வடநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக எனக்கூறிக் கொண்டு, மதுரை மாநகராட்சி சார்பில், இந்தி – ஆங்கிலம் – தமிழ் ஆகிய மும்மொழிகளிலும், மதுரையின் முதன்மை வீதிகளில் பெயர்ப் பலகைகள் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் திரு. ஆர்.நந்தகோபால் அவர்கள் 20.01.2013 அன்று கூறியதாக மதுரைப் பதிப்பு தினமணி நாளேட்டில் 21.03.2013 இல் செய்தி வெளியானது.

இந்தி மொழியைத் திணிக்கும் வேலையைத் தொடர்ச்சியாக இந்திய அரசு முன்னின்று மேற்கொண்டு வரும் இவ்வேளையில், மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட மாநகராட்சி ஒன்றே, அதுவும், சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் எடுத்த முடிவு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரைத் தொடர்வண்டி நிலையம் அருகிலும், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகிலும் 2 மும்மொழிப் பெயர் பலகைகள் முதற் கட்டமாக வைக்கப்பட்டன. மார்வாடி ஒருவருக்கு சொந்த மான கீர்த்திலால் ஜூவல்லரி என்ற தனியார் நிறுவனம், மதுரை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை ஆகியவை இணைந்து மாநகரெங்கும் பல இடங்களில் மும்மொழிப் பெயர்ப் பல கைகளை வைத்திருந்தன.

இதனைத் தொடர்ந்து, மாநகராட்சியின் இம்முடிவைக் கண்டித்து, இந்தித் திணிப்பை எதிர்த்து உயிரீகம் செய்த ஈகியரின் நினைவு நாளான, 25.01.2013 – மொழிப் போர் நாளன்று, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, மதுரையில் தமிழ் உணர்வாளர்களையும், தமிழ் அமைப்புகளையும் ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி, மாநகராட்சியின் இவ்வறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரியது.

மேலும் இது குறித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் அவர்கள் எழுதிய கடிதம் மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோரது முகநூல் முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.http://www.facebook.com/corporationmadurai/posts/401519386598553? comment_id=2532698&ref=notif¬if_t=feed_comment).

நமது கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் விதமாக, அக்கடிதத்திற்கு ஆதரவு தெரிவித்து விருப்பங்களும், கருத்துகளும் அதில் பதியப் பட்டன. தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப் பாளர் திரு. ராஜ்குமார் பழனிச்சாமி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கா.திருமுருகன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் உள்ளிட்ட தமிழின ஆதரவு அமைப்புத் தலைவர்களும், உணர்வாளர்களும் நமது கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக கருத்துகளை அப்பக் கத்தில் தெரிவித்தனர்.

இந்நிலையில், முகநூல் வழியாக முதலில் விடையளித்த, மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. அன்சுல் மிஸ்ரா, சுற்று லாப் பயணிகளின் வசதிக்காகத் தான் அத்திட்டம் செயல்படுத் தப்படுவதாகவும் அதில் வேறு உள்நோக்கம் ஏதுமில்லை என்றும் சொன்னார். அவருக் குத் திரும்ப, பதில் அளித்த தோழர்கள், வடநாட்டில் உள்ள காசி, மதுரா, தில்லி, மும்பை போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் நாள்தோறும் செல் கின்ற போதும்கூட, அங்கெல்லாம் ஏன் தமிழில் பெயர்ப் பலகைகள் அங்குள்ள மாநகராட்சிகள் வைப்பதில்லை என எதிர்க்கேள்வி எழுப்பினர்.

அதற்கு மீண்டும் விடைய ளித்த ஆட்சியர் திரு. மிஸ்ரா, நம்மைப் போல அவர்களுக்குப் பரந்த மனது இல்லை என்று பொருள்படும்படி பதில் எழுதி னார். பின்னர், ஒரு தோழர், ஏன் உங்களது தாய் மொழியான இந்தி மொழியை எம்மண்ணில் திணிக்க விரும்புகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதன் பின் என்ன நடந்ததோ தெரிய வில்லை, அன்று(4.02.2013) மாலையே, இந்தி பெயர்ப் பலகை முடிவைக் கைவிடுவ தாகவும், தனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொள்வ தாகவும் முகநூல் வழியே ஆட்சியர் மிஸ்ரா அறிவித்தார்.

இந்திப் பெயர்ப் பலகைகள் வைக்கும் முடிவைதான் அறிவிக்கவே இல்லை என, தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப்பாளர் திரு. ராஜ்குமார் அவர்களிடம் கைபேசியில் தெரிவித்த, மாநகராட்சி ஆணையர் திரு. ஆர்.நந்தகோபால், ஒருபடி மேலேபோய் இந்தி எழுத்துகளை தமக்குத் தெரியாமல் காண்ட்டிராக்டர் பொறித்து விட்டதாகவும், இனி அப்படி நடக்காதெனவும், மும்மொழிகளில் தனியார் யாராவது பெயர்ப் பலகை வைத்தால் அவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார்.

இவ்வறிவிப்பைத் தொடர்ந்து, மும்மொழிப் பெயர்ப் பலகைகள் பல இடங்களில் அகற்றப்பட்டன. சில இடங்களில் அகற்றப் படாமல் இருக்கின்றன. அதனையும், மாநகராட்சியின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். அவை அகற்றப்படும் என நம்புகிறோம்.

மாநகராட்சியின் இந்திப் பெயர்ப் பலகை அகற்றும் முடிவுக்கு நன்றி தெரிவித்தும், வர வேற்றும் முகநூலில் தமிழர்கள் கருத்துப் பதிந்து கொண்டிருந்த வேளையில்,தமிழகத்தில் வசித்து வரும் வடநாட்டவர் உள்ளிட்ட அயல் இனத்தாரும், அவர்களது ஆதிக்கத்தின்கீழ் அடிமைப்பட்டே பழக்கப் பட்டுப் போன இந்தியத் தேசிய வெறித் தமிழர்களும், இந்திப் பெயர்ப் பலகைகளை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டுமென எழுதினர்.

‘தமிழகத்தில் பெருமளவில் குடியேறிக் குவிந்து வரும் வெளியாரால், இங்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் உழைக்கவே வருகிறார்கள்’ என்றெல்லாம் கூறிவரும் சிலர், வெளியாரின் மிகை நுழைவால் தமிழ் நாட்டின் அடையாளங்களிலும், பண்பாட்டுத் தளங்களிலும் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களுக்குக் கள்ளமவுனத்தையே பதிலாகத்தருகின்றனர். ஹோலி, ஓணம் பண்டிகைகளும், தமிழகம் முழுவதும் அறிமுகமாகி வரும் செண்டைமேளம் இசை நிகழ்வுகளும் இதனை அறிவிக்கின்றன. வெளியார் மிகை நுழைவு என்பது இனத்தின் தாயகத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கை என்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் வரையறுப்பு மிகச் சரியானது என்பதையே நடைமுறை நிகழ்வுகள் காட்டுகின்றன.

மதுரை மாவட்டத்தின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தியவரும், கிரானைட் கொள்ளையை அம்பலப்படுத்தியவருமான, தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. சகாயம் மாவட்ட ஆட்சியராக இருந்த போது வராத இந்திப் பெயர்ப் பலகைகள், வடநாட்டைச் சேர்ந்த திரு. மிஸ்ரா அவர்கள், ஆட்சியராகப் பொறுப்பேற்றபின், ‘சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக’ என்ற பெயரில் அமைக்கப்படுவது, வெறும் தற்செயலான நிகழ்வுதானா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தொடர்ந்து தமிழகத்திலேயே வசிக்கும் அயல் இனத்தார், நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் இந்திப் பெயர் பலகையை மாட்டுங்கள் எனக்கூறும் நிலை வந்தாலும் கூட, ‘மனித உரிமை’ பெயராலே, அயல் இனத்தார் வருகையை ஊக்குவித்து, தமிழ் நாட்டுத் தாயகத்தை சிதைக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு உறுதுணையாக உள்ளவர்கள் திருந்துவார்களா என்பது ஐயமே.

இந்தி மொழித் திணிப்பை வெளிப்படையாக ஆதரிக்க முடியாத, இந்தியத் தேசியவாத நாளேடுகளான ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ மற்றும் ‘தினமணி’ நாளேடுகள், இந்திப் பெயர்ப் பலகை அகற்றப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் கடுமை யாக துன்பப்படுவர் எனவும், இதனால் மதுரையின் வரு மானமே பாதிப்பிற்குள்ளாகும் எனவும் செய்தி வெளியிட்டன.

நமது கோரிக்கையை ஏற்று, வெறும் 2 மும்மொழிப் பலகை களை மாநகராட்சி அகற்றி யுள்ள நிலையில், அதனாலேயே மதுரையின் சுற்றுலா முடங்கிப் போகும் என இவர்கள் ஒப்பாரி வைப்பதைப் பார்த்தால் மிகவும் வேடிக்கையாகவே உள்ளது. வடநாட்டில் உள்ள காசி, மதுரா, அமர்நாத், ஹரித்துவார், அகமதாபாத், தில்லி, மும்பை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்க ளுக்குத் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் நாள்தோறும் சுற்றுலா செல் கின்றனரே, அங்கெல்லாம் தமிழில் பெயர்ப் பலகை ஏன் இல்லை என இவர்கள் எப் பொழுதாவது கேள்வி எழுப்பி யிருக்கின்றனரா? இதன் கார ணமாக, வடநாட்டு சுற்றுலாத் தலங்களுக்கு, தமிழர்கள் செல் வதில்லை என கேள்விப் பட்டுள்ளனரா?

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இந்திப் பெயர்ப் பலகை இல்லையென்றால் வடநாட்டுப் பயணிகள் வரமாட்டார்கள் என்பது, ஒருபக்கச் சார்பான பார்வையில்லையா? தமிழர்கள் வருகிறார்கள் என்பதற்காக கோயில்கள் உள்ளிட்ட சுற்ற லாத் தளங்களில், தம் நிர்வா கத்திற்கு உட்பட்ட எல்லையில், சில இடங்களில் தமிழ் மொழி யில் தகவல்கள் எழுதிவைக் கப்பட்டதுண்டு. அது தவறும் இல்லை. ஆனால், வடநாட்டில் செயல்படுகின்ற மாநகராட் சிகள், நகராட்சிகள், தமிழ்ப் பெயர்ப் பலகைகளை அங் குள்ள சுற்றுலாத் தலங்களின் வீதிகளுக்கு வைக்க வேண்டும் என நினைத் திருப்பார்களா? இதையெல்லாம் இவர்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை?

வடநாட்டில் உள்ளவர்களிடம், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழம்பெருமை பெற்ற தமிழ் மொழியை மதித்து நடந்து கொள்ளுங்கள் எனச் சொல்ல துப்பில்லாத இவர்கள், தமிழகத்தில் மட்டும், ‘சுற்றுலாப் பயணிகளின் வசதிக் காக’ என்ற பெயரில் இந்தி மொழித் திணிப்பு நடைபெறு வதற்கு வக்காலத்து வாங்குகி றார்கள் என்றால், உண்மையில் உங்களை இயக்குவது இந்தியத் தேசிய வெறியே அன்றி வேறென்ன?

டைம்ஸ் ஆப் இந்தியா தனது ஒப்பாரிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், த.மு.எ. க.ச. முன்னணித் தலைவர் தோழர் அருணன் அவர் களையும் இணைத்துக் கொண்டதுதான் வேடிக்கையான சிறப்பு.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் இது குறித்து கருத்துத் தெரிவித்திருந்த தோழர் அருணன், நடுவண் அரசின் மற்ற செயல்களுக்கு எதிராகத் தம் கோபத்தைக் காட்டியிருக்க வேண்டிய தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சியினர், பெயர்ப் பலகைகளுக்காகவா போராடு வது எனக் கேள்வி எழுப்பு கிறார்.

முதலில், ஒன்றைத் தெளிவு படுத்த வேண்டும்; நடுவண் அரசு இந்தித் திணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற போதிலும், மதுரையில் வைக்கப் பட்ட இந்திப் பெயர்ப் பலகை களை வைப்பது நடுவண் அர சல்ல, மாநில அரசின் அதி காரத்திற்குட்பட்ட மாநக ராட்சிதான் மும்மொழிப் பலகை வைப்பதற்கான அறி விப்பை வெளியிட்டது. எனவே தான், த.தே.பொ.க., மாநக ராட்சி ஆணையரிடமும், ஆட் சியரிடமும் முறையிட்டது. ஆனால், தோழர் அருணன், இதற்காக நடுவண் அரசை எதிர்க்கச் சொல்வது வேடிக் கையாக உள்ளது.

மேலும் அவர், நடுவண் அரசின் பிறசெயல்களுக்கு எதிராகத் த.தே.பொ.க. கோபம் காட்டட்டும் என்கிறாரே, அப்படி என்ன சிக்கலில், தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி, நடுவண் அரசை எதிர்த்துப் போராடவில்லை என சொல்லத் தயாரா?

இலட்சக்கணக்கானத் தமிழ் மக்களை இரத்த வெள்ளத்தில் கொன்றொழித்த சிங்கள இன வெறியன் இராசபக்சேவுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்ற இந்திய அரசைக் கண்டித்து இந்திய- சிங்களக் கொடிகள் எரிப்பு, இந்திய அரசின் வருமான வரித் துறை அலுவலகம் முற்றுகை, தஞ்சை விமானப் படைத் தளம் முற்றுகை எனப் போராட்டங் களில் ஈடுபட்டது த.தே. பொ.க. முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் கேரள சி.பி.எம். கட்சித் தலைவர் அச்சுதானந் தன் மலையாள இனவெறியோடு மறுத்த போதும், காவிரி – பாலாறு எனத் தமிழக உரிமை கள் அண்டை மாநிலங்களா லும், இந்திய அரசாலும் பறிக் கப் படுகின்ற போதும், அம் மாநில முதலமைச்சர்களின் உருவபொம்மைகளை எரித தும், உழவர்களைத் திரட்டியும் போராட்டம் அமைத்துக் களம் கண்டவர்கள் த.தே.பொ.க. வினர்.

தேசிய இனங்களை சிதைத்து அழிக்கும் உலகமயப் பொரு ளியல் கொள்கைக்கு எதிராக வும், சிறு வணிகர்களை தற்கொ லைப் பாதைக்கு இட்டுச் செல் லும் அன்னிய முதலீட்டுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு கேடு விளைவிக்கும் கூடங் குளம் அணுமின் நிலையத் திற்கு எதிராவும் த.தே. பொ.க. போராடி வருவதை தோழர் அருணன் என்ன வென்று கருதுகிறார்? நெய்வேலியிலிருந்து, கர்நாடக அரசிற்கு மின்சாரம் வழங்காதே, காவிரிப் படுகையான நரிமணத்திலி ருந்து பெட்ரோல் வளத்தை திருடாதே என தொடர்ச்சியாக த.தே.பொ.க. இந்திய அரசுக்கு எதிராக நடத்துகின்ற போராட்டங்களையாவது தோழர் அருணன் அறிவாரா?

இவை ஒருபுறமிருக்கட்டும். இப்படி, த.தே.பொ.க.விட மிருந்து வெளிப்பட்ட கோபத்தில் ஒரு பங்காவது, நடுவண் அரசுக்கு எதிரான போராட்டங்களின் வழி, தோழர் அருணன் சார்ந்துள்ள சி.பி.எம். கட்சியிலிருந்து ஒரு முறையா வது வெளிப்பட்டிருக்கிறதா?

இலங்கை இனச்சிக்கலில், தமிழீழம் கூடாது என்ற இந்திய அரசின் நிலைப்பாட்டை அப் படியே ஏற்றுக் கொண்டுள்ளது சி.பி.எம். கட்சி. முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில், கேரள அச்சுதானந்தன் மலை யாள இன வெறியுடன் அணையை உடைப்போம் எனத் தொடர்ச்சியாக சொல் கின்ற போதும்கூட, உங்களது ‘வர்க்க ஒற்றுமை’ வாதத்திற்கு, நேர் எதிராக நிற்கும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சி.பி.எம். கட்சிக்கு, நடுவண் அரசின் மீது கோபத் தைக் காட்டுங்கள் என, த.தே. பொ.க.வை சொல்ல, என்ன யோக்கியதை உண்டு?

தமிழ்நாட்டின் உரிமைப் பறிப்புகளுக்கு எதிராக களம் காணும், தமிழ்த் தேசப் பொதுவு டைமைக் கட்சி தான், இந்திப் பெயர்ப் பலகைகளை தமிழ் நாட்டின் முக்கிய நகரமான மதுரையின் வீதிகளில் வைக் காதே எனப் போராடுகின்றது. இதுவும், தமிழகத்தில் இந்திப் பெயர்ப் பலகைகள் கூடாது என தொடர்ச்சியாக நாம் நடத்தி வந்த போராட்டங் களின் ஒரு பகுதிதான். ஆனால், நீங்கள் எங்கு மொழித் திணிப்பை எதிர்த்துப் போராடி யிருக்கிறீர்கள் எனக் கேட்கி றோம்.

இந்தச் சிக்கலை “வெறும் போர்டு” பிரச்சினை என ஏளனம் செய்யும் தோழர் அருணன், தமது சி.பி.எம். அலுவலக வாயிலில், சிங்களம் அல்லது வங்காள மொழிகளில் பலகை வைத்துக் கொள்வாரா? “வெறும் போர்டு” தானே, வைத் துக் கொள்ளுங்களேன். முடி யுமா உங்களால்?

தமிழ்நாட்டில் ஆங்காங்கே வைக்கப்படுகின்ற இந்தி எழுத்துகள், நாம் இந்திக்காரர் களுக்கு அடிமைகள் என முகத் தில் அறைந்தாற்போல் அறிவிக் கின்றன என்பது தான் உண்மை. பெரும்பான்மையினரின் ஆதிக்க மொழி, இன்னொரு இனத்தின் தாயகத்தில் திணிக் கப்படுவதை, மார்க்சியம் வர வேற்கிறதா? இல்லை. ஆனால், சி.பி.எம். கட்சியினர் அதை வரவேற்பதில் உள்ள மர்மம் தான் என்ன?

தமிழ்த் தேசப் பொதுவு டைமைக் கட்சி, 2007ஆம் ஆண்டு மொழிப்போர் நா ளான சனவரி 25 அன்று, தஞ்சை அஞ்சல் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்துப் போராடியது. தோ ழர்களைத் திருச்சி சிறையில் அடைத்தது தமிழக அரசு. அதே நாளில், சென்னையில் அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டி ருந்த ஆங்கில எழுத்துகளை அழித்துப் போராட்டம் நடத் தியது. தோழர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் வகையில், ‘திராவிட’ கருணாநிதியின் காவல்துறையினர் தோழர் களைத் தாக்கினர். இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதி யாகத்தான், மதுரை வீதிகளில் இந்தி கூடாது என உரத்து முழங்குகிறோம். இதில், சி.பி.எம். மிற்கு ஏன் வலிக்கிறது?

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகத் தான் இந்திப் பெயர்ப் பலகைகள் என்றால், தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள், வருமான வரித்துறை அலுவலகங்கள், பி.எஸ்.என்.எல். அலுவலகங் களில் உள்ள இந்தி மொழி எதற்காக அங்கு எழுதப் பட்டுள்ளன? அந்த அலுவல கங்களைப் பெரும்பான்மையாகப் பயன்படுத்துவது தமிழர் களா? அல்லது ‘சுற்றுலாப் பயணிகள்’ எனக் கூறப்படும் வட நாட்டவர்களா? இங் கெல்லாம் இந்திய அரசால் எழுதப்பட்டுள்ள, இந்தி எழுத் துகள், நாம் இந்திக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் அடிமை களாக இருக்கிறோம் என்ப தைத் தான் பறைசாற்றுகின்றன.

தமிழ்நாட்டில் தமிழ் மொழி யில் தான் வீதிப் பெயர்களும், வணிக நிறுவனங்களின் பெயர் களும் இருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் வசதிக் காக, ஆங்கிலத்தில் வேண்டு மானால் சிறிய எழுத்துகளில் போடுவது கூட தவறில்லை. ஆனால், நிச்சயமாக இந்தி எழுத்துகள் போடுவது கூடாது. ஏனென்றால், தமிழகத்தில் எழுதப்படும் இந்தி எழுத்துகள் வெறும் எழுத்துகள் அல்ல, ஆதிக்கத்தின் சின்னம்; தமிழர் கள் அடிமைகள் என்று அறி விக்கும் சின்னம். அதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

Pin It