தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் நகைச்சுவைக் காட்சிகளை விஞ்சும் அளவில் தமிழக அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் உள்ளன.

 இன்னும் 15 நாட்களில் கூடங்குளம் மின்சாரம் கிடைத்துவிடும், இன்னும் 15 நாட்களில் தமிழக மீனவர் சிக்கல் முடிந்துவிடும், இன்னும் 15 நாட்களில் காவிரி சிக்கல் தீர்ந்துவிடும் என்று அறிவிக்கும் நடுவண் அமைச்சர் நாராயண சாமிக்கு 2012‡ஆம் ஆண்டின் சிறந்த குடுகுடுப் பைக்காரர் விருதை குமுதம் வார ஏடு வழங்கியிருப்பது மிகப் பொருத்தமானது.

அமைச்சர் நாராயணசாமி வாய்த்திறக்கும் போதெல்லாம், நாராயணா கொசுத் தொல்லைத் தாங்கலடா என்ற கவுண்டமணியின் புகழ்பெற்ற நகைச்சுவை மனத்திரையில் தோன்றுகிறது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இலட்சக் கணக்கான நடுத்தர வணிகர்கள் வாழ்வு பறிபோகும் – இது கலைஞரின் முதல் வாரத்து அறிக்கை.

நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன? பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டபோது கலைஞர் சொன்ன பதில் சஸ்பென்ஸ் – இது அடுத்த வாரம்.

காங்கிரஸ் அரசின் முடிவை ஏன் ஆதரிக்கிறோம் என்றால், அடுத்து மதவாத பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். வாஜ்பாய் அரசில் பங்கெடுத்து அமைச்சர் பதவிகள் அனுபவித்த கலைஞர் வாக்குமூலங்கள். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற சூரியன் திரைப்பட கவுண்டமணியின் நகைச்சுவையை விஞ்சக்கூடியது.

பாலியல் வழக்கில் ஆண்மை பறிப்பு ‡ ஜெ.வின் அறிக்கையைப் படித்த எனது தி.மு.க. நண்பர் வந்ததடி வெள்ளையம்மா உன் காளைக்கு ஆபத்து’ என்றார். என்ன என்றேன். தலைவர் (கலைஞர்) பேரனுக்கோ, கொள்ளுப் பேரனுக்கோ ஆண்மை பறிபோகப் போகுது என்று கவலைப்பட்டார். ஏனென்றால் பொய் வழக்குப் போடுவது நமது காவல்துறைக்கு கைவந்த கலையாயிற்றே. அதுவும் செயலலிதாவுக்கு பிடிக்கும் என்றால் கேட்கவே வேண்டியதில்லை என்றார்.

அதான் தலைவர் வாழ்நாள் சிறை என்பதற்கு இவ்வளவு அழுத்தம் கொடுக்குறாரா? என்றேன். நண்பர் முறைத்துப் பார்த்தார்.

சர்வகட்சி கூட்டத்தை ஏன் செயலலிதா கூட்டலைத் தெரியுமா? சர்வகட்சி கூட்டத்தில் கேப்டன் சொல்ற கருத்தை செயல்படுத்தினால், காவிரிப் பிரச்சினை தீர்ந்திடும். கேப்டனுக்கு நல்லபெயர் வந்திடும்கிற பயத்திலதான் சர்வ கட்சிக் கூட்டத்தை கூட்டலை – இது தே.மு.தி.க. கலை இலக்கியப் பிரிவு துணைச்செயலாளர் இராசேந்திரன் என்பவர் கடந்த 12.01.2013 அன்று தஞ்சையில் நடைபெற்ற தே.மு. தி.க. கூட்டத்தில் பேசிய பேச்சின் ஒரு பகுதி இது.

8 இலட்சம் ஏக்கர் குருவை சாகுபடி இல்லை. 12 இலட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகிக் கொண்டிருக்கிறது. 10 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு தைத்திருநாளை தே.மு.தி.க.வும் கருப்பு பொங்கல் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில்கூட உழவர் துயர்துடைக்க கேப்டன் கருத்து சொல்லமாட்டாராம். அரியணை கிடைத்தால்தான் அறிவிப்பு வருமாம். இவரைத் தான் வள்ளலாரே என்று விளித்து சுவரொட்டி ஒட்டினார்கள். என் புருஷ¬ன் குழந்தை மாதிரி படத்தில் அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் முருகேசன் வாழ்க என்று வடிவேலு அழைத்து வரும் தொண்டன் கூவும்போது என்னமா கூவுரான் பாரு என்பார் லிவிங்ஸ்டன். அதற்கு வடிவேலு வாங்குன காசுக்கு மேல கூவுரான் கொய்யால என்பார். காசாடா முக்கியம் கூவல்தான்டா முக்கியம், நீ கூவல் திலகம்டா என்று லிவிங்ஸ்டன் அந்த தொண்டனை பாராட்டுவார்.

தஞ்சை கூட்டத்தில் விஜயகாந்த் பேசும்போது குடிக்கிறது ஒன்னும் தப்பில்ல என்றவர் கூட்டத்தைப் பார்த்து என்ன எல்லோரும் தலைய சொறியிரிங்க, மணி ஒன்பதுதான் ஆகுது, பத்துமணிக்குத்தான் கடையை மூடுவாங்க, நான் ஒன்பதரை மணிக்கெல்லாம் பேச்சை முடிச்சுடுவேன் என்றவர் சொன்ன படியே ஒன்பதரை மணிக்கு பேச்சை முடித்தார். தொண்டர்களும் தலைவர் சொன்னதை செய்தார்கள்.

டான் நீ டான்ரா என்று விவேக் சொல்வதுபோல் தலைவர்னா, இவந்தான் தலைவர். தண்ணியில் இருக்கும் தலைவர்.

அண்மையில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மாநாடு சென்னையில் நடந்த போது தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தமிழக முதல்வர் செயலலிதாவால் பாராட்டப்பட்டார்கள். ஏனெனில், இந்த மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்ற உழவர்களின் தற்கொலைச் சாவை மறைத்ததற்குத்தான் பாராட்டு. அதிகாரிகள் அமைச்சர்களை மிஞ்சி விட்டார்கள்.

காவிரி சிக்கல் தொடர்பாக தமிழக முதல்வர், கர்நாடக முதல்வர் செகதீசு செட்டரை சந்தித்தார். ஒரு சொட்டுத் தண்ணீர்கூட தரமுடியாது என்றார் செட்டர். அம்மாவின் இரத்தத்தின் இரத்தங்கள் கொதிக்கவில்லை. குமுறிஎழவில்லை. காவிரி உரிமை மீட்புக் குழு பல்வேறு உழவர் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து கர்நாடக முதல்வரின் கொடும்பாவியை கொளுத்தினர்.

இரண்டு நாட்கள் கழித்து உச்சநீதி மன்றம் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி விடச்சொல்லி உத்தரவிட்டது. உடனே காவிரி டெல்டா பகுதிகளில் இரத்தத்தின் இரத்தங்கள் அம்மாவின் வெற்றியயன மகிழ்ந்து லட்டு வழங்கினர் (அல்வா கிண்ட நேரம் இல்லை போலும்).

தில்லி தேசிய கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் செயலலிதா பேசும்போது, இந்திய பிரதமர் மன்மோகன்சிங் நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் புத்திசாலிகள் ‡ ஆனால் வாய்தான் கொஞ்சம் ஜாஸ்தி என்று நினைத் திருப்பார்.

தில்லியில் அம்மாவுக்கு அவமதிப்பு என்று அ.தி.மு. க.வினர் சுவரொட்டி ஒட்டினர். மன்மோகன் சிங்கை கண்டித்தனர்.

இவ்வளவு கலவரம் நடக்கும்போது எவன்டா அவன் மிக்சர் சாப்பிடுறது என்று நாட்டாமை திரைப்படத்தில் கவுண்டமணி ஒரு பெண்ணிடம் எகிரும்போது அந்தப்பெண் சொல்வாள், “இன்சியல் பிரச்சினை என் பிள்ளைகளுக்கு வந்திடக்கூடாதுங்கிறதுக்காக புரு¬னை வச்சிருக்கேன்”.

ஓட்டும் போடாம, மக்களிடம் ஓட்டும் வாங்காம பிரதமரா இருக்கிறாரே ஆல் இன் ஆல் அழகுராஜா மன்மோகன் சிங்காகத்தான் இருக்க முடியும். மிக்சர் சாப்பிடும் நபருக்கும், மன்மோகன் சிங்குக்கும் பெரிய வேறுபாடில்லை.

கலகலப்பு திரைப்படத்தில் நாயகர்கள் விமல், சிவா இரு வரும் வில்லன்களுடன் சண்டையிடும்போது சந்தானத்திடம் லட்சுமணன் சொல்வார், எவனாவது அல்லக்கை மாட்டுவான் அவன அடிப்போம்’ என்பார்.

செகதீசு செட்டரை கண்டிக்காத இரத்தத்தின் இரத்தங்கள் மன்மோகனை அல்லக்கை என நினைத்தார்களா?

குருவை சாகுபடி இல்லை, சம்பா பயிர் கருகிக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் நீதி வழங்காமல் ஒதுங்கி கொண்டு விட்டது. காவிரி ஆணையம், கண்காணிப்புக்குழு கண்துடைப்பு நாடகங்களை நடத்தி முடித்து தமிழர்களை வங்சித்து விட்டது.

10 உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த சூழலில் 26.12.2012, 27.12.2012, 06.01.2013 தஞ்சைப் பகுதிகளில் விவசாய சங்கங்கள் உழவர் இயக்கங்கள் பெயரில் அ.தி.மு. க.வினர் செய்துள்ள விளம்பரத்தை பாருங்கள்.

உடல் வருத்தி உண்ணாநிலை மேற்கொண்டு

அன்று நடுவர் மன்ற தீர்ப்பினை நமக்குரியதாக்கி

இன்று இறுதி தீர்ப்பினை மத்திய அரசிதழில் ஏற்றிட

சட்டப்போர் நிகழ்த்திடும் சங்கநாதமே!

பயிர் காத்து படுகை விவசாயிகளின் உயிர் காத்து

தலைக்காவிரியினை

தமிழகம் மீட்டுவரும்

காவிரித் தாயே !

நடுவர் மன்றத் தீர்ப்புக்கா அன்று தம்மை

மெய்வருத்தி சத்தியாக்கிரகம் நடத்தியும்

இன்று நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் ஏற்றிட சட்டப்போர் நடத்தியும் பொன்னி நதி காத்திட்ட எங்கள் புண்ணியவதியே !

கர்நாடக அரசை மிரட்டி பணியவைக்க முடியவில்லை. இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து தமிழக உரிமைகள் மீட்க உருப்படியான நடவடிக்கைகள் ஏதுமில்லாத நிலையில் இந்த விளம்பரங்களைப் பார்க்கும்போது வரலாறு மிக முக்கியம் அமைச்சரே என்று இம்சை அரசன் 23‡ம் புலிகேசி சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது.

இதுபோன்ற விளம்பரங்களை செயலலிதா பார்த்தால் என்ன நினைப்பார்?

வின்னர் படத்தில் கைப்புள்ள வடிவேலு வில்லன்களிடம் அடிபட்டு பாளத்தில் உட்கார்ந்திருப்பார். இரண்டுபேர் பேசிக் கொண்டே செல்வார்கள், அடி கொடுத்த கைப்புள்ளைக்கே நிலைமை இப்படின்னா, அடி வாங்கினவன் உயிரோடு இருப்பான்னு நினைக்கிற.

“ஏன்டி சசி இன்னுமா இவங்க நம்மள நம்புறாங்க

அது அவங்க தலையயழுத் துக்கா”’

இன்னொருவர் வேதனை

இவர்களுக்கு வேடிக்கை

இதயமற்ற மனிதர்களுக்கு

இதுவெல்லாம் வாடிக்கை ‡ என்ற எம்.ஜி.ஆர். பாடல் நம் காதில் ஒலிக்கிறது.

திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர்களின் நடிப்பு பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சித் தருகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. கவலையை மறக்கச் செய்கிறது. சிரிப்பு நோயைக் கூட குணப்படுத்துகிறது.

நடிகர்கள் அரசியல்வாதியாக நடிக்கலாம். ஆனால் அரசியல் வாதிகள் நடிகர்களாக மாறக் கூடாது. மாறும்போது மக்களின் கவலையும், வேதனையும் அதிக மாகிறது.

Pin It