மகாகவி பாரதியின் பாடல்களுக்கு அவை உருவான சூழல்களும் காரணிகளும் உண்டு. அவற்றை அறிகிறபோது பாரதி குறித்த நமது அறிவு இன்னும்- மேலும் விரிவடைகிறது. நூலாசிரியர் என்.ராமகிருஷ்ணன் முக்கிய 18 பாரதி நிகழ்வுகளைச் சொல்லி அவற்றின் பின்னணியில் பாரதியிடமிருந்து பிறந்த 18 பாடல்களை முன்வைத்துள்ளார்.

சகோதரி நிவேதிதா, கலெக்டர் விஞ்சுவிற்கு சிதம்பரனார் சொன்ன பதில், லஜ்பத்ராய் துதி, செந்தமிழ் நாடு, அம்மாக் கண்ணு பாட்டு, எங்கிருந்தோ வந்தான், பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி, பாப்பா பாட்டு, விடுதலை, புயர்காற்று, பிழைத்த தென்னந்தோப்பு, செல்லம்மா பாட்டு, கரும்புத் தோட்டத்திலே, ஜயமுண்டு பயமில்லை மனமே, ஜயபேரிகை, புதியருஷ்யா, வாழ்க நீ எம்மான், பாரத சமுதாயம் என 18 தலைப்புகளில் இந்நூல் அமைந்துள்ளது.

செல்லம்மா பாரதி, பாரதியின் சகா எழுத்தாளர் வ. ரா, யதுகிரி அம்மாள் முதலான பலரின் நினைவுக் குறிப்புகளை ஆதாரமாக வைத்து, பாரதியின் பாடல்கள் பிறந்ததன் சூழல்களை, நிகழ்வுகளைத் தெளிவுற விவரித்துள்ளார் என். ராமகிருஷ்ணன்.

கல்கத்தாவில் தன்னைச் சந்தித்த பாரதியிடம் 'உங்கள் மனைவியை ஏன் அழைத்த வரவில்லை?' என்று நிவேதாதேவி கேட்ட போது, 'எங்கள் குடும்பங்களில் பொது இடங்களுக்கு மனைவியை அழைத்துச் செல்வது வழக்கமில்லை. . . 'காங்கிரஸைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்' என்று பாரதி கூற, 'சமூகத்தில் ஒரு பாதியை அடிமைப்படுத்தி வைத்தால் மறுபாதி எப்படிச் சுதந்திரம் அடைய முடியும்?' என்று நிவேதிதாதேவி கேட்ட உரத்த கேள்வி பாரதிக்கு பெண்ணைக் குறித்துப் புதிய வெளிச்சம்-புதிய சிந்தனை தோன்றிய நிகழ்வைச் சுவைபட சொல்லி, அதில் பிறந்த 'அருளுக்கு நிவேதனமாய்' என்று தொடங்கும் பாரதியின் பாடலை எடுத்துக் காட்டாய் முன்வைத்துள்ளார்.

பாரதியின் பாடல் பிறந்த சம்பவங்களை இந்நூலில் படிக்கிறபோது பல அரிய தகவல்களை அறிந்து கொள்கிறோம்.

"நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி-செல்வம்மா/ தன்னையே சதியென்று சரணமெய்தினேன்" என்கிற பாடல்- குடும்ப வாழ்க்கைச் சுமையின் பெரும் பகுதியைச் சுமக்கிற தனது அன்புக்குரிய மனைவி செல்லம்மாவைக் குறித்துப் பாடிய பாரதியின் பாடலில், பாரதியின் மறைவுக்குப் பின்னர் செல்லம்மா என்பது கண்ணம்மா என்று மாற்றப்பட்டுவிட்டது என்பது இந்நூலில் புதிய தகவல். இவ்வாறு ஒரு மகாகவியின் பாடலில் மற்றவர் பாட பேதம் செய்வது பெரும் தவறாகும்.

பாரதியின் பல பாடல்களைத் தெரிந்திருப்போம். அத்தோடு அந்தப் பாடல்கள் பிறந்த பின்னணி நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இந்த நூல் நன்கு உதவுகிறது.

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,

421, அண்ணாசாலை

தேனாம்பேட்டை

சென்னை-600018

விலை ரூ. 20-

Pin It