“ஈழச் சிக்கலில் இனி நமது முதன்மைக் களம் தமிழீழமே ஆகும். வடக்கு - கிழக்கு மாகாணத்தில் வாழும் ஈழத் தமிழர்கள்தாம் இனி அடுத்தகட்டப் போராட்டத்தில் முன்னோடுபவர்களாக மாற வேண்டும். இந்தியாவின் கைப்பாவையாகச் செயல்படும் சம்மந்தர் தலைமையைப் புறந்தள்ளிவிட்டு, பணம் -- பதவி -- விளம்பரம் ஆகிய மூன்றிற்கும் ஆசைப்படாத புதிய இளம் ஆற்றல்கள் களம் இறங்க வேண்டும்” என்று, கடந்த பிப்ரவரி 16 - 28 - தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரிய உரையில் எழுதியிருந்தோம்.

அந்தத் திசையில், தமிழீழத்தில் தற்போது மாற்றத் திற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த, பிப்ரவரி 21 மற்றும் 24 ஆகிய நாட்களில், தமிழீழத்தின் யாழ் நகரத்தில் தமிழீழ மக்கள் போராட்டங்கள் நம்பிக்கை யூட்டுவதாக அமைந்துள்ளன.

meeting 600

பிப்ரவரி 21 அன்று, யாழ் நகர வீதிகளில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது காணாமல் போன தமிழ் இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் குடும் பத்தினர், “எங்கள் பிள்ளைகள் எங்கே?” என்ற முழக்கத் துடன் வீதிகளுக்கு வந்தனர்.

“குற்றவாளிகளே நீதிபதிகளா?”, ”சர்வதேச விசாரணை வேண்டும்”, “உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை”, “தடுப்பு முகாம்களில் உள்ளவர் களை விடுதலை செய்” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

யாழ்ப்பாண நகரப் பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 10 மணியளவில் தொடங்கிய இவ் ஆர்ப் பாட்டம், மருத்துவமனை வீதி வழியாக நகர்ந்து பின்னர் முதன்மைச் சாலை வழியாக, யாழ். வீரசிங்கம் மண்டபத்தின்று முன்பாகவுள்ள உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவிடத்தின் முன்பாக நிறைவுற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழீழ விடுதலைக்கு எதிராக செயலாற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு தீயிட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப் பாளராக செயலாற்றிய தோழர் எழிலன் அவர்களின் துணைவியருமான திரு. ஆனந்தி சசிதரன் அவர்கள், ஆர்ப்பாட்டத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டார்.

பிப்ரவரி 24 அன்று, யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்புகள், பல்கலைக்கழக ஊழியர் சங்கம் என்பன இணைந்து, மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

பெருந்திரளான மாணவர்களும், பொது மக்களும் கலந்து கொண்ட இவ் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில், பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், மதத் தலைவர்கள் கைகளில் பதாதை களை ஏந்திய வண்ணம் அறிக்கையை ஒத்தி வைப்பதை நிறுத்தும்படி கோரும் கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் இந்த மார்ச்சு மாதக் கூட்டத்திலேயே விசாரணை அறிக்கையை முன் வைத்து விவாதிக்க வேண்டும் என்று கோரி இப்பேரணி நடத்தப்பட்டது.

பல்கலைக்கழக வீதி வழியாக புறப்பட்ட பேரணி பலாலி வீதி, கந்தர்மடம், அரசரடி வீதி யால் சென்று நல்லூர் ஆலயத்தின் வடக்கு வீதியை சென்றடைந்தது. ஊர்வலத்தில் நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள ஜ.நா.அலுவலகத்தில் மனு அளிக்க முயற்சித்த போதிலும் அங்கு ஐ..நா. அதிகாரிகள் எவரும் இல்லாத நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட மன்னார் பேராயர் அருட்திரு இராயப்பு ஜோசேப் அடிகளார் மற்றும் சர்வதேச இந்து குருமார் ஒன்றியத் தலைவர் சபா வாசுதேவக் குருக்களிடமும் ஐ.நா.வுக்கான மனுக்களின் பிரதிகளை யாழ் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ. இராஜகுமாரன் கையளித்தார்.

தமிழீழ மக்களின் போராட்டம் வெல்க!

Pin It