சாதாரணமாக எழுதுவது என்பதே பிரம்ம பிரயத்தனம். கதை எழுதுவது என்பது இன்னமும் கடினம். திரைக்கதை எழுதுவது என்பது கதை எழுதுவதைக் காட்டிலும் கடினம். ஆனால், பல எழுத்தாளர்களுக்கு சினிமாவின் வசீகர சக்தி காரணமாக, கதை எழுதுவதுபோல், திரைக் கதையையும் எழுதிவிடலாம் என நினைக் கிறார்கள். ஆனால், அவர்கள் அவ்வாறு எழுத உட்காரும்பொழுதுதான் திசை தெரியாமல் தவிக்கிறார்கள்.

எழுதுவது ஏன் எல்லோருக்கும் கை கூடுவ தில்லை. அப்படியே திறமையானவர்கள் எழுதும் பொழுதும், அது ஏன் கடினமான பணியாக இருக்கிறது. குறிப்பாக கதை எழுதுதல், படைப் பிலக்கியம் என்பது கடினமான பணிதான்.

ஒரு பிரபல இந்திய எழுத்தாளர் சொன்னார், “நான் எழுதவேண்டுமானால், நான் செய்ய வேண்டியதெல்லாம் என் கம்ப்யூட்டர் மேiஜை யை நோக்கி நடந்து அதன் முன் உட்கார வேண்டியதுதான். ஆனால், நான் அவ்வாறு செய்யாமலிருக்க எனக்கு நானே நூறு காரணங்களைச் சொல்லிக் கொள்கிறேன்.” அடிப் படையில் அவர் சொல்வது இதுதான்: எழுது வதற்கு ஒருவித மனோநிலை வேண்டும். ஒருவித உந்துசக்தி வேண்டும். அவற்றைவிட முக்கியமாக ஓர் ஒழுக்கம், ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்பதுதான்.

திரைக்கதை எழுதுவதும் அடிப்படையில் எழுத்து வேலைதான். இதற்கும் அதே கட்டுப் பாடும் ஒழுக்கமும் தேவைப்படுகிறது. கூடவே சினிமா குறித்த அறிவும், ஒருவித தியாக மனப் பான்மையும் திரைக்கதை எழுதத் தேவை. ‘அது என்ன தியாக மனப்பான்மை?’ என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். நீங்கள் வெறும் திரைக்கதை எழுத்தாளராக மட்டுமே இருந்து, இயக்குநர் வேறொருவராக இருக்கும்பட்சத்தில் உங்கள் திரைக்கதையால் சினிமாவுக்கு கிடைக்கும் நற்பெயர், உங்களைவிட இயக்குநருக்கே அதிக மாகப் போய்ச் சேரும். அதை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை உங்களுக்குத் தேவை. அதைத்தான் தியாக மனப்பான்மை என்று கூறினேன். அது குறித்து விவரமாக பின்னர் பார்ப்போம்.

கதை என்பது என்ன? எழுத்தாளன் தன் கற்பனாசக்தியின் உதவியுடன், தன் எழுத்துத் திறமையால் நடந்த ஒன்றை அல்லது நடக்காத ஒன்றை விவரிப்பதா?

கட்டுரை என்றால், நடந்த ஒன்றை, உண்மையைத் தன் எழுத்து திறமையால் விவரிப் பதா?

கதையில் நடந்தது நடந்தபடியே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உண்மை, உண்மையாகவே இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. அப்படியானால் கதை உண்மைக்கு மாறானதா? அல்லது எதிரானதா?

ஊழலைக் குறித்து கதையும் எழுதலாம், கட்டுரையும் எழுதலாம். இரண்டிலுமே சொல்லப்படுவது உண்மைதான். கட்டுரையில் உண்மையானது நேரடியாக இரட்டை பரிமாணங் களில் சொல்லப்படுகிறது. கதையில் உண்மை வேறொரு பரிமாணத்தில், ஆழமாக, முப்பரி மாணங்களில் சொல்லப்படுகிறது. ஆனால், இதே கதையை சினிமாவில் சொல்லும்பொழுது, நான்கு பரிமாணங்களில், ஏன் நான்குக்கு மேற்பட்ட பரிமாணங்களில்கூட வெளிப்படும். அப்படி வெளிப்படுத்த உதவுவதுதான் திரைக்கதை. எனவே, திரைக்கதை எழுத, எழுத்தாளன், தன் எழுத்தாளனுக்கான திறமையை மட்டும் உபயோகப்படுத்தினால் போதாது. திரைக்கதை எழுதும்போது, ஒரு பொறியியல் வல்லுநர்போல் எழுத்தாளன் கட்டுமானப் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. இதற்கு சினிமா, சினிமா மொழி குறித்த புரிதல் இன்றியமையாததாகிறது. குறிப்பாக, சினிமா மொழியின் வீச்சு இன்று மக்களிடையே எந்த அளவில் உள்ளது என்பது பற்றிய புரிதலும் திரைக்கதை அமைக்க அடிப் படையாகிறது. பொதுவாக நிலவும் மக்களின் சினிமா மொழி புரிதலின் அளவை மீறி படங்கள் வரும்பொழுது அவை தோல்வியடைகின்றன.

கிரிஸ்டோபர் நோலன் இயங்கி சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் ‘தி இன்ஸெப் ஷன்’ உலக அளவில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டு பெரிய அளவில் பேசப்பட்ட படம். ஆனால் இந்தியாவில் இப்படத்தை அதன் பிரம்மாண்ட மும் புதுமையும் பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத் தினாலும், படத்தின் கதையும் கதைப் போக்கும் புரியவில்லை என்று மக்கள் அதை நிராகரித்தனர்.

திரைக்கதை எழுத எழுத்தாளனாக இருக்க வேண்டுமா? அல்லது சினிமா ஆர்வலனாக இருக்கவேண்டுமா? அல்லது இரண்டுமாக சேர்ந்து இருக்கவேண்டுமா? திரைக்கதை எழுத நினைக்கும் ஒவ்வொருவனுக்கும் இந்த கேள்விகள் நிச்சயமாக மனதில் எழும். சினிமாவுக்கு திரைக்கதை எழுதும் பொழுது சிறந்த திரைக்கதை எழுத்தாளர்கள், அடிப்படையில் எழுத்தாளராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் திரைக்கதை எழுதும்பொழுது அவர்கள் தங்களின் எழுத்தாளனுக்கான திறமையை உபயோகப்படுத்துவதில்லை. மாறாக, திரைப் படம் எடுக்கப்போகும் இயக்குநர் மற்றும் குழு வினருக்கு ஓர் அடிப்படை வரைபடத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள்.

அடிப்படையாக, எழுத்தாளனுக்கு எழுத தனிமை தேவை. பல எழுத்தாளர்கள் (மிகச்சிறந்த எழுத்தாளர்கள் உட்பட) எழுதும் செயலை ஓர் அந்தரங்க செயலாக பார்க்கிறார்கள். அந்த அந்தரங் கத்துக்குள் நுழைய மற்றவர்களுக்கு உரிமை யில்லை. ஆம். அந்தரங்கம் புனிதமானது. நோபெல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தா ளர் கேப்ரியல் கார்சியா மார்க்குவஸ் தான் எழுதும் செயல்பாட்டை பின்வருமாறு விவரிக்கிறார்:

“நான் எழுத உட்காரும்பொழுது அது எனக்கு மிக முக்கியமான தருணம். அப்போது நான்-நான் மட்டுமே இருப்பேன். நான் ஒரு புத்தகத்தை எழுதும்பொழுது அதற்குத் தேவையான அடிப் படை விவரங்களை ஏராளமாக சேகரித்து வைத்திருப்பேன். அந்த அடிப்படை விவரங்கள் என் அந்தரங்க வாழ்க்கையோடு மிக நெருக்க மானது. உள்ளாடையை மட்டும் அணிந்தி ருக்கும்போது நம்மை யாராவது பார்த்துவிட்டால் ஒரு சங்கடம் ஏற்படுமே அது போன்றது. தொப்பி யிலிருந்து பறவையை எடுக்கும் மந்திரவாதி அதை எப்படி எடுத்தான் என்று சொல்லவே மாட்டான். அது போன்றதொரு நிலை அது. நீங்கள் எழுதும் புத்தகம் ஏற்கனவே உங்களுக்குள் உங்கள் கட்டுப் பாட்டில் இருக்கும், உங்களுக்கும் உங்கள் கருப் பொருளுக்கும் இடையே நிலவும் அற்புத உறவு அது. அதுதான் நம் உத்வேகத்தின் மூலமாக இருக்கும். சில காதல் எழுத்தாளர்கள் சொல்வது போல் நம் காதில் ஒலிக்கும் தெய்வீக முனகல் அல்ல அது. அத்தகைய சூழலில் எழுத உட்காரும்போது, எல்லாமும் தானாக பெருகி ஓடும். வாழ்வின் மிகப்பெரிய சந்தோஷமான தருணம் எனச் சொல்வேன் அதை...”

இதுபோன்று எத்தனையோ எழுத்தாளர்கள் தங்களின் எழுதும் அனுபவம் குறித்து சொல்லி யிருக்கிறார்கள். ஆனால், திரைக்கதை எழுதுதல் என்பது முற்றிலும் வேறான அனுபவம். அங்கு அந்தரங்கம் என்பது கிடையாது. அப்படியே இருந்தாலும் அது வேறுவிதமான அந்தரங்கம். அங்கு எல்லாமே பட்டவர்த்தனம். பல நேரங்களில் அது ஒரு கூட்டு உழைப்பு. அதன் நுணுக்கங்களும் அற்புத தருணங்களும் சினிமாவை, சினிமா மொழியை, மக்களிடையே நிலவும் சினிமா மொழி புரிதலை அடிப்படையாகக் கொண்டது.

வெறும் எழுத்தாளனாக இருப்பவன் கதையைப் பார்ப்பதற்கும், திரைக்கதை எழுத்தாள னாக இருப்பவன் கதையைப் பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.

சமீபத்தில் ரோமன்ஸ் போலன்ஸ்கிஇயக்கி இந்த ஆண்டு வெளிவந்த தி கோஸ்ட் ரைட்டர் என்ற படத்தைப் பார்த்தேன். அப்படத்தில் இருந்த அதே புத்துணர்வு, கதைசொல்வதில், குறிப்பாக சினிமா மொழியினூடாக கதைசொல்வதில் இருந்த அதே அதீத மோகம் இப்போதும் அப்படியே இருக்கிறது. இன்னும் முதிர்ச்சியோடு இருக்கிறது.

‘கோஸ்ட் ரைட்டர்’ - தமிழில் இதை ‘நிழல் எழுத்தாளன்’ என்று சொல்லலாமா? இப்படத்தின் கதை அடிப்படையில் விறுவிறுப்பான திரில்லர் என சொல்லலாம். படத்தின் நாயகன் ஓர் இளம் எழுத்தாளன். அவனின் சில புத்தகங்கள் வெற்றிகர மாக பேசப்பட்ட புத்தகங்கள்.

தன் நண்பன் மூலம் அவனுக்கு நிழல் எழுத்தாளனாக இருக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. நிறைய பணம். அவனும் ஏற்றுக்கொள்கிறான். அவன் எழுத வேண்டியதோ, முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் சுயசரிதை. முன்னாள் பிரதம மந்திரியாக இருந்தாலும் அரசியலில் இன்னமும் தீவிரமாக இருக்கிறார். குறிப்பாக அமெரிக்க ராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் இன்னமும் அவருக்கு நெருக்கம் இருக்கிறது.

இப்போது பிரதம மந்திரி ஒரு தீவு மாளிகையில் வசிக்கிறார். அவரைக் காண உடனடி யாக அவன் போக வேண்டும். உண்மையில் அந்தச் சுயசரிதை ஏற்கனவே வேறொரு நிழல் எழுத்தாள னால் எழுதி முடிக்கப்பட்டு விட்டது. முடிக்கும் தருவாயில் அந்த எழுத்தாளன் அந்தத் தீவில் மர்மமான முறையில் இறந்து போகிறான். அது தற்கொலை என்று சொல்லப்படுகிறது. அவன் எழுதிய சில விஷயங்கள் பிரதம மந்திரிக்குப் பிடிக்கவில்லை. அதை மாற்றி, மெருகூட்டத்தான் இப்போது அவன் அங்கே செல்கிறான். அங்கு சென்ற பிறகுதான் அவனுக்குத் தெரிகிறது, ஏற்கனவே எழுதிய எழுத்தாளன் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறான். தன் பணியோடு இறந்துபோன எழுத்தாளனின் மரணத்திற்கான காரணங்களை ஆராய முனைகிறான். அது அவனை பல சிக்கல்களுக்கு இழுத்துச் செல்கிறது. படம் விறுவிறுப்பான வேகத்தில் ஒரு திரில்லராக பயணிக்கிறது.

படத்தின் கதை பிரபல ஹாலிவுட் படங்களுக்கே உரிய விறுவிறுப்பான கதையாக இருந்தாலும், போலன்ஸ்கி கதையை அணுகியி ருக்கும் விதமே வேறு. எழுத்தாளர்களுக்கு எழுது வதைப் பற்றி எழுதுவதில் எப்போதுமே விருப்பம் உண்டு. எழுதுவது என்பது பரபரப்பான அதே நேரத்தில் கடுமையான தொழில். எழுத்தாளர்கள் உலகுக்கே அதை சொல்ல முற்படுவார்கள். படத் தின் தொடக்கத்தில் எழுத்தாளனின் அறிமுகத்தில் போலன்ஸ்கி இதை அற்புதமாக வெளிப் படுத்துவார்.

படத்தின் கதாநாயகன் எழுத்தாளன் மட்டுமல்ல, நிழல் எழுத்தாளனும்கூட. நிழல் எழுத்தாளனாக இருப்பதில் எத்தனை பணம் கிடைத்தாலும், அத்தொழிலில் இயற்கையாகவே ஒரு தோல்வி புதைந்துள்ளது. அடிப்படையில், அவன் தன் படைப்பை தன் பெயரில்லாமல் விற்கிறான். அதைவிட படைப்பாளிக்கு ஒரு பெரிய தோல்வி அல்லது விரக்தி இருக்கமுடியுமா? படைப்புத் தொழிலின் அடிநாதமே, தான் முக்கிய மானவன் என்று உலகிற்குச் சொல்கின்ற அவா ஒவ் வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது என்பது. நிழல் எழுத்தாளன் விஷயத்தில், அவன் எவ்வளவு பெரிய படைப்பாளியாக இருந்தாலும், எல்லாமே எதிர்மறையாக உள்ளது. இந்த நுணுக்கமான விஷயத்தை போலன்ஸ்கி படம் முழுக்க கதை சொல்லும்பொழுது அற்புதமாக வெளிக் கொணர் வார்.

சினிமாவில் கதை என்பது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது அல்ல. மாறாக, கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டது. ஒரு படம் வெற்றிப் பெற்றுவிட்டால், அது போன்ற கதைகளையே தொடர்ந்து படமாக எடுப்பர். அதை ஃபார்முலா படங்கள் எனச் சொல்வதுண்டு. ஃபார்முலா படங்கள் இப்படித்தான் கதை சொல்ல வேண்டும் என்கிறது. ஆனால், படைப் பாளியின் படங்கள், தங்கள் கோட்பாட்டிற்குள் இப்படி சொன்னால் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்றுணர்ந்து கதை சொல்வார்கள். சினிமாவில் கதை என்பது அடிப்படையில் சட்ட திட்டத்திற்கு உட்பட்டது அல்ல. மாறாக கோட்பாட்டிற்கு உட்பட்டது.

சினிமாவில் கதை என்பது கண்டங்களைக் கடந்து, காலத்தைக் கடந்து எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியூட்ட வேண்டும். அதற்கு கதைகள் இப்போதுதான் முதன்முதலாக சொல்லப்படுவது போல் இருக்க வேண்டும். ஏற்கனவே மக்கள் விரும்பி கேட்ட கதை போல் இருக்கக்கூடாது. நம் இந்திய கலாசாரத்தில் அக்கா தங்கை என்று இருந்தால், அக்காவுக்குத்தான் முதலில் திருமணம், பின்னர்தான் தங்கைக்குத் திருமணம் என்பார்கள். ஆனால், உங்கள் கதை கோட்பாட்டின்படி, தங்கைக்கு முதலில் திருமணம் செய்யவேண்டும் என்றால், தங்கைக்குத்தான் முதலில் திருமணம் நடக்கவேண்டும். அவ்வாறு நாம் செய்யும் பொழுது பண்பாட்டின், மனித உறவு களின் புதிய சிக்கல்களுக்குள், பரிமாணங்களுக்குள் பயணிக் கிறோம். அடிப்படையில் ஃபார்முலா கதைகள் வீட்டிற்குள்ளேயே இருக்கும். கோட்பாடு அடிப்படையிலான கதைகளோ வீட்டை விட்டு நெடுந்தூரம் பயணிக்கும். அவ்வாறு பயணிக்கும் போது, கதாபாத்திரங்களின் முரண்பாடுகளினூடே புதிய மனிதத்தைப் பார்க்கிறோம். மக்கள் சினிமாவுக்குச் செல்வதே புதிய மகிழ்கூட்டும் உலகில் நுழையத்தான். நம்மைப்போலவே ஒரு மனிதன், ஆனால் அவன் நம்மால் முடியாததை செய்கிறான் என்று படம் பார்ப்பவர்கள் உணர வேண்டும். படத்திற்காக கதை எழுதுபவர்கள் இதை ஒருபோதும் மறக்கக்கூடாது.

ஒரு நாவலை எடுத்துப் படித்தால், பக்கம் முழுக்க வார்த்தைகள் அடர்த்தியாக இருக்கும். ஒரு திரைக்கதை புத்தகத்தை எடுத்துப் பார்த்தால், பக்கங்களில் நிறைய வெற்றிடங்கள் இருக்கும். அதைப் பார்த்தவுடனே கதை எழுதுவதைவிட திரைக்கதை எழுதுவது சுலபம் என நினைத்துவிட வேண்டாம். காரணம் அந்த வெற்றிடங்கள்தான் நிறைய விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது.

நாவல் ஒன்றை எழுதும்பொழுது, எழுத் தாளன் தன் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யலாம். கதையோட்டத்தில் திருப்தி இல்லாதபோது, வார்த்தைஜாலம் கொண்டு மறைக்கப் பார்க்க லாம். ஆனால், திரைக்கதை எழுதும் பொழுது இவை சாத்தியமில்லாத விஷயங்கள். காரணம், சினிமாவில் ‘கேமரா’ என்ற கருவி உண்டு. அது எல்லாவற்றையும் பட்டவர்த்தன மாக்குவது மட்டுமல்ல, எல்லாவற்றையும் பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கும். உங்கள் கதை யோட்டத்தின் போலித்தனங்கள் அங்கே வெளிச்சம் போட்டுக் காட்டப்படும்.

சினிமாவுக்கான ஒரு கதையை நீங்கள் உருவாக்கும்பொழுதோ அல்லது தேர்ந் தெடுக்கும்பொழுதோ முதலில் எழும் கேள்வி “இது வெற்றிபெறுமா?” என்பதுதான். என்னைப் பொறுத்தவரை இது முட்டாள்தனமான கேள்வி. தமிழ் சினிமா, இந்திய சினிமா மற்றும் உலக சினிமா எல்லாவற்றிலுமே பெரும் வெற்றி பெற்ற படங்களும், பெரும் தோல்வியடைந்த படங்களும் ஒரேவித நோக்கோடுதான் தயாரிக்கப்பட்டன. ஆனாலும் சில வெற்றி பெறுகின்றன, சில தோல்வி யடைகின்றன. இது ஏன்? இந்தக் கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. காரணம், யாருக்கும் பதில் தெரியாது. அப்படி ஒருவேளை பதில் தெரிந்திருந்தால், சினிமா தன் கவர்ச்சியை மொத்தமாக இழந்திருக்கலாம். சினிமாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் எல்லோருமே தேடுவது ஒன்றுதான். அது நல்ல கதை. சினிமாவின் அகோரப் பசி என்பது எப்போதும் நல்ல கதைகளுக்குத்தான்.

நல்ல கதைகள் என்று சொல்லும்போது அது சினிமாவுக்கான நல்லக் கதைகளாக இருக்க வேண்டும். சில நேரங்களில் வீட்டிலோ, வெளியிலோ பரபரப்பாக இயங்கிக் கொண்டி ருக்கும்போது தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு படத்திலிருந்து, ஒரு காட்சி உங்களைச் சுண்டி யிழுக்கும். அப்படம் சாதாரணமான நட்சத்திரங் கள் நடித்த ஃபார்முலா படங்களாகக்கூட இருக்க லாம். நீங்கள் பார்க்கும் காட்சி, நகைச்சுவை காட்சியாக இருக்கலாம், காதல் காட்சியாக இருக்கலாம், உணர்வுபூர்வமான காட்சியாக இருக்கலாம். உங்களைச் சுண்டியிழுக்கும் அந்தக் காட்சி உங்களை மெய்மறந்து சிரிக்கச் செய்யும், உங்கள் உணர்வுகளின் புதிய பரிமாணங்களை மலரச் செய்யும், உங்கள் உள்ளத்தைத் தொட்டு கண் களை ஈரமாக்கும். உங்களின் அருகில் உள்ளவர்கள் உங்களை சற்றே கூர்ந்து நோக்கினால், உங்களின் இந்த திடீர் பரிமாணத்தை அவர்களால் அறிய முடியும். இந்த அனுபவம் எனக்கு பலமுறை நேர்ந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும், சினிமா வின் புரிந்துகொள்ள முடியாத வசீகரத்தன்மையை குறித்து வியந்திருக்கிறேன். இதைத்தான் ஓர் எழுத்தாளர் மிக அழகாகச் சொன்னார், “உங்களின் காதலனோ காதலியோ கணவனோ அல்லது மனைவியோ முற்றிலும் அறிந்திராத வகையில் உங்களை மலரச் செய்யும் சக்தி சினிமாவுக்கு உண்டு.”

சினிமாவின் முன்னே அதன் பார்வையாளர் கள் வழக்கத்தைக் காட்டிலும் புத்திசாலியாகி விடுகிறார்கள். அரங்கில் மற்ற ரசிகர்களோடு அமர்ந்து நீங்கள் படம் பார்க்கும்போது, திரையில் ஓடும் படத்தைவிட நீங்கள் புத்திசாலியாக உணர்வீர்கள். அதனால்தான், படத்தின் கதை யோட்டத்தை, கதாபாத்திரங்களின் செயல் பாடுகளை முன்கூட்டியே (சரியாக) அனு மானித்துக் கொண்டிருப்பீர்கள். முக்கியமாக, எழுத் தாளன் இங்கு அறியவேண்டியது, சினிமா ரசிகர்கள் அவனைவிட, அவன் கதையை விட புத்திசாலியாக இருப்பார்கள் என்பதைத்தான். சினிமா ரசிகர்களை விட தான் புத்திசாலி என நினைக்கும் எழுத்தாள னால் ஒருபோதும் சினிமாவுக்காக கதை எழுத முடியாது.

சினிமாவில் கதை என்பது என்ன சொல்கி றோம் என்பது மட்டுமல்ல, எப்படிச் சொல் கிறோம் என்பதும்தான். என்ன சொல்கிறோம் என்பது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால், எப்படி சொல்கிறோம் என்பதுதான் முக்கியமான விஷயம். உங்கள் கதை கணவன்-மனைவியை பற்றியதாக இருக்கலாம், ஆண்-பெண்ணின் சிக்கலான உறவைப் பற்றியதாக இருக்கலாம், நட்பின் நுட்பங்களைப் பற்றியதாக இருக்கலாம், கிராம வாழ்க்கையைப் பற்றியதாக இருக்கலாம், நகர வாழ்க்கையைப் பற்றியதாக இருக்கலாம், பண்டை வரலாற்றைப் பற்றியதாக இருக்கலாம். உங்கள் கதை எதைப் பற்றி இருந்தாலும், அது பற்றி யாராவது, ஏதாவது சொல்லியிருப்பர். நீங்கள் அதே விஷயத்தை மீண்டும் கதையாக சொல்லும் பொழுது, உங்களை வேறுபடுத்திக் காட்டுவது நீங்கள் வெளிப்படுத்தும் தனித்தன்மைதான். இந்தத் தனித்தன்மை என்பது வலிந்துகாட்டும் கிறுக்குத் தனமான தனித்தன்மை அல்ல. கடும் உழைப் பினால் உருவாக்கும் தனித் தன்மையாக இருக்க வேண்டும். மரபணு சோதனை மூலம் எப்படி தனி மனிதர்களை கண்டு பிடிக்கிறோமோ, அதுபோலத் தான் இந்த தனித்துவத்தைக் கொண்டு கலைஞர் களைக் கண்டுபிடிக்கிறோம்.

வெறும் கதைசொல்லிகளாலும், எழுத்தாளர்களாலும் மட்டுமே கதை சொல்லப்பட்டிருந்த காலத்தை விட இப்போது கதையின் முக்கியத்து வம் பல மடங்கு அதிகரித்துள்ளது. காரணம், கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கதையை சினிமா வாயிலாக மக்கள் பார்க்கிறார்கள். இன்றைய உலகமயமாக்கல் சூழலில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 24 மணி நேரமும் மக்கள் கதைகளை தொலைக்காட்சி, வானொலி, இணையம் போன்றவற்றின் மூலமாக அனுபவப் படுகிறார்கள். கதை என்பது பரந்துபட்ட பல்முனை கலைவடிவமாய் பரிணமிக்கிறது. நாம் விழித்தி ருக்கும்போது செய்யும் எல்லா வேலைகளிலும் அது நம்மை வியாபிக்கிறது. ஏன் உறங்கும் போதும், நம்மை அது கனவில் துரத்துகிறது. கதை இன்று நம் வாழ்க்கைக்கே மூலாதார கருவியாக மாறிவிட்டது.

கதை, திரைக்கதை குறித்து தொடர்ந்து வரும் இதழிலும் பார்ப்போம்.

Pin It