மூன்று வரிகளில் விடுகதைப் போன்று எழுதும் சப்பானிய கவிதைக்கு ஹைக்கூ என்று ஏற்கெனவே பெயர் இருந்தும், கவிஞர் அய்யாறு புகழேந்தி அவர்கள், சிறிய கவிதைகள் என்பதை குறியீடாக உணர்த்துவதற்காக போன்சாய் பூக்கள் என்று தன் கவிதை தொகுப்பிற்கு பெயர் சூட்டியிருப்பார் போலும்.

நிலா, வானம், நதி, மலர், வண்ணத்துப்பூச்சி, என்று பல இயற்கை பொருள்களையும், சமூக நிகழ்வுகள் மற்றும் அவலங்களையும் பாடுபொருளாக வைத்து நூற்றிபதினாரு பக்கங்களில் முந்நூற்று முப்பத்து மூன்று கவிதைகளை எழுதியுள்ளார்.

“விளையாட ஆளில்லாமல்

கிடக்கும் பந்து

நிலா..

விண்ணிலிருந்து

சேமியாக்கள்

மழை... இயற்கையை ஊடுறுவிப்பார்க்கும் கவிஞரின் திறனுக்கும் அவரது கற்பனை வளத்துக் கும் எடுத்துக்காட்டு, மேலே உள்ள இரண்டு கவிதைகள்.

குடிகாரனின் குடும்பம் எய்தும் கதியை,

குடி

தள்ளாடியது

குடும்பம் -- என்று மூன்று வரிகளில் பதிய வைக்கிறார். அடுத்த சமூகக் கேடான சாதி வெறியை அடக்கி வைக்கவில்லையென்றால் தமிழ்ச் சமூகத் தையே சீரழித்து விடும் என்பதை,

சாதிக் கலவரம்

மடிந்தது

தமிழ்ச்சாதி- -- என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார் கவிஞர்.

அறுவடை முடிந்தது

ரேசன் கடையில்

விவசாயி -- என்ற வரிகளில் உழவர்களின் அவலத்தை உணர்த்துகிறார்.

குளிர் நிலைவைக்காட்டி அழகைச் சுவைக்கச் செய்தவர்,

நிலாவைக்காட்டி

சோறூட்டிய தாய்

மகனைக் காட்டி

சோறு கேட்கிறாள்!- - என்று வறுமையின் உக்கிரத்தை சுட்டிக் காட்டுகிறார். நாகரிக சமுதா யத்தையே தலை குனியச் செய்த இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அவலமான சிங்கள பேரினவாதத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஈழத் தமிழின அழிப்பு. மாந்த நேயமுள்ள ஒவ்வொரு மனிதனின் இதயத்திலிருந்தும் குருதி கசிய வைக்கும்.

காற்று மட்டுமே

வந்து போகும்

இறந்து போன கிராமம்.. - என்ற வரிகள் மக்களின் வாழ்விடங்கள் சுடுகாடாகி போன அவலத்தை பதிவு செய்கின்றன.

ஐந்திணைகளின் அறத்தோடு வாழ்கின்ற உலகின் மூத்த தமிழ்க்குடி, இன்று முள்வேலி முகாமில் வாழும் இழி நிலையை,

திணைகள் ஆறு

முள்ளும் முள் சார்ந்த இடமும் --- என்னும் வரிகளில் உணர்த்துகிறார்.

மொழி விடுதலைக்கு மொழிப்பற்று அடிப்படை. மொழி பற்றே அற்றுவற்றி போயிருக்கும் நிலையை,

தமிழைப் பாடச் சொன்னேன்

தமிழில் கூட பாடவில்லை

தமிழ் விழா

நடுங்கும் தமிழ்த் தேசம்

பிறந்த குழந்தை

என்ன மொழி பேசுமோ..! என்ற வரிகளில் தன் கவலையை பதிவு செய்கிறார்

தேடலிலும் வலி

மரம் தேடும் பறவை

பாவம் மரமில்லை

மின்கம்பத்தில்குருவி.... காடுகள் அழிக்கப் படுவதை, சுற்றுச்சுழல் அழிக்கப்படுவதை இவ்வரிகளில் அழுத்தமாக பதிவு செய்கின்றன.

குறைகள் குறைவாகவும், நிறைகள் நிறையாகவும் உள்ள பாராட்டப்பட வேண்டிய தொகுப்பு.

 ***

ஆசிரியர்: கவிஞர் அய்யாறு புகழேந்தி 

வெளியீடு :

பாரதி பித்தன் பதிப்பகம்

மனை எண்: 236, தமிழ்ப்பல்கலைக் கழக வளாகம், சிந்தாமணி,

தஞ்சாவூர் - 613 010

விலை: ரூ 80/- பக்கம்: 112

Pin It