“தமிழினம்”- என்ற இன உணர்ச்சியும் அதன் அடிப்படையில் அமைந்த கூட்டுத் தற்காப்புணர்ச்சியும் மறைந்து, அந்த இடத்தில் சாதி உணர்ச்சி முழுதாகக் குடி கொண்டு விட்டது என்று கூற முடியது. இன்றும் கூட சாதி உணர்ச்சிக்கு மேலே, தமிழினம் என்ற இன உணர்ச்சி கூடுதலாகச் செயல்படுகிறது.

அதனால்தான் சாதி அமைப்புகள் அரசியல் கட்சிகளாக மாறும் போது, தமிழின அடையாளங்களையும் தமிழின உரிமைகளையும் முதன்மைப்படுத்துகின்றன. வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கியது. அது தமிழினக் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. அக்கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களைத் “தமிழினக் காவலர்’’ என்று அக்கட்சியில் அழைக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட தலித் அமைப்பாக (DPI) தொடங்கப்பட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்று வடிவெடுத்த கட்சி தமிழின கோரிக்கைகளை முன்வைக்கிறது. அக்கட்சியின் தலைவர் திரு.தொல்திருமாவளவன் அவர்களை “எழுச்சித் தமிழர்” என்று அவ்வ மைப்பினர் அழைக்கின்றனர். யாதவர் சங்கத்தை அரசியல் கட்சியாக மாற்றிய போது அதற்குத் “தமிழ்த் தேசம்” என்று பெயர் சூட்டினர். தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தின் ஒரு பிரிவு “புதிய தமிழகம்” என்று அரசியல் கட்சியானது. அருந்ததியர் அமைப்பு “ஆதித் தமிழர் பேரவை” ஆனது. கொங்குவேளாளர் பேரவை தமிழ்த் தேசியக் கட்சி ஆனது.

சாதி அமைப்புகள் தமிழினப் பெயர் தாங்கி அரசியல் கட்சியாவதும் தமிழினத்திற் கான கோரிக்கைகளை முன் வைப்பதும் ஏன்? இருவகைத் தேவைகள் இருக்கின்றன. 1. பிற சாதி மக்களின் வாக்குகளை வாங்கத் தமிழின உறவு தேவைப்படுகிறது.

2. தன் சாதி மக்களையும், வெறும் சாதிச் சிக்கல்களை மட்டும் சொல்லி நீண்ட காலம் சாதி அமைப்பில் தக்க வைத்துக்கொள்ள முடியாது. தன்சாதி மக்களும் தமிழர்கள். அவர்களுக்கும் இன உணர்ச்சியும் இனம் தொடர்பான உரிமைக் கோரிக்கைகளும் இருக்கின்றன.

எனவே, தன்சாதி மக்களைத் தனது சாதி அமைப்பின் நெடுங்காலம் தக்க வைத்துக் கொள்ளவும் தமிழினத் தற்காப்புணர்ச்சியைப் பயன்படுத்தியாக வேண்டும்.

சாதி அமைப்புகள் தமிழின அமைப்புகளாகவும் செயல்படுகிறது இரட்டைக் குதிரை சவாரி போன்றதுதான். ஒரு குதிரை இந்தப்பக்கம் இழுக்கும். இன்னொரு குதிரை அந்தப்பக்கம் இழுக்கும். ஆனால் சாதி அமைப்புகள் தமிழினக் கோரிக்கைகளை வைக்காவிட்டால் அவற்றிற்கு நீண்ட கால வாழ்வும் இல்லை; சமூகச் செல்வாக்கும் இல்லை. சாதிக் கட்சிகளுக்கு செல்வாக்கும் இல்லை. சாதிக் கட்சிகளுக்கு சாதிதான் பலம்; அதே சாதிதான் பலவீனம்!

சாதி அமைப்பு ஒரு தொழிற்சங்கம் போன்றது என்று ஏற்கெனவே பார்த்தோம். சாதிக்குரிய கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருந்தால்தான் சாதி அமைப்பு நீடிக்கும். அது தமிழினத்திற்குரிய கோரிக்கைகளுக்கு முதன்மை கொடுத்தால், சாதி அமைப்பில் தளர்ச்சியும், சிதைவும் ஏற்படும். அதே வேளை அச்சாதிக்கும் உரிய தமிழினக் கோரிக்கைகள் முன்னுக்கு வரும் போது அவற்றுக்கு முகம் கொடுக்கவில்லையெனில், பிற சாதி மக்களிடமிருந்து அச்சாதி அமைப்பு தனிமைப் படும்; தன் சாதி மக்களிடம் அதன் தலைமைக்குப் பிடிமானம் குறையும். சாதி அமைப்புகளின் இரட்டைக்குதிரை சவாரி எப்போதும் இந்நெருக்கடிகளுக்கிடை யேதான் நடக்கிறது.

சாதியா, தமிழினமா என்ற நெருக்கடி வரும் போது, சாதியின் பக்கம்தான் இந்த அமைப்புகள் நிற்கின்றன. ஏனெனில் தனது அடித்தளத்தை இழந்துவிடக் கூடாது என்பதே சாதி அமைப்புகளின் தலைவர்களின் உத்தி!

பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்கம் 5.5.2012 அன்று மாமல்லபுரத்தில் நடத்திய சித்திரை முழுநிலவு விழாவில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு பின் வருமாறு பேசினார் என்று ஏடுகள் எழுதின.

“நம் இனத்துப் பெண்களைப் பலாத்காரம் செஞ்சு கலப்புத் திருமணம் செய்றாங்க. நாம எச்சரிக்கையா இருக்கணும். நம்ம சாதியில்தான் நாம கல்யாணம் செய்யணும். எவண்டா சாதிய ஒழிச்சன்? நான் வன்னியர் சங்கத் தலைவர் சொல்றேன். யாராவது எங்க பொண்ணுங்களுக்குக் கலப்புத் திருமனம் செஞ்சு வச்சா.. தொலச்சுப்புடுவேன்.” (ஜுனியர் விகடன் 13.5.2012) தமிழினக்காவலர் மருத்துவர் இராமதாசும் அதே மேடையில் அமர்ந்திருந்தார். அவர் தமது பேச்சில் காடுவெட்டிக்குருவின் கலப்புமன எதிர்ப்புப் பேச்சைக் கண்டிக்கவில்லை.

இதே போல் கொங்கு வேளாளர் சங்கத் தலைவர் பேசியுள்ளார்.

சாதிக் கட்சிகளும் சாதி அமைப்புகளும் என்னதான் முற்போக்குக் கொள்கைகள் பேசினாலும் அவற்றின் இருப்பு, சாதி என்ற அமைப்பில்தான் இருக்கின்றது. “சாதி” என்பது சரத்தில் பிறப்பின் வழி உயர்வு தாழ்வு என்பது தவிர வேறன்று.

தற்காப்புணர்ச்சியை அடிப்படையாய்க் கோண்ட சாதி உணர்ச்சி, குறிப்பிட்ட சாதியின் சமூக மேல் நிலை மற்றும் குறிபிட்ட சாதியின் மக்கள் தொகை மிகுதி ஆகியவற்றின் காரணமாக தாக்குதல் உணர்ச்சியாக மாறுகிறது. அதாவது சாதியின் தற்காப்புணர்ச்சி - தாக்குதல் உணர்ச்சியாக மாறுகிறது. சமூகத்தில் கீழ் நிலையில் வைக்கப்படுள்ள, நலிந்த நிலையில் உள்ள சாதி மக்கள் மீது அம்மக்களை விடவும் மேல்தட்டில் உள்ள, மக்கள் தொகை அதிகம் கொண்ட சாதியினர் மிக அதிகமாகத் தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

தன்னை விடக் கீழ்நிலையில் உள்ள சாதியினர், தனக்குச் சமமாக உணவு, உடை, பேச்சு, பழக்கவழக்கங்கள் முதலியவற்றைக் கடைபிடிப்பதையே, தாக்குதல் சமூகத் தினர் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். இவற்றையே பொறுத்துக் கொள்ளதாவர்கள், அந்தக் “கீழ்” சாதிகளோடு திருமண உறவை எப்படி பொறுத்துக் கொள்வார்கள்? ஆனால் இந்தக் “கீழ்” சாதிக்கு மேல் உள்ள அந்த “மேல்” சதி வேறொரு “மேல்” சாதிக்குக் “கீழ்” இருக்கிறது. அந்த முரண்பாட்டில், கீழ்நிலையில் உள்ள இந்த “மேல்” சாதி, தனது தன்மானம், சமத்துவம் போன்றவற்றை வாய் கிழியப்பேசும்!

ஆனால் அரசியல் ஆதாயம் தேடுவோர் சாதி அமைப்புகளை அரசியல் அமைப்புகளாக மாற்றும் போது, தங்கள் சாதி அமைப்புத் தகர்ந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருப்பார்கள். காரணம், தங்கள் சாதிக் கூட்டமைப்பு தகர்ந்துவிட்டால் அவர்களின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும். இந்த வகை சாதி மனப்பான்மை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறபடுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் அனைவர்க்கும் பொதுவானதாகும்.

இப்பொழுது சாதி முனைப்பைத் தீவிரப்படுத்துபவை, அரசியல் வடிவம் பெற்ற சாதி அமைப்புகளே. எல்லா சாதிகளும் அரசியல் அமைப்புகள் ஆவதில்லை. கணிசமான மக்கள் தொகை கொண்ட சாதிகள்தாம், அரசியல் அமைப்புகளாக மாறுகின்றன. கணிசமான மக்கள் தொகை என்பது கணிசமான வாக்கு வங்கி அல்லவா!

அரசியல் வடிவம் பெற்ற சாதி அமைப்புகள் சதி ஒழிப்பிற்குத் துணை நிற்கமாட்டா. அரசியல் வடிவம் பெறாத சாதி அமைப்புகளும் சதி ஒழிப்பிற்குத் துணை நிற்கமாட்டா. எந்த வடிவத்திலான சாதி அமைப்பும், சாதி ஒழிப்பிற்கும், தமிழின ஒருமைப்பாட்டிற்கும், சமூக சமத்துவத்திற்கும் இடையூறு விளைவிப்பவையே!

மதம்

சாதி ஒழிந்தால் இந்துமதம் இருக்காது என்று சைவ, வைணவ பீடங்கள் அஞ்சு கின்றன. தீவிர, சைவ, வைணவ பக்தர்களில் பலரும் சாதி ஒழிந்தால் இந்துமதம் ஒழிந்து விடும்; இஸ்லாமிய, கிறித்துவ மதங்களில் இந்துக்கள் சேர்ந்துவிடுவார்கள் என்று அஞ்சுகின்றனர். பார்ப்பனியம், இந்துத்வா ஆகிய கோட்பாடுகளை ஏற்றுள்ளோர் சாதி ஒழிப்பை ஏற்கவில்லை.

இங்குள்ள கிறித்துவ மதம், இந்துமதம் போன்றே சாதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது. தேவலாயங்களில் ஆயர் பீடங்களில் நடக்கும் சதிச் சண்டைகள் ஊரறிந்தவை. எனவே, கிறித்துவ பீடங்கள், பாதிரியார்கள், கிறித்துவ மேல் சாதியர் ஆகியோர் சாதி ஒழிப்பை மனத்தூய்மையோடு ஏற்பதில்லை.

இஸ்லாம் மதத்தில், மேற்கண்ட மதங்களைப் போல் அடுக்கடுக்கான சாதிப்பிரிவுகள் இல்லை என்றாலும் அதிலும் ஒருவகை சாதிப்பிரிவுகள் இருக்கின்றன. சாதிப்பிரிவு களின் அடிப்படையில் இட ஒதுக்கீடு பெற்று வருகிறார்கள்.

ஆகவே, மதங்களை ஒழிப்போம் என்று கிளம்பிவிடக்கூடாது. மதங்களை எளிதில் ஒழிக்க முடியாது. அவை கடவுள் கருத்தியலுடன் பிரிக்கமுடியாதபடி இணைந்தவை. கடவுள் கருத்தியல் ஒரு மெய்யியல் (தத்துவம்) ஆகும்.

“கடவுள்” என்பவர் மனித மனத்தின் உளவியல் தேவையின் அடிப்படையில் உருவானவர். சாதி என்பதற்கு தனித் தன்மையுள்ள மெய்யியல் எதுவும் கிடையாது. வர்ணாசிரமம் என்பதற்கு மெய்யியல் உண்டு. ஆனால் சாதிக்கு மெய்யியல் இல்லை. இது குறித்து ஏற்கெனவே விரிவாகப் பார்த்துள்ளோம்.

மத ஒழிப்பில் ஈடுபடுவது, மதங்களின் புத்தெழுச்சிக்கே வழிவகுக்கும் என்று மார்க் சியம் கூறுகிறது. இது பற்றி பிரடெரிக் எங்கெல்ஸ் விரிவாக எழுதியுள்ளார். மதங்களின் புற நிலைத் தேவைகளை இல்லாமல் செய்வதன் மூலமே மதம் உதிர்ந்து போகும் சூழலை உருவாக்க முடியும் என்கிறது மார்க்சியம்! இதன் பொருள், மதவெறிச் செயல்களைச் சட்டம் போட்டு தடுக்கக் கூடாது என்பதன்று. அரசியலும் கல்வியும் மதத்திலிருந்து பிரிக்கப்படவேண்டும் என்கிறது மார்க்சியம். இதன் பொருள் மதங்களைத் தடை செய்வதன்று!

இங்கு நாம் கவனிக்க வேண்டியது மதம் என்பது ஒரு நிறுவனம் என்ற அளவில் சாதி ஒழிப்பிற்குத் துணை நிற்காது. மதத் தீவிரவாதம் மக்களைப் பிளப்படுத்துகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். மத நம்பிக்கை கொண்டோரில் நேர்மையாளர்கள் மனித சமத்துவத்தில் அக்கறையுள்ளோர் இருக்கிறார்கள் அவர்கள் சாதி ஒழிப்பிற்குத் துணை நிற்பர்.

சாதி ஒழிந்துவிட்டால், இந்து மதம் - சைவ, வைணவம் ஆகியவை அழிந்துவிடும் என்று கருத முடியாது. இந்துமதம், “கடவுள் கோட்பாடு” என்ற அடிப்படையில் சாதியற்ற மனிதர்களைக் கொண்டிருக்க முடியும்.

அப்படி இந்து மதத்தை மாற்றுவது இந்துமதத்தில் தோன்றும் சமூகச் சீர்திருத்தவாதிகளின் செயல்களைப் பொறுத்தே இருக்கும்.

இப்பொழுது நடைமுறையில் மதங்கள் சாதி நீக்கத்திற்கு பயன்பட மாட்ட என்பதே நமது கருத்து.

(தொடரும்)

Pin It