திருப்பரங்குன்றத்துக் கலை-இலக்கிய இரவுகள் என்றாலும் சரி, தெருவோரக் கவியரங்கள் என்றாலும் சரி, இன்னும் இதுபோல மதுரையைச்சுற்றி நடக்கும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளிலும் விடாமல் பங்கேற்க வந்துவிடுவார் ஃபாத்திமா. ஒரு இடத்துக்குப் போகவேண்டுமென்றால் மற்றவர்களைப்போல இல்லை ஃபாத்திமாவுக்கு. யாராவது துணைக்கு வர வேண்டும். அதுமட்டுமல்ல... யாராவது அவரைத் தூக்கிக்கொண்டு வரவேண்டும். ஆமாம், மிகச்சின்ன வயதிலேயே தனது இரண்டு கால்களையும் போலியோவுக்குப் பலி தந்துவிட்டவர் அந்தப் பெண். அந்த நிலையிலும் திறன்கள் பலவற்றையும் வளர்த்துக் கொள்ள எடுத்துக்கொண்டது பகீரத முயற்சி. இலக்கியம், கலை, விளையாட்டு, மேடைப்பேச்சு, எழுத்து, ஓவியம் என்று ஃபாத்திமா தொடாத, சாதிக்காத துறையில்லை. இன்று ஃபாத்திமா ஒரு திரைப்பட இயக்குநர். விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்துவிட்டால் ஊனம் உள்ளிட்ட எந்தப் பிரச்சனையும் தடையே அல்ல என்று இளைய சமுதாயத்தின் இதயங்களில் அறைந்து சொல்லும் ஃபாத்திமாவை அண்மையில் காந்தி ஜெயந்தியன்று மதுரையில் நடந்த அவரது முதல் முயற்சியான 'மா' படத் தொடக்க விழாவின்போது செம்மலருக்காகச் சந்தித்தோம்:
எப்படி இயக்குநராகும் எண்ணம் வந்தது?
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பல்வேறு கலை-இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தேன். பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள் என்று கடந்தன நாட்கள். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றினேன். எழுத்தாளர் சங்கத்தில் நிறையக் குறும்படங்கள் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அதில் நீண்ட காலமாகவே ஒரு நாட்டம் இருந்தது. திப்பு சுல்தான் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கத் தொடங்கினேன். ஆவணப்படம் என்றால் ரொம்ப சவால்கள் நிறைந்த துறை அது. களத்தில் அலைந்து திரிய வேண்டும். திப்புவின் வரலாற்றுச் சுவடுகள் இந்தியா முழுவதும் பரவலாகக் கிடக்கின்றன. மைசூர் ஸ்ரீரங்கப்பட்டணம் தொடங்கி டெல்லி வரை செல்லவேண்டும். திப்புவின் வாரிசுகளும் பல இடங்களில் சிதறிக்கிடக்கிறார்கள். இந்த மெகா திட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே முடித்திருந்த நிலையில் பிரபல கலை இயக்குநரும், பல முன்னணித் திரைக் கலைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும் கலைவிழி அறக்கட்ளையின் நிறுவனர் பேராசிரியர் மதன் கேப்ரியல் அவர்களின் உதவியோடு நான் இந்தத் துறைக்கு வந்தேன். கடும் பயிற்சிக்குப் பிறகுதான் நான் ஒரு இயக்குநர் தகுதியைப் பெற்றேன்.
கடும் பயிற்சி என்றால்?
முதலில் என் போன்ற நூற்றுக்கணக்கானவர்களை அழைத்து பல்வேறு திறனறியும் போட்டிகளை நடத்தினார்கள். மொத்தம் 14 போட்டிகள். நான் 10 போட்டிகளில் தான் பங்கேற்றேன். அத்தனையிலும் நான்தான் முதல் இடத்தில் வெற்றி பெற்றேன். பேராசிரியர் மதன் கேப்ரியல் என் திறமைகளில் நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆனால் இந்தப் போட்டிகளுக்கு நடுவர்களாக வந்தவர்கள் எல்போருமே சாதாரணமானவர்களில்லை. அவரவர் துறைகளில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் தான். அவர்கள் அத்தனை பேர் வாயிலும் உச்சரிக்கப்பட்ட ஒரே பெயர் ஃபாத்திமா பீவி தான். இரண்டு நாட்கள் நடந்த இந்தப் போட்டியின் முடிவில் கலை-இலக்கியம் சார்ந்த திறமைகளில் சிறந்துவிளங்குபவர் ஃபாத்திமா தான். அவருக்கு முறையான பயிற்சி அளித்தால் கண்டிப்பாக அவரைத் திரைத்துறைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்பதே அவர்கள் முடிவாக இருந்தது. சென்னை ஃபிலிம் ஸ்கூலில் என்க்கு திரைக்கதை எழுதுதல், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என்று ஒரு திரைப்படத்தின் எல்லா அம்சங்களிலும் பயிற்சியளித்தனர். ஒரு இயக்குநர் என்பவர் ஒரு கப்பலின் கேப்டன் போன்றவர். அவருக்கு எல்லா அம்சங்களிலும் ஞானம் இருத்தல் அவசியம் என்ற அடிப்படையில் எனக்கான பயிற்சி இருந்தது.
இரண்டு ஆண்டுகள் படிக்கவேண்டிய இந்தப் படிப்பை நான் நான்கே மாதங்களில் முடித்தேன். பல மாடிக் கட்டிடத்தின் படிகளில் தினமும் முட்டி தேயத்தேய ஏறிப் படித்ததன் பலனாக இன்று ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பளித்தால் என்னால் தனித்தே அதைப் பண்ணமுடியும் என்கிற அளவுக்கு ஒரு தைரியத்தையே என்னுள் உண்டு பண்ணிவிட்டாது. ஒளிப்பதிவாளர், நடன இயக்குநர் என்று என்னோடு சேர்ந்து மொத்தம் 23 பேருக்கும் அவரவர் துறைகளில் பயிற்சியளித்தனர். நான் மட்டுமல்ல, இந்தப் படத்தில் வேலை செய்யப்போகிற அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களுமே ஊனமுற்றோர் என்று சாதாரணமாகச் சொல்லப்படும் மாற்றுத்திறனாளிகள் தான். உடலளவில்தான் அவர்கள் ஊனமுற்றவர்களே தவிர அவரவர் சார்ந்திருக்கும் துறைகளில் அவர்கள் எல்லோருமே நல்ல திறமை பெற்றவர்கள்தான். இந்தப் படம் முழுக்க முழுக்க மாற்றுத் திறனாளிகளாலேயே உருவாகி, உலகளவில் பேசப்படப் போகிறது என்பது மட்டும் உண்மை. எங்களுக்குச் சிறப்பு அனுமதியையே தந்திருக்கிறது ஃபெஃப்சி அமைப்பு. கலைவிழி நிறுவனமும், எங்களது தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் கூட்டமைப்பும் இணைந்துதான் இந்த முழு நீளத் திரைப்படத்தை உருவாக்குகிறது.
'மா' என்று அதென்ன அப்படியொரு பெயர் வைத்திருக்கிறீர்கள்?
மா என்பதற்கு 27 அர்த்தங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். மா என்றால் ஒரு குழந்தையின் முதலி ஒலி. மா என்றால் உயிரினங்களின் முதல் ஓசை. மா என்றால் மாற்றுத் திறனாளி. மா என்பது வல்லமை பொருந்தியது, ஆளுமைக்கானது, வளர்ச்சியுடையது, பெருமையுடையது, பிரம்மாண்டமானது இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஏனென்றால், எங்கள் கதை ஒரு பிரளயத்தையே உண்டாக்கப்போகிற ஒன்று.
உங்கள் உடல் சார்ந்த பிரச்சனை குறித்து...
நான் 6 மாதக் குழந்தையாக இருந்தபோதே எனக்குப் போலியோ தாக்கியது. அம்மா என்னென்னவோ முயன்று பார்த்தார்கள். மருத்துவங்களெல்லாம் கைவிட்ட நிலையில் நான் தவழ்ந்து பழகிக்கொண்டேன். என் குழந்தைப் பருவம், பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம் என்று இன்று வரையிலும் நான் தவழ்ந்து கொண்டேதான் இருக்கிறேன். அதாவது, இப்போதும் நான் குழந்தைப் பருவத்தில்தான் இருக்கிறேன். நான் ஊனமுற்றவள் என்பதாக எந்தவிதமான எண்ணமும் எனக்குள் இல்லவேயில்லை. நீங்கள் பார்க்கிறபோதுதான் அப்படித் தெரிகிறது. உங்களுக்கு இரண்டு கால்கள்தான். ஆனால் தவழ்ந்து போகும் எனக்கோ கடவுள் நான்கு கால்களைத் தந்திருக்கிறார். எனவே, உங்களைவிட நான்தான் அதிக வலிமை பெற்றவள் என்றே என் மனம் நினைக்கிறது. என்னைத் தாழ்வு மனப்பான்மையற்று, எல்லா இடங்களுக்கும் போகவும், எல்லாவற்றிலும் நான் பங்கேற்கவும் இந்த எண்ணமே எனக்குத் துணையாக இருக்கிறது.
இந்த நிலையில் உங்கள் குழந்தைப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
என்னைப் போன்றவர்கள் பலரும் ‘நான் சமுதாயத்தினால் பாதிக்கப் பட்டிருக்கிறேன்’ -என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், எனக்கு அப்படிப்பட்ட சூழல் மிகவும் குறைவு. நான் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவள் என்ற போதிலும் பெரும்பாலும் நான் இந்து சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுடன்தான் அதிகம் விளையாடியிருக்கிறேன். குழந்தைப் பருவத்திலேயே எனக்கு ஒரு மதச்சார்பற்ற பார்வை இதனால் கிடைத்துவிட்டது. என் தோழிகள் யாருமே என்னைக் குறைவாகக் கருதியதில்லை. அவர்கள் என்னையும் தங்களைப்போலவே கருதிப் பழகினார்கள். அதனால், அவர்கள் ஸ்கிப்பிங் கயிறு விளையாடினால் நானும் அதையே விளையாட ஆசைப்படுவேன். அவர்கள் இரண்டு கால்களில் தாண்டினால், நான் நாலு கால்களில் ஒரு புலி பாய்வதைப்போலப் பாய்ந்து தாண்டுவேன். பசங்ளுக்கு நிகராகக் கோலிக் குண்டு விளையாடுவேன். கிட்டி, பம்பரம் விளையாடியிருக்கிறேன். நான் பண்ணாத சேட்டையே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு சாதாரணக் குழந்தைகளைப்போலவே எல்லாமே விளையாடியிருக்கிறேன். ஒரு வேறுபாடு என்னவென்றால், மற்றவர்கள் இரண்டு கால்களோடு நின்றுகொண்டு செய்வதை நான் உட்கார்ந்துகொண்டும், தவழ்ந்தும் செய்வேன், அவ்வளவுதான். நான் வெட்கமோ, கூச்சமோ படாததனால் என் குழந்தைப் பருவத்தில் நான் எதையுமே இழக்கவில்லை. சில குழந்தைகள் ஒதுங்கியே இருந்துவிடும். எங்கள் வீட்டில் எங்கள் அப்பா அப்படி என்னை வளர்க்கவில்லை.
கலைத்துறையில் எப்படி ஈடுபாடு வந்தது?
சின்ன வயதிலேயே எங்கள் அண்ணன்கள் சங்கடமே படாமல் என்னைத் தோள்களிலும், சைக்கிளிலும் தூக்கிக்கொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை இரவுகள், அது நடத்தும் இலக்கியச் சந்திப்புகள் என்று போவார்கள். பலதரப்பட்ட எழுத்தாளர்கள் பேசுவார்கள். எனக்குள் அவை தாக்கத்தை ஏற்படுத்தின. பாரதியும், டால்ஸ்டாயும் இன்னும் பலரது எழுத்துக்களும் எனக்கு உத்வேகமூட்டின. ஆறாம் வகுப்பு படிக்கும்போதே எனக்குள் ஒரு தேடல் துவங்கிவிட்டது. என் தோழர்கள் முதன்முதலில் என் கையில் தந்து படிக்கச்சொன்னது கார்க்கியின் ‘தாய்’ நாவல். அதன் பின்னர் ‘ஜமீலா’.என்னையறியாமலேயே என்னுள் கற்பனைத் திறன் உருவாகி வளரத் தொடங்கியது. ஏழாம் வகுப்பிலேயே பேச்சுப் போட்டியில் ‘பெண் கல்வி’ என்ற தலைப்பில் பேசி முதல் பரிசு வாங்கினேன். பிறகு என்னைப் பார்ததுமே பலரும் ஓட ஆரம்பித்தார்கள். காரணம் வேறொன்றுமில்லை. “ இந்தப் பெண் புத்தகம் கேட்டு நச்சரிப்பாள்” என்றே அவர்கள் ஓடுவார்கள். என்னை ஏதாவது கூட்டங்களுக்குக் கூட்டிக்கொண்டு போங்கள் என்றும் பலரைத் தொந்தரவு செய்துகொண்டிருப்பேன். மேல் நிலைப்பள்ளி வந்ததும் பட்டிமன்றங்கள், பேச்சுப் போட்டி என்று கிளம்பினேன். எதிலும் நானே முதலில் வருவேன்.
கல்லூரியில் படிக்கிறபோது ராமாயணத்தைப் பற்றிய 6 மாதப் படிப்பு ஒன்றை நடத்தினார்கள். மாநில, மாவட்ட அளவில் முதலில் வரும் மாணவர்களை 6 நாட்களுக்கு கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தா கேந்திரத்தில் இலவசத் தியானம், யோகா உள்ளிட்ட பல பயிற்சிகளைத் தருவார்கள். அதில் சேர்ந்த ஒரே இஸ்லாமியப் பெண் நான் மட்டும் தான். வீட்டிலும் கடும் எதிர்ப்பு. நான் எல்லா மதங்களையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று சொல்லிப் பிடிவாதமாக அதில் பங்கேற்றேன். நான் தான் மாவட்டத்திலேயே முதலிடத்தில் அதிலும் வந்தேன். ஆனால் என்னைச் சேர்ந்தவர்களின் எதிர்ப்பால் கன்னியாகுமரிக்குச் செல்ல முடியவில்லை. ‘காந்திய சிந்தனைகள்’ குறித்து நடத்தப்பட்ட வகுப்பிலும் நான்தான் முதலிடத்தில் வெற்றி பெற்றேன். பி. காம் முடித்தபோது என்னை வீட்டில் எம்.காம் படி, பி எச்.டி பண்ணு என்றெல்லாம் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், என் மண்டைக்குள் எழுத்து, இலக்கியம் இவைதானே உட்கார்ந்துகொண்டிருக்கின்றன? பிறகு ஏதாவது வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்று எண்ணியபோதுதான் டி.வி.க்களில் வாய்ப்புகள் வந்தன. அரசியல் மேடைகள், மாதர் சங்க மேடைகள் என்னை அழைத்துப் பேச வைத்தன.
ஓவியத்துறையில் உங்களது நாட்டம் பற்றிச் சொல்லுங்கள்...
பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது விடுமுறைக்கு எங்கள் அம்மா ஊரான பெரியகுளத்துக்குப் போவோம். அப்போது அருகிலிருக்கும் வைகை அணைக்கு அம்மா அழைத்துச் செல்வார்கள். அங்கே ஒரு கிருஷ்ணன் சிலை உண்டு. மற்றவர்கள் வேறு எதையாவது செய்துகொண்டிருக்க, நான் மட்டும் அந்தக் கிருஷ்ணன் சிலையருகே போய் உட்கார்ந்துகொள்வேன். “ அம்மா, உடனே ஒரு வெள்ளைத் தாள் கொடுங்கள்”- என்று கத்துவேன். அந்தக் கிருஷ்ணனை அப்படியே வரைந்துவிடுவேன். “நீ மட்டும் நன்றாக ஓடி ஓடி சுட்டித்தனமெல்லாம் செய்கிறாய். நான் மட்டும் நடக்கக்கூட முடியாதவளாக இருக்கிறேனே?”-என்று அவனோடு ஒரு நண்பனிடம் எப்படிப் பேசுவோமோ அப்படிப் பேசிக்கொண்டிருப்பேன். இத்தனைக்கும் நான் அப்போது எட்டாம் வகுப்பு வந்துவிட்டேன். கிருஷ்ணன் எனக்கு ஒரு நல்ல நண்பன் மாதிரித் தோன்றுவான். அவனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். பிறகு விரும்பி தஞ்சாவூர், ராஜஸ்தானி ஓவியங்களைச் சென்னையில் போய்க் கற்றுக்கொண்டேன். கடவுளர் படங்களின் கலை நயம் எனக்கு எப்போதும் பிடிக்கும். அந்த நகைகள், ஆடைகள், உருவ அமைப்பு இவை எல்லாமே என்னைக் கவர்ந்து வரையத் தூண்டின. 2007 ல் மாற்றுத்திறனாளர்களுக்கான சர்வதேச ஓவியப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றேன். ராஜ் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்று 7 வாரங்கள் ஓவியம் கற்றுக்கொடுத்தேன்.
விளையாட்டுக்களில் உங்கள் ஆர்வம் எப்படியிருந்தது?
நீ உட்கர்ந்த இடத்தில்தான் எல்லாம் செய்வாய், விளையாட்டுத்துறையில் உன்னால் என்ன பண்ண முடியும் என்று பலரும் சவால் விடுவதுபோலப் பேசுவார்கள். அதுவும் நம்மால் முடியும் என்று இறங்கினேன். தென் மண்டல அளவில் நடந்த தடகளப் போட்டியில் குண்டு எறிதல், ஈட்டி எறிதல் எல்லாவற்றிலும் தங்கம், வெள்ளி எல்லாம் வாங்கினேன். மற்றவர்களை விட ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். டேபிள் டென்னிசில் நாட்டம் இருந்தது. சக்கர நாற்காலியில் எட்டு மாதங்கள் நன்றாகப் பயிற்சியெடுத்து தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பங்கேற்றேன். டெல்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி வென்றேன். சர்வதேசப் போட்டிக்கு ஜோர்டானுக்குத் தேர்வானேன். அதற்குள் சினிமா என்ற கலைத்துறை வாய்ப்பு வந்துவிட்டது. பழந்தமிழ்ப்பெண்களின் வீரத்தை நாமும் பெற வேண்டும் என்ற ஆசையில் கத்திச்சண்டை கற்றுக்கொள்ளப்போனேன். வீட்டில் பயங்கர எதிர்ப்பு. ஒரு பெண்ணுக்கு கண்ணே போய்விட்டது என்றெல்லாம் பயம் காட்டினார்கள். நான் பிடிவாதமாக இருந்தேன். அதிலும் நான் மெடல் அடிப்பேன் என்று உறுதியாகச் சொன்னேன்.
மதுரை விளையாட்டு அரங்கத்தில் கத்திச்சண்டை கற்றுக்கொண்டேன். தேசிய அளவில் 2009 ல் சென்னையில் நடந்த போட்டியில், சர்வதேசப் போட்டியில் வெள்ளி வென்றிருந்த பெண்ணையே தோற்கடித்து நான் தங்கம் வென்றேன். இதில் நான் இத்தாலிக்குத் தேர்வானேன். இவ்வளவு சாதித்தும் எனக்குச் சின்ன வயதிலிருந்தே எழுத்துத்துறையில்தான் முழு ஈடுபாடு இருந்தது. மற்ற துறைகளிலெல்லாம் ஒரு வெறியில்தான் ஈடுபட்டேன். என்னாலும் முடியும், நானும் செய்வேன், ஃபாத்திமாவுக்குத் தெரியாததே இருக்கக்கூடாது என்ற வெறியில் செய்தவைதான் இவை எல்லாம். ஆனால் என் ஆத்மார்த்தமான ஆசை என்பது இலக்கியத்துறையில் தான். என் முதல் கவிதை 2007 ல் செம்மலரில் வெளிவந்தபோது எனக்கொரு அங்கீகாரம் கிடைத்தது. தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் கூட்டமைப்பு என்ற அமைப்பில் நான் இப்போது செயல்பட்டு வருகிறேன். ஊனமுற்ற எங்கள் மக்களின் நலன்களுக்கான பல போராட்டங்களில் நான் முன்னின்றிருக்கிறேன். 2008 ல் சென்னையில் கொளுத்தும் வெய்யிலில் எங்கள் முட்டியில் ரத்தம் சொட்டச்சொட்ட நடந்துபோய் முதல்வரைச்சந்தித்து 11 அம்சக் கோரிக்கைகளை நாங்கள் வென்றெடுத்தோம். இலங்கைத் தமிழர்களுக்காக நாங்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தியிருக்கிறோம். உடல் ஊனமுற்றோர் கூட்டமைப்பின் கலைத்துறையின் மாவட்டத் தலைவியாகவும் நான் இருக்கிறேன்.
உங்களைப் போன்ற மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கு, அவர்களின் பெற்றோர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புவீர்கள்?
முதலில் நிறையப் படியுங்கள். தன்னம்பிக்கையை எப்படியாவது வளர்த்துக்கொள்ளுங்கள். நம்மாலும் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையைக் கைவிடாதீர்கள். பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை நொண்டி, முடம் என்றெல்லாம் நீங்களே கேவலப்படுத்தாதீர்கள். எங்கள் அப்பா ஒரு நாள்கூட என்னை அப்படி அழைத்ததேயில்லை. என் அம்மாவின் இடுப்பும், என் அக்காவின் இடுப்பும் பல நாட்கள் எனக்கு வாகனமாக, நாற்காலியாக, கால்களாக இருந்திருக்கின்றன. என் குடும்பத்தினரின் அன்பு இல்லையென்றால் இந்த ஃபாத்திமா இல்லை. நீங்களும் குறைபாடு உள்ள உங்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் இன்னும் எத்தனையோ ஃபாத்திமாக்களை உருவாக்கலாம்.
- சந்திப்பு: சோழ. நாகராஜன்.