கவிதைகள்

பெண்கள் கவிதை எழுதுவ தென்பது தமிழ்ச்சூழலில் புதிய விஷயமில்லைதான். மிக நீண்ட காலத்திற்கு முன்பாகவே பெண் கவிஞர்கள் எழுதத் தொடங்கி விட்டனர். ஆனால், உள்ளடக்க ரீதியில் தற்போது மிகவும் காத் திரமாகவும், வீரியத்தோடும் பெண் கவிதைகள் இன்று முன் வைக்கப்படுகின்றன. தமிழ்ப் பெண் கவிதாயினிகளின் பட்டிய லில் இடம் பெற்ற முக்கியமான பெயர் கோவை மீ. உமா மகேஸ் வரி. கவிதை என்று மட்டும் நின்று விடாமல் மேடைகளில் தமிழ் முழக்கமிடும் உமா மகேஸ்வரியின் இரண்டாவது கவிதைத் தொகுப்புதான் இந்த “எல்லோருக்கும் உண்டு புனை பெயர்”. இவரின் முதல் தொகுப்பு இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த “சுட்டும்  விழிச்சுடர்.”

இத்தனை இடைவெளியென்பது அதிகம்தான் என்றாலும் இன்றும் பெண்களால் இப்படித் தொடர்ச்சியற்றுத்தான் இயங்க முடிகிறது. இது ஒரு அவலமான நிலை. இங்கே இதுதான் தொடர்கதை. பிறந்தகம், புகுந்த கம் என்று இரண்டு விதமான வாழ்க்கைச் சூழலை எதிர் கொள்ளவேண்டிய நிர்பந்தமான ஜீவன்களாகப் பெண்கள் இருப் பதுகண்டும் பெண்கள் பொங்கத் தொடங்கியிருக்கும் காலமிது. இதுபோன்ற இரட்டை வாழ்க்கை நிலைமையை உமா மகேஸ்வரி இப்படிப் பதிவு செய்கிறார்:

ஆசைப்பட்டதையெல்லாம்
அடைய விரும்புகிற
போராட்டத்தில் இளமை.
அடைந்ததையெல்லாம்
துறந்தாக வேண்டிய
கட்டாயத்தில் முதுமை.
 அடடா...
எதிரெதிர் துருவங்களால்
இணைக்கப்பட்டிருக்கிறது
வாழ்க்கை.

இந்த இரட்டைத் தன்மையை ஏற்கிறதாகவும் இல்லை. அப்படி உள்ளதை ஏற்றுக்கொண்டு போகவா பிறவியெடுத்தோம்? அதனால்தான் இன்றைய பெண் எழுத்தாளர்களின் குரல்களில் கலகம் ஓங்கி ஒலிக்கிறது. பெண் களின்பால் மட்டுமன்றி சமூகத்தின் எல்லா அம்சங்களிலும் மாற்றத்தை வேண்டுவதே மானுட நேயமாகும். நமது கவி தாயினிகளிடம் அதனை நிச்சயம் காணமுடிகிறது. அதனால்தான் பள்ளிக்கூடச் சூழலைச் சொல்ல வந்த உமா-

மணியோசை கேட்டதும்
கதவுகளை மோதித் தள்ளி
ஓவென்ற இரைச்சலுடன்
பீறிட்டுக் கிளம்புகிற
மழலையின் குரல்
அடிமைத் தனத்தை எதிர்த்த
கலகக் குரலெனவே
ஒலிக்கிறது. - என்கிறார்.

எனவேதான் “அகத்திலும் புறத் திலுமான எனது அனுபவ நுகர்வு களையும், சக மனிதர்களின் மகிழ்வு, துக்கம், காயம், வலி, கண்ணீர், பெருமிதம், கள்ளத் தனம், காதல், நட்பு ஆகிய உணர் வின் கலவைகளையும் கவிதை களாகக் காட்சிப்படுத்தியிருக் கிறேன்” என்று இந்நூலின் முன் னுரையில் நூலாசிரியரே முன் மொழிகிறார். அதில் அவரது பரந்துபட்ட அனுபவங்கள் மட்டுமல்லாது அவரது விரிந்த பாடுபொருள் பரப்பும் நமக்கு விளங்குகிறது. எனினும் எல்லாத் தளங்களிலும் இயங்க விரும்பும் பெண் மனநிலையை சில குதர்க்க மனிதர்கள் வேறு வித மாகக் கணக்குப் போடும் வக்கி ரத்தையும் அடையாளம் கண்டு, அடையாளம் காட்டுகிறார் தனது கறுப்பு வெள்ளை ராணி கள் கவிதையில் அழுத்தமாக வும் அதே சமயத்தில் பூடகத் தோடும்.

இயற்பெயர்கள் அர்த்தமிழந்து போன இன்றைய யதார்த்தத்தில் சினம் வந்து எல்லோருடைய இயற்பெயர்களையும் சுருட்டி வாயில்போட்டு மெல்லுகிற தாம் காலம். பின்னே, மெய்யப் பன்கள் கூண்டிலேறிப் பொய் சாட்சி சொல்லக்கிளம்பிய நிலை யில் அந்தக் காலமே ஒவ்வொரு வருக்குமான புனைபெயரைக் காதில் ஓதுவதாகச் சொல்வதை வெறும் கற்பனை என்றா எண்ண முடியும்? எத்தனை எத்தனை சேதி சொல்கின்றன இது போன்ற இவரின் கவிதைகள் இந்த நூல் முழுதும்!

காலமெல்லாம் ஒடுக்கப்பட் டுக்கிடந்த பெண்ணினம் விழிப் புறத் தொடங்கியமை எத்தனை யோ விதங்களில் வெளிப் பட்டுக் கொண்டிருக்கின்றன. கவிதை களில் அவர்கள் சற்றே ஓங்கி ஒலிக்கிறார்கள். அதிலும் கோவை மீ.உமா மகேஸ்வரி யின் இந்தத் தொகுப்பு அழகி யல் அம்சங்களிலும் மிளிர்கிற விதத்தால் சிறந்த வாசிப்பனு பவத்தையும் வழங்குகிறது. பெண் மனசைப் புரிந்துகொள்ள இப்படிப்பட்ட கவிதைகளை வாசித்தே ஆகவேண்டும். வாசிக் கவும் நேசிக்கவுமான சிறந்த கவிதைத் தொகுப்பு இது.

வெளிச்சம் வெளியீடு, 1447, அவினாசி சாலை, கிருஷ்ணம் மாள் கல்லூரி அருகில், பீள மேடு, கோவை - 641 004.
விலை ரூ 40.

Pin It