கூத்துச் சித்தர் கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் நூற்றாண்டுவிழா

கூத்துக்கலையில் உலகின் கவனத்தைத் திருப்பிய தொன்மையான புரிசை மண்ணில் (தி. மலை செய்யாறு வட்டத்தில உள்ளது) கலைமாமணி கண்ணப்ப தம்பிரானின் நூற்றாண்டு விழாத் தொடக்கம் சென்ற 2011 அக்டோபர் 1,2,3 ஆகிய மூன்று நாட்களில் இரவு முழுக்க நாடகம், கூத்து, கலை, நூல் வெளியீடு நிகழ்ச்சிகள், கிராமியப் பாடல்கள், தமிழிசை, மேற்கத்திய இசை, சிறுவர்-சிறுமியர் நடனம், வேளாண்மைக் கருத்தரங்கம் என பல்வேறு வண்ணங்களில் கலையின் ஒருமுகப் பார்வையில் மக்களின் பார்வை முழுக்க புரிசை கூத்து மேடையிலே இருந்தது.

நாட்டுப்புறக் கலையின் கூத்துப் பறவைகளுக்கான வேடந்தாங்கலாக ஆண்டுதோறும் நடக்கும் இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்துறைக் கலைஞர்களும் சங்கமிக்கும் இனியதோர் விழா என்றால் மிகையல்ல.

இவ்விழா புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றமும், தென்னகப் பண்பாட்டு மையம், தஞ்சாவூரும் இணைந்து, விழாத் தேரை இழுத்த பெருமைக்குரியவையாகும்.

அக்டோபர் 1 மாலை 7மணிக்கு வைகறை இசைக்குழுவினரின் கிராமியப் பாடல்களோடு துவங்கிய விழா, தெருக்கூத்து பயிற்சிப் பள்ளி மாணவ-மாணவிகளின் வீர விளையாட்டுக்கள் புரிசை மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

விழாவுக்கான தலைமை கண்ணப்ப காசி தன் தந்தை கண்ணப்ப தம்பிரானின் நினைவுகளை தனது வார்த்தைகளில் நிலைப்படுத்தினார். செல்வி அகிலா, கௌரி தமிழிசைப் பாடல்கள் பாடினர்.

புரிசை தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளியில் நிறுவப்பட்டிருந்த கூத்து மகா கலைஞன் கண்ணப்ப தம்பிரானின் திருவுருவச் சிலையினை நிர்த்யோதயா பரதர்-இளங்கோ ஆசிய கலாச்சார மையத்தின் தலைவரும், தஞ்சை ராஜராஜன் விழாவில் ஆயிரம் நாட்டியக் கலைஞர்களை ஒருங்கிணைத்து நடனமாட வைத்த பெருமைக்குரியவரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான சர்வதேச நாட்டியக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் திறந்து வைத்து நெகிழ்ந்து உரையாற்றினார். "கண்ணப்ப தம்பிரான் அவர்கள் கூத்துப்பட்டறையினை துவக்க ஆலோசனை செய்த இடம் சென்னையில் எங்கள் வீடு தான். அது இன்று எந்த அளவிற்கு மிகப்பெரும் பிரபல்யமாகி இருக்கிறது என்பதை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 50 ஆண்டுகளில் நான் முதன் முறையாக புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்து மன்றம் நடத்தும் இந்த விழாவில் கலந்து கொண்டதும், கூத்துக் கலையின் மகா கலைஞன் கண்ணப்ப தம்பிரான் அவர்களுடைய திருவுருவச் சிலையினை நான் திறந்து வைத்ததையும் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் வாழ்நாள் சாதனையாளர் விருதினை மதுரை தோற்பாவை நிழல் கூத்துக் கலைஞர் முருகன்ராவுக்கு பேராசிரியர் மு. ராமசாமி வழங்கிச் சிறப்பித்தார்.

தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளியில் மறைந்த பதினொரு கூத்துக் கலைஞர்களின் திருவுருவப் படங்களை தோற்பாவை கூத்துக் கலைஞர் முருகன் ராவ் திறந்துவைத்தார். விருதுபெற்ற முருகன்ராவைப் பாராட்டி சதானந்த மேனன் பேசினார்.

புத்தக வெளியீடாக காப்ரியல் கார்சியா மார்க்வெஸின்" பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்" தெருக்கூத்துப் பனுவல்-நூலாசிரியர் கண்ணப்ப தம்பிரான் எழுதிய நூலினை பத்மஸ்ரீ தோட்டாதரணி வெளியிட பேராசிரியர் செ. ரவீந்திரன் பெற்று, புத்தகம் குறித்துப் பேசினார்.

சென்னை கலைnக்ஷத்ராவின் கண்ணப்பர் குறவஞ்சி, ருக்மணி அருண்டேல் இயக்கத்தில் நாட்டிய நாடகமும், இறுதியில் புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றத்தின் 'இந்திரஜித்' தெருக்கூத்தும் விடிய விடிய கூத்துக்கான விழாவாக நடைபெற்றது.

'ஸ்பார்கஸ்' உணர்வுப்பூர்வமிக்க பார்வையாளர்களின் இதயத்தைத் தொட்டு, நாடி நரம்புகளை கிளர்த்திவிடும் விதமாக துடிப்புமிக்க நாடகக் கலைஞர்களால் நடத்தப்பட்டது. பாதல் சர்க்காரின் நாடகத்தை இலகுவாக உள்வாங்கிச் சிறப்பாக வெளிப்படுத்தும் இயக்குநர் மு. ராமசாமிக்குப் பாராட்டுக்கள் தான். . . !

இயற்கை விவசாயம் குறித்து பாமயன், செயலர், தாளாண்மை உழவர் இயக்கம் சிறப்புரை நிகழ்த்தினார். "கத்தரிக்கா"-குறும்படம் திரையிடப்பட்டு பாமர மக்களும் புரியும்படி இருந்தது. சமன்வயா, பாலாஜிசங்கர் சென்னை தற்சார்பு இயக்கத்தின் ஆவணப்படம். சிறப்பு. கிரதம், கதகளி நடன நிகழ்ச்சி. இது கலா அரங்கம், கேரளாவின் கலை.

வாலிவதம் இராமாயண தோற்பாவை நிழற்கூத்தும், கட்டியக்காரி சென்னை வழங்கும் கருக்கு பாமாவின் சிறுகதையின் நாடகவடிவம் "மொளகாப்கொடி" நாடகமும் ஸ்ரீஜித் சுந்தரம் இயக்கத்தில் புரிசைக்கு புதுமணத்தை வீசியது. எலிமேடு ஹவேல் கலைமகள் நாடகசபா கட்டபெட்டி, மேட்டூர் வட்ட சேலத்தின் மதுரைவீரன் தெருக்கூத்தும் நடைபெற்றது. நிகழ்வின் மூன்றாம் நாளில் ஆரணி பிரகாஷின் மேற்கத்திய இசை நிகழ்வோடு துவங்கி. . . கண்ணப்ப தம்பிரான் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. புதுடெல்லி யதார்த்தா பென்னேஸ்வரன் இயக்கத்தில் பல புதிய வெளிச்சங்களைத் தந்தது. கூத்து குறித்தும் தம்பிரான் குறித்தும் முதல் ஆவணமாக இது கருதப்படுகிறது.

இலங்கை மண்ணின் ஜனகரளியா, மக்கள் களரி இலங்கையின் சிங்கள-தமிழ்-முஸ்லீம் நடிகர்களோடு "சரண்தாஸ்" நாடகம் தமிழகத்துக்கு அறிமுகமாகி வரும் நாடகம்.

புதுசேரி சப்தர் ஹஸ்மியின் கிராமிய இசைப் பாடல்கள் இடையிடையே மண் வாசகத்தைச் சொல்லி கீதமிசைத்தது.

பரிக்ஷா சென்னை வழங்கும் பாதல் சர்க்காரின் "முனியன்" நாடகம்- ஞாநி இயக்கத்தில் நாட்டின் முதுகெலும்பான விவசாயமும் - உலகமயத்தில் எந்திரங்களின் கோரப்பற்களும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டு நடத்தப்பட்டது.

நிகழ்வில் தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ். கருணா, பத்திரிகையாளர் ஞாநி சிறப்புரையாற்றினர். கவிஞர் ஆரிசன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். இறுதியில் கண்ணப்ப சம்பந்தம் நன்றி கூறினார்.

நடிகர் பசுபதி, செய்யாறு லோகநாதன், கவிஞர் நா. வே. அருள், மு. பாலாஜி, மாவட்டத்தலைவர், தமுஎகச, பூங்குயில் சிவகுமார், சாத்தமங்கலம் அண்ணாமலை, புரிசை ஊராட்சி மன்றத் தலைவர் ஆர். லட்சுமணன், பழனி உள்ளிட்ட தெருக்கூத்து மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

- ஆரிசன்

Pin It