subaveerapandian 400தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் தோழர் பெ.மணியரசன் எழுதிய “முள்ளிவாய்க்கால் முற்றமும் முக்காடு நீங்கிய தமிழின வெறுப்பும்” என்ற கட்டுரைக்கு தோழர் சுப.வீரபாண்டியன் தம்முடைய எதிர்வினையைப் பதிவு செய்துள்ளார். அவர் நடத்தும் கருஞ்சட்டைத் தமிழர் ஏட்டில் அது வந்துள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு தொடர்பான விவாதத்தின் போது, ”ஏன் எனக்குப் பார்வையாளராக வர அழைப்புக்கூட அனுப்பக் கூடாது என சுப.வீ. மணியரசனிடம் கேள்வி எழுப்பியபோது, ”உங்களை நூற்றுக்கு நூற்றுபத்து சதவீதம் அழைத்திருக்க வேண்டும் என மணியரசன் அழுத்தமாக, ஆணித்தரமாக பதிவு செய்தார்.

ஆனால், சுப.வீ.அதோடு நின்றுவிடாமல் தன்னுடைய தலைவர் கருணாநிதி, திருமாவளவன் ஆகியோரை ஏன் பேச்சாளராக அழைக்கவில்லை என இழுத்துக் கொண்டே போய் நிகழ்ச்சியின் தலைப்பிலிருந்து தடம்மாறி பேசிக் கொண்டே இருந்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய எழுச்சி பெருக்கெடுத்ததையும், மக்கள் வெள்ளம் தாமாக திரண்டதையும் கண்டு, கலைஞர் கருணாநிதி முகாம் கலங்கி இருக்கும் போலும். அதனால், முள்ளிவாய்க்கால் முற்றத்தின் ஒரு பகுதி தமிழக அரசால் இடிக்கப்பட்டது குறித்தவிவாதத்தில், மணியரசனுக்கும் பழ.நெடுமாறனுக்கும் இடையே மோதலை உருவாக்கும் நோக்கிலான கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தார்.

பெரியார் வலியுறுத்திய தமிழின விடுதலை குறித்து சுப.வீ. ஏன் மேடைகளில் பேசுவதில்லை?

அதற்காக கட்டுரைகள் எழுதுவதில்லை என தோழர் பெ.மணியரசன் தமிழர் கண்ணோட்டம் இதழில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, என்னிடம் அதற்கான திட்டமும் படையும் இல்லை என சுப.வீ. கூறுகிறார்.

அதோடு நின்றுவிடாமல் தமிழ் இன விடுதலையை வலியுறுத்தும் மணியரசனை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு மணியரசன் படைகட்டி பயிற்சி கொடுத்து வருகிறார் என்றும், இரண்டு மாதத்தில் தமிழ்நாடு விடுதலை அடைந்து விடும் என்று கூறி தமிழினத்தின் விடுதலை உணர்ச்சியை இழிவுபடுத்துகிறார்.

சுப.வீ.க்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தியத் தேசிய கீதம் பாடப்பட்டால் எழுந்து நின்று விறைப்பாக வணக்கம் செலுத்தியவன் நான். இந்தியத்தேசியக் கொடியை நெஞ்சில் அணிந்து கொண்டவன் நான். ஆனால், என்னைப் போல் இருந்த தமிழ் இளைஞர்கள் பலர் தற்போது இந்திய தேசியக் கொடியையும் இந்தியத் தேசிய கீதத்தையும் வேறுவிதமாக பார்க்கக் கூடிய நிலை உருவாகி இருக்கிறது என்றால் அதற்கு தோழர் பெ.மணியரசன் எழுத்துகளும், பேச்சுகளும் தான் காரணம்.

தமிழர்கள் மனதில் இன விடுதலைக்கான வேட்கை வேரூன்றி வருகிறது. நீறுபூத்த நெருப்பாகக்கனன்று கொழுந்துவிட்டுஎரியும் காலமும் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு தோழர் பெ.மணியரசன் பங்களிப்பு முகாமையானது. புரட்சிகர சிந்தனை, வீரம் மிக்க போராட்டம், துணிச்சலான செயல்பாடு, நேர்மையான சிந்தனை, சமரச மற்ற கொள்கை உள்ளிட்டவைகளை உள்ளடக்கியது தான் தமிழ் இன விடுதலை முழக்கம்.

இதை பேசுவதற்கும், எழுதுவ தற்கும் அஞ்சாத நெஞ்சுரம் வேண்டும்; தன்மான உணர்வு வேண்டும்; தமிழர் நலன் மீது உண்மையான அக்கறை வேண்டும். அடிமைத்தன சிந்தனையிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். கருணாநிதியின் சீடராக ஐக்கியமாகிக் கிடக்கும் சுப.வீர பாண்டியனிடம் தமிழக விடுதலையை எதிர் பார்த்தது தவறுதான்.

தன்னிடம் போய் தமிழ் இன விடுதலை குறித்து மணியரசன் எதிர்பார்க்கிறார் என சுப.வீ. பேரதிர்ச்சி அடைந்து இருக்கக் கூடும்.

கருத்துப் பரப்புரை இல்லாமல் எந்த ஒரு போராட்டத்திற்கும் அடித்தளத்தைக் கட்டமைக்க முடியாது. தந்தை செல்வா தனி ஈழம் குறித்து பேசாமல் இருந் திருந்தால் இன்று உலகளாவிய அளவில் தனி ஈழத்திற்கான போராட்டங்கள் வளர்ச்சி அடைந்திருக்குமா? தமிழ் ஈழத்தில் கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் விடுதலைப் புலிகள் ஆட்சி செய்தி ருக்க முடியமா?

இதெல்லாம் சுப.வீ. அவர்களுக்குத் தெரியும். இந்தத் தொல்லைகள் வேண்டாம் என்று தானே அடைந்தால் திராவிட நாடு.. முகாமில் அடைக்கலமாகி உள்ளார்.

Pin It