செய்தித்தாள்கள் ஒரு நாளுக்கு உரியன. மற்றொரு நாளுக்கு உதவாமல் அழிகின்றன என்று கூறுவர். இருப்பினும் இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பதே சரியானதாகும். நாளேடுகள் அனைவராலும் பாதுகாக்கப் படாமல் போகலாம். அவற்றின் வழி அறியப்பட்ட செய்திகள், படிப்பினைகள், உணர்வுகள் அழிவதில்லை. அவை வாசிப்போரின் மனதில் வளர்சிதை மாற்றங்களை உருவாக்குகின்றன.

இதனால்தான் மக்கள் தொடர்பு ஊடகங் கள் என்பவை மன நிர்வாகத் தொழிற்சாலைகள் என்பர். ஒரு சமூக நிகழ்வை மக்களிடம் இவை கூடுதலாகவோ குறைவாகவோ பதிய வைத்து கருத்துருவாக்கம் செய்கின்றன. இவை மக்களுக்குத் தகவல்களை மட்டும் தருபவை அல்ல; மனங்களைத் தகவமைக்கின்றவையும் ஆகும். இவற்றின்வழி அரசியலும் கட்டமைக் கப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட் டத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிராகக் கருத்துரு வாக்கம் செய்ததில் நாளேடுகளின் பங்கு மகத் தானது. குறிப்பாக மாநில மொழி ஏடுகளால் தான் இதனை வீரியத்துடன் செய்ய முடிந் துள்ளது. ஆங்கிலேயர்களை விரட்ட தமிழ் நாட்டில் உள்ள, தமிழ்மட்டுமே அறிந்த மக்கள் அரசியலைப் புரிந்து கொள்ளவும் எழுச்சி பெறவும் மாநில மொழி ஏடு வேண்டும் என்பதாலேயே சுதேசமித்திரன் துவக்கப்பட்டது. ஏடுகள் மூலம் மக்களிடம் சமூக, அரசியல் விழிப் புணர்வை உருவாக்கும் பணிகளில் தமிழ்த் தென்றல் திரு.வி.க, மகாகவி சுப்ரமணிய பாரதி யார் போன்றோரும் ஈடுபட்டுள்ளனர்.

மாநில மொழியில் அச்சாகி வெளிவரும் இதழ்கள் அரசுக்கு எதிராக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு லிட்டன் பிரபுவின் சட்டமே சான்று பகரும். மக்களிடம் நாட்டுப் பற்று வளர்ந்தால் ஆட்சிக்கு ஆபத்து என்ப துணர்ந்த அவர் மாநில மொழி இதழ்களைக் கட்டுப்படுத்த 1878ஆம் ஆண்டிலேயே தாய் மொழி பத்திரிகைச் சட்டத்தை கொண்டு வந்தார். இதே போன்ற நிலை எல்ஜின் பிரபு, மண்டோ பிரபு, செம்ஸ்போர்டு ஆகியோர் காலத்திலும் நீடித்தது.

ஆனால் தேசியம் பேசிய இதழ்கள் ஆங்கிலச் சொற்பயன்பாட்டில் ஈடுபட்டன. இதுகுறித்து பாரதியார் மனம் வெதும்பி, தமிழ் நாட்டிலோ முழுவதும் தமிழ்நடையை விட்டு இங்கிலிஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம் காணப் படுகிறது என்றார். இத்தகைய நடையைத் தவிர்த் தால் இஹபர nக்ஷமங்களுக்கு இடமுண்டாகும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்னதாக சுதேசமித்தரனின் ஆங்கில மோகம் பற்றி விடுதலைப் போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா எழுதியிருக்கிறார். ஹிஸ் எக்ஸலன்சி கவர்னர் யுவர் மெஜடி ஒபிடியண்ட் சர்வண்ட் என்றெல்லாம் எழுதும் மித்திரன் அறிவைப்பரப்புகிறதா? அல்லது ஆங்கில பாஷையைப் பரப்புகிறதா? ஆங்கிலச் சொற்கள் கலவாத தமிழ் எழுத வேண்டுமென்று நாம் சொல்லுகிறோம்.

ஆங்கில எதிர்ப்பு என்பது வெறும் மொழி எதிர்ப்பல்ல; அதனை ஆங்கிலேய அதிகார எதிர்ப்பாகவும் கொள்ள வேண்டும். அதே போன்று இந்தி மொழிக் கலப்பை எதிர்ப்பது என்பதும் ஓர் அரசியல் நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டது. வடக்கு எதிர் தெற்கு என்ற அரசியல் உணர்வு வலுப்பெற மொழிப் போராட்டம் சிறந்த கருவியாக அமைந்தது.

இப்படியாக வடமொழி இந்தியையும் அந்நிய மொழியாம் ஆங்கிலத்தையும் எதிர்த்துக் கொண்டே தான் தமிழ் வளர்ந்திருக்கிறது. ஆனால் இந்த உணர்வு இன்றுவரை தொடர் கிறதா என்பது கேள்விக் குறிதான்.

வெகுநாட்களுக்குப் பின்செல்லாமல் தற் போது வரும் நாளேடுகளைப் புரட்டினாலும் ஏராளமான வடமொழிச் சொற்கள் பயன் படுத்துவதைக் காணலாம். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், ஜனநாயகம், அதிபர், ராஜினாமா, உத்தரவு, வாபஸ், ஆர்ஜிதம், நஷ்ட ஈடு, கோஷ்டி, பந்த், அமல், ஜோடி, தலா, ஜாமீன், விஸ்வரூபம், சித்ரவதை, ரோந்து, உஷார் நிலை, தர்ணா, விஷம். ஜப்தி, சிபாரிசு, பூஜை, பிரேதம், விநியோகம், பல்டி போன்ற சொற்களை நாளேடுகளில் நாம் படிக்கிறோம். சிற்றூர்கள் வரை சென்று எழுத்துக்களைக் கூட்டிப் படிக்கும் பாமரமக்கள் கையிலும் இருப்பவை இந்த ஏடுகள். இவற்றின் மொழிநடை என்பது சற்றொப்ப கல்வி பயிற்றுதல் போன்றதேயாகும் எனும்போது இவ்வளவு கலப்பு நலம் பயக்குமா?

பிரதமர், ராஜினாமா, சித்ரவதை, ரோந்து, தாக்கல், தர்ணா, விஸ்வரூபம் போன்ற சொற் களுக்குத் தமிழாக்கம் செய்வதில் சிக்கல் நீடிக் கிறது என்பது சரியே! ஆனால் ஜனாதிபதியை குடியரசுத் தலைவர் என்றும் துணை ஜனாதி பதியை குடியரசு துணைத் தலைவர் என்றும், ஆர்ஜிதத்தைக் கையகப்படுத்துதல், வாபஸை திரும்பிப்பெறுதல் என்றும் தலா என்பதை ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் என்றும் பல்டியை பிறழ் சாட்சி என்றும் மொழியாக்கம் செய்தும் பயன்படுத்தலாம். சில ஏடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இந்தப் பயன்பாடு இல்லாமைக்கு நாளேடுகளின் வடிவமைப்பும் ஒரு காரணமாக சொல்லப் படுகிறது.

நாளேடுகள் பத்திகளாகப் பிரிக்கப்பட்டு எட்டுப் பத்திகள் வரை பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பத்தி செய்தி முதல் எட்டு பத்தி செய்தி வரை குறைந்த எழுத்துக்களோடு பயன்படுத்த ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, வாபஸ், ஆர்ஜிதம், தலா, பல்டி, பந்த் என்ற சொற்கள் வசதியாக இருக்கின்றன. இவற்றின் தமிழாக்கச் சொற்களைப் பயன்படுத்தினால் தலைப்புக்கான இடத்தேவை அதிகமாகிறது. இதனால் எழுத்தின் பருமன் குறைகிறது என்ற கருத்து முன்வைக்கப் படுகிறது. இது ஒரு நடைமுறைச் சிக்கல் என்பது உண்மைதான்.

ஆனால் இடத் தேவை என்ற சிக்கலே எழாத சொற்களும் இருக்கின்றன. பாராளு மன்றம்(நாடாளுமன்றம்), ஜோடி(இணை), பலி (சாவு), உத்தரவு (ஆணை), ஜாமீன் (பிணை), ரத்து (நீக்கம்), நஷ்ட ஈடு (இழப்பீடு), விஷம் (நஞ்சு), கோஷ்டி (குழு), சபாநாயகர்(அவைத் தலைவர்), இலாகா (துறை), காரிய கமிட்டி(செயற்குழு), மந்திரிசபை (அமைச்சரவை), மேல்சபை (மேலவை), சிபாரிசு(பரிந்துரை), ஜப்தி (பறிமுதல்), போன்ற சொற்களுக்கு அடைப்புக் குறிக்குள் இருப்பதான தமிழ்ச் சொற்களைப் பயன் படுத்துவதில் எவ்வித சிக்கலும் இல்லை. இவற்றையும் பயன்படுத்தாத போக்கினை மாறா மனநிலையாகவே எண்ணவேண்டியுள்ளது. படிப்பவர்களுக்குப் புரிகிற சொற்கள்தான் இவை என்பது ஒரு நிலை. ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு இது பயன்படாது என்பதையும் எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

வடமொழிச் சொற்கள் கலவாமல் தமிழில் எழுதுவதற்கும் அச்சிடுவதற்கும் நாற்பது ஆண்டு களுக்கு முன்பு வரை இருந்த முனைப்பு இப் போது இல்லை. இத்தகைய சொல்லாட்சிக்கு மாற்றுக் கருத்து கூறுவதும் கடந்த காலத்தைப் போல் இல்லை. ஒரு மொழிக்குள் வேற்றுச் சொற்கள் கலப்பது இயற்கைதான் என்ற கால ஓட்டத்திலான மனநிலை மாற்றம் ஏற் பட்டுள்ளது. மேலும் மத்திய-மாநில அரசு அதிகாரங்களில் ஏற்பட்டுவிட்ட இணக்கச் சூழலும் இதற்குக் காரணமாகும். 

பெட்ரோல், டீசல், மேயர், சர்க்கஸ், பார்கவுன்சில், அப்ரூவர், நோட்டீஸ், ஜெலட் டின், ஆம்புலன்ஸ் போன்ற ஆங்கிலச் சொற் களுக்கு தமிழ் சொற்கள் ஆக்கப் படவில்லை. இவற்றை அப்படியே பயன் படுத்துவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நாடாளு மன்றம் என்ற நல்ல தமிழாக்கம் வந்த பிறகும் தினத்தந்தி குழும ஏடுகள் பாராளு மன்றம் என்பதும், தினமலர் பார்லிமெண்ட் என்பதும் விளங்காப் புதிராகும். இதேபோல் உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் என்பது பலராலும் அறியப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த பின்பும் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என்பதும், ஆணையர், ஆய்வாளர், ஆளுநர், மேல் முறையீடு போன்ற தமிழ்ச் சொற்களை விலக்கி கமிஷனர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், கலெக்டர், ரிசர்வேஷன், ஆஸ்பத்திரி, கவர்னர், அப்பீல் என்று தொடர்வதும் பொறியாளர், பொறியியல், விடுதி, பதவி நீக்கம், இடைநீக்கம், பிடி ஆணை, கலந்தாய்வு, நடத்துநர், ஓட்டுநர் என்ற தமிழ்ச் சொற்கள் உள்ளபோதும் இன்ஜினியர், இன்ஜினியரிங், லாட்ஜ், டிஸ்மிஸ், சஸ்பெண்ட், பிடிவாரண்ட், கவுன்சிலிங், கண்டக்டர், டிரைவர் என்ற ஆங்கிலச் சொற்களே ஆளப்படுவதும் தமிழுக்குத் தடைக்கற்களே.

இவைதவிர பட்ஜெட்,பாஸ்போர்ட், செல் போன், கம்ப்யூட்டர், பிளாஸ்டிக், கலர் டி.வி., சஸ்பெண்ட், ரேஷன், பஸ், லாரி, கார், டிரைலர், ஜெயிலர், டேங்கர் லாரி, ரயில், டெபாசிட், கேமிரா, ரியல் எஸ்டேட், விசா, பட்ஜெட் போன்ற சொற்கள் தொடர்ச்சியாகப் பயன் படுத்தப்படுகின்றன. இவற்றில் பெரும் பாலான சொற்களுக்குத் தமிழாக்கச் சொற்கள் இருந்தும் அவை நாளே(டுகளில் ஆளப்படு வதில்லை.

பேருந்து வழித்தடங்களில் ஆங்கில எழுத்துக் களைப் பயன்படுத்துவதன் மூலம் அவை படங் களாக அனைவர் மனதிலும் பதித்து விட்டது போல் ஒன்று, இரண்டு என்ற எண்களை அச்சிட்டாலும், ஒன் (டிநே) டூ (கூறடி) என்று உச்சரிக்க மனம் பக்குவம் செய்யப்பட்டுள்ளது. குரூப் - 1, குரூப் - 2, ப்ளஸ்-1, ப்ளஸ்-2, நம்பர்-1 என்ற சொற்களில் வரும் எண்களை எவரும் ஒன்று, இரண்டு எனப் படிப்பதில்லை அல்லவா?

நாளேடுகளின் விளையாட்டுச் செய்திகளில் ஆங்கிலச் சொற்களின் பயன்பாடு அதிகமாக உள்ளன. கைப்பந்து (வாலிபால்), கால்பந்து (புட்பால்), மட்டைப் பந்து (கிரிக்கெட்), எறிபந்து (த்ரோபால்), ஓட்டம் (ரன்), சதுரங்கம் (செஸ்) என்று தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப் பட்டா லும், டெஸ்ட் போட்டி, டென்னிஸ், ஹேண்ட் பால், ஹாக்கி, பேஸ்பால், பிலியர்ட்ஸ், கராத்தே, ஜூடோ, பிஸ்டல், ரைபிள், ஓவர், ஹாட்ரிக், மராத்தான், இன்னிங்ஸ், கோல், கிரேண்ட்ப்ரீ போன்ற விளையாட்டுக்கள் மற்றும் விளை யாட்டு சார்ந்த சொற்களுக்கு தமிழாக்கம் செய்ய இயலாத நிலையே உள்ளது. ஹேண்ட் பால் என்பதைக் கைப்பந்து என்று மொழியாக்கம் செய்தால் முந்தைய வாலிபா லோடு இது முரண்படும். பந்துவீச்சு, மட்டை வீச்சு ஆகிய சொற்கள் இருந்தாலும் பவுலிங், பேட்டிங் என்பவையே பயன்படுத்தப்படுகின்றன.

இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன் சமஸ்கிருத சொற் களை கூடுதலாகத் தமிழோடு கலந்து பேசுவது தான் புலமையின் அடையாளமாகக் கருதப் பட்டது. அதேபோல் இன்று ஆங்கிலச் சொற் களைக் கூடுதலாகப் பயன்படுத்துவது கவுரவம் என்ற எண்ணம் உள்ளது. மேலும் உலகமயச் சூழலில் ஆங்கிலம் அறிந்திருப்பது இன்றிய மையாத தேவையென கூறப்படுகிறது. பள்ளி, கல்லூரிக்குச் சென்று பயின்றவர்கள், ஆங்கிலம் அறிந்திருப்பது இயல்பு; பாமர மக்களுக்கு யார் சொல்லித் தருவது. அந்தப் பணியையே நாளேடு கள் செய்கின்றனவா என்று எண்ணத் தோன்றுகிறது. 

தமிழில் தகுந்த சொற்கள் இருந்தும் பிற மொழிச் சொற்களைத் தமிழ் எழுத்துக்களால் எழுதப்படுவதை என்னென்று சொல்வது? கலப்பா? கலப்படமா? கலப்பு வேறு, கலப்படம் வேறு. கலக்கப்படும் பொருளின் அசல் தன்மை யை அழிப்பது கலப்படம். அதுபோலவே தமிழின் தனித் தன்மையை அழிக்கும் வகை யிலோ அல்லது அந்த மொழிக்கே உரிய அழகைக் குறைக்கும் வகையிலோ பிறமொழிச் சொற்களைத் திணிப்பது கலப்படம்தான்.அந்தக் கலப்படத் திற்கு நான் எதிரி என்கிறார் தமிழ் அறிஞர் ம.பொ.சி. அவர்கள். அதே நேரம் தமிழின் வளர்ச்சியைக் கருதி தமிழ் மக்களின் வாழ்க்கை நலனை ஒட்டி தமிழின் தனித் தன்மையையும் அழகையும் கெடுக்காமல் பிறமொழிச் சொற்களை வரவேற்பதில் தவறில்லை, வரவேற்கவும் வேண்டும் என்பதும் அவரது திடமான கருத்து.

இந்த நோக்கில் தமிழ் நாளேடுகள் சிலவற்றில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்கள் கலப்பு அல்ல; கலப்படம் என்று துணியலாம்.

நிர்வாகத்தில் தமிழ் நிலைபெற அரசு ஆணை பிறப்பிக்கலாம்; நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக மாறத் தீர்மானம் நிறைவேற்றலாம்; கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ் கட்டாயம் இடம் பெற காலக்கெடு விதிக்கலாம். நாளேடுகளில் தமிழ் நடம்புரிய என்ன செய்வது? தமிழ் வளர்ச்சித் துறை மூலம் பிறமொழி சொற் கள் கலப்பைக் குறிப்பிட்டும் உரிய தமிழ்ச் சொற் களைப் பயன்படுத்த அறிவுறுத்தியும் கடிதங்கள் எழுதலாம். நாளேடுகளின் உரிமை யாளர்கள், ஆசிரியர் குழுவினர் செய்தியாளர்களை ஒருங் கிணத்து தமிழ்ச் சொல் லாட்சியின் தேவையை எடுத்துரைக்கலாம். தமிழ் இதழ்களுக்கான புழங்கு தமிழ்ச் சொல்லகராதியைத் தயாரித்து அளிக்கலாம். ஆண்டுக்கு ஒரு முறை அதைத் தற் காலப்படுத்தலாம்.

இதுதவிர தேமதுரத் தமிழ் உலகமெலாம் ஒலிக்க நாளேடுகள் தாமாகவே முன்வந்து உறுதியேற்றிடவும் வேண்டும். இதற்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உதவ வேண்டும், நம் தமிழ் செந்தமிழ் - இதனை நலிவுறாமல் காத்து அடுத்த தலைமுறைக்கு அளிக்க மக்கள் இயக்க மும் வலுப்பெற வேண்டும்.

Pin It