்த அறிக்கையை அவருடன் பகிர்ந்து கொண்டதாகவும் நடுவண் புலனாய்வு துறை இயக்குநர் ரஞ்சித் சின்கா உச்ச நீதி மன்றத்தில் 26.4.2013 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் பிரதமர் அலுவலகம், நடுவண் நிலக்கரித் துறை அலுவலகம் ஆகியவற்றில் உள்ள இணைச்செயலாளர் தகுதியில் உள்ள இரண்டு அதிகாரிகளிடமும் மேற்படி விசாரணையை அறிக்கையை காட்டியதாகவும் ரஞ்சித் சின்கா தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

 உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர் இந்திய அரசாகும். அதாவது இந்திய அரசின் பிரதமர் (நிலக்கரி துறை பொறுப்பு), நிலக்கரித்துறை ஆகியோர் ஆகும். சட்ட அமைச்சர் கூட்டுப்பொறுப்பு அடிப்படையில் பிரதமருக்கு கட்டுப்பட்டவர் ஆவார். அதாவது பிரதமர் அதிகாரத்தில் ஒர் உறுப்பு அவர். இந்நிலையில் எதிர் மனுதாரர்கள் மீது பனையப்படும் குற்ற அறிக்கையை நீதி மன்றத்திற்குக் கொடுப்பதற்கு முன்பாக எதிர் மனுதாரரிடம் கொடுத்து அவர்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு இந்த அடிப்படையில் திருத்தங்கள் செய்து அதன் பின் அதனை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது நீதித்துறை சுதந்திரத்தை, மேலதிகாரத்தை சிதைத்ததாகும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக புலனாய்வுத்துறை நடந்து கொண்டதாகும்.

காவல்துறையில் மிக உயர்ந்த இடத்தில் இந்தியாவில் வைக்கப்பட்டுள்ள நிறுவனம். நடுவண் புலனாய்வு துறை (சி.பி.ஐ.) ஆகும். அந்த நடுவண் புலனாய்வுத் துறை காங்கிரசு ஆட்சியாளர்களின் கைப்பாவையாகத்தான் செயல்படுகிறது என்பது இப்போது கையும் களவுமாக பிடிபட்ட திருட்டு போல் அம்பலமாகிவிட்டது.

இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) வாகனவதி 12.3.2013 அன்று உச்ச நீதி மன்றத்தில், நிலக்கரி ஒதுக்கீடு வழக்கில் சி.பி.ஐ. நடத்திவரும் விசாரணை அறிக்கையை அரசு தரப்பு பார்க்கவில்லை” என்று உரத்துக் கூறினார். இது எவ்வளவு பெரிய பொய் என்பது இப்போது அம்பலமாகிவிட்டது. ஏனெனில் 8.3.2013 அன்று மேற்படி விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே அரசத் தரப்பினருக்கு அறிக்கையைக் காட்டி செய்திகளை பகிர்ந்து கொண்டதாக இப்பொழுது சி.பி.ஐ. இயக்குநர் எழுத்து வடிவில் உச்ச நீதி மன்றத்தில் 26.4.2013 அன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சோனியா மன்மோகன் ஆட்சி சட்ட விரோத காரியங்களை துணிந்து செய்யும் என்பதும் தற்சார்புடன் செயல்படவேண்டிய நிறுவனங்களை தங்களுக்குச் சாதகமாக ஏவல் வேலை செய்ய பயன்படுத்தும் என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இவ்விருவர் ஆட்சியும் ஊழலில் ஊறித்திளைக்கிறது என்பதும் அம்பலமாகிவிட்டது.

குழுவாகச் சேர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் இடையே பிணக்கு வந்தால் ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சாட்டிக் கொள்வதுபோல் இப்பொழுது சோனியா காந்தி மன்மோகன் நிர்வாகத்தின் மீது குற்றசாட்டுகளை கூறத்தொடங்கியுள்ளார்.

மன்மோகன் சிங், சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார், சிபி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா ஆகிய மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படவேண்டியவர்கள் ஆவர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் நடுவண் அரசின் நிர்வாக அதிகாரத்தை நாடாளு மன்றத்திற்குக் கட்டுப்படாத வகையில், நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தேவைப்படாத நிலையில் அமைச்சரவைக் குழுவில் மேலாதிக்கம் கொண்டுள்ளதாக வைத்துள்ளது அதனால்தான் உள்நாட்டு வெளிநாட்டுச் சிக்கல்களில், உறவுகளில், செயல்பாடுகளில், இயங்கு நிலையில் அமைச்சரவையானது எதேச்சாதிகாரமாக நடந்து கொள்ள முடிகிறது. இதனால்தான் தனிப் பெரும்பான்மையற்ற காங்கிரசு ஆட்சி தன் விருப்பத்திற்கு ஏற்ற காட்டாட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் எதிர்க்கட்சிகள் போடும் கூச்சல்கள் மன்மோகன் அமைச்சரவை யின் எதேச்சாதிகாரத்திற்கு சிறு தடங்கல் கூட போட முடியவில்லை. அமைச்சர வைக்குப் பல்வேறு துறைகளிலுள்ள எதேச்சாதிகார நிர்வாக உரிமையை நாடாளு மன்றத்திற்கு உட்பட்டதாக மாற்றி அமைக்க வேண்டும்.

மாநிலங்களிலுள்ள காவல் துறையும், இந்திய அரசின் நடுவண் புலனாய்வு துறையும் இம்முறையே மாநிலங்களின் மற்றும் இந்திய அரசின் நிர்வாகத்திற்கு கீழ்படிதலுள்ள அமைப்புகளாக நீடிக்கக்கூடாது இவை அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தன்னாட்சி அதிகாரம் கொண்டுள்ள அமைப்புகளாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். பல நாடுகளில் காவல் துறை தன்னாட்சி அதிகாரத்தின் கீழ் செயல்படுகிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற காவல்துறையினர் தவறு செய்தால், குர்றம் புரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய சட்ட விதிகள் இயற்றப்படவேண்டும்.

Pin It