உண்மை இன்று சொல்வேன் - 15

மரண தண்டனைக்கு எதிரான ஆவணப்படம் என்ற அறிவிப்போடு இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணடப்படம் வெளியிடப்பட்டது. அப் படத்தின் இயக்குநர் என்ற அளவில் அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டது குறித்து சில கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் சில நூறு அப்பாவி மக்களை கொன்று குவித்த அஜ்மல் கசாப்புக்கு நவம்பர் 21ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்குள் ஊடுருவி இந்தத் தாக்குதலை நடத்திய ஒன்பது பேரில் அஜ்மல் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். பிடிபட்டது பயங்கரவாதி அஜ்மல் கசாப்தான் என்பது தெள்ளத் தெளிவான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதை இந்தியாவில் பல இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இந்தக் கொண்டாட்டம் அவசியமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதே நேரத்தில், அஜ்மல் கசாபைத் தூக்கிலிட்டது தவறு என்றும், மரண தண்டனை கூடாது என்றும் மற்றொருபக்கம் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் உலகில் பல நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதை சுட்டிக் காட்டத் தவறுவதில்லை. அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை இந்தியாவில் தொடரலாமா, வேண்டாமா என்பது பல ஆண்டுகளாக நடந்து வரும் விவாதம்.

மரண தண்டனையை தடை செய்யக் கோரும் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களித்து சில நாட்களே ஆகிறது.18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்த தண்டனையில் விலக்கு அளிக்க வேண்டுமென்றும், மரண தண்டனைகளுக்கான குற்றங்கள் பட்டியலில் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்றும் இந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.

இந்த தீர்மானத்தை எதிர்த்து அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா, ஜப்பான், ஈரான், வடகொரியா, சிரியா, ஜிம்பாவே உள்பட 39 நாடுகள் வாக்களித்தன. 36 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

எந்த சூழ்நிலையிலும் நீதி நிலைப்பாட்டப்படும் சூழல் இந்தியாவில் நிலவினால் கண்களை மூடிக் கொண்டு மரண தண்டனையை ஆதரிக்கலாம். ஆனால் அதிக பட்ச தண்டனையை வழங்கும் தார்மீக உரிமை இந்திய அரசுக்கு இருக்கிறதா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

போபால் விஷவாயு கசிவில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்கக் காரணமான அந் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை அமெரிக்காவுக்குத் தப்பிச் செல்ல வைத்தது இந்திய அரசாங்கம். இன்று வரையிலும் அந்த மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.

இதுவரையில் சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்காக இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் ஏதும் உணடா? மதுரையில் தா.கி. கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் யாரென்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதே மதுரையில் தினகரன் எரிப்பு வழக்கில் மூன்று பத்திரிகையாளர்கள் அநியாயமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வில் குற்றவாளிகளுக்குக் கிடைத்த தண்டனைதான் என்ன? காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நடக்கும்?

சில கொலை வழக்குகளில் கொலைவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்டப்பவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி அதிர்ச்சி கொடுத்த வினோதங்கள் நடந்திருக்கின்றன. பாண்டியம்மாள் கொலை வழக்கை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பாண்டியம்மாளை எப்படி கொலை செய்தோம் என்று கொலையாளிகள் நடித்துக் காட்டியதாக காவல்துறையினர் சொன்னார்கள். ஆனால் பாண்டியம்மாள் உயிருடன் வந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தாள்.

அது மட்டுமா? பெட்டிக்கடையில் ஒன்பது வோல்ட் பேட்டரி வாங்கி கொலையாளிக்குக் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட பேரறிவாளன் 22 ஆண்டுகளாக தூக்குக் கயிற்றின் முன் நிற்கிறார். ஆக, இந்தியாவில் காவல் துறையும் நீதியும் நேர்மையாகவும் நடுநிலையோடும் பாரபட்சம் இன்றியும் செயல்படுவதில்லை என்பதை பச்சக் குழந்தைக்குக் கூட தெரியும்.

வேலை செய்யும் வீட்டில் ஆயிரம் ரூபாய் திருடிய வேலைக்காரியை நம் காவல் துறையினர் நடத்தும் விதத்திற்கும் ஆயிரம் கோடி திருடிய அரசியல் வாதிகளை அதே காவல்துறையினர் நடத்தும் முறைக்கும் உள்ள வித்தியாசம் என்றைக்குக் களையப்படும்? கிரேனைட் வழக்கில் தேடப்பட்டு வரும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி எங்கிருக்கிறார்? அவர் மீதான குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் ஒரு சுப்பனோ குப்பனோ காவல்துறைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு இத்தனை நாட்கள் தலைமறைவாக இருக்க முடியுமா?

காசு உள்ளவனுக்கு ஒரு நீதி? அன்னக்காவடிக்கு ஒரு நீதியா? இந்த லட்சணத்தில் குற்றவாளிகளை தூக்கில் போட அனுமதித்தால் அந்தத் தண்டனையில் எள்ளவும் அநீதி இழைக்கப்பட்டிருக்காது என்பதை உறுதியாக சொல்ல முடியுமா..?

மரண தண்டனையால் கொலைக் குற்றங்களை குறைக்க முடியும் என்று சொல்கிறார்கள். உணர்ச்சி வேகத்தில் நடக்கும் கொலைகளை நம்மால் தடுத்து நிறுத்தி விட முடியாது. திட்டமிட்டு கொலை செய்பவர்கள் மரண தண்டனைக்குப் பயந்து திருந்தி விடுவார்கள் என்பதை நம்ப முடிகிறதா? சமூக பொருளாதார அரசியல் காரணங்களால் திட்டமிட்டு நடக்கும் கொலைகளை வெறும் தண்டனையால் குறைத்து விட முடியுமா? சமூக அரசியலில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டாலொழிய கொடுங்குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை.

மதுரையில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையை செய்ததாக சிலர் அந்தக் கொலை நடந்த ஒன்றரை மணி நேரத்தில் சென்னையில் சரண் அடைகிறார்கள். காவல் துறையும் அவர்களைக் கைது செய்கிறது! நிச்சயமாக மதுரையில் ஒரு கொலை செய்துவிட்டு அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் சென்னையல் சரண் அடைய முடியுமா? பாரத திருநாட்டில் வெறும் ஆயிரம் ரூபாய்க்குக் கூட கொலை செய்ய அடியாட்கள் கிடைக்கிறார்கள் என்பதுதானே நிதர்சனமான உண்மை!

அஜ்மல் கசாப் மட்டுமல்ல, அப்சல் குரு, தர்மபுரி பஸ் எரிப்பில் மூன்று மாணவிகளின் சாவுக்குக் காரணமானதாக சொல்லப்படும் குற்றவாளிகள் என யாரையும் தூக்கில் போடுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பிலும், முல்லைப்பெரியார் அணை விவகாரத்திலும் தமிழர்கள் தன்னெழுச்சியாக கடந்தாண்டு போராட்டத்தில் குதித்தனர். இதை திசை திருப்பும் நோக்கில் ராஜீவ் கொலை வழக்கில் மூன்று பேருக்கும் தூக்குக்கான நாள் குறிக்கப்பட்டது. அதுபோலவே சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு உள்ளிட்ட இந்திய அரசின் மக்கள் விரோதப் போக்கினை மூடி மறைக்கவே பாராளுமன்றம் கூடும் நேரத்தில் அஜ்மல் கசாப்பின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பயங்கரவாத இந்தியாவின் போலி ஜனநாயகத்தையும் ஏதேச்சதிகாரத்தையும் மூடி மறைக்க இதுபோன்ற தூக்கு தண்டனைகள் பயன்படலாமே ஒழிய குற்றங்கள் குறைய இந்த தண்டனைகள் எள்ளவும் பயன்படாது.

இப்படிக்குத் தோழர் ஆவணப்படத்தை இரோம் ஷர்மிளா சொன்ன கீழ்கண்ட வாசகத்துடன்தான் முடித்தேன்.

“என் உடலை ஆயுதமாக்கி போராடி வருகிறேன். என் உயிரை அழிக்கும் உரிமை எனக்கோ. இந்த அரசுக்கோ, அரசியலமைப்பு சட்டத்துக்கோ கிடையாது”

இதையே இங்கும் வலியுறுத்துகிறேன்.

Pin It