இ.எம்.எஸ்.ஸும் ஜோதிபாசுவும் மிகச் சிறந்த தலைவர்கள் எனத் தெரிந்திருப்பது ஒன்று; சிறார் பருவம் முதல் அவர்களது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களையும் வளர்ச்சியையும் உயர்வையும் விவரங்களோடு அறிந்திருப்பது மற்றொன்று. இவற்றில் இரண்டாவதைப் பெற உதவுகிறது என்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள இஎம்எஸ் நம்பூதிரிபாட்: வேதத்திலிருந்து மார்க்சியத்திற்கு என்ற நூலும், அணையாத ஜோதிபாசு என்ற நூலும்.

கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு, தொழிற்சங்க, விவசாயிகள் சங்க வரலாறு, மாவட்டங்களின் மார்க்சிஸ்ட் கட்சி வரலாறு, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிகச் சிறந்த தலைவர்களின் வரலாறு, தேச சுதந்திரத் திற்காகக் கம்யூனிஸ்ட்டுகள் தீரமுடன் போராடிய வரலாறு, பிற நாடுகளின் புரட்சிகரத் தலைவர்களின் வரலாறு. . . என ஏராளமான வரலாற்று நூல்களை எழுதிக் குவித்தவர் என்.ராமகிருஷ்ணன். கம்யூனிஸ்ட் இயக்கம் பற்றிய, கட்சித் தலைவர்கள் பற்றிய விவரம் ஒன்று அறிய வேண்டியிருப்பின் முதலில் என்.ராமகிருஷ்ணன் எழுதிய நூலில் தேடவேண்டும். அப்படி அறியவும், ஆவணமாகவும் விளங்குபவை இவர் எழுதிய நூல்கள்.

இஎம்எஸ், ஜோதிபாசு-இந்த இருபெரும் தலைவர்களோடு நீண்ட காலமாக நேரடியான பழக்கமும், தோழமை நட்பும் கொண்டிருந்த தமது பெருமித உணர்வோடு இந்த இரு நூல்களையும் எழுதியுள்ளார் நூலாசிரியர் என். ராம கிருஷ்ணன்.

இந்த இரு நூல்களையும் ஒரே சமயத்தில் சேர்த்துப் படிக்கிற போது, இஎம்எஸ்-ஜோதிபாசு இருவர் குறித்த பல ஒப்புமை களைக் காணமுடிகிறது.

சமஸ்கிருத வேதங்களைக் கற்று நம்பூதிரி சமூகத்தில் புகழ்பெற்ற வேத வித்தகனாக தன் மகன் வளரவேண்டு மென்கிற இஎம்எஸ் தாயாரின் ஆசையும், லண்டனில் பாரிஸ்டர் படிக்கும் தன் மகன் கல்கத்தாவில் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞ ராக ஆக வேண்டும் என்கிற ஜோதிபாசு தந்தையின் ஆசையும் நிறைவேறாமலேயே போகிறது. பாசமிக்க இந்தப் புதல்வர்கள் இருவருமே அதை நிறைவேற்றவில்லை! இருவருமே தங்களை தேச சுதந்திரப் போராட்டத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டமைத்து வளர்ப்பதிலும் அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். இவர்கள் இருவருமே சுதந்திரப் போராட்டத்தில் காலடியெடுத்து வைத்தது பதின் பருவத்தில்.

இஎம்எஸ் சுதந்திரத்திற்குப் பிறகான முதலாவது கம்யூனிஸ்ட் அரசின் முதலாவது முதலமைச்சர் எனும் பெருமையைப் பெறுகிறாரென்றால், ஜோதிபாசு இந்தியா விலேயே முதன்முறையாக 24 ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராக விளங்கிய பெருமை பெறுகிறார். இருவரும் தங்கள் ஆட்சியில் முதலில் நிறைவேற்றியது நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கான மெய்யான நிலச்சீர்திருத்தம். 1964-இல் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு மார்க்சிஸ்ட் கட்சி உருவான போது அமைக்கப்பட்ட அரசியல் தலைமைக்குழுவில் இந்த இரு தலைவர்களுமே அதன் உறுப்பினர்கள்.

இஎம்எஸ் கேரளத்தின் பெருமைகளை உயர்த்தியவரென்றால் ஜோதிபாசு வங்கத்தின் பெருமைகளை உயர்த்திய வர். இருவருமே வாழ்க்கையில் எளிமை. அழுக்கடைந்த அரசியல் சூழலில் இவர்கள் தூய அரசியலின் அடையாளங் கள்.

இத்தகைய மாமனிதர்களைப் பற்றிய இந்த வாழ்க்கை நூல்களைப் படிக்கையில் அவர்களைக் குறித்தும் அவர்களின் அரும்பணிகளைக் குறித்தும் நிறைய அறிந்து கொள்ள முடிகிறது. கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல, மற்றவர்களும் படிக்க வேண்டிய நூல்கள் இவை.

தேச சுதந்திரத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடிய காலங்களில் மட்டுமல்ல; கட்சியின் மீது அடக்கு முறைகளும் தடைகளும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் பிறகு காங்கிரஸ் ஆட்சியிலும் ஏவப்பட்ட காலங்களிலும் இஎம்எஸ்-ஜோதிபாசு ஏற்ற சிறைவாசங்கள், தலைமறைவு வாசங்கள் ஏராளம் என்பதை இந்நூல்களில் அறிகிறபோது மனம் சிலிர்க்கிறது.

இ.எம்.எஸ்.ஸும் ஜோதிபாசுவும் இந்தியாவின் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர்கள் மட்டுமல்ல; சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெருந்தலைவர்களில் இருவர் என்பதையும் இந்நூல் சிறப்பாகச் சொல்கிறது.

நல்ல நூல்களை வாங்குவதற்குச் செலவழிப்பது ஒரு செலவல்ல; அது அறிவுச் சேமிப்புக்கான நல்ல முதலீடு.

- தி.வரதராசன் 

“இஎம்எஸ்.நம்பூதிரிபாட்: வேதங்களிலிருந்து மார்க்சியத்திற்கு”

வெளியீடு: ஈரிஸ் அசோசியேட்ஸ், 8/61, மூன்றாவது குறுக்குத் தெரு, சாய்நகர் இணைப்பு, சென்னை-600 092.

விலை: ரூ. 45.

 

“அணையாத ஜோதிபாசு”

கிழக்குப் பதிப்பகம், எண்: 33/15, எல்டாம்ஸ் சாலை,

ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018.

விலை: ரூ. 70.

Pin It