“தூக்குத் தண்டனை பற்றிய செய்தியை மக்களுக்குத் தெரிவித்தால் நாட்டை நடத்திச் செல்ல முடியாது” – அப்சல் குரு தூக்குத் தண்டனை தொடர்பாக இந்தியாவின் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே 11.02.2013 அன்று செய்தியாளர்களிடம் கூறிய இச்செய்தி, இந்திய ஆட்சிமுறை பற்றிய சில அடிப்படை உண்மைகளை விளக்குவதாக உள்ளது.

விரைவு அஞ்சலில் அப்சல் குரு குடும்பத்திற்கு தூக்கிலிடும் தகவல் அடங்கிய கடிதத்தை முதல் நாள் அனுப்பிவிட்டு, அக்கடிதம் போய் சேர்ந்திருக்காது என்பது தெளிவாகத் தெரிந்த பின்னும் அவசர அவசரமாக 09.02.2013 அன்று திஹார் சிறையில், கமுக்கமாக தூக்கிலிட்டுவிட்டு அதற்கான ஞாயத்தைத் தான் இவ்வாறு ஷிண்டே கூறினார். இராசீவ் – பியாந்த் சிங் கொலை வழக்குகளில் கருணை மனு நிராகரித்துத் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டப் பிறகு, தொடர்புடையவர்கள் நீதிமன்றம் சென்று சாவுத்தண்டனைக்குத் தடையாணை பெற்றதைத் தான் தங்கள் அவசரத்திற்கான காரணம் என்று ஷிண்டே வெளிப்படையாகவே அறிவித்தார்.

அரசமைப்புச் சட்டம் வழங்குகிற உயிர் வாழும் உரிமையை தற்காத்துக் கொள்ள சட்டவழியை நாடுவதற்கு, அவகாசம் கொடுத்தால் நாடு கெட்டுவிடும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அலறுகிறார். அதாவது, சிலரைப் பொறுத்தவரை சட்டத்தின் ஆட்சியை அபாயகரமானது என அவர் சொல்ல வருகிறார். இந்த “சிலர்’ யார் என்பது கருதத்தக்கது.

அப்சல் குரு என்ற அப்பாவி கமுக்கமாக தூக்கிலிடப்பட்டதை முதன்மையானக் கட்சிகள் பெரும்பாலும் குதூகலத்தோடு ஆதரிக்கவே செய்தன. பாரதிய சனதாவும், ஆர்.எஸ்.எஸ். கூட்டமும் இனிப்புக் கொடுத்து வரவேற்றன. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.பி.பரதன் ஆகியோர் இத்தூக்குத் தண்டனையின் மூலம் சட்டம் தனது கடமையை செவ்வனே செய்துவிட்டதாக சான்றளித்தனர்.

கையொலி எழுப்பி இந்தக் கொலைத் தண்டனையை முலாயம் சிங், மாயாவதி, நிதிஷ்குமாரும் இன்னும் பலரும் வரவேற்றார்கள். இவர்கள் அனைவரும் இவ்வாறு ஒத்தக் கருத்தில் இருப்பது, எதிர்பாராத ஒன்றல்ல. ஆனால், மனித உரிமையில் அக்கறையுள்ளோர் இதில் வெளிப்படும் அடிப்படை அரசியல் என்ன என்பதைத் தெளிந்து கொள்வது தான் முகாமையானது.

இந்தியா ஓர் ஆரிய – பார்ப்பனியக் கட்டமைப்பு, அதாவது இந்துத்துவ கட்டமைப்பு என்பது தான் இதில் பெற வேண்டிய முதன்மையான படிப்பினை. இந்த ஆரிய-இந்திய அரசியலில், பா.ச.க. என்ற தீவிர இந்துத்துவ கட்சியோடு, மிதவாத காங்கிரசும், ஆரியப் பார்ப்பனியத்தின் இடதுசாரிப் பிரிவும் உண்டு. ஆரியத்தின் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அரசியல் பிரிவும் உண்டு. அனைவரும் ஆரிய மேலாண்மை என்ற அரசியலில் ஒரே கோட்டில் வெவ்வேறு புள்ளியில் நிற்கிறார்கள்.

இந்த ஆரிய இந்தியக் கட்டமைப்பில், ஆரியத்தோடு முரண்படுகிற தேசிய இனங்கள், மதச் சமூகங்கள், மண்ணின் மக்கள் ஆகியோருக்காக போராடுபவர்களுக்கு சட்டப்படியான மனித உரிமைகள்கூட, மிகவும் வரம்புக்குட்பட்டே வழங்கப்படும்.

முதன்மை ஊடகங்களும், முதன்மைக் கட்சிகளைப் போலவே ஆரிய மேலாண்மையை மக்கள் ஏற்கச் செய்வதில் பங்காற்றுகின்றன. பருக் அப்துல்லா போன்ற கங்காணித் தலைவர்கள் போராடுகிற இன மக்களை, ஆரிய மேலாண்மையிடம் சரணடையச் செய்வதில் தங்களுக்குரியப் பாத்திரத்தை வகிக்கிறார்கள்.

இந்திய ஆட்சி ஆரிய வளையத்தில் இல்லாத, எல்லா சிறுபான்மையினருக்கும் எதிரான ஆதிக்கக் கட்டமைப்புதான். இதில், கட்சி வேறுபாடு என்பதற்கு இடமில்லை. ஈழத்தமிழர் இனப்படுகொலை நடந்த போதும், மூன்று தமிழர் மரணதண்டனைக்கு எதிராக தமிழ்நாடு கொந்தளித்த போதும், வடநாட்டு ஊடகங்களும், கட்சிகளும் இது போன்றே நடந்து கொண்டன.

காசுமீரிகள், நாகாக்கள், மணிப்பூரிகள், தமிழர்கள் போன்ற ஆரிய வளைத்திற்கு வெளியில் இருக்கிற தேசிய இன மக்கள், இவர்களால் வெறுப்போடும், ஐயத்தோடுமே பார்க்கப்படுகிறார்கள்.

இந்தியா முழுவதும் இசுலாமியர்கள், அவர்களின் அடையாளங்கள் ஆகிய அனைத்துமே அயன்மையானதாக, தீவிரவாதத்தோடும், பயங்கரவாதத்தோடும் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது.

இதை எதிர்கொள்ளும், இசுலாமியர்கள் அனைத்திந்தியத் தளத்திலோ உலகளாவிய மத அடையாள ஒருங்கிணைப்பின் மூலமோ, தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால், இந்திய ஆட்சியாளர்கள், ஆரியச் சிந்தனையாளர்கள் ஆகியோர் இசுலாமியர்கள் தங்களை வெறும் மத அடையாளத்தோடு இணைத்துக் கொள்வதைத்தான் தங்களது ஆரிய மேலாண்மை அரசியலுக்கு வாய்ப்பான ஒன்றாகக் கருதுகிறார்கள். “நமக்கு எதிரிகள் இசுலாமியர்கள்” என்று பெருந்திரள் மக்களை தங்களுடன் அணிசேர்த்துக் கொள்வதற்கு அதுவே அவர்களுக்கு வலுவான வாய்ப்பையும் வழங்குகின்றது.

காசுமீர் சிக்கலில், இது மிகத் தெளிவாக வெளிப்படும். காசுமீரிகள் தங்களது தேசிய இனத் தாயகத்திற்கும் அரசுரிமைக்கும் போராடுகிறார்கள். ஆனால், அதை இசுலாமியத் தீவிரவாதம் என சித்தரிப்பதில் தான், இந்திய ஆட்சியாளர்களின் சூழ்ச்சி அடங்கியிருக்கிறது.

தாங்கள் வாழும் தேசிய இனத் தாயகத்தோடு, தேசிய இன மக்களோடு, இசுலாமியர்கள் ஒருங்கிணைந்தால் தான், ஆரிய இந்தியத்தின் இந்த சூழ்ச்சி அரசியலை இசுலாமியர்கள் எதிர் கொள்ள முடியும்.

இந்திய வல்லாட்சிக்கு எதிரான மாற்று அரசு உருவாக்கும் அரசியல் தான் இசுலாமியர்களுக்கும், ஒடுக்கப்பட்ட இன மக்களுக்கும் உள்ள மாற்று அரசியலாகும். இன்னொரு அனைத்திந்திய அரசியல் என்பது புறக்கணிக்கப்பட்ட மத மக்களுக்கோ, தேசிய இன மக்களுக்கோ பயன் தரவே தராது.

ஏனெனில், மதசார்பற்ற இந்தியா என்பது மாய்மாலம். அதுதான் அப்சல் குரு சிக்கலிலும் மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது. இடதுசாரிகளும் வலதுசாரிகளும், சமூக நீதி என்று பேசுவோரும் ஒரே கோட்டில் நிற்கிற இந்தியத் தேசிய அரசியல் இந்த உண்மையைத் தெளிவாக்கும்.

ஆரிய இந்தியம் என்பது உரிமைக்குப் போராடும் மத, இன சமூகங்கள் மீது சட்டத்தின் ஆட்சியைக்கூட அனுமதிக்காது. ஆரிய இந்தியத்திற்குள் ஒடுக்குண்ட தேசிய இனங்கள், தத்தமது தேசிய இன ஒற்றுமையை மதம் கடந்து நிலைநாட்டிக் கொண்டு தத்தமது இறையாண்மையை மீட்க போராடுவதுதான், அம்மக்களுக்கு முன் உள்ள ஒரே வழி. அப்சல் குரு சிக்கல் தரும் படிப்பினையும் அது தான்.

Pin It