வெள்ளைக்கார நீதிபதி அப்படியொரு தீர்ப்பை தடாலடியாய்ச் சொல்லீட்டார். பிறகென்ன நாட்டுல எவ்வளவு பிரச்சனைகள் வழக்கு மன்றத்துல நிலுவையில இருக்கு. ஒவ்வொண்ணும் அவரு மண்டையைப் போட்டு குடைஞ்சிட்டிருக்கும் போது இந்த மூணு பேரோட நொற நாட்டியம் தாங்க முடியல. எரிச்சல் தாங்கமாட்டாமத்தான் அப்படியொரு உத்தரவை அவர் போட்டிருக்கணும்.

பலராம் நாயுண்டு

கிட்டா நாயுண்டு

சாத்தகி நாயுண்டு

இந்த மூணு பேரும் அண்ணன்தம்பி பங்காளிகள். சிறுசிலிருந்தே உனக்கு நிறைய்ய எனக்கு குறைய்யன்னு ஒண்ணோடு ஒண்ணு வீறாப்புதான். பிற்காலத்துல அவங்கவங்க குடும்பம் நிலம் நீச்சுன்னு ஆனபோதிலும் ஊர்ல முக்கலே மூணுவிசம் இவங்க சொத்துபத்துகளா இருக்கிறதனாலே ஊர்ச் சனங்களையும் மூணாப்பிரிச்சி எதாவது ஒரு சாக்கு போக்குச் சொல்லி சதா ஒண்ணோட ஒண்ணு வெட்டுக்குத்துக்கு ஆளாக்கியும் வீடுகள்ல கூளப்படப்புகள்ல தீ வைக்கிறதும் தான் வேலை.

வெளியே நீபெரிசு நான் பெரிசுன்னு போட்டியாய் அலைஞ்சாலும் மூணுபேரு வீடுகள்ல நல்லது பொல்லதுகள்ன்னா ஒண்ணு கூடிக்கிடுவாங்க. வாழைமரம் தோரணந்தான். பாகவதர் உபன்யாசம் தான் வில்லுவண்டிகள் அணிவகுப்பு தான் விருந்து உபசாரம்ன்னு அதிலொண்ணும் குறைச்சல் இருக்காது.

விழா முடிச்ச அடுத்த நிமிசம் பொம்பளைகள் மூஞ்சியை வெட்டி திருப்பிக்கிட்டுப் போறதும் இவங்க ஆளுக்கொரு மூலையில் துண்டை உதறி தோள்ல போட்டுப் போறதுமான காட்சிகள் நடக்கும். என்னதான் அவங்களுக்குள்ள பிரச்சனைகள் என்றாலும் அடுத்தவனை தங்கள் மொதல்லருந்து முக்காத்துட்டு திங்கவிட மாட்டாங்க. அதிலே மூணுபேரும் ராஜாளிதான்.

இப்படியாப்பட்ட பொழுதுகள்ல ரொம்பநாளா மூணு பேருக்கும் இழுவையில் கிடந்த ஒரு பிரச்சனை இப்பொ ஊதிப் பெரிசாகி கோர்ட் வரைக்கும் வந்திருச்சி.

எத்தனையோ தலைமுறை தத்துவமா சுத்துப்பட்டி ஜனங்கள் மொதக் கொண்டு வந்து கும்பிட்டு போற சுகந்த கணபதி கோயில் முதல் பரிவட்டம் யாரு கட்டுறது என்கிற பிரச்சனையில் இன்றைக்கு வரைக்கும் கூலிச்சனங்கள் மூணு பிரிவினையாய் பிரிஞ்சி அவங்க குடிசைகளுக்கு அவங்களே தீ வச்சுக்கிடறது. காடு கழனியில அடிபிரிசேர்றது. காட்டு வேலைக்கு வந்த தங்களோட பொம்பளை பிள்ளைகளை அசிங்கப்படுத்திக் கிடறதுன்னு இந்த மூணுபேர் சார்பிலே நடந்தபடிக்கு இருந்தது. கடைசியில் கோர்ட் படியேறி மூணுபேரும் பெரிய பெரிய வக்கீல்களை பிடிச்சு தனக்கு ஏன் முதல் மரியாதை பாத்தியப்பட்டதுன்னு விவரிக்க ஆரம்பிச்சாங்க. பல்ராம் நாயுண்டு, அல்லாடி ராமசாமி அய்யங்கார்ன்னு பேர் போன வக்கீலைப் பிடிச்சு தன்னோட பதவி பவிசு தனக்கும் இந்த கணபதிக்கும் உள்ள தொந்தம் செய்த நன்கொடைகள் அன்னதானங்கள் கோயிலுக்கு நேந்துவிட்ட பசு, காளை மாடுகள், எழுதி வைத்த நிலங்கள் இதையெல்லாம் சொல்லி பிள்ளையாரை கடத்திக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தால் தான் விசேசம் என்ற மரபு மாறாமல் அதனோட பூர்வீகமெல்லாம் சொல்லி தனக்குத்தான் கோயில்ல முதல் தீர்த்தம் தரணும்ன்னு தன்னோட நியாயத்தை நிலைநாட்டினார்.

கிட்டா நாயுண்டு 'கில்லாடி கிருஷ்ணசாமி ரெட்டி' ன்னு ஜட்ஜூகளுக்கே சிம்ம சொப்பனமா இருக்கிற வக்கீலைப் பிடிச்சு வந்து முதல் மரியாதையோட ஆதி வரலாறு, அதனோட ஷரத்துக்கள், இதுவரைக்கும் அது எப்பேர்ப்பட்ட ஆளுகளுக்கெல்லாம் கொடுக்கப்பட்டது. மேற்படி சுகந்த கணபதியை இன்னொரு கிராம கண்மாய்க் கரையிலிருந்து தானே திருடி வத்ததற்கான தடயம் சாட்சியெல்லாம் சொல்லி தான் எப்படி அதுக்கு தகுதியானவர்ன்னு தனது வக்கீல் மூலமா வாங்கு வாங்குன்னு வாங்குனதுல ஜட்ஜ் ஒண்ணும் புரியாம தூங்கிப்போனாரு. அப்படி கேக்கிற ஆளுகளே அலுத்துப்போயி தூங்குற அளவுக்கு மணிக்கணக்குல பேசி முடிச்சாரு அந்தக் கில்லாடி.

சாத்தகி நாயுண்டு, 'தடபுடல் திருமலை முதலி' ன்னு மணிக்கணக்குக்கு இவ்வளவுன்னு பீசு வாங்குற வக்கீலை கொண்டு வந்து, பரிவட்டம் கட்டுறதும் முதல் மரியாதை தர்றதும், வடத்தைத் தொட்டு தேரிழுப்பைத் துவக்கி வைக்கிறதும் ஆன சம்பிரதாயங்கள் சம்பந்தமா உள்ளூர் மற்றும் பிராந்திய, மாகாண, சர்வதேசச் சட்டங்கள் என்ன சொல்லுதுங்கிறதை பிட்டு பிட்டு வச்சு, பிள்ளையாரைத் திருடி வைக்கிறதனால் என்ன விசேசம், அந்த தொன்மை எவ்வளவு காலத்துக்கு முன்னாடியே இருந்தது என்ற புள்ளி விபரமும், சாத்தகிக்கு பெண் கொடுத்த வழித் தோன்றல்கள் தான் இந்த ஆகமங்களை தொடங்கி வச்சதுன்னும் மேற்சொன்ன இரண்டு வாதிகளோட கூற்று பொய்யுன்னு போட்டு உடைச்சி சாத்தகி நாயுண்டு பக்க நியாயத்தை விலாவாரியாக விளக்கினார்.

மூணு வருசமா மூணு வக்கீலும் தங்களோட கட்சிக்காரங்கள்ல யாரு பலே திருடன் முதல் கன்னவாளிக்காரன் யாரு கடத்தல்ல நம்பர் ஒண் யாருன்னு பூர்வீகம் அந்தரங்கம் சம்பந்தவழி கொடி வழி எந்தெந்த பரம்பரைன்னு விளக்கும்போது கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டுக்கே போயி வாதாபி கணபதியைத் தொட்டு வாதாபி கணபதியும் சுகந்த கணபதியும் ஒரு கல்லுல வடிச்சதுன்னும், இல்லே இல்லே அந்த வாதாபி கணபதியே இதுதான். அதனாலேதான் இந்த சிலைமேல ஒருவித நறுமணம் இருந்துக்கிட்டே இருக்குது அதனாலதான் இதுக்கு சுகந்த கணபதின்னு பேரு வந்ததாக விவாதம் ரொம்பவும் முந்திப்போய் நின்னது.

இன்னும் ஒருபடி மேலே போய் பல்லவர் காலத்துல சாத்தகி நாயுண்டோட மாமனார் வழித் தோன்றல்கள் சென்னிமலைக் குண்டு ஜமீன்ல திவானாயிருந்தபோது ராஜ்யஉறவு ஞாபகார்த்தமா இங்கே கொண்டுவந்ததுன்னும் இப்படி ஆளுக்கொரு கதைச் சொல்லி வேற வேற காலகட்டங்களைச் சொல்லி இவங்களோட வயசுக்கும் பிள்ளையாரோட கோயில் ஸ்தாபித காலத்துக்கும் பொருத்தமில்லாமல் பொருத்தி வாதாபி முடிச்சாங்க.

ஆனால் மூணுபேரும் ரெண்டு விசயத்தை ஒற்றுமையாச் சொன்னாங்க. கணபதி சிலை களவாடிக் கொண்டுவந்தது. அந்த சிலை மேலே ஒருவித நறுமணம் வீசுதுங்கிறது தான் அந்த விஷயம்.

இப்பொ நீதிபதி தீர்ப்புக்கு முன்னாடி ரெண்டு விஷயங்களைத் தெளிவு படுத்தணும்ன்னார்.

விநாயகர், கணபதி, பிள்ளையார்ன்னு சொல்ற இந்த ஏகக்கடவுளுக்கு எத்தனையோ பெயர்க்காரணம் நூற்றுக்கணக்கில இருக்கு சக்திவிநாயகர், செல்வகணபதி, வரந்தரும் பிள்ளையார்ன்னு சொல்றாங்க. இந்த சுகந்த கணபதிமேலே சதாசர்வ காலமும் ஒருவித வாசனை சிலையிலிருந்து வீசுதுன்னா சிலையின் எந்தப் பகுதியிலிருந்து அந்த நெடி வீசுது?

இரண்டாவது, இந்த சிலைகளை திருடி வைக்கிறது தான் விசேசம்ன்னா இதைக் கல்லுல மொதல்ல வடிக்கிறது எப்போ?

இந்த கேள்விகளுக்கு நாளை கோர்ட் கூடும் போது தனக்குத்தான் முதல் மரியாதை பாத்தியம்ன்னு சொல்லி இந்த மூணு பேரில் யாராவது வந்து தெளிவு படுத்தலையின்னா கோர்ட்டோட நேரத்தை வீணாக்குனதா மூணு பேரையும் காலக்கெடு இல்லாம காரக்கிரகத்துல அடைக்க வேண்டி வரும்ன்னு சொல்லி பேனா முனையை முறிக்காத குறையா வெள்ளைக்கார ஜட்ஜ் எழுந்திரிச்சி போயிட்டார்.

விடிய விடிய விரட்டி கடைசியில அண்கழுதையாப் போச்சின்னு சொல்வம் சொன்ன கதையில மூணு நாலு வருசம் கோர்ட்டுக்கு நடந்து கடைசியில் ஜட்ஜ் இப்படியொரு தீர்ப்பைச் சொல்லிட்டாரேன்னு மூணுபேரும் கட்டிப்பிடிச்சி அழுகாத குறையாத அப்படியே வீட்டுக்கு கூட போகாம கோயிலுக்கே வந்து ஆராய்ச்சியில இறங்கிட்டாங்க. மூலைக் கொருத்தரா சிலையை சுத்தி சுத்தி மூக்கை வெடச்சிக்சிட்டு அலைமோதித் திரிஞ்சாங்க. பல்ராம் நாயுண்டு ரெண்டு கையால பிள்ளையார் அங்கமெல்லாம் தடவி முகர்ந்து முகர்ந்து பார்த்தாரு. கிட்டாவும் சாத்தகியும் அகப்பட்டதெல்லாம் தடவி இக்கல் இடுங்கலெல்லாம் தடவி தடவித் முகர்ந்து பார்த்தாங்க. அப்படியொரு வாசனையொண்ணும் நாசியில் ஏறவேயில்லை.

பல்ராம் சும்மா இருக்கமாட்டாமல் பிள்ளையார் தொப்புளுக்குள் விரலைவிட்டு நோண்டினார். அதற்குள்ளிருந்த நாள்ப்பட்ட தேள் ஒண்ணு இவரு விரலில் நறுக்குன்னு கொட்டிவிட்டிருச்சி.

"ஓயம்மா... ஓ... யம்மா... "

பசக்குன்னு விரலை உருவினார். அடடே வந்த இடத்துல இந்தப் பயகளுக்கு இது விசயம் தெரிஞ்சால் கேவலமாகிப் போகுமேன்னு நெனச்சு என்ன. . என்னன்னு ஓடி வந்தவங்ககிட்டெ ஹிஹிஹிஹி ன்னு இளிச்ச மட்டுல 'ஒண்ணுமில்லே ஒண்ணுமில்லே வாசம் இதுக் குள்ளிருந்து தான் வருதுன்னார் கையை உதறிக்கிட்டே!

வலி தாங்கமாட்டாம ரெண்டு காலுக்குள்ளே கவுட்டுல கையைக் கொடுத்துக்கிட்டு 'டே ஙப்பா! வாசனை உசிரு போறப்புலயில்ல இருக்கு. ச்சொ. . ச்சொ... ச்சொ. . வேதனையை மறைச்சு சும்மாக்காச்சும் வாயை இளிச்சி சிரிக்கிறமாதிரி பாவனை காட்டுனார்' ஒரு பக்கமா திரும்பி பல்லைக்கடிச்சார்.

'இதுக்குள்ளேயா?'

சாத்தகிக்கு முந்தி கொள்ளை போகுதுன்னு கிட்டா நாயுண்டு பிள்ளையார் தொப்புள்ல விரலை விட்டுக் குடைஞ்சார். வாசனையை ஒரே கோதில் அள்ளி அடுத்தவனுக்கு கிடைக்காமல் செய்யணுமின்னு உள்ளே விட்டு அலசுனார். தேளு நறுக்குன்னு கிட்டா விரல்லஒரு போடு போட்டது. இதை எதிர்பாராத கிட்டா 'ஆய்த்தூ... யய்யாயா' இடது கையால வலது ஆள்க்காட்டி விரலைப்பிடிச்சபடி வேதனையோட வேதனையா ரெண்ட பேரையும் கண்ணை திரச்சி முழிச்சபடி பார்த்தார்.

'ஆஹா... மானங்கெடடுப்போகுமே பல்ராம் பயலுக்கு கமகமன்னு வாசம் கிடைச்சிருக்கு. நம்ம விரல்ல உள்ளேருந்து தேளோ பூரானோ நறுக்குன்னு மாட்டீருச்சே இது வெளியே தெரிஞ்சா படுகேவலமாகிப் போகுமேன்னு சுதாரிச்சி, 'ஆகா... ஆகா... ஆகா... எப்படி வாசனை! இங்கெல்ல இருந்திருக்கு. அடடா அடடா... நீ சொன்னது சரிதான். விரலை வச்சும் வக்கெ முன்னே இப்படி மணக்குதே. கிட்டா மேலேயும் கீழேயும் கையை தூக்கி இறக்குனாள். 'அந்த்... ' ன்னு நாக்கை நீட்டி கடிச்சார்.

பல்ராமுக்கு வலியோட வலியா கிட்டாவைப் பார்த்து கடுப்புன்னா இன்ன மட்டுன்னுயில்லே. 'சே... அவனுக்குள்ளே அந்த வாசம் கிடைச்சிருக்கு... இந்தக் கண்டாரவோலி தேளு நம்மளை வகையா மாட்டி விட்டிருச்சே எல்லாம் நம்ம கிரகம் என்று கையை மடித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

"இந்த இடத்துலயிருந்து தான் வருதுங்கிறீங்களா" சாத்தகி நாயுண்டு ஆர்வம் தாங்காமல் சுகந்த கணபதியாரின் தொப்புளில் மூன்றாவதாக விரலைவிட்டு ஆட்ட ரொம்ப நாளாய் கொட்டுறதுக்கு ஆள்க்கிடைக்காமக்கிடந்த தேள் ஆற அமர நறுச்சுன்னு வகையாய் மூன்றாவதாக ஆனந்தமாய் ஒரு மாட்டு மாட்டுனது.

"ஏய்... ஐயையோ... வலி தாங்காமல் கூப்பாடு போட்ட சாத்தகி மற்ற ரெண்டு பேரையும் பார்த்து அடடா. . அசிங்கமாகிப்போகுமே... நமக்கு மட்டும் இப்படியொரு தேள்கொட்டிச்சின்னு இந்தப் பயல்களுக்கு தெரிஞ்சா அவ்வளதான் வாயால சிரிக்க மாட்டான். கோர்ட் வரைக்கும் கொண்டுபோயி சொல்லி சொல்லி சிரிப்பான்களே... உடனே சுதாரிச்சார்.

"அடி... ஐ... அடி சக்கை... எனக்குத்தான் கடைசியில நிறைய்ய இருந்தது பூராவும் விரல்ல வந்திருச்சி. இது நாளைக்கு இந்நேரம் வரையிலும் இருக்கும் போல... ஆஹா ... ஆஹா... அடா. . அடா. . அவ்வ்... இதை அப்படியே தொரை மூக்குல கொண்டு வெக்கெப் போறேன்... வெக்கெப்போறேன். "

மூணு பேரும் ஒருத்தரையொருத்தர் பார்த்து 'இந்தப் பயலுக்கு அந்த வாசனை கிடைச்சிருக்கு நமக்கு அந்த கொடுப்பினையில்லை யேன்னு' விரலைப் பிடிச்ச மட்டுல மூலைக் கொருத்தராய் உட்கார்ந்திருந்தாங்க.

மறுநாள் கோர்ட்டிலே மூன்று வக்கீல்களும் நீதிபதிகிட்டே ஒருசேர இப்படி முறையிட்டாங்க: 'எனது கட்சிக்காரர் சகல ஆவணங்களையும் திரட்டி உங்களிடத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு சுகந்த கணபதி கோயிலுக்கு போய்ப் பார்க்கும் போது சுகந்த கணபதி சிலையை யாரோ திருடிக் கொண்டு போய் விட்டார்கள் யுவர் ஆனர்'

Pin It