ஐ.நா.மனித உரிமை அவையில்,அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தும்,ஈழத்தில் நடந்தது இனப்படு கொலை என்ற உண்மையை ஐ.நா.ஏற்க வேண்டு மென்று கோரியும் தமிழீழ மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியும் கோரிக்கைளை முன்வைத்து,சென்னை இலயோலா கல்லூரி மாணவர்கள் 8பேர் இலயோலா கல்லூரி வளாகத்திற்குள் உள்ள அய்க்கப் (AICUF)அரங்கில் 8.3.2013 அன்று காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கினர்.

உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

1.  திலீபன் வயது 20 இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு

2.  ஜோசப் பிரிட்டோ வயது 20 இளங்கலை கணிதம் மூன்றாம் ஆண்டு

3.  அந்தோணி சாஜ் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு

4.  பார்வைதாசன் வயது 20 இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு

5. பால் கென்னத் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு

6.  மணி வயது 19 இளம் சமூக அறிவியல் மூன்றாம் ஆண்டு

7. சண்முகப் பிரியன் வயது 19 இளம் வணிகவியல் இரண்டாம் ஆண்டு

8. லியோ ஸ்டாலின் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு

அய்க்கப் அரங்கில் தொடர்ந்து போராட்டத்தை நடத்த இலயோலா நிர்வாகத் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில்,தமிழுணர்வாளர் திருச்சி திரு.சவுந்தர்ராசன் அவர்களுக்கு உரிமையான கோயம் பேட்டில் உள்ள செங்கொடி அரங்கிற்கு உண்ணாப் போராட்டம் மாற்றப்பட்டது.

மாணவர்களும், இளைஞர் களும் அங்குக் குவியத் தொடங்கினர். தமிழீழக் கோரிக் கையில் உறுதியாகப் பாடுபடும் பல்வேறு அரசியல் இயக்கத்தினரும்,அதன் தலைவர்களும் அங்கு மாணவர் களை வந்து நேரில் வாழ்த்தி தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில்,போராட்டத்தின் 3ஆம் நாளான 10.03.2013அன்று காலை முதல் அங்கு, இலயோலா கல்லூரி நிர்வாகத் துடன் தொடர்புடைய ‘புதிய பேராளர்கள்’மாணவர்களை வழி நடத்துகிறோம் என்ற பெய ரில் அடாவடித்தனமாக செயல் பட்டுக் கொண்டிருந்தனர்.

அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த உண்ணாப் போராட்டத்திற்கு, அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத் துக் கொண்டுள்ள டெசோ இயக் கத்தினர் திடீரென வந்து சேர்ந் தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன் தன்னோடு, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.கே.எஸ்.இளங்கோவன்,திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோரை,தனது தொண்டர்கள் சூழ அழைத்து வந்தார்.

‘நல்லிணக்கம்’ ‘மனித உரிமை மீறல்’ என சிங்களனைத் தடவிக் கொடுக்கும் அமெரிக்கத் தீர்மா னத்தை ஒருபோதும் ஏற்பதற் கில்லை என மாணவர்கள் பட்டினிப் போர் நடத்திக் கொண்டிருக்கும் திடலுக்குள், உப்புசப்பில்லாத அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் டெசோ கூட்டத்தினர் நுழைந்தது,அங்கிருந்த மாணவர்களுக் கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்த இருவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்க மிட்டனர் தமிழுணர்வாளர்கள். எனினும், டெசோ குழுவினரை போராட்ட பந்தலுக்குள், மேற் சொன்ன ‘புதியபேராளர்கள்’ அனுமதித்தனர்.

 அங்கே உரையாற்றிய திரு. தொல்.திருமாவளவன் மாணவர் போராட்டம் வெல்லாது என்றும் இந்திய அரசிடம் தான் நமது கோரிக்கைகளை வைக்க வேண்டும் என்றும் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றினார்.நடைமுறைக்கு வரமுடி யாத கோரிக்கைகள் இவை என்று சாடினார்.அவருடைய பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழுணர்வாளர்களை வழி நடத்தியவர்கள் கண்டித்தனர்.

அதன் பின்னர், மதியம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப் பினர் தோழர் உதயன் தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருண பாரதி உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள், மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.

அப்போது அங்கு உரையாற்றிய த.தே.பொ.க.பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட் ராமன், அமெரிக்கத் தீர்மானத்தின் கேடுகளை விளக்கியும்,இந்திய அரசு சிங்கள அரசுக்குத் தொடர்ந்து உறுதி மிக்க ஆதரவை வழங்கி வருவதையும், வெறும் சிங்கள ஆட்சி மாற்றத் திற்கான செயல் திட்டத்தையே அமெரிக்க இந்திய சதிகார கும்பல் முன்னெடுக் கக்கூடும் என்பதையும் தனது பேச்சில் வலியுறுத்தியதானது மாணவர்களை ஈர்த்தது.

 இந்திய அரசுக்கு எதிரான ஒவ்வொரு வார்த்தைக்கும் மாணவர்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்து வரவேற்றனர். இதுதான் மாணவர்களின் உண்மையானமன நிலையாக உள்ளது.

தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் பேசிய பிறகு,தமிழீழ ஆதரவு இயக்கத் தலைவர்கள் இங்கு பேசக் கூடாது என அங்கிருந்த சிலர் ஒலிவாங்கியைப் பிடிங்கினர்.மாணவர்கள் தான் பேச வேண்டுமென அதற்கு அவர்கள் விளக்கமும் கூறிக் கொண்டனர்.கூட்டத்தை ஒருங் கிணைத்துக் கொண்டிருந்த வழக்கறிஞர் அங்கயற்கண்ணியை இலயோலா கல்லூரி நிர்வாகத் தைச் சேர்ந்த ஒருவர் மிரட்டி மேடையை விட்டு விரட்டினார்.இலயோலா கல்லூரி மாணவர்கள் தமது உண்ணாப் போராட்டத்தை தொடர இடம் கூட தராத அக்கல்லூரி நிர்வாகம்,சிலரை வைத்து அப்போராட்டத்தை மீண்டும் தனது கட்டுப் பாட்டிற்குள் கொணர முயன்றது அப்போது தெரியவந்தது.

அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக இப்போராட்டத்தை மாற்றும் முயற்சியில் திரு. திருமா வளவன் அவர்களுடன் வந்தவர்கள்,ஒரு சில மாணவர்களுடன் இணைந்து ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி முன்னாள் தலைவர் திரு. கே.வி.தங்கபாலு போராட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

2009இல் தமிழீழ இனப்படு கொலைப்போர் நடந்து கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சித் தலைவராக இருந்தவர் திரு. கே.வி.தங்கபாலு.இன்றைக்கும் என்றைக்கும் தமிழீ ழத்தை ஆதரிக்காத காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், தமிழீழத்திற்கான பொது வாக் கெடுப்பு வேண்டி பட்டினிப் போர் நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு எந்த துணி வில் வந்து சேர்ந்தார்? டெசோ குழுவினர் கொடுத்த துணிவா அது?

தங்கபாலு வருகின்ற செய்தி யறிந்து, மாணவர்களும், தமிழ் உணர்வாளர்களும் வாயிலில் சென்று கடுமையாக முழக்க மிட்டனர். வாயில் வரை வந்த தங்கபாலு, கடும் எதிர்ப்பு இருப் பதைக் கண்டும் நான் உள்ளே நுழைவேன் எனச் சொன்னார்.உள்ளே போராட்டத்தில் அமர்ந் திருந்த மாணவர்கள்,“இந்திய அரசின் அதிகாரப் பூர்வபிரதி நிதியாக வந்தால் அதிகாரிக ளுடன் வந்து பேசுங்கள். அதை விட்டுவிட்டு காங்கிர சுத் தலைவர்கள் யாரும் உள்ளே வர வேண்டாம்” என அறிவித்தனர். அதன்பின், ‘தங்கபாலுவே வெளியேறு’ என்று தோழர்கள் எழுப் பிய முழக்கம் கண்டு, அச்சத் துடன் பின்வாங்கினார் தங்க பாலு.

அதன் பின்னர்,தமிழ் மையம் அமைப்பின் நிறுவனரும்,ஈழச் சிக்கலில் துரோகம் புரிந்து அம்பலப்பட்டவருமான பாதி ரியார் ஜெகத் கஸ்பர் அங்கு உரையாற்ற வந்தார். அவருக்குப் பின் பேசிய ஒரு மாணவர், ‘ஜெகத் கஸ்பர் ஒரு மாபெரும் துரோகி அவருக்கு எப்படி இங்கு பேச அனுமதி கிடைத்தது?’என கேள்வி எழுப்பியவுடன் அவரது பேச்சு தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழ் உணர் வாளர்களின் ஞாயமான குரல்களுக்கு எதிராக மாணவர்களைத் திருப்புகின்ற கேவலமான சதியில் சிலர் ஈடுபட்டனர். தழல் ஈகி முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைத்த சதிச் செயல்தான்,இங்கு நினைவுக்கு வந்தது.தமிழ் உணர்வாளர்களின் ஆதரவுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தை,தமிழ் உணர்வாளர்களுக்கு எதிராகவே மாற்றும் சதிச் செயலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலரும், ஜெகத் கஸ்பருடன் உடன்வந்த சிலரும் மேற் கொண்டனர்.

வழக்கறிஞர் அங்கயற்கண்ணி,மே பதினேழு இயக்கத் தோழர் உமர்,உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தோழர் ராஜா ஸ்டாலின்,தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி,திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் அன்பு தனசேகரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் இது குறித்து தனியே விவாதித்தனர். மாணவர்களுக்கு சில ரால் ஏற்படுத்தப்பட்டுள்ள முரண்பாட்டை பேசி சரி செய்வ தென முடிவெடுத்தனர்.

அன்றிரவு ஒரு பக்கம்,மாணவர்கள் அடுத்த கட்டமாக போராட்டத்தை எப்படி நகர்த்துவதென விவாதித்துக் கொண்டி ருந்தனர். இன்னொரு பக்கம், மாணவர்களுடன் தமிழ் உணர் வாளர்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில் தான்,காவல் துறை யினர் நள்ளிரவு 1.45 மணிக்கு, மூடியிருந்த போராட்டத்த திடலின் இரும்புக்கதவுகளை பலவந்தமாகத் தட்டினர்.

கதவை உடைத்துக் கொண்ட முன்னேறிய காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர், சிகப்பு நிறச் சீரூடையிலிருந்த தமிழக இளைஞர் முன்னணி சென்னை நகரத் தலைவர் தோழர் வினோத் தின் சட்டைகளைப் பிடித்து தள்ளி, தரக்குறைவான வார்த் தைகளில் திட்டினார்.

திபுதிபுவென உள்ளே நுழைந்த காவலர்கள் அங்கிருந்த நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை உடைத்து நொறுக்கத் தொடங்கினர்.அதைக் கண்டு ஆவேசமாக முழக்கமிட்டு நின்ற தமிழ் உணர் வாளர்களை தள்ளி விட்டு முன்னேறிய காவல் துறையினர், அங்கு உண்ணாப் போராட் டத்தில் இருந்த 8மாணவர் களையும்,மாணவர்களின் மனிதச் சங்கிலித் தடுப்பு களை யும் மீறி தடியடி நடத்தி பலவந்த மாக இழுத்துச் சென்றனர்.

தி.மு.க.வின் டெசோ குழுவின ருக்கும், அதற்கு எதிராக இருப்ப தாக சொல்லும் அ.தி.மு.க. அரசிற்கும் நோக்கம் ஒன்றுதான் என்பது மாணவர்களுக்குப் புரிந்தது.மாணவர்கள் போராட்டத்தை எப்படியும் நசுக்கிவிட வேண்டும் என்பது தான் அந்த நோக்கம்!

நள்ளிரவுக் கைதுகளுக்கும்,காவல்துறை அடக்கு முறைக ளுக்கும் பெயர் பெற்ற ஆரியப் பார்ப்பன பாசிஸ்டான செயலலிதா,மீண்டுமொருமுறை தனது வெறித் தனத்தைக் காட்டினார்.மாணவர்களுக்கு ஆதரவாக அங்கிருந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். மாணவர் களை தரக்குறைவான வார்த்தை களில் திட்டி,தம் தரத்தை வெளிக்காட்டினர் காவல் துறை யினர்.

உண்ணாப் போராட்டத்திலிருந்த 8மாணவர்களும்,இராயப்பேட்டை அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கும் தமது உண்ணாப் போராட்டத்தை கை விடாமல் தொடர்ந்தனர் மாணவர்கள்.

 ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தென் சென்னை மாவட்டச் செயலாளர் திரு.வேளச்சேரி மணிமாறன்,வழக்கறிஞர் அங்கயற்கண்ணி,மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்,தமிழ்நாடு மக்கள் கட்சி செயற்குழு உறுப் பினர் தோழர் அருண் சோரி, திரைஇயக்குநர்கள் மு.களஞ் சியம், கவுதமன், இராம், எழுத் தாளர் பா.செயப்பிரகாசம் உள் ளிட்ட திரளான உணர்வாளர் கள் கைது செய்யபட்டு, அரும் பாக்கத்திலுள்ள சமூக நலக் கூடம் ஒன்றில் அடைக்கப்பட்டனர்.

 போராட்டம் நடத்தப்பட்ட திடலை பூட்டியிருந்த காவல் துறையினர், காலை விடுதலை செய்யப்பட்டத் தோழர்களில் சிலர் தமது உடைமைகள் உள்ளி ருப்பதாகக் கூறியும் கூட அதைத் திறக்காமல் அடாவடித்தனம் புரிந்து கொண்டிருந்தனர்.இந்நிலையில்,அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

அறப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகக் காவல் துறை யினரின் அரக்கத்தனத்தைக் கண்டிக்க முன்வராமல் சில ஊடகங்கள்,மாணவர் போராட்டத்தை திசை திருப்பும் வேலையை மட்டும் மேற் கொண்டன. ‘புதிய தலை முறை’ தொலைக் காட்சி, தமிழினத் துரோகி தங்க பாலுவை மாணவர் கள் எழுச்சியுடன் விரட்டியக் காட்சியைக் காட்டவில்லை. மாறாக, டெசோ கும்பல் வந்து போனதையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டி ருந்தது. சன் தொலைக்காட்சியோ, மாணவர் போராட்டத்தை டெசொவுக்கு ஆதரவான போராட்டமாக சித்தரிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டது.

ஆனால், இவற்றையும் மீறி இலயோலா கல்லூரி மாணவர் களின் போர்க்குணமிக்க அறப் போராட்டமும்,அதை தடுக்க முனைந்த காவல்துறையினரின் அடாவடித்தன நடவடிக்கையும் தமிழகமெங்கும் தன்னெழுச்சியான மாணவர் போராட்டத்தை தோற்றுவித்துள்ளது. போராட்டம் சென்னையிலிருந்து தமிழகம் முழுமைக்கும் பரவியது

சென்னை இலயோலா கல்லூரி மட்டுமின்றி, அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம், மாநி லக் கல்லூரி கே.ஆர்.எம்.எம் கல்லூரி உள்ளிட்ட கல்லூரி களிலும்,ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைகல்லூரி, அரியலூர் அரசுக்கல்லூரி,தஞ்சாவூர் அரசுக் கல்லூரி, சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக் கழகம், திருச்சி தூய வளனார் கல்லூரி,திரு நெல்வேலி மனோன்மனியம் சுந்த ரனார் பல்கலைக்கழகம், சிதம்பரம் அரசு கல்லூரி மதுரை சட்டக்கல்லூரி, காரைக்குடி அழகப்பா கல்லூரி, காரைக்குடி ஆனந்தா கல்லூரி, பூம்புகார் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரி என தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கி தீவிர போராட்டத்தை மேற் கொண்டு வருகின்றனர்.

இலயோலா கல்லூரியின் 8 மாணவர்கள் உண்ணாப் போராட்டத்தை 11.3.2013 மாலை யில் முடித்துக் கொண்டனர். ஆனால், அந்த 8 மாணவர்களின் போராட்டம் இன்றைக்கு 8 கோடி தமிழ் மக்களின் போராட் டமாக உருவெடுத்துள்ளது.

இலயோலா கல்லூரி மாண வர்களைத் தொடர்ந்து,திருச்சி தூய வளவனார் கல்லூரி, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி,செங்கல்பட்டு சட்டக் கல்லூரி என தமிழ்நாட்டின் பல் வேறு இடங்களில் மாணவர்கள் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

 இந்த மாணவர் சக்தியால் தான் தமிழ் இனத்தின் உரிமை களை மீட்க முடியும்! அதை தடுக்க முனையும் துரோகியர் கூட்டத்தையும் வீழ்த்த முடியும்!இது மாணவர் போராட்டமல்ல, தமிழ் இனத்தின் போராட்டம்! அதற்கு துணை நிற்பதும், அப்போராட்டம் திசை பிறழாமல் இருக்க உதவுவதுமே தமிழ்த் தேசியர்களின் கடமை!

Pin It