தமிழ் இலக்கிய வரலாற்றை கால வரிசைப்படி தொகுப்பதே வழமையாக உள்ளது. தேசிய இயக்கம், திராவிட இயக்கம், பொது வுடைமை இயக்கம் என இயக்க பங்களிப்பு வரிசைப்படியும் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது. இதன் ஒரு பகுதியை நிறைவேற்றுவதாக வெளிவந் துள்ளது தீக்கதிர் நாளேட்டின் இணை ஆசிரியர் சு.பொ. அகத்திய லிங்கம் எழுதியுள்ள பொதுவுடைமை வளர்த்த தமிழ் எனும் நூல்.

கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் விளைவு என்ன? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ள நிலையில், இம்மாநாட்டின் நல்விளைவுகளில் ஒன்றாக இந்நூல் வெளிவந்துள்ளது எனலாம். தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றி வரும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் மாநாட்டினை யொட்டி வெளியிட்ட செவ்வியல் தமிழ் வரிசை நூல்களில் இதுவும் ஒன்று.

நூலுக்கு வழங்கியுள்ள அணிந்துரையில் பண்பட்ட படைப்பாளி அண்ணாச்சி பொன்னீலன் “தோழர் அகத்திய லிங்கம் அவர்கள் தமிழ்ப் பற்றுடன் மார்க்சியத்துக்குள் அடி யெடுத்து வைத்தவர். அந்த உணர்வு குன்றாமல் தொடர்ந்து மார்க்சியத்தையும், மனித நேயத்தையும் பேணி வருபவர். தமிழையும், மார்க்சியத்தையும் இரு கண்களாக நேசிப்பவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழின் மீது தாளாத காதலும், மார்க்சியத்தின் மீது மாறாத பற்றும் நூலாசிரியரை இரு கரையாக நின்று இந்நூலை வழி நடத்திச் சென்றுள்ளது என்று கூறலாம். அதே நேரத்தில் அணிந் துரை வழங்கியுள்ள தமுஎகச பொதுச்செயலாளர் ச.தமிழ்ச் செல்வன், “எவருடைய பங்களிப்பையும் விட்டு விடாமலும், குறைத்து மதிப்பிடாமலும் அவர் மார்க்சிய இயக்கத் தலைவர் களில் ஒருவர் என்ற போதும் சுய விமர்சனமாக சில பகுதிகளில் அன்றைய பொதுவுடைமை இயக்கத்தின் பார்வைகளைச் சுட்டிக் காட்டியும் ஒருவிதமான அறிவுலகம் சார்ந்த நேர்மையை இந்நூல் நெடுகிலும் கடைப்பிடித்துள்ளார்.” என்று கூறியுள்ளதும் பொருத்தமானதே.

பொதுவுடைமை இயக்கம் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதி யுள்ள நூல்களின் பட்டியலாகவோ அல்லது கருத் தோட்டங் களின் தொகுப்பாகவோ மட்டும் இந்நூல் அமையவில்லை. மாறாக, மொழிவழி மாநிலம் என்ற பொருத்தமான நிலை பாட்டை முன்வைத்து நவீன இந்தியா கூட்டாட்சியாகவும், குடியரசாகவும் அமைவதற்கு கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு துவங்கி தமிழ் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத பணிகள்வரை விரிவாக இந்நூலில் விவரித்துள்ளார்.

தேசிய இயக்கத்தில் பூத்த கவிஞர்கள், படைப்பாளிகள் பலர் இருந்த போதும், காங்கிரஸ் கட்சி இந்தி மொழியை திணிப்பதி லேயே குறியாக இருந்தது. மறுபுறத்தில் திராவிட இயக்கம் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற பெயரில் ஆங்கில மொழி அகன்று விடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தது. அன்றைக்கு இந்த இரு வழிகளையும் நிராகரித்து தாய்மொழியை பொதுவுடைமை இயக்கம் முன்நிறுத்தியது. இதற்கு மொழிப்பற்று மட்டும் காரணம் அல்ல, மாறாக, மொழி குறித்த அறிவியல்பூர்வ பார்வையும் காரணமாக அமைந்தது என்பதை இந்நூல் பொருத்தமான மேற்கோள்களுடன் விளக்குகிறது.

கம்யூனிஸ்ட் கட்சி முறையாக தமிழகத்தில் அமைக்கப் படும் முன்பே அந்த சிந்தனையோட்டம் தமிழகத்தை ஈர்க்கத் துவங்கிவிட்டது என்று கூறும் சு.பொ.அ. வரலாற்றை புதுப்பாதையில் செலுத்தும் இந்த சமூக விஞ்ஞானத்தால் தமிழுக்கு புதிய புதிய சொற்கள் கிடைத்ததையும், சிந்திக்கும் முறையிலும், வரலாற்றை வரையறை செய்யும் முறையிலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டதையும் பதிவு செய்துள்ளார்.

சிங்காரவேலர், திரு.வி.க., ஜீவா துவங்கி இன்றைக்கு உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கிற முற்போக்கு படைப்பாளி கள் வரை தமிழுக்கு செய்துள்ள பங்களிப்பை ஆய்வு அறத் தோடு பதிவு செய்துள்ளார்.

பொதுவுடைமைவாதிகள் என்று கூறும்போது, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமின்றி இதர தீவிரவாதக் குழுக் களையும் சேர்த்தே பொருள் கொள்ள வேண்டுகிறேன். தமிழ் குறித்த பார்வையில் இவர்களுக்குள் வேறுபாடு இருந்தா லும் இவர்களின் பங்கு காத்திரமானது என்று முன்னுரையில் நூலாசிரியர் கூறியுள்ளார். முடிந்தவரை நேர்மையோடு இதை பதிவு செய்துள்ளார்.

அறிவியல் இயக்கம், புத்தக இயக்கம், பதிப்புலகம், சொல்லாக்கம் போன்ற இலக்கியத்துறைகள் மட்டுமின்றி இசைத்துறை, திரைத்துறை என பல்வேறு துறைகளில் பொது வுடைமையாளர்கள் தமிழுக்கு தந்துள்ள பங்களிப்பை விரிவான ஆய்வின் மூலமும், நெடிய உழைப்பின் மூலமும் பதிவு செய்துள்ளார்.

நாடு விடுதலை பெற்ற போது, மொழி குறித்த ஒரு பெரும் குழப்பத்தை தேசிய இயக்கம் உருவாக்கியது. அதன்பின் மொழி குறித்த பார்வையே இல்லாமல் போய்விட்டது. மொழியை ஒரு அரசியலாக்கி முன்வைத்த திராவிட இயக்கம் நவீன இலக்கிய போக்குகளை உள்வாங்கிக் கொள்வதில், புரிந்து கொள்வதில் பெருமளவு தேங்கி விட்டது. ஆனால், தலித்தியம், பெண்ணி யம், சூழலியம், பின் நவீனத்துவம் என அவ்வப்போது எழும் இசங்கள் குறித்து பொதுவுடைமை இயக்கம் ஒரு நிதானமான அணுகுமுறையைப் பின்பற்றி வருகிறது என்பதையும் நூலா சிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கணினி உலகில் தமிழின் இடம் எங்கே? என்று கேள்வி எழுப்பி தேசியம், திராவிடம், தலித்தியம் என ஒவ்வொரு சாரார் பங்களிப்பையும் ஆவணப்படுத்த வேண்டாமா? அங்கீகரிக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பும் நூலாசிரியர் தன்னள வில் பெரும் உழைப்பைச் செலுத்தி பொதுவுடைமை இயக்கத் தின் பங்களிப்பை ஆவணப்படுத்தியுள்ளார். இந்த நூல் பல நூல்களுக்கு முதல் நூலாக விளங்குமாயின் தமிழ் வளர்ச்சிக்கு அது உதவியாக அமையும்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 98.

விலை ரூ.70.

Pin It