பசங்க படத்தின் மூலம் தமிழ்ச்சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிய இளம் இயக்குநர் பாண்டிராஜின் இரண்டாவது படம் வம்சம். மோகனா மூவீஸ் -- கலைஞரின் மகன் மு.க.தமிழரசு-தயாரிப்பில் தமிழரசுவின் மகன் மு.க.அருள்நிதியைக் கதாநாயகனாகக் கொண்டு வந்துள்ள படம்.

பசங்க படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு களத்தில் பாண்டிராஜ் இயங்கியிருக்கிறார். புதுக்கோட்டை வட்டாரத்தில் வாழ்கிற தேவர் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட 11 வம்ச வகையறாக்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. தேவர் மற்றும் கவுண்டர் போன்ற உயர்சாதிகளை மையமாகக் கொண்டுதான் தமிழில் ஏராளமான படங்கள் வந்துள்ளன.

ஒடுக்கப்பட்ட இனங்களின் வாழ்வை மையமாகக் கொண்டு படங்கள் வருவதில்லை என்பது இந்நேரம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

எனினும் பிற படங்களில் வருவதைப்போல சாதிப் பெருமிதம் பேசும் படமாக இது இல்லை. காதல், எதிர்ப்பு, பழி வாங்குதல் என்கிற நமக்கு நீண்டநெடுங்காலமாகப் பழகிவிட்ட ஒரு கதை யாக விரிகிறது. முற்றிலும் ஒரு சாதிய சமூகமான நம் தமிழ்ச் சமூகத்திலிருந்து - அதுவும் கிராமத்தி லிருந்து ஒரு கதையைத் தேர்வு செய்யும் போது எவ்வித சாதி அடையாளமும் தெரியாமல் படம் எடுத்தால் அது சுத்த ஏமாற்று வேலை.

பழகிய கதையை முற்றிலும் புத்தம்புதுசாக நாம் உணரும் வண்ணம் திரைக்கதையை வடி வமைத்து இயக்கியுள்ள விதம் பாராட்டத் தக்கது. படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை திரையில் விரியும் காட்சிகள் ஒவ்வொன்றும் அழுத்தமான ஒரு வட்டார அடையாளத்தோடு அவ்வட்டாரப் பண்பாட்டுக் கோலங்களுடன் எடுக்கப்பட்டிருப்பது இப்படத்தின் மிகப்பெரிய பலம். கோயில் திருவிழாக்காட்சிகள் இவ்வளவு விரிவாக படம் முழுவதும் தொடர்ந்து வரும் விதமாகத் தமிழின் வேறெந்தப் படத்திலும் வந்த தில்லை எனலாம். படத்தின் மிகப்பெரிய பலமும் சிறிய பலவீனமும் அதுதான். ஒளிப்பதி வாளர் மகேஷ் முத்துச்சாமி முற்றிலுமாகத் தன் கேமிரா வுடன் இந்த வட்டார வாழ்க்கையில் இந்தக் கதையில் தன்னைக் கரைத்துக்கொண்டு படத்தை முன் நகர்த்திச் செல்லுகிறார். உண்மையில் படத் தின் கதாநாயகன் மகேஷ் முத்துச்சாமியின் கேமிராதான். கேமிராவுக்கு மிகச் சரியான ஈடு கொடுக்கும் பின்னணி இசையை புதிய இசை யமைப்பாளர்(ஏ.ஆர்.ரகுமானுடன் பணியாற்றியவர் என்பதற்கான அடையாளங்களோடு) தாஜ்நூர் வழங்கியுள்ளார். பாடல்கள் நிறைவளிக்கவில்லை என்பதை சிறப்பான பின்னணி இசைக்காக மன்னித்துவிடலாம்.

பசங்க படத்தில் தொடங்கிய செல்போன்கள் மீதான ‘தாக்குதலை’ பாண்டிராஜ் இப்படத்தில் மேலும் முன்னெடுத்துச்சென்று மனம் விட்டுச் சிரித்து ரசிக்க வைத்துள்ளார். மரங்களின் உச்சி யிலும் தண்ணீர்த் தொட்டி உச்சியிலும் நின்று (டவர் கிடைக்காததால்) அக்கிராம மக்கள் பேசும் காட்சிகள் குறிப்பிடத்தக்கவை. செல்போன் சேனல் அதிபர்கள் பார்த்தால் ‘நாண்டுக்கிட்டுத்தான் சாக வேண்டும்’.

அருள்நிதி, சுனைனா, ஜெயப்பிரகாஷ், கிஷோர் என எல்லொருமே நடிப்பில் சரியான பங்கைச் செலுத்தியிருக்கிறார்கள். இவர்களில் சுனைனாவின் நடிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. பிரமாதமான முகபாவங்களுடனும் அலட்டல் இல்லாமலும் இயல்பாக நடித்திருக்கிறார்.

கருப்பு கஞ்சா முதல் படத்திலிருந்தது போலவே எல்லாப்படங்களிலும் வந்து காமெடி பண்ணுவது தொடர்கிறது.நமது சிரிப்பு நடிகர்கள் பெரும்பாலானவர்களுக்கு இது சாபக்கேடாக அமைந்துள்ளது.ஒரே மாதிரியான உடல்மொழி, வசன உச்சரிப்பு இழுவைகள் என....

படத்தில் தொடர்ச்சியாக அடுத்து என்ன என்ன என்கிற எதிர்பார்ப்பும் ஒருவித திகிலும் இடைவேளை வரை கச்சிதமாகக் கொண்டு செல்லப்பட்டு பிற்பாதியில் பல கதைகள் வந்து குறுக்கிட்டு அந்த வேகம் இல்லாது போய் விடுகிறது. தொழில்நுட்ப ரீதியாகப் படம் உச்ச பட்ச துல்லியத்தோடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. பாண்டிராஜின் சினிமாக் கலைநுட்பத்தில் ஒரு முதிர்ச்சியும் தேர்ச்சியும் படம் முழுவதும் காணக் கிடைக்கிறது. பசங்க படத்தில் போல சமூகத்தை லேசாகவேனும் உலுக்குகிற கருத்துக்களுக்கு இப் படத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வில்லை. கதையில் முற்போக்காக என்ன இருக்கிறது? அது முக்கியமல்லவா? படம் முழுக்க சர்வ சாதாரணமாகக் கொலைகள் நடக்கின்றன. புதுகை வட்டாரத்தின் ஒரு குறிப்பிட்ட சாதியின் வாழ்க்கை முற்றிலும் இப்படியேதான் இருக்கிறதா? அவர்களில் பெரும்பாலானோரின் வாழ்க்கையைத் தின்னும் பிற பிரச்னைகள் லேசாகத் தொட்டுச் செல்லப்பட்டிருக்கலாமே என்று தோன்றியது-போகிற போக்கிலேயே செல்போன்களைச் சாடியதுபோல.

சினிமா மொழியில் கலாபூர்வமான கேமிரா வினால் சொல்லப்பட்ட (மீண்டும் மீண்டும் கேட்ட) ஒரு கதையாக வம்சம் வந்துள்ளது. இன்னும் வலுவான கதையுடன் அடுத்த படத்தில் பாண்டிராஜ் வரவேண்டும் என வாழ்த்துகிறோம். எதிர்பார்க்கிறோம்.

Pin It