கோவையில் ‘சுகர்கேன் பிரீடிங் இன்ஸ்டியூட்’ என்ற இந்திய அரசின் கரும்பு இனப்பெருக்க நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக, சிங்கள இன வெறியன் இராசபக்சே அரசின் அமைச்சர் ரேஜினால்டு ஒல்டுகூரி அழைக்கப்பட்டிருந்தார்.

ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த சிங்களத் தடியரசுத் தலைவர் இராசபக்சேவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோவையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, ம.தி.மு.க., பெரியார் தி.க. உள்ளிட்ட அமைப்புகளும், இனஉணர்வாளர்களும் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, விழாவில் பங்கேற்காமல் அவர் விரட்டியடிக்கப்பட்டார்.

சிங்கள அமைச்சரின் வருகையை உறுதிப்படுத்தியபின், 07.06.2012 அன்று காலை, அவர் தங்கியிருந்த கோவை அவினாசி சாலையில் லீ மெரிடியன் ஐந்து நட்சத்திர விடுதியை உணர்வாளர்கள் அணி அணியாக முற்றுகையிட்டனர். ம.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் திரு. ஈசுவரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 40க்கும் மேற்பட்டவர்களை தமிழகக் காவல்துறையால் கைது செய்தது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை வடக்கு கிளைச் செயலாளர் தோழர் பா.சங்கரவடிவேல் தலைமையில் ஆவேசமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழக இளைஞர் முன்னணி கிளைச் செயலாளர்கள் தோழர் கு.ரசேசுக்குமார், தோழர் பிறை.சுரேசு மற்றும் தோழர்கள் வே.திருவள்ளுவன், மா.தளவாய்சாமி உள்ளிட்ட த.தே.பொ.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் 10 பேரை காவல் துறையினர் பல வந்தமாக காவல்துறை வாகனத்தில் குண்டுக்கட்டாக ஏற்றிக் கைது செய்தனர்.

“ஈழத்தமிழரைக் கொல்ல இலங்கைக்கு உதவிய இந்திய அரசு, உங்களால் என்ன செய்ய முடியும் என்று தமிழர்களைக் கேட்பது போல் தொடர்ந்து சிங்கள அமைச்சர்களைத் தமிழகத்திற்குள் நுழைய அனுமதித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா தமிழினத்தின் பகை என்பதையே இது பறைசாற்றுகிறது” என கொதிப்புடன் இலண்டன் ஐ.எல்.சி. வானொலி செவ்வியில் குறிப்பிட்டார், தோழர் பா.சங்கரவடிவேல்.

தொடர்ந்து, பெரியார் தி.க. உள்ளிட்ட மேலும் பல அமைப்புகள் முற்றுகையில் ஈடுபடவே,  தமிழகக் காவல்துறை அவரை தமிழகத்தைவிட்டு வெளியேறக் கோரியது. அமைச்சர் ரேஜினால்டு தான் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சியை இரத்து செய்துவிட்டு உணவகத்தின் கொல்லைப்புற வழியாக, தமிழகக் காவல் துறையின் முழுப்பாதுகாப்புடன் வெளியேறி இலங்கைக்குத் தப்பிச் சென்றார்.

Pin It