இயக்குநர் மணிவண்ணன் அவர்கள், 15.6.2013 அன்று மாரடைப்பால் இறந்துவிட்டார் என்ற செய்தி இடிபோல் தாக்கியது. அவர் இயக்கிய முதல் படமான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு, ‘பாலைவன ரோஜாக்கள்’, நூறாவது நாள், அமைதிப்படை என்று சிறந்தப் படங்கள் வழங்கி, கோபுரம் போல் உயர்ந்தார். ‘இனி ஒரு சுதந்திரம்’ மிகவும் கருத்தானப் படம்.

இயக்குநர் என்ற நிலையில் இருந்து கொண்டே பிறர் இயக்கத்தில் ஏராளமான படங்களில் நடித்தார். படங்களுக்கு நேரம் கொடுக்க முடியாமல் அவர் திணறிய ஆண்டுகளும் உண்டு.

திரைத்துறையில் எவ்வளவு உச்சத்திற்குப் போனாலும், பழக்கத்தில் பழையத் தோழராகவே இருந்தார். மார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த்தேசியம் ஆகியவற்றை உள்வாங்கி, அத்திசையில் மேடைகளில் கருத்துகள் வழங்கி வந்தார். தம் மகளுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தார். அவரே, காதல் திருமணம் - சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் தான்.

இயக்குநர் மணிவண்ணன் அவர்களுடன் எனக்கு நட்பு ஏற்பட்ட பின், இனிமையான தோழர்களாகவே பழகி வந்தோம். தமிழர் கண்ணோட்டம் இதழ் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்தார். ஒருமுறை இதழ் வளர்ச்சிக்கென்று நிதி வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு முன் அவரிடம் கேட்டேன். வீட்டிற்குள் சென்றவர் பத்தாயிரம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்தார்.

தமிழர் கண்ணோட்டம் வளர்ச்சி நிதிக்காக முனைவர் புதுவை ராஜூ அவர்கள் இயக்கிய ‘நந்தன் கதை’ நாடகத்தை தஞ்சையில் போட்டோம். அதற்கு வந்து தலைமை தாங்கினார். போக்குவரத்து செலவுகூட வாங்கிக் கொள்ளவில்லை. அதே போல் மறுமுறை புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி தஞ்சையில் நடத்தினோம். அதற்கும் வந்து உரையாற்றி சிறப்பித்தார்.

தஞ்சையில் த.தே.பொ.க. சார்பில் பொங்கல் விழா நடத்தினோம். அதில் நடந்த பட்டிமன்றத்திற்கு, நடுவர் மணிவண்ணன்; ஓரணிக்குத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். இன்னொரு அணிக்குத் தலைவர் பேராசிரியர் அப்துல் காதர். அந்தப் பட்டிமன்றம் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம். கூடியிருந்த பெருங்கூட்டம் ஆரவாரம் செய்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தீவிர அக்கறை செலுத்தியவர் தோழர் மணிவண்ணன். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீது பெரு மதிப்புக் கொண்டவர். எந்த நெருக்கடிக்காகவும் அவர் ஈழஆதரவுக் கருத்துகளை மாற்றிக் கொள்ள வில்லை.

தமிழ்த் திரைப்படத்துறையில் தமிழின உணர்வும் தமிழ்த் தேசிய உணர்வும் உள்ளவர்கள் குறைவு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மணிவண்ணன். அந்த கோபுரம் சாய்ந்துவிட்டது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பிலும், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சார்பிலும் தோழர் மணிவண்ணன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். 

- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

Pin It