சீனா ஆக்கிரமித்து வைத்துள்ள திபெத் மக்களின் தேசிய இனச்சிக்கல் குறித்துத் தீர்வு காண்பதற்காக, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்தியாவில் தங்கியுள்ள தலாய்லாமா பேராளர்களுக்கும் இடையே நடந்து வந்த இணக்கப் பேச்சு முறிந்து விட்டது. தலாய்லா மாவின் பேராளர்களான லோதி ஜி கியாரி மற்றும் கெல்சாங்கியால்ட் சென் ஆகிய இருவரும் இணக்கப் பேச்சிலிருந்து விலகி விட்டதாக 1.6.2012 அன்று அறிவித்துள்ளனர்.

2002ஆம் ஆண்டு முதல் இப்பேச்சு இருதரப்புக்கும் இடையே நடந்து வந்தது. இதுவரை ஒன்பது சுற்று பேச்சு நடந்துள்ளது.  கடைசியாக நடந்த 2010 சனவரி பேச்சுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பேச்சு நடத்த சீனா முன்வரவில்லை என்கிறார்கள் திபெத்தியப் பேராளர்கள். 

சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் கூட்டணி வேலைத் திட்டத்துறையின் துணை அமைச்ச ரான சூ வெயின், இணக்கப் பேச்சின் போது திபெத் தியர்கள் சிறுபான்மையினர் என்று வகைப் படுத்தப்படுவதையும் இனிமேல் அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கிவிட வேண்டும் என்று கூறினாராம்.  இதுவே இறுதி அடியாக விழுந்தது என்கிறனர் திபெத்திய தரப்பினர்.“சிறுபான்மையினர்“என்று வகைப் படுத்தி விட்டால் இருக்கின்ற சிறிதளவு தன்னாட்சியும் பறிபோய் விடும் என்கின்றனர் திபெத்திய பேச்சாளர்கள்.

இந்தியாவில் இமாச்சலப்பிரதசத்தின் தர்மசாலாவில் உள்ள தலாய்லாமா தரப்பைச் சேர்ந்தவர் இந்து நாளேட்டிற்கு 4.6.2012 அளித்த செவ்வியில் இது பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.

“நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. சீனாவின் அரசமைப்புச் சட்டத்திற்குள் உண்மையான தன்னாட்சி கேட்கிறோம். ஆனால் ஒரு பழமொழி இருக்கிறது. ‘ஒரு கை ஓசை எழுப்பாது’ என்று. 

சீனாவில் திபெத்தியர்களின் மக்கள் தொகை அறுபது இலட்சம். இதில் இப்போதுள்ள திபெத்தியத் தன்னாட்சி மண்டலத்தில் மூன்று இலட்சம் பேரும் அருகிலுள்ள சீச்சுவான், குயிங்காங், கன்சு உன்னான் மாநிலங்களில் மூன்று இலட்சம் பேரும் வாழ்கிறார்கள்.  இப்பகுதிகள் மொத்த சீனத்தின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதியாகும்.

திபெத் தன்னாட்சி மண்டலம் மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களில் திபெத்தியர் வாழும் பகுதிகள் ஆகியவற்றுக்கான ஒரு திபெத்திய நடுவண் ஆட்சி அமைப்பும் அதற்குக் கல்வி மதம் சார்ந்த அதிகாரங்களும் சட்டம் இயற்றும் அதிகாரங்களும் கொண்ட ஒரு தன்னாட்சி உரிமை சீனத்துக்குள் வேண்டும் என்பதே திபெத்திர்கள் கோரிக்கை.

இத்தன்னாட்சிக் கோரிக்கையானது மூடி மறைக்கப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கைதான் என்கிறது சீன அரசு. 

எல்லா திபெத்தியர்களையும் ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு ஏற்கெனவே சீனாவின் முன்னாள் தலைவர்களான பிரதமர் சூயென்லாய், துணைப் பிரதமர் சென் -இ, கட்சிச் செயலாளர் ஹூயா பாங்க் ஆகியோர் ஆதரித்தனர் என்று திபெத்தியர் தரப்பு கூறுகிறது.

திபெத்தியர்களின் மிகப்பெரிய அச்சம் மிகை எண்ணிக்கையில் குடியேறியுள்ள அயல் இனத்தார் சிக்கல்தான்! சீன அரசு பல ஊக்கு விப்புகளை வழங்கி திபெத்தில் சீனர்களைக் குடியேற்றியிருக்கிறது. இந்த அயலார் அனை வரையும் வெளியேற்ற வேண்டும் என்கிறது தலாய்லாமா தரப்பு! இக்கோரிக்கை பாசிசம் என்கிறது சீன அரசு.

திபெத் மண்ணுக்குத் தொடர்பில்லாத அயல் இனத்தவரும் ஆக்கிரமிப்பு இனத்தவருமான சீனர்களைத் திபெத்தில் திட்டமிட்டுக் குடியேற்றிவரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரின வாதம் பாசிசம் இல்லையாம்! வரலாற்றில் தனக்கிருந்த தனித் தேச அரசுரிமையை இழந்து சீனாவுக்குள் ஒரு மாநிலமாகச் சில அதிகாரங்களுடன் வாழ தன்னாட்சி கேட்கும் திபெத்தியர்களின் கோரிக்கை பிரிவினைவாதமாம். மிகை எண்ணிக்கையில் கம்யூனிஸ்ட் ஆட்சியால் திபெத்திற்குள் திணிக்கப்பட்ட சீனர்களாகிய அயல் இனத்தவரை வெளியேற்றக் கோருவது பாசிசமாம்!

தமிழர்கள் திபெத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பேரினவாத ஆக்கிரமிப்பு கம்யூனிசப் போர்வையிலும் வெளிப்படும்!

Pin It