உண்மை ஒன்று சொல்வேன் – 8

குப்பைத் தொட்டிகளில் இருந்து வழக்கமாக பறக்க வேண்டிய தூசுகளுக்குப் பதிலாக, திருச்சி உறையூர் களத்துமேடு சுபானியாபுரத்தில் உள்ள மாநகராட்சிக் குப்பைத் தொட்டியில் ரூபாய் நோட்டுகள் பறந்து கொண்டிருந்தன. அவை சுக்கல், சுக்கலாக -சுக்கு நூறாக கிழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் என்பது தான் அந்தப் பகுதி குடிசைவாழ் மக்களை வேதனையில் ஆழ்த்தி விட்டது.

கிழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் பெரும் பாலானவை 500, 1000 ரூபாய் நோட்டுகள் என்பதுதான் எல்லோரையும் மூக்கில் மேல் விரல் வைக்கச் செய்து விட்டன. அதைப் பார்த்த பொதுமக்கள் அழாத குறையாக அங்கலாய்த்துக் கொண்டே, அங்கிருந்து நகர்ந்து சென்றுக் கொண்டிருந்தனர்.

(கிழித்து எறியும் அளவுக்கு) இன்றைக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கின்றன. “எல்லாருமே இப்படி ஐநூறு ரூபாய் நோட்டா கொடுத்தா எப்படி? சில்லறையா கொடுங்க சார்?” என்கிற ஆதங்கத்தை அங்காடி தோறும் கேட்க முடிகிறது. ஐநூறு ரூபாய் தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் இருக்கிறது என்றால், மக்கள் எல்லாரும் வசதியாக செல்வாக்குடன் இருக்கி றார்கள் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் தாள்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்ட நிலையில், அதிக மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது வளர்ச்சியின் குறியீடாக ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது.

அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் புழங்குவதில் இந்திய நாட்டின் பெரும்பாலான மக்களான ஏழைகளுக்கு துளியும் தொடர்பு இல்லை. கிராமப் புறங்களில் 500, 1000 நோட்டு களைப் பார்ப்பதே அரிது. கிராமப் புறங்களில் தேவைப்படும் பத்து, ஐம்பது ரூபாய் நோட்டுகளுக்கும், சில்ல றைகளுக்கும் பெறும் தட்டுப் பாடு நிலவுகிறது.

ஒட்டுமொத்த இந்தியாவும், பொருளாதார வீழ்ச்சியில் தவிக்கும் போது, அதிக மதிப்பி லான ரூபாய் தாள்கள் புழக் கத்தில் இருப்பது எப்படி? ஏன்? என்கிற கேள்வி எழுகிறது.

இந்த நேரத்தில், இந்தியாவில் 70 விழுக்காடு மக்கள் நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

நம்மிடம், 350 கோடிக்கு அதிகமான 500 ரூபாய் நோட்டுகளும், 100 கோடிக்கு அதிகமான 1000 ரூபாய் நோட்டுகளும் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. 10, 50, 100 ரூபாய்களை விட அதிகளவில் 500, 1000 ரூபாய்களை புழக்கத்தில் விட என்னக் காரணமாக இருக்க முடியும்? இந்தக் கேள்விக்கான பதிலை நம்புவது சற்று கடினமாகத்தான் இருக்கும்.

ஆனால் உண்மை இதுதான்! கருப்புப் பணமுதலைகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் உறுதுணையாக இருக்கவே மதிப்புக் குறைவான ரூபாய்களை விட ஒப்பிட்டளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை அதிக ளவில் இந்த அரசு புழக்கத்தில் விடுகிறது.

கணக்கில் வராத கருப்புப்பண பரிவர்த்தனைகள் 500, 1000 ரூபாய் கட்டுகளில் தானே நடக்கின்றன!? கணக்கில் வராத கருப்புப் பணங்களை வெளிநாடு களுக்கும், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கும் கடத்த 500, 1000 ரூபாய் கட்டுகளாக இருக்கும் பட்சத்தில் எளிதாகி விடுகிறது.

அதாவது, பத்து கோடியை 50 ரூபாய் கட்டுகளாகவோ, 100 ரூபாய் கட்டுகளாகவோ கடத்து வதற்கும், 500 மற்றும் 1000 ரூபாய் கட்டுகளாக கடத்து வதற்கும் உள்ள வித்தியா சத்தைப் புரிந்து கொள்ளலாம்.

கருப்புப் பணமும், கணக்கில் வராத ஊழல் பணங்களை பதுக்கி வைத்திருப்போரும் பெரும் மதிப்பிலான செலவீனங்களை கடன் அட்டைகள் மூலமும் செய்கிறார்கள். இவர்கள் 500, 1000 ரூபாய்களை பயன்படுத்துவது என்பது பெரும்பாலும் சட்டத்திற்குப் புறம்பான வரி ஏய்ப்புக்காக மட்டுமே.

அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நிலை இதற்கு நேர்மாறாக உள்ளது என்பது தான் ஆச்சர்யமான உண்மை. ஆம். இந்த நாடுகளில் அதிக பட்சமாக 100 மதிப்புள்ள நோட்டுகளே அச்சிடப்படுகின்றன. இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் அதிகபட்ச மதிப்புடைய நோட்டு 50 பவுண்டு மட்டுமே. 50 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விருநாடுகளும் கருப்புப் பணம் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்தது.

ஆனால் இந்தியாவின் நிலையைப் பாருங்கள். கடந்த பத்து ஆண்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது 17 மடங்கு அதிகரித்துள்ளது. கருப்புப் பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமல்ல, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் சமூக விரோதிகளுக்கும் அரசின் இந்தப் போக்கு வசதியாகவே இருக்கிறது. 500 ரூபாய் நோட்டுகளில், 60.74 விழுக்காடு கள்ள நோட்டுகளாகும். நான்கு 1000 ரூபாய் நோட்டுகளில் ஒன்று கள்ள நோட்டாகும்.

பெரும்பாலான ஏழைகளைக் கொண்ட இந்தியாவுக்கு அதிக மதிப்பிலான நோட்டுகள் தேவை இல்லை என்பது கண்கூடு. ஆனால் பணக்காரர்களுக்கும், ஊழல்வாதிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இந்திய அரசு இப்படியெல்லாம் நடந்து கொள்வது என்பது நம்மால் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

அதிக மதிப்புடைய நோட்டுகளை திரும்பப் பெறுவதாக, அரசு அறிவித்தால் அந்த அறிவிப்பு, கருப்புப் பணங்களை அதிகமாக வைத்திருக்கும் சட்ட விரோத கும்பலுக்கு பெரிய தடையாகி விடும். எனவே யார் தலையில் வேண்டுமானாலும் அடித்து சத்தியம் செய்யலாம், இந்திய அரசு அப்படியெல்லாம் முடிவெடுத்து விடாது என்று!! இந்த உண்மை எல்லாம் தெரிந்தும் ரூபாய் நோட்டுகளில் உள்ள காந்தியால் எப்படித்தான் சிரிக்க முடிகிறதோ தெரிய வில்லை? (புள்ளி விவரங்கள்: தசன்டே இந்தியன் பொருளாதாரக் கட்டுரை)

(இன்னும் சொல்வேன்)

Pin It