தற்போது பத்திரிகைகளில் தொடர்ச்சியாக இடம்பிடித்துவரும் ஒரு செய்தி “லோக்பால் மசோதா” மற்றும் அது தொடர்பான மற்றவை.

ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதா உருவாக்கப்பட வேண்டுமென்றும், அதற்கு ஒரு கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே டெல்லியில் ஏப்ரல் 4 அன்று சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். இதற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான மக்கள் ஆதரவுக் குரல் எழுப்பினர்.

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தையும் அவரது லோக்பால் மசோதா தொடர்பான கோரிக்கைகளையும் அனைத்து பத்திரிகைகளும், தொலைக்காட்சி களும் முக்கியச் செய்தி யாக வெளியிட்டுப் பிரம்மாண்டமாய்ப் பிரபலப் படுத்தின. இதைத் தொடர்ந்து அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் இந்த லோக் பால் பேச்சுத்தான்.

‘உலகப்புகழ்’ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் வேறு பல பெரும் ஊழல்களிலும் சிக்கி மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியினர் மக்களிடம் அம்பலப் பட்டிருந்த சூழலில் ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் மக்கள் மனத்தில் ஒரு கிளர்ச்சியூட்டியது. ஊடகங்களின் பெரும் பிரச்சாரம் அதற்குக் கூடுதல் உதவி யாக இருந்தது.

அன்று 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஹசாரேயின் உண்ணா விரதப் போராட்டமும் அதற்கு மக்களின் பெரும் ஆதரவும் தங்கள் வெற்றிவாய்ப்பை பெரிதும் பாதித்து விடும் என்று அஞ்சிய மத்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அவரது லோக்பால் கோரிக் கையை ஏற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர் ஏப்ரல் 4 இல் ஆரம்பித்த உண்ணாவிரதத்தை ஏப்ரல் 9 -இல் முடித்துக் கொண்டார். அதற்குப் பிறகு லோக்பால் மசோதா மற்றும் கூட்டுக் குழுவினர் பற்றிய பலவிதமான செய்திகள் ஒவ் வொரு நாளும் வந்து கொண்டிருக்கின்றன. இது நடப்பு நிலைமை.

ஏதோ-‘லோக்பால்’ எனும் சொல்லுரு இன்று தான் உருவாக்கப்பட்டது போலவும், இந்த ‘லோக்பால் மசோதா’ கோரிக்கை இப்போதுதான் எழுப்பப்படுவது போலவும் இன்றைய பிரபல பத்திரிகைகளின் செய்தித் தொனியும் தோரணை யும் உள்ளன.

ஆனால், உண்மை என்ன? ஆரம்ப காலத்தில் இந்த லோக்பால் மசோதாவுக்காக உரத்துக் குரல் எழுப்பியதுடன், இத்தகைய ஒரு மசோதா சட்ட வடிவமாக்கப்பட வேண்டுமென்கிற அவசியத்தை முன்நிறுத்தியும் தொடர்ச்சியாகப் போராடியவர் கள் இடதுசாரிகள் - குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

கார்ப்பரேட் முதலாளிகளின் ஏடுகள் இந்த உண்மையை இன்று நினைவூட்டி மக்களுக்கு உரைக்குமா? அந்தப் பெருமையை அந்த ஏடுகள் இடதுசாரிகளுக்கு- குறிப்பாகக் கம்யூனிஸ்ட்டு களுக்கு வழங்குமா? எதிர்பார்க்க முடியாதுதான்!

‘லோக்பால்’ எனும் சிந்தனை உருவானது 1969இல். மொரார்ஜி தேசாய் தலைமையில் உருவான ‘நிர்வாகச் சீர்திருத்தக் குழு’தான் லோக் பால் எனும் சிந்தனையை ஆரம்பத்தில் முன் வைத்தது. ஆனால் அதை அன்று நடைமுறைக்கு வரவிடாமல் முழுமையாக எதிர்த்தது காங்கிரஸ் தான்.

1996 ஆம் ஆண்டு தேவகவுடா தலைமையில் மத்திய அரசு உருவாகும் என்றிருந்தபோது, அந்த அரசை ஆதரிப்பதற்கான முன் நிபந்தனையாக இடதுசாரிகள் - குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள் முன்வைத்த கோரிக்கை ‘லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்’- என்ப தாகும்.

அதைத் தொடர்ந்து தேவகவுடா அமைச்சரவை ஒரு மசோதாவை உருவாக்கியது. ஆனால், அது முழுமையான வடிவம் பெறவில்லை. அதை முழுப் பயனுள்ளதாகச் சீர்திருத்தி நாடாளு மன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான முயற்சிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கும்போதே அந்த அமைச் சரவை அதிகாரத்தைவிட்டுப் போய்விட்டது.

அடுத்து மத்திய அதிகாரத்துக்கு வந்த பிஜேபி இப்படிப்பட்ட ஒரு சட்டம் தேவையில்லை என்று முடிவு செய்தது. அன்றும் இந்த லோக்பால் மசோதாவுக்காகக் குரல் எழுப்பியவர்கள் கம்யூ னிஸ்ட்டுகள்தான்.

பிறகு 2004 ஆம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் தலைமையில் முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இடதுசாரிகளின் ஆதரவுடன் அதிகாரத்திற்கு வருகிற கட்டத்தில் லோக்பால் மசோதா குறித்த விஷயம் முன்னுக்கு வந்தது. அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தில் இந்த லோக்பால் மசோதாவைச் சேர்க்க வேண்டு மென்று இடதுசாரி கள் வற்புறுத்தினர். இதைத் தொடர்ந்து அந்தத் திட்டத்தில் சேர்க்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒப்புக்கொண்டது. இடதுசாரிகளின் நிர்ப்பந்தம் காரணமாக மட்டுமே அன்று அவ்வாறு ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் சமப்பிக்கப்பட்டது. பின்னர் அது ஒரு நிலைக் குழுவின் (ஸ்டாண்டிங் கமிட்டியின்) பரிந்துரைக்கு விடப்பட்டது. அதன் பரிந்துரையுடன் மசோதா நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.

அந்த லோக்பால் மசோதாவில் போதாமை இருந்தபோதும் நாடாளுமன்றத்தின் முன்பு, ஊழலுக்கு எதிரான அப்படியொரு மசோதா வந்தது இடதுசாரிகளின் ஆக்கப்பூர்வமான தலையீட்டினால் மட்டுமே என்றால் அது மிகை யல்ல. அந்த மசோதாவில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதை முழு அர்த்தமுள்ளதாக ஆக்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும் இடதுசாரியினர் சமர்ப்பித்துள்ளனர்.

ஆனால், அந்த மசோதா நிறைவேற்றப் படாமலேயே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

இன்று அன்னா ஹசாரேயின் உண்ணா விரதத்தைத் தொடர்ந்து ‘லோக்பால் மசோதா’ எனும் விஷயம் உயிர் பெற்றுள்ளது.

ஊழல் ஒழிப்புக்கு உருப்படியான ஒரு மசோதா உருவாகுமா, அல்லது ஊழல் அதிகார சக்திகள் இந்த விஷயத்தையே நீர்த்துப்போகச் செய்து விடுவார்களா... பார்ப்போம்.

Pin It