தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) சார்பில் 2013 செப்டம்பர் மாத இறுதியில் இலங்கையில் புத்தகக் கண்காட்சி நடத்த விருப்பதாக பப்பாசியில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து பதிப்பாளர்களுக்கும் 26.6.2013 அன்று கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

 அக்கடிதத்தில் “இலங்கை யாழ்ப்பாண நகரில் தமிழ் புத்தகத் திருவிழா நடத்த வேண்டும் என்று, யாழ்ப்பாண தமிழர்கள் கேட்டுக் கொண்டதாகவும், யாழ்ப் பாண மாவட்ட நிர்வாகம், யாழ்ப்பணம் மாநகராட்சி மற்றும் யாழ்ப் பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஆகியோர் முழு ஒத்துழைப்பு தருவதாகவும்,” அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அது குறித்து விவாதித்து முடிவு எடுக்க சிறப்புக்கூட்டமாக பப்பாசியின் சார்பில் 27.7.2013 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை தியாகராயர் நகர், ஸ்ரீபாலாஜி திருமண அரங்கத்தில் நடைபெற இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த 2008-2009 இல் இந்தியா உள்ளிட்ட பலநாடுகளின் ஆதரவோடு ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை கொன்றொழித்த மனித குலப்பகைவன் இராசபட்சே கும்பலுக்கு எதிராக தமிழகத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், உலக நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான கண்டனங் களையும், போராட்டங்களையும் நடத்திவரும் சூழலில், தமிழ் நாட்டிலிருந்து புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இலங்கைக்குச் சென்று புத்தகக் கண்காட்சி நடத்தச் செல்வது கண்டனத்திற்குரியது.

ஒரு சமூகத்தை ஒவ்வொரு தளத்திலிருந்தும் அடுத்தத்தளத்திற்கு உந்தித் தள்ளும் வலிமை மிக்க அறிவு ஆயுதங்கள் புத்தகங்கள். ”ஒரு நூலகம் திறக்கப்பட்டால் ஒரு சிறைச்சாலை மூடப்படும்” என்பது நம் முன்னோர்களின் கூற்று. அறிவையும் ஆற்றலையும் அள்ளி வழங்கும் தாய்க்கு ஈடானவைநூலகங்கள். அப்படி ஒரு சிறப்பு வாய்ந்த, பல இலட்சம் நூல்கள் தாங்கிய யாழ் நூலகத்தை 1981 இல் சிங்களப் பேரினவாதம் எரித்துச் சாம்பலாக்கியது.

தமிழர்களின் அறிவு மரபு மீதும் அனைவரும் சுயமாக சிந்திக்கும் உரிமை மீதும், அறிவைத் தேடும் மானுட இயல்பு மீதும் எறியப்பட்ட கொள்ளி என்றே அதை கருதவேண்டும். தமிழினத்தை ஆற்றல் உள்ள இனமாக இல்லாது செய்துவிட்டால் தொடர்ந்து அடிமைகளாகவே வைத்திருக்கலாம் என்ற முடிவுகளோடுதான் சிங்கள இனவெறி அரசு யாழ்நூலகத்தைத் தீயிட்டது. அந்த தமிழினப் பகையின் சிங்களக் கொடுமுடியாகத் திகழ்வதுதான் இன்றைய இராசபட்சே அரசு.

தமிழர்களின் அறிவு தளத்தை தரைமட்டமாக்கத் துடிக்கும் சிங்கள இன வெறியர் களுக்கு, அவர்களின் அழைப்பின் பேரில், அறிவை புகட்டும் பணியை செய்யும் தமிழகப்பதிப்பாளர்கள், இலங்கைக்கு புத்தகக்கண் காட்சி நடத்தச் செல்வது வேதனைக் குரியதாகும்.

2008-2009 போர் நடைபெற்ற காலங்களிலிருந்து இன்றுவரை இலங்கையில் ஊடகத் துறையி னருக்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன. அதில் கீழ்கண்ட இணைய தளங்கள் தடை செய்யப்பட்டவையாகும்.

www.lankaenews.com, www.srilankamirror.com, www.srilankaguardian.com, www.paparacigossip9.com, www.lankawaynews.com, www.lankaenews.com-LEN http://www.globalpea...s-on-media.aspx, அதோடு மட்டுமல்ல சுமார் 50 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர் பலர் கொல்லப்பட்டனர்.

“இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான்” என்று தலையங்கம் எழுதிய சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் ஒரு சிங்களர் என்ற போதிலும் இலங்கை அரசு அவரை விட்டு வைக்க வில்லை.

கேலிசித்திர வரைஞரான பிரகீத் எக்னெலிகொட கடந்த இரண்டு வருடங்களிற்கும் மேலாக காணாமல் போயுள்ளார். கடந்த மாதம் முதல் டைம்ஸ் பத்திரிகைக்கு இலங்கையில் தடை. “உதயம்” ஏட்டின் அலுவலகம் இலங்கைப் படையினரின் மெளன சம்மதத்தோடு சிங்களக் காடையர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இவ்வாறு இலங்கையின் ஊடகத் துறை பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. தனியார் ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதில்லை. இலங்கைச் செய்திகள் குறித்து எழுதும் எந்த ஒரு இணைய தளமும், இலங்கை அரசிடம் பதிவு செய்து கொள்ளவேண்டும். ஊடகங்கள் அனைத்தும் அவர்களுக்கு கட்டுப்பட்டுதான் இயங்க வேண்டியிருக்கிறது.

இச்சூழலில் தமிழ்நாட்டிலிருந்து புத்தகக் கண்காட்சிக்கு இலங்கை அரசாங்கம் அழைக்கிறதென்றால் அதில் ஏதோ உள்ளநோக்கம் இருக்கிறதென்பதை பப்பாசி புரிந்து கொள்ளாதது ஏன்?

ஐ.நா. மனித மன்றமும், உலகநாடுகள் பலவும் அங்கு மனித உரிமை பாதுகாப்பாக இல்லை எனக் குற்றம் சாட்டி வரும் சூழலில் “எல்லாம் சரியாக இருக்கின்றன” எனக் காட்டுவதற்குத் தானே இலங்கை அரசின் துணையோடு இந்த ஏற்பாடுகள் நடக்கின்றன? இந்த சூதை பதிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?

தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கத்தில் (bapasi) உறுப்பு வகிக்கும் பெரும்பால பதிப்பகங்கள், ஈழம், தமிழ், தமிழர் பெருமை ஆகியவை குறித்து ஏராளமான நூல்கள் வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் இலங்கையில் நடை பெறயிருக்கும் புத்தகக் கண்காட்சியில் இடம் பெற செய்ய முடியுமா? அதை இலங்கை அரசாங்கம் அனுமதிக்குமா? ஏன் இது பப்பாசிக்கு புரியவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு புத்தக விற்பனைக்குச் செல்வது என்ன அறம்? இது பப்பாசிக்குத் தெரியவில்லையா?

அறிவு தளத்தில் நின்று பணியாற்றும் பதிப்பாளர்கள் அனைவரும், எல்லாருக்கும் முன்னோடியாக விளங்க வேண்டுமே தவிர இப்படி ஒரு தவறான திசைக்கு அழைத்துச் சொல்லக் கூடாது

தமிழக அரசு, இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைவிதிக்கவும், இலங்கை விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஆசிய தடகளப்போட்டியை தமிழகத்தில் நடத்த முடியாது என்றும் வலியுறுத்தி தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் (பப்பாசி) இலங்கைக்கு புத்தகக் கண்காட்சி நடத்த செல்லக்கூடாது. அதை உடனடியாக ரத்து செய்யவேண்டும். இது குறித்து முடிவு எடுக்கும் ஆலோசனைக் கூட்டத்திலும், புத்தகக் கண் காட்சி நடத்த இலங்கைக்கு செல்லக்கூடாது” என்றே தீர்மானம் நிறை வேற்றவேண்டும் .

இவை எல்லாவற்றையும் மறந்து இலங்கை அரசுக்கு ஆதரவாக தென்னந்திய புத்தக பதிப்பாளர் சங்கம் யாழ்ப்பாணம் சென்று கடை விரித்தால் அவ்வாறு செய்யும் ஒரு பதிப்பகம் கூட தமிழ்நாட்டில் புத்தகம் போட்டு விற்பனை செய்ய முடியாத அளவிற்கு தமிழர்கள் அவற்றைப் புறக்கணிக்க வேண்டும். தமிழர்களிடம் இந்த வேண்டுகோளை தமிழின உணர்வாளர்கள் எடுத்துச் செல்வோம். எந்த பதிப்பகம் சென்றாலும்.. அந்த பதிப்பக நூல்களை வாங்கக்கூடாதென்று வீதிவீதியாக சென்று பரப்புரை செய்வோம்.!

ஏனெனில் இது தமிழர்களின் மானப் பிரச்சினை! தமிழர் அறத்திற்கு விடப்படும் அறைகூவல்.

Pin It