தேன்கனிக்கோட்டை தமிழகத்தின் வடமேற்கு எல்லையில் உள்ள சிறு நகரம். அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் சென்றால் கர்நாடக எல்லை தொடங் கும். உலகெங்கும் வாழும் தமிழர்கள் உச்சரிக்கும் நகரமாக 7.03.2015 அன்று தேன்கனிக் கோட்டை மாறியது.

உரிமைகள் பறிக்கப்பட்டு - உள்ளம் காயம்பட்டுக் கிடக்கும் தமிழக மக்களுக்குத் தங்களது உணர்ச்சிக் கொந்தளிப்பின் வெளிப்பாடாக, மேக்கேதாட்டு மறியல் பேரணி அமைந்தது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்ததைப் போலவே இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்த மறுக்கிறது கர்நாடக அரசு. தமிழகத்திற்கெதிரான நடவடிக்கைகளை யார் எடுத்தாலும் அவர்களை மறைமுகமாக ஆதரித்து ஊக்கப்படுத்தும் தனது வழக்கப்படியும், மனுதர்ம ஞாயப்படியும் இந்திய அரசு இந்தச் சிக்கலிலும் கர்நாடக அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளை ஆதரிக்கிறது.

இதனால் மீண்டும் ஊக்கம்பெற்ற கர்நாடக அரசு கர்நாடக அணைகள் நிரம்பினால் வெளியேறும் மிகை நீரும் மேட்டூருக்கு வராமல் தடுப்பதற்காக மேக்கேதாட்டு, இராசிமணல் ஆகிய இடங்களில் இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்ட முனைந்துள்ளது. இவ்விரு அணைகளும் கட்டப்பட்டுவிட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட மேட்டூருக்கு வராது. தமிழ் நாடு பாலைவனமாக மாறிவிடும். 19 மாவட் டங்கள் குடிநீரை இழக்கும். 12 மாவட்டங்கள் பாசன நீரை இழக்கும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியு றுத்தியும், மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தைத் தடுக்க வலியுறுத்தியும், இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துப் பல போராட்டங்களைக் காவிரி உரிமை மீட்புக் குழு நடத்தியுள்ளது. பல்வேறு இயக்கங்களும் போராடி வருகின்றன.

ஆனால் இந்த இரண்டு சட்டப்பூர்வ கோரிக்கை களையும் நிறைவேற்ற இந்திய அரசு மறுத்துவரும் நிலையில் மேலும் மேலும் அட்டூழியப் பாதையில் கர்நா டகம் முன்னேறிச் செல்கிறது. கர்நாடகம் அணை கட்டும் திட்டத்தைத் தடுக்கும் முறையில் மேக்கே தாட்டு சென்று அங்கு முற்றுகைப் போராட் டம் நடத் துவது என்று காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்தது.

காவிரி டெல்டா மாவட்ட உழவர்களும் உழவுத் தொழிலாளிக ளும் மட்டுமின்றி, தமிழ கம் முழுவதுமிருந்தும் தமிழின உணர்வாளர் களும் திரளவேண்டு மென்று காவிரி உரிமை மீட்புக் குழு வேண்டு கோள் வைத்தது.

சென்னையிலிருந்து நெல்லை வரை உள்ள பல்வேறு மாவட்டங் களிலிருந்து உழவர்களும் உணர்வாளர்களும் 7.3.2015 காலை 9 மணி யிலிருந்து தேன்கனிக் கோட்டை மணிக் கூண்டு முச்சாலை சந்திப் பில் கூடத் தொடங்கினர். சன் தொலைக்காட்சி, புதிய தலைமுறைத் தொலைக் காட்சி, தந்தி தொலைக்காட்சி ஆகியவை அப்போ திருந்தே நேரடி ஒளிபரப்பைத் தொடங்கின. காலை 11 மணியளவில் ஐயாயிரம் பேர்க்கு மேல் திரண்டு விட்டனர். அனைத்துத் தொலைக் காட்சியினரும் அச்சு ஊடகத் தாரும் அக்கறையோடு வந்திருந்தனர்.

எங்கு பார்த்தாலும் பச்சைத் துண்டனிந்த விவசாயி கள் கூட்டம் கூட்டமாகக் கூடி நின்றனர். பெண்களும் திரளாக வந்திருந்தனர். பலர் கைக் குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்த உழவர்களையும் உணர்வாளர்களையும் காலையில் வரவேற்று சிற்றுண்டி வழங்கி பேரணிக்குப் புறப்படச் செய்வதற்குரிய வரவேற்பு ஏற்பாடுகளை சிறப்பாக, விரிவாக, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற் குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில் ஓசூர் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள், கனக ராசு, சுப்ரமணியம், இரமேசு, முத்துவேல், இராமகிருட் டிணன், தொல். ஸ்டாலின் ஆகியோர் செய்திருந்தனர்.

தமிழக உழவர் முன்னணித் தோழர்கள் தூருவாசன், மு.வேலாயுதம், அசோக் லேலண்டு தொழிலாளர் பாது காப்புப் பேரவைத் தலைவர் சரவணன், நடை முறைத் தலைவர் முரளி, செயலாளர் மதியழகன், முருகேசு ஆகியோரும், தமிழக உரிமையின் மீது அக்கறை கொண்ட நல்லோ ரும் செய்திருந்தனர்.

ஒசூர், இராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, உளி வீரணப் பள்ளி ஆகிய இடங்களில் மண்ட பங்கள், பள்ளிகள், ஆதரவாளர்கள் வீடுகள் ஆகிய இடங்களில் பல்லா யிரக்கணக்கானோர் குளித்து, சிற் றுண்டி அருந்த ஏற்பாடு செய்திருந் தனர்.

தளியைச் சேர்ந்த திரு. பி. நாகராஜ் ரெட்டி அவர்களின் பணி கள் தொடக்கத்திலிருந்து பாராட் டத் தக்கவையாக அமைந்தன. மேக்கேதாட்டு சென்று பார்த்துவர உதவியது, 1000 பேர்க்கு உண வளித் தமை உள்ளிட்ட பல உதவிகளை நாகராஜ் ரெட்டி செய்தார். அவர் சம்பந்தி உளிவீரணப்பள்ளி கேசவ ரெட்டி தமிழக விவசாயிகள் சங்கம் - மருத்துவர் சிவ சாமி பிரிவின் பொறுப்பாளர். திடீரென்று அவரிடம் இட ஏற்பாடு செய்ய நாகராஜ் ரெட்டி கேட்டதும் மனமுவந்து நல்ல ஏற்பாடுகளைச் செய்து தந்தார்.

காவல்துறை கோவை ஐ.ஜி. தலைமையில் டி..ஜி., கிருட்டிணகிரி மற்றும் பக்கத்து மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்கள் பொறுப்பில் அதிரடித் தாக்குதல் படையினர் உட்பட 800 காவலர் களைக் கொண்ட படை வஜ்ரா வண்டிகளுடன் காவல் பணியில் ஈடுபட்டிருந்தது.

மேக்கேதாட்டு நோக்கிப் பேரணி புறப்படுவதற்கு முன் பயண நோக்கம் குறித்து அமைப்பிற்கு ஒருவர் என்ற முறையில் பேசினர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டத் தலைவர் தேன்கனிக்கோட்டை இரமேசு வரவேற்றுப் பேசினார். தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பேராசிரியர் ஏ.எஸ்.சின்னசாமி, தஞ்சை -- திருவாரூர் - நாகை மாவட்டங்களின் விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் வலிவலம் மு.சேரன், காவிரிப் பாசன விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவர் காவேரி தனபாலன், தமிழக உழவர் முன்னணித் தலைவர் சி. ஆறுமுகம், .தி.மு.. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா, மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் மன்னை செல்லசாமி, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முரு கேசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டத் தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், காங்கிரசுக் கட்சியின் முன்னாள் தஞ்சை மாவட்டத் தலைவர் நாஞ்சி வரதராசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கிருட்டிண கிரி மாவட்டச் செயலாளர் சக்தி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆலோசகர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் புரவலர் பூ.விசுவநாதன், மூன்று மாவட்ட வி.ச கூட்டமைப்புச் செயலாளர் ஆறு பாதிகல்யாணம், கொள்ளிடம் கீழணைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. வினாயக மூர்த்தி ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாகக் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கி ணைப்பாளர் பெ.மணியரசன் உரையாற்றி முடித்ததும் பேரணி புறப்பட்டது. தேன்கனிக் கோட்டையிலிருந்து மேக்கேதாட்டு செல்லும் சாலையில் ஜவளகிரி சாலையில் திரும்பி 200 மீட்டர் தொலைவு சென்றவுடன் அங்கே மரங்களைக் கட்டித் தடுப்பு அமைத்திருந்தனர். அதன்பிறகு அடுத்தடுத்து இரு தடுப்புகள் - ஆக மொத்தம் மூன்று தடுப்புகள் கட்டி ஒவ்வொன்றிலும் காவல்துறையினர் குவிக்கப் பட்டிருந்தனர்.

தடுப்பைக் கண்டதும் முழக்கம் எழுப்பிய தோழர் நா.வைகறையின் குரல் ஆவேசமாக ஓங்கி ஒலித்தது. பல்லாயிரக்கணக்கானோர் சீற்றம் கொப்பளிக்க உரத்து முழங்கினர்.

“காவிரி நமது இரத்த ஒட்டம்

காவிரி நமது வளர்ப்புத் தாய்

காவிரியில்லாமல் வாழ்வில்லை

களம் காணாமல் காவிரியில்லை”

“அனுமதியோம் அனுமதியோம்

காவிரியின் குறுக்கே அணைகள் கட்ட

அனுமதியோம் அனுமதியோம்”

என்ற முழக்கங்கள் திசை எட்டும் எதிரொலித்தன. இளைஞர்கள் சீறிப்பாய்ந்து தடுப்பின் மேல் ஏறினர். காவல்துறையினர் கட்டிப்பிடித்துத் தள்ளினர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற் பட்டது. காவல்துறையினர் தடுத்ததைக் கண்டு ஆவே சமடைந்த ஊர்வலத்தினர் சாலை முழுக்க உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தள்ளுமுள்ளு நீடித்த நிலையில் - சிறிது நேரம் கழித்துக் கைதுக்கு உட்படும்படி ஒருங் கிணைப்பாளர் பெ.மணியரசன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அனை வரும் கைதாயி னர்.

தேன்கனிக்கோட்டை ஹோலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளி மற்றும் ஒரு மண்டபம் ஆகிய மூன்று இடங்களில் கைதான ஆண்களையும் பெண்களையும் காவலில் வைத்தனர் காவல் துறையினர்.

காலையிலிருந்து கைதுவரை நடந்த நிகழ்ச்சிகளை அனைத்துத் தொலைக் காட்சி களும் நேரடியாக ஒளிபரப்பியதால் - தமிழகத்திலும் பல்வேறு நாடு களிலும் உள்ள தமிழ் மக்கள் போராட்ட எழுச்சி யையும் - மக்கள் பெருந்திரளையும் பார்த்து உற்சாக மடைந்து உடனுக்குடன் கைப்பேசி களில் தொடர்பு கொண்டு, போராட்டத்தில் கலந்து கொண்டோரிடம் பேசினர்.

மேலே குறிப்பிடப்பட்ட தலைவர்களும், மாவட்ட அளவில் செயல்பட்ட தலைவர் களும் கடுமையாகப் பணியாற்றிய தன் விளைவாக மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டத்தில் பங்கேற்றது.

காலம் காலமாக வஞ்சிக் கப் பட்டு, நெஞ்சில் காயம் பட் டுள்ள தமிழ் மக்களும் தன் னார்வ வேகத்தில் திரண்டனர்.

காவிரி உரிமை மீட்புக் குழுவில் உள்ள அமைப்புகள் முன்கூட்டியே அந்தந்த மாவட் டங்களில், ஒன்றியங்களில் மக்களிடையே தெரு முனைக் கூட்டங்கள் நடத்தி போராட்ட நோக்கங் களை விளக்கி தேன்கனிக்கோட்டைக் குத் திரளுங்கள் என்று அழைப்பு விடுத்திருந் தனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பழ.இராசேந்திரன், நா.வைகறை, விடுதலைச்சுடர், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் ஆ.தேவதாசு, பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரெ.கருணாநிதி, .காமராசு, தஞ்சை நகரச் செயலாளர் தோழர் லெ.இராமசாமி, குடந்தையில் தோழர்கள் தீந்தமிழன், அருள், பாபநாசம் பிரபாகரன், திருத்துறைப்பூண்டி மூத்த தோழர் இரா. கோவிந்த சாமி, ஒன்றியச் செயலாளர் தோழர்தனபால், திருச்சி மாவட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ..கவித்துவன், பொதுக்குழு உறுப்பினர் நா. இராசாரகுநாதன், பொறியாளர் ச. முத்துக்குமாரசாமி,,  புதுக்கோட்டை மாவட்டத்தில் குன்றாண்டார் கோயில் ஒன்றியச் செயலாளர் தோழர் சி. ஆரோக்கியசாமி, துணைச் செயலாளர் மணிகண்டன், பெரம்பலூர் மாவட்டம் தோழர் கோகுல கிருட்டிணன், திருச்செந்தூர் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு.தமிழ்மணி, நெல்லை பொதுக் குழு உறுப்பினர் தோழர் புளியங்குடி க.பாண்டியன், மதுரை மாநகரச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.இராசு, பொதுக்குழு உறுப்பி னர் பே.மேரி, பரமக்குடி பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா.இளங்கோ, கோவை மாநகரச் செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன், திருப்பூர் தோழர் சிவக்குமார், ஈரோடு மாநகரச் செயலர் தோழர் வெ.இளங்கோவன், சேலம் தோழர் ச.பிந்துசாரன், தருமபுரித் தோழர்கள் விஜயன், இரா. தங்கவேல், முருகேசன், சென்னையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.அருணபாரதி, உதயன், பொதுக்குழு உறுப்பினர்கள் பழ.நல்.ஆறுமுகம், வி.கோவேந்தன், இரா.இளங்குமரன், கடலூர் மாவட்டம் சிதம்பரம் பொதுக்குழு உறுப்பினர்கள் கு.சிவப்பிரகாசம், குபேரன், பெண்ணாடம் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் உள்ளிட்டோரும் அந்தந்தப் பகுதி தோழர்களும் ஆதரவாளர்களும் பரப்புரைப் பணியி லும் மக்களைப் போராட்டத்திற்கு அழைத்து வரும் பணிகளிலும் ஈடுபட்டனர்.

மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை ஜெ. கலந்தர், அகமது கபீர் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. .மணி மொழியன், மாவட்டத் துணைச் செயலாளர் உளூர் செகதீசன், தமிழக உழவர் முன்னணித் தோழர் சக்கர சாமந்தம், நலங்கிள்ளி, தமிழக விவ சாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் ம..சின்னத்துரை, இலால் குடி வட்டம் நகர் கிராமம் விவசா யிகள் சங்கத் தலைவர் செல்லையா, திருச்சி புத்தூர் கிருட்டிணமூர்த்தி, தமிழக உழவர் முன்னணி சிதம்பரம் பொறுப்பாளர்கள் அ.கோ.சிவ ராமன், . மதிவாணன், தங்க.கென் னடி, சரவணன், மன்னார் குடியில் மருத்துவர் பாரதிச்செல்வன், கலைச் செல்வன், பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, ஆகியோர் மேக்கேதாட்டுப் பேரணிக்கான களப்பணிகள் ஆற்றினர்.

மேக்கேதாட்டுப் பேரணிக்கான களப்பணிகளிலும் பங்கு கொண்டு போராட்டத்திலும் கலந்து கொண்டு தளைப்பட்டார் தமிழக மூத்தப் பொறியாளர்கள் சங்க நிர்வாகிகளில் ஒருவரும் முன்னாள் செயற்பொறி யாளருமான பொறியாளர் செயராமன்.

ஈழத் தமிழர்களுக்காக முதன் முதலில் தீக்குளித்துத் தழல் ஈகியான பெரம்பலூர் அப்துல் ரவூப் அவர் களின் தந்தையார் ஓய்வு பெற்ற உள்ளகத் துறைத் துணை இயக்குநர் திரு. சு.அசன்முகமது அவர்கள் தேன்கனிக் கோட்டை பேரணியில் கலந்து கொண்டு கைதா னார்கள்..

பாலாற்றுப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப் பாளர் தோழர் காஞ்சி அமுதன் உணர்வாளர்களோடு வந்து கலந்து கொண்டார்.

சற்றொப்ப நான்காயிரம் பேர் கைதாயினர். காவல்துறையினர் 1,286 பெயர்களை மட்டும் பதிவு செய்தனர்.

அனைவரும் மாலை 6 மணியளவில் விடுவிக்கப் பட்டனர். மறுநாள் போக மறுநாள் (09.03.2015) செய்தி ஏடுகளில், தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் 1,286 பேர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 147, 188-இன் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதாகக் காவல்துறை கொடுத்த செய்தி வந்திருக்கிறது.

தமிழக அரசு, தனது சொந்த மக்களுக்குத் துரோகம் இழைத்து இந்திய அரசையும் கர்நாடக அரசையும் மகிழ்ச்சியுறச் செய்வதற்காக வழக்குப்பதிவு செய் துள்ளது.

மேக்கேதாட்டுக்குச் செல்லவிடாமல் தமிழகக் காவல்துறையினர் தடுத்துக் கைது செய்தாலும்போராட்டத்தின் குறி இலக்காக மேக்கேதாட்டை வைத்ததும் தமிழக எல்லையோரமான தேன்கனிக் கோட்டையிலிருந்து பேரணி புறப்பட ஏற்பாடு செய்ததும் தமிழகம் முழுவதும் உள்ள உணர் வாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. பலரும் பாராட் டினர்.

இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை - கர்நாடகம் காவிரியில் புதிய அணைகள் கட்டு வதைத் தடுக்கும் வரை நமது போராட்டம் புதுப்புது வடிவங்களில் புத்தெழுச்சி யுடன் தொடரும்!

காவிரி இல்லாமல் வாழ்வில்லை

களம் காணாமல் காவிரியில்லை!

- நம் செய்தியாளர்.

Pin It