சாஸ்திரங்களை நிராகரித்தால் மட்டும் போதாது; புத்தரும் குருநானக்கும் செய்ததைப் போல, சாஸ்திரங்களின் அதிகாரத்தை மறுக்க வேண்டும். சாதி புனிதமானது என்ற கருத்தை, இந்து மதம் இந்துக்களிடம் உருவாக்கியிருக்கிறது. இந்து மதமே அவர்களிடம் உள்ள குறை என்று இந்துக்களிடம் சொல்வதற்கான துணிச்சல், உங்களிடம் இருக்க வேண்டும். அந்தத் துணிச்சல் உங்களுக்கு உண்டா?

-டாக்டர் அம்பேத்கர்

தலித் எழுத்தாளர் மீது தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலையத்தில் 14.6.08 அன்று தனக்கு நேர்ந்த கொடுமையை தலித் எழுத்தாளர் அபிமானி விளக்குகிறார்: "நான் தூத்துக்குடி துறைமுகக் கழகத்தில் வேலை பார்த்து ஒய்வு பெற்றுள்ளேன். நான் இயலாதவன். எனது மனைவி குமுதாவை உதயகுமார் என்பவர் அசிங்கமாகப் பேசி கேலி செய்தது தொடர்பாக, என் மனைவி 8.6.08 அன்று பணகுடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், 14.6.08 அன்றுதான் அவரை கைது செய்தனர்.

அன்று மாலை 5.30 மணியளவில் நான் வீட்டிலிருந்தபோது பணகுடி எஸ்.அய். காரில் வந்து என்னை விசாரணைக்காக அழைத்துச் சென்றார். ஏன் என்னை அழைத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, எஸ்.அய். எந்த பதிலும் சொல்லவில்லை. அன்று இரவு முழுவதும் என்னை காவல் நிலைய லாக்கப்பில் வைத்திருந்தார்கள். மறுநாள் மாலை 4.30 மணி அளவில் என்னை வள்ளியூர் நீதிமன்றம் கூட்டிச் சென்று, நான்குனேரி சப் ஜெயிலில் ரிமாண்ட் செய்தனர். என்ன காரணத்திற்காக என்னைக் கைது செய்தனர் என்பதே எனக்கு நீதிபதி சொன்ன பிறகுதான் தெரியும். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, என் மீது பணகுடி போலிசார் 14.6.08 அன்று தொடுத்துள்ள (குற்ற எண்.193/08, இ.த.ச.147, 148, 294(பி), 354) பொய் வழக்கைத் திரும்பப் பெறக் கோருகிறேன்.''

சீரிய எழுத்தாளரும், பத்திரிகையாளருமான தமிழக முதல்வர், தமது கட்டுப்பாட்டில் இயங்கும் காவல் துறையின் அத்து மீறல்களைத் தடுக்க முன்வருவாரா?

காவல் குற்றவாளிகள்

மனித உரிமை ஆணையங்கள் ஓரளவுக்கு செயல்பட்டாலும், காவல் மீறல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. திருநெல்வேலி மாவட்டம் வீரசிகாமணி அரசு மேனிலைப் பள்ளியில், வடநத்தம்பட்டியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் முத்துக்கனி என்ற தலித் மாணவர், அவருடன் பயிலும் பால்ராஜ் என்ற மாணவரின் சட்டையில் ‘சீயான்' என்று எழுத, அவரும் இவருடைய சட்டையில் ‘விக்ரம்' என்று எழுத அதனால் ஏற்பட்ட சண்டையை பள்ளி நிர்வாகம் தீர்த்து எச்சரித்துள்ளது. ஆனால், அதே வகுப்பில் படிக்கும் பால்ராஜின் நண்பன் காவல் துறையினரிடம் இது குறித்து சொல்ல, செண்டமரம் காவல் நிலையத்தில் இருந்து இரு காவலர்கள் விசாரணைக்காக பள்ளிக்கு வந்தனர். இப்பிரச்சினை முடிந்து விட்டதாகப் பள்ளி நிர்வாகத்தினர் சொல்லியும் கேட்காமல், இவ்விரு மாணவர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில் இருந்த ஆய்வாளர் சார்லஸ் கலைமணி, முத்துக்கனி வடநத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவர் என்றவுடன், அங்கிருந்த கம்பால் கடுமையாக அடித்துள்ளார். பால்ராஜிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. இதை எல்லாம் அங்கு நின்று நேரில் பார்த்துக் கொண்டிருந்த ‘இந்தியாவில் துன்புறுத்தல்களைத் தடுக்கும் தேசிய திட்ட'த்தின் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி காவல் ஆய்வாளரிடம் கேட்டதற்கு, "நான் பள்ளி மாணவன் என்பதால் அடிக்கவே இல்லை; எச்சரித்து மட்டுமே அனுப்பினேன்'' என்று முழு பொய்யை சொல்லியிருக்கிறார்.

மாடசாமி தான் நேரில் பார்த்ததை ஒரு மனுவாக தயாரித்து, மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பினார். இது குறித்து விசாரிக்க திருநெல்வேலி எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ‘குற்றவாளி தண்டிக்கப்படும் வரை ஓயமாட்டேன்' என்று மாடசாமி கூறியிருக்கிறார் (‘இந்தியன் எஸ்க்பிரஸ்' 5.6.08). முத்துக்கனியின் கிராமத்துப் பேரைக் கேட்டவுடன் அந்த இன்ஸ்பெக்டர் அடித்திருக்கிறார். கீழ் சாதியினருக்கு சமூக அந்தஸ்து இல்லாததால்தான் அவர்கள் நொடி தோறும் தாக்குதலுக்கு ஆட்படுகின்றனர். சாதியை ஒழிக்காத வரை, எப்படி உயரும் நம் சமூக நிலை?

பொசுங்கட்டும் சனாதனம்

‘தழைக்கும் சனாதனம்' என்ற தலைப்பில் "இந்தியா டுடே' (சூன் 25, 08) புகைப்படக் கவிதைப் பக்கங்களை வெளியிட்டுள்ளது. லக்னோ குருகுலம் ஒன்றில் மறைந்து வரும் சனாதனக் கல்விக்குப் புத்துயிர் அளிப்பதாக அச்செய்தி கூறுகிறது. இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களும் பார்ப்பனர்கள்தான் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இங்குள்ள மாணவர்கள் ‘சனாதன தர்மத்தை' (வர்ணாசிரம - சாதி தர்மத்தை) என்றென்றும் பின்பற்றுவதாக உறுதி பூணுகின்றனர்.

முஸ்லிம்களின் மதரசா பள்ளிகள் தான் தீவிரவாதத்தைத் தோற்றுவிக்கின்றன என எந்த ஆதாரமுமின்றி கூறும் ஊடகங்கள், சாதி தர்மத்தை (சொந்த மதத்தினரிடையே தீவிர மோதலை வளர்த்தெடுப்பது) நிலைத்திருக்கச் செய்வதற்காக நடைபெறும் பயங்கரவாத முகாமை, புகைப்படக் கவிதையாக சித்தரிக்கிறது. இடஒதுக்கீடு சாதியத்தை நிலைபெறச் செய்யும் என்று அதற்கெதிராக வெகுண்டெழுந்து போராடுகின்றவர்கள் போராட வேண்டிய இடம் இந்து சனாதன குருகுலங்கள்தான். சனாதனம் நிலைத்திருக்கும் வரை, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடும் நிலைத்திருக்கும்.

இன்னொரு ‘தனம்'

ஒன்பது வயது சுடலி, நெல்லை மாவட்டம் மணப்படைவீடு என்ற ஊரில் உள்ள டி.டி.டி.ஏ. பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கும் தலித் சிறுமி. 30.1.07 அன்று, வகுப்பில் பாடத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்ததால், அவ்வகுப்பு ஆசிரியர் விஜயகுமாரி தனது கையில் இருந்த எவர்சில்வர் தம்ளரை சுடலி மீது வீசியிருக்கிறார். இதனால் அவருடைய இடது கண் அருகே ரத்தக் காயம் ஏற்பட்டது. சுடலியின் பெற்றோர், ஆசிரியரிடம் விசாரித்ததற்கு, ‘தெரியாமல் நடந்து விட்டது. எனது கணவர் சித்த மருத்துவர்தான்' என்று கூறி சுடலிக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

ஆனால், சுடலிக்கு நாளடைவில் பார்வை மங்கியது. இதையெடுத்து கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவரது இடது கண்ணின் நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதற்குப் பிறகு 23.6.08 அன்று சுடலியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளனர் (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' 25.6.08). ஆட்சியர் நடவடிக்கை எடுத்தாலும் சுடலியின் பார்வை மட்டும் திரும்பப் போவதில்லை.

‘இந்து பெருமை'க்கு கோவிந்தா!

தலித் மற்றும் பழங்குடியினரிடம் இந்து மதத்தின் பெருமையை எடுத்துச் சொல்லும் வகையில் ‘தலித் கோவிந்தம்' என்ற திட்டத்தின்படி, திருப்பதி வெங்கடாசலபதி சிலையை சேரிக்கு கொண்டு சென்று வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதிலும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவது குறித்து விசாரிக்க, ஆந்திர மாநில எஸ்.சி. / எஸ்.டி. ஆணையம் உண்மை அறியும் குழுவை நியமித்தது. வேமுறு என்ற சேரிக்கு ‘தலித் கோவிந்தத்தை' கொண்டு சென்ற அர்ச்சகர்கள், அதைத் திருப்பி எடுத்து வந்து தேவஸ்தானத்தின் கர்ப்பகிரகத்தில் வைக்காமல், அர்ச்சகர்களின் ஓய்வறையில் ஒளித்து வைத்துள்ளனர்.

தலித் பகுதிக்கு எடுத்துச் சென்ற சிலைகளை மட்டும் ஏன் கருவறைக்குள் வைக்கவில்லை என்று உண்மை அறியும் குழு, தலைமை அர்ச்சகரிடம் கேட்டதற்கு, "கருவறைக்குள் எத்தனை சிலைகளை வைக்க வேண்டும் என்பதற்கு ஆகம விதிகள் உள்ளன. அதனால்தான் அது தவிர்க்கப்பட்டதாக'' தெரிவித்திருக்கிறார் (‘தி இந்து' 18.6.08). எப்படி இருக்கிறது கதை?! இந்த தீண்டாமை சிறுமையைத்தான் இந்து மதத்தின் பெருமையாகப் பறை சாற்ற முயல்கிறார்கள். அம்பேத்கர் யுகத்திலும் தலித்துகள் அதை அனுமதிக்கலாமா?

பார்ப்பனப் புரட்சி

அண்மையில் நேபாளத்தில் நடைபெற்ற ஆட்சி மாற்றம் குறித்து, சனாதன இடதுசாரிகள் முதல் நக்சலைட் இடதுசாரிகள் வரை கொண்டாடித் தீர்த்தனர். ஆனால், ஆட்சி மாற்ற ‘புரட்சி'க்கு தலைமை வகித்த பிரசந்தா, ஒரு பார்ப்பனர் என்பதைப் பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை. ‘தி வீக்' இதழ் (சூன் 1, 2008) பிரசந்தாவின் பேட்டியை வெளியிட்டுள்ளது. அவரை பேட்டி கண்ட வெளிநாட்டு செய்தியாளர், ஆழமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார் : "பாரம்பரிய முறைப்படி நேபாளத்தின் தலைமைப் பதவியை ஒரு பார்ப்பனர் வகிப்பதற்குப் பதிலாக, தங்கள் கட்சியால் தேர்வு செய்யப்படும் ஒரு பார்ப்பனப் பிரதமர் (பிரசந்தா) இனி பதவியில் இருக்கப் போகிறார். இதில் நீங்கள் மிகச் சரியாக, எங்கு சமூக முன்னேற்றத்தைக் காண்கிறீர்கள்?'' இதற்கு பதிலளித்துள்ள பிரசந்தா, "பார்ப்பனப் பின்னணி இருப்பதால் யாரும் தேர்வு செய்யப்படுவதில்லை. மாறாக, மாற்றத்திற்குப் பங்களித்த தலைவர்கள் தான் தேர்வு செய்யப்படுகிறார்கள்'' என்கிறார்.

சனாதனிகள் தான் மாற்றத்திற்குப் பங்களித்தார்களாம். அதனால் பிரதமர் பதவி. ஆயுதமேந்திய பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு கடைநிலைப் பதவி! இந்தியாவிலும் அது தானே நடந்தது. வெள்ளையனுக்குப் பிறகு பார்ப்பனர்களிடம் தானே ஆட்சி அதிகாரம் வந்தது. நேபாளத்தில் பார்ப்பனிய அரசர் போய் அசல் பார்ப்பன அதிபர் வரப்போகிறார். இடதுசாரிகள் அகராதியில் இதற்குப் பெயர் ‘புரட்சி.' சாதி அமைப்பைத் தகர்க்காத எத்தகைய புரட்சி நடந்தாலும், அந்த அமைப்பின் வர்ணாசிரம முறை புரட்சிக்குப் பிறகும் அப்படியே எதிரொலிக்கும். ஏகாதிபத்திய எதிர்ப்பு, தீண்டாமை பற்றி மட்டும் பேசுகிறவர்கள், சாதி, இந்து மத ஒழிப்பை மட்டும் பேச மாட்டார்கள். தலித் தலைமையை முற்றாக மறுப்பவர்கள், பார்ப்பனத் தலைமையை மட்டும் முன்நிபந்தனையின்றி ஏற்றுக் கொள்வர். இடதுசாரிகள் சாதி ஒழிப்புக்கு முன்னுரிமை அளிக்காதது ஏன் என்பது இப்பொழுது புரிகிறதா?
Pin It