அமெரிக்காவில் 14.12.2012 அன்று கனெக்டிகட் மாகாணத்திலுள்ள நியூடவுன் நகரின், தொடக்க பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு உலகெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதில், 20 குழந்தைகள், 6 பெண்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். கொலைகாரன் லான்சாவும், தன்னைத் தானே சுட்டுக் கொன்று மரணத்தைத் தழுவினான். பள்ளிக்கு வருவதற்கு முன், வீட்டில் லான்சா, அவரது தாயாரான நான்சியை சுட்டுக் கொன்றுவிட்டு தான் வந்தான்.

அத்துயர சம்பவம் நடந்த ஒருவாரத்திற்குள், பென்சில் வேனியா மாகாணத்திலுள்ள, கீசிடவுன் பகுதியில் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், நால்வர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் நடைபெறும், இவ்வாறான துயர நிகழ்வுகள் புதிதானவையல்ல. ஏற்கெனவே, இதுவரை பல முறை அங்கு பள்ளிகளிலும், பொது இடங்களிலும் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்று, பல நூறு பேர் அதில் இறந்துள்ளனர்.

ஒருபுறம் அதிகம் பணம் குவிந்துள்ள செல்வந்தர்களையும், மற்றொருபுறத்தில் ஏதுமற்ற ஏழைகளையும் உருவாக்கி வரும் உலகமயப் பொருளியல் நாடான அமெரிக்காவில், அனைவரும் தம் பாதுகாப்புக்காக, துப்பாக்கிகளை வைத்திருக்கலாம் என சட்டம் வகுத்துள்ளது.

இச்சட்டத்தின் மூலம், பயனடையும் ஆயுத வணிகர்கள் குடியரசுக் கட்சி – சனநாயகக் கட்சி ஆகிய இருகட்சிகளுடன் தொடர்ந்து நெருக்கம் பேணி வருவதால், இதில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் துப்பாக்கி வைத்திருக்க உரிமை வழங்கும் சட்டத்தை கடுமையாக்கவோ, அதில் கட்டுப்பாடுகள் கொண்டுவருவதையோ விரும்புவதில்லை.

அவ்வப்போது, இது போன்ற துப்பாக்கிச் சூடுகள் நடைபெறும் போது, இது குறித்து பரபரப்பாகப் பேசப்படும். அதன்பின், அக்கோரிக்கை மறக்கடிக்கப்படும்.

துப்பாக்கியைக் கொண்டு அடுத்தவர் உயிரைக் குடிக்கும், இரத்த வெறி எப்படி அமெரிக்க இளைஞர்களிடம் விதைக்கப்பட்டது என்பது குறித்து அமெரிக்காவில் உருப்படியான ஆய்வுகள் ஏதும் நடப்பதில்லை.

“அதிகமாகப் பணம் ஈட்ட வேண்டும், உயரியப் பொருட்கள் வாங்கிக் குவிக்க வேண்டும், மேட்டுக்குடியாய் வாழ வேண்டும்” இது தான் அமெரிக்க மக்களிடத்தில் உலகமயப் பொருளியல் உருவாக்கியுள்ள உளவியல். இதற்குப் பலியாகும் பெற்றோர்கள், தம் பிள்ளைகளையும் அவர்கள் வாங்கும் பன்னாட்டு நிறுவனப் பொம்மைகளாகக் கருதத் தொடங்குகின்றனர். கல்வியையும், எதிர்காலத்தையும் காரணம் காட்டி பிள்ளைகள் மீது கடும் அழுத்தங்களைத் தொடுக்கின்றனர்.

இவ்வாறு அழுத்தங்களை உள்வாங்கும் பிள்ளைகளுக்கு, நிம்மதியைத் தருவது எது தெரியுமா? கணினியும், தொலைக்காட்சி (வீடியோ) விளையாட்டுகளும் தான்.

தொலைக்காட்சி விளையாட்டுகளில் கூட, அடிதடி – சண்டைகளை நிகழ்த்தும் WWF விளையாட்டுகளும், அடுத்தவரை முந்திச் செல்ல வேண்டும் என்ற வெறியை உண்டாக்கும் மகிழுந்துப் பந்தயங்களும், எப்படி வேண்டுமானால் ஒர் நகரத்தில் சீர்குலைவை செய்யலாம், யாரை வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளலாம், துப்பாக்கியால் சுடலாம் என்ற மனநிலையை உருவாக்கும் ‘தனிச்சிறப்பு’கள் கொண்ட விளையாட்டுகளும் தான் குழந்தைளிடம் வெகு வேகமான ஈர்ப்பினை உருவாக்குகின்றன. மேலும், ஹாலிவுட் அதிரடித் திரைப்படங்களிடமிருந்து பலவற்றையும் அவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.

இதன் விளைவு, பெற்றோர்களிடமிருந்து தனிமைப்பட்ட மாணவர்கள், இந்த ‘விளையாட்டு’ உலகிலும், ஊடகங்களிலும் தஞ்சமடைந்து முழு கவனம் செலுத்தினர். மேலும், உலகமயப் பொருளியல் நுகர்வு வாழ்க்கையை முழுமையாய் வாழும் தனது பெற்றோரிடமிருந்தும் பலவற்றைக் கற்றுக் கொள்கின்றனர். இதன் உச்சத்தில், விளையாட்டு நேரம் போக மீதிநேரத்தில், மனநிலைப் பிறழ்ந்து, நிஜத் துப்பாக்கிகளைக் கொண்டே சக மனிதர்களைக் கொல்லும் அளவிற்கு அவை மாணவர்களை உருவாக்கின.

தற்போது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட லான்சா கூட, படிப்பில் முழுக்கவனம் செலுத்தும்படி தொடர்ந்து அவனது பெற்றோரால் அறிவுரைத்தப்பட்டுக் கொண்டே வந்ததாகவும், அதன் காரணமாகவே அவன் கடுமையாக நடந்து கொள்வான் என்றும், அவனது நண்பர்கள் ஊடகங்களில் உரைத்தனர்.

குழந்தைகளை வெறியூட்டிக் கொலைகாரர்களாக்கும் உலகமய உலகில், வெறும் கொலைகாரர்களுக்கு மட்டும் தண்டனை வழங்கி என்ன பயன்?

Pin It