ஜூலியஸ் பூசிக் (1903-1943.) செக்கோஸ்லாவாகிய நாட்டு கம்யூனிஸ்ட் வீரர். இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் நாஜி ஹிட்லர் செக்கோஸ் லாவாகியா மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினான். கொடிய அடக்குமுறையில் அந்த நாடு திணறியது. உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி, தேசத்தை மீட்கும் விடுதலைப் போரில் பூசிக் தம் மனைவியுடன் பங்கேற்றார். ஒரு கம்யூனிஸ்டுக்கே உரிய வீரம்செறிந்த வரலாறு அவருடையது. மிகச் சிறந்த எழுத்தாளரான அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டபோது ஏராளமான சிறுசிறு குறிப்புகளை எழுதி ரகசியமாக வெளி உலகுக்கு அனுப்பிவைத்தார். அதுவே பின்னர் தூக்குமேடைக் குறிப்புகள் என்று நூலாக வெளிவந்தது. உலக சமாதானம் என்ற உன்னதப் பதாகையை உயர்த்திப் பிடித்தவர் பூசிக். நாஜிகளால் பெர்லினில் தூக்கிலிடப்பட்டு மாண்டார்.

இன்று 1943 -ஆம் வருட மே தினம். இதை ஒரு இடைவேளையாகக் கருது கிறோம். இதில் எழுதுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. என்னே என் பாக்கியம். ஒரு வினாடி நேரம் திரும்பவும் கம்யூனிஸ்ட் பத்திரிகை ஆசிரிய னாக வேலை செய்யச் சந்தர்ப்பம்! புதிய உலகப் போராட்டச் சக்தியின் மே தின அணிவகுப்பைப் பற்றி எழுத ஒரு வாய்ப்பு. எத்தகைய அதிர்ஷ்டம் இது!

மே தினத்தைப் பற்றி எழுதப் போகிறேன் என்றவுடன் பட்டொளி வீசிப் பறக்கும் கொடிகளைப் பற்றி எழுதுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள். அதைப் பற்றி எழுதப் போவதில்லை. உணர்ச்சிகரமான சம்பவங்களைப் பற்றி வர்ணிப் பேன் என்று நினைக்க வேண்டாம். அப்படிப்பட்ட வர்ணனைகளை மக்கள் நிரம்ப விரும்புகின்றனர் என்பது உண்மையே. ஆனால், நான் அப்படிப் பட்ட கட்டுரை யையும் தீட்டவில்லை. அப்படிப்பட்ட சம்பவங்களைவிட மிகமிகச் சாதாரண மான நிகழ்ச்சிகளையே இப்போது எழுதுகிறேன். ஏனெனில், இப்போது இவ் விடத்தில், முந்திய வருடங்களில் பிரேக் நகர வீதிகளில் மே தினத்தன்று வானமதிரக் கோஷமிட்டு ஆயிரக்கணக்கான கொடிகளைப் பறக்க விட்டு பவனி வந்த லட்சோப லட்ச ஜனங்கள் பிரசன்னமாகி இருக்கவில்லை. மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில், ஆழி அலைகளைப்போல் சாரைசாரையாக அணிவகுத்துப் போகும் லட்சக்கணக்கான மக்களும் இங்கு இல்லை. லட்சக்கணக்கான பேர் அல்ல; நூற்றுக்கணக்கானவர்கள்கூட இங்கு இல்லை. விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சில தோழர்கள்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் முக்கியத்துவத்தில் அந்த மகத்தான அணிவகுப்பு களுக்கு இது எவ்விதத்திலும் குறைந்ததல்ல. ஏனெனில் இங்கு நாங்கள் பார்க்கும் காட்சி அலாதியானது. இங்கு புதிய உலக சக்திகள் வீதி அணிவகுப்பில் விமர்சிக்கப்படவில்லை. கொஸ்ர நெருப்பு ஆற்றிலே பரீட்சிக்கப்படுகின்றன. நெருப்பு ஆற்றில் எதிர்நீச்சு நீந்தும்போது, அவை பொசுங்கிச் சாம்பலாகிவிடவில்லை; வலுவுள்ள எஃகாக உருவாகின்றன. வீதியில் அல்ல போர் முனை அகழிகளில் நடைபெறும் விமர்சனம் இது. அகழிகளில் சாம்பல் நிறமான போர்க்கள உடையை அணிந்து நிற்கிறோம் நாங்கள்.

மிகமிகச் சிறிய காரியங்களைச் செய்வதன் மூலம் இந்தப் பரீட்சை இங்கு நடத்தப்படுகிறது. போராட்ட உலைக்களத்தில் புகுந்து வராத உங்களுக்கு இதைப்புரிந்துகொள்ள முடியுமோ, முடியாதோ சந்தேகம்தான். ஒருவேளை புரிந்து கொண்டாலும் கொள்ளலாம். நான் சொல்கிறேன். நம்புங்கள்; சக்தி இங்கு தான் பிறந்து கொண்டிருக் கிறது.

காலை. அடுத்த அறையிலுள்ள தோழர் சுவரில் தட்டுகிறார். அது பீத்தோவான் பாட்டின் தாளம். அது காலை வாழ்த்துக்கள். மற்ற நாட்களைவிடப் பலமாக இன்று அவர் தாளம் போட்டு வாழ்த்து கிறார். மற்ற நாட்களைவிட இன்று அது பரவச மாக ஒலிக்கிறது. ஸ்தாயியை உயர்த்திப் பேசுகிறது சுவர்.

இருக்கிற ஆடைகளில் சிறந்ததை எடுத்து உடுத்திக்கொள்கிறோம். எல்லா அறைகளிலும் இப்படியே.

காலைச் சாப்பாடு குதூகலத்துடன் நடக்கிறது. ஏவல் கைதிகள் திறந்த அறைக்கு முன் வரிசையாகக் கறுப்புக் காப்பி, ரொட்டி, தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். தோழர் ஸ்கொரிபா, வழக்கத்துக்கு மாறாக இரண்டுக்குப் பதில் மூன்று பன் ரொட்டிகளை என்னிடம் தருகிறார். அது அவருடைய மேதின வாழ்த்து. உஷாராக இருக்கும் அவர், தன் உணர்ச்சிகளை வெளியிட ஏதாவது சாதாரணமான காரியத்தை இவ்விதம் யோசித்துச் செய்கிறார். பன் ரொட்டிக்கு அடியில், என்னுடைய விரல்களை அவருடைய விரல்கள் இலேசாகப் பிடித்து அழுத்துகின்றன. அதில் உணர்ச்சிகள் பரிமாறிக் கொள்ளப்படு கின்றன. யாரும் பேசத் துணிவதில்லை. கண் ஜாடை காட்டுகிறார்களோ என்று பார்க்க காவல் காரர்கள் எங்களுடைய கண்களையும் விடாமல் கவனிக்கிறார்கள். ஆனால் ஊமைகளுக்குத் தங்களு டைய விரல்களாலேயே மிகவும் தெளிவாகப் பேசிக்கொள்ள முடியும்.

எங்கள் ஜன்னலுக்குக் கீழே பெண் கைதிகள் உடற்பயிற்சிக்காக ஓடுகிறார்கள். மேஜைமேல் ஏறி நின்று, கம்பிகளில் முகத்தை வைத்து நான் அவர் களைப் பார்க்கிறேன்! அவர்கள் ஒருவேளை அண்ணாந்து பார்க்கலாமல்லவா? அவர்கள் என்னை அண்ணாந்து பார்க்கிறார்கள். முஷ்டியை மடக்கி செவ்வணக்கம் செய்கிறார்கள். திரும்பவும் வணக்கம் செய்கிறார்கள். கீழே இன்றைக்கு மற்ற நாட்களைவிடக் குதூகலமாக இருக்கிறது. வாஸ் தவத்தில் குதூகலமாக இருக்கிறது. இதை எல்லாம் காவல்காரர்கள் பார்க்கவில்லை. ஒருவேளை பார்க்க விரும்பவில்லையோ என்னவோ. அதுகூட மே தின அணிவகுப்பில் ஒரு பகுதிதான்.

எங்கள் உடற்பயிற்சிக்கு நேரம் வருகிறது. பயிற்சியை முன்னின்று நடத்தும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது. இன்றைக்கு மே தினம். ஆகவே, நாம் ஏதாவது புதிய பயிற்சியை - காவல்காரர்கள் பார்த்தாலும் பொருட்படுத்தாமல் - செய்ய வேண்டும். முதல் பயிற்சி சுத்தியை ஓங்கி ஓங்கி அடிப்பதுபோன்ற பாவனை. ஒன்று இரண்டு! ஒன்று இரண்டு! அதுபோன்ற பாவனை, சுத்தியும் அரிவாளும் - தோழர்கள் புரிந்துகொள்கிறார்கள். வரிசை முழுவதிலும் ஒரு புன்னகை பரவுகிறது. எல்லோரும் உற்சாகத்துடன் பயிற்சியைச் செய் கிறார்கள். இதுதான் நம் மே தின அணிவகுப்பு தோழர்களே. இந்த அபிநயம்தான் நம் மே தினப் பிரதிக்ஞை. நாம் உறுதியாக இருப்போம்; சாவை எதிர்நோக்கி நடப்பவர்களும் உறுதியாக இருப் போம் - இது தான் அபிநயத்துக்கு அர்த்தம்.

அன்றைக்குத் திரும்புகிறோம். மணி ஒன்பது, கிரம்ளின் மணிக்கூண்டில் பத்துமணி அடிக்கிறது. செஞ்சதுக்கத்தில் அணிவகுப்பு ஆரம்பமாகிறது. கவனியுங்கள். அவர்கள் சர்வதேசிய கீதம் பாடு கிறார்கள். உலகம் முழுவதிலும் ஒலிக்கிறது அந்தக் கீதம். நம் அறையிலும் அது கம்பீரமாக ஒலிக் கட்டும். நாங்களும் அதைப் பாடுகிறோம். பிறகு ஒன்றன் பின் ஒன்றாகப் பல புரட்சிப்பாட்டுக்கள் தொடருகின்றன. நாங்கள் தனிமையில் இருக்க விரும்பவில்லை - இருக்கவுமில்லை. நாம் உலகத் தில் சுதந்திரத்துடன் பாடத் துணிவு கொள்கிறவர் களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் யுத்த களத்தில் சமர் புரிந்து கொண்டிருக்கிறார்கள், நம்மைப் போலவே ...

குளிர்ந் துறைந்த சுவர்கள் கொண்ட

கொட்டடிச் சிறைக்குள்ளே

இருந்து வாடுகின்ற என்றன்

இனிமையான தோழர்காள்

இன்று எங்கள் அணிவகுப்பில்

இல்லை நீங்கள்; ஆயினும்

என்றும் எங்களோடு நீங்கள்

இருக்கிறீர்! இருக்கிறீர்!

ஆம், நாங்கள் உங்கள் அணியில்தான் இருக் கிறோம்.

1943 -ம் வருட மே தினத்தைச் சிறப்பான முறை யில் முடிக்க, 267ம் நம்பர் அறையில் ஒரு காரியத்தை மேற்கொண்டோம். ஆனால் அதுவே முடிவு அல்ல. பெண்கள் வார்டில் ஏவல் வேலை செய்கின்ற பெண் கைதி, செஞ்சேனையின் வழி நடைப் பாட்டைச் சீட்டி அடித்துக்கொண்டே முற்றத்தில் நடக்கிறாள். பாண்டி ஜாங்கா என்ற பாட்டையும், மற்ற சோவியத் பாட்டுகளையும், பிறகு சீட்டியடிக்கிறாள். இவ்விதம் ஆண் கைதி களுக்கு அதிக தைரியத்தை உண்டுபண்ணுகிறாள். அந்தந்த சமயம் செக் போலீஸ் உடுப்பு உடுத்தி யுள்ள மனிதர் என் அறைக்கு வெளியே காவல் புரிகிறார். அவர்தான் எனக்குக் காகிதமும், பென்சிலும் கொண்டுவந்து இரகசியமாகக் கொடுத்தவர். நான் எழுதும்போது யாரும் திடீ ரென்று வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளவே அவர் காவல் நிற்கிறார். அவரும் சீட்டி அடிக்கிறார். மேலும், என்னை இந்த எழுத்து வேலையில் ஈடு படுத்திய செக் காவல்காரரும் சீட்டியடிக்கிறார். இவர்தான் நான் எழுதும் உதிரிக் காகிதங்களை ஒவ் வொன்றாக வெளியே திருட்டுத் தனமாகக் கொண்டுபோய், பிரசுரத்துக்கு உகந்த காலம் வரும் வரையில் மறைத்து வைப்பவர். இந்தத் துண்டுக் காகிதத்துக்காக அவருடைய தலையே போய் விடும். இருந்தாலும், சிறைப்பட்டிருக்கும் இன் றைக்கும், சுதந்திரமாக இருக்கும் நாளைக்கும் இடையே ஒரு காகிதப் பாலத்தைக் கட்டுவதில் இவர் தன் உயிருக்கும் துணிந்துவிடடார். அவர்கள் எல்லோரும் வெவ்வேறு உடுப்பிலும், வேலையி லும் இருந்தபோதிலும், எல்லோருடைய போராட் டமும் ஒன்றேயாகும். அந்தப் போராட்டத்தில் எந்த இடத்தில் நிறுத்தப்பட்டபோதிலும் எத்தகைய ஆயுதம் கையில் கிட்டிய போதிலும், அவர்கள் அதற்கு ஏற்றபடி விட்டுக்கொடுக்காமல் வீரதீர மாகப் போராடுகிறார்கள். ஜீவ-மரணப் போராட் டத்தில் ஈடுபட்டிருக்கும் அவர்களைப் பார்க்கும் போது, வாஸ்தவத்திலேயே அப்படிப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும். ஏனெனில், அவர்களிடம் எவ்வித படாடோபங்களையும் உணர்ச்சி மனோபாவங்களையும், உங்களால் பார்க்க முடியாது.

புரட்சியின் போர் வீரர்கள் மே தினத்தன்று அணி வகுத்துப்போவதை எத்தனையோ தடவை நீ பார்த்திருக்கிறாய். அது கனஜோர். ஆனால் இந்தச் சேனையின் சக்தியைப் போராட்டத்தில் மட்டுமே பார்க்க முடியும். அது வெல்லற்கரியது என்று உணர முடியும். சாவு நீ நினைத்தடி கனமானது அல்ல. வீரம் எந்த ஜோதியினாலும் சூழப்பட்டிருக்க வில்லை. ஆனால் போராட்டம் கொடூரமானது. நீ நினைத்ததைவிடக் கொடூரமானது. அதில் இறுதி வரை தாக்குப்பிடித்து நிற்பதற்கும், இறுதியில் வெற்றியடைவதற்கும் கணக்கிட முடியாத அளவுக்குப் பலம் வேண்டியிருக்கிறது. இந்தச் சேனை நடைபோட்டுப் போவதை நீ பார்க்கிறாய். ஆனால், இதன் பலம் எத்தகையதென்பதை எப் போதுமே சரியாக உணர்கிறாய் என்று சொல்வதற் கில்லை. இது கொடுக்கும் அடிகள் ரொம்ப சாதாரணமானவை; முறையானவை.

இன்றைக்கு இதை நீ சரியாக உணர்கிறாய்.

- ஜூலியஸ் பூசிக் எழுதிய “தூக்குமேடைக் குறிப்புகள்” நூலிலிருந்து

Pin It