அம்புறோசுக்கு போட்டு தொழிலுல செம கோளுதான். தொழிலுக்கு வந்த இந்த ஒரு மாசத்துல நல்ல வருமானம்.

போன மாசம் காஞ்சு கெடந்ததுக்குத் தக்க இந்த மாசம் நல்ல மீன்பாடு.

"இனி கடல் தொழில நம்பி ஒரு பலனுமில்ல... அவ்வளவு தான் கடக்கர மக்க வேற ஏதாவது தொழில பாத்திட்டுப் போக வேண்டியதுதான். வேற என்ன தொழிலுதான் தெரியும் - பாக்க... கடல உட்டா வேற கதியே இல்லையே!" போன மாசம் இப்பிடித்தான் அடிக்கடி சொல்லிட்டிருந்தான் அம்புறோஸ். ஆனா இப்ப...

"நம்பி வாழுத மக்கள அந்தக் கடலம்ம எப்பிடி கைவிடுவா... அவ நெறியுள்ள அம்ம... இத்தன மக்க மனுசரும் அந்த அம்மய நம்பியிருக்கும்ப கைவிடுவாளா பின்ன... இண்ணைக்கு இல்லேண்ணா நாளைக்கு... நாளைக்கு இல்லேண்ணா நாலுநாளு கழிச்சி... நாலு நாளு கழிச்சு இல்லேண்ணா நாலு மாசம் கழிச்சு... "

வருமானம் கொடுக்கும் கடலை தன் தாயாகவே நெனச்சான் அம்புறோஸ் மிகுந்த நம்பிக்கையோடு.

"அம்மா ஒனக்கு நன்றிம்மா... எனக்க மோளுக்கு புது நன்மையும், உறுதி பூசுதலும் சேந்து வருது. அதுக்கு ரண்டு உடுப்பு எடுக்கணும். வீட்டுல செலவுக்குப் பணம் வேணும். எனக்க வீடு பாலு காய்ப்புக்கு பிரிஜ் எடுத்து தந்த என் தம்பிக்க வீட்டுக்கு பால் காய்ப்பு, அவனுக்கு பிரிஜ் எடுத்துக் குடுக்கணும். பணத்துக்கு எங்க போறது எவ தாலிய கழத்தி அடகு வைக்கிறதுன்னு நெனச்சிண்டிருந்தேன். ஒரு மாசமா இந்த கவலதான் என் மனசப்போட்டு அரிச்சிண்டிருந்தது. அம்மா அதுக்கு நீ ஒரு வழிய காட்டிட்ட... "

கடல் தண்ணியை ரண்டு கையால கோரி முகத்தோட அணச்சு கும்பிட்டான்.

கழிஞ்ச ரண்டு ஓட்டுக்கு பங்கு பயிந்து கெடச்ச பணத்த போட்டுகாரன்கிட்ட குடுத்து வச்சிருந்தான். ஏன்னா அம்புறோசுக்கு கரையில எங்கேயுமே பணத்த வச்சமுடியாது... ரூம் இருந்தா தானே வைக்கிறது. இவனுக்கு ரூமு, தங்குறது, தூங்குறது எல்லாமே போட்டுலதான். போட்டுக் காரனுக்கு ஒரு ரூமு உண்டு... ஆனா அதுல கண்டவங்களும் வந்து போவாங்க... களவு நடக்கும். அதுனால போட்டுகாரன்கிட்ட பணத்தக் குடுத்து வச்சிருந்தான். போட்டுக்காரனும் ரெம்ப பாதுகாப்பா அத வச்சிருப்பாரு. அவருக்க ஜட்டியில உள்ளால ஒரு சுருக்கு பை தெச்சு வச்சிருப்பாரு. பனத்த பிளாஸ்டிக் தாளுல பொதிஞ்சு அந்த சுருக்குப் பையில போட்டு வச்சிருப்பாரு. அவரு குறட்ட உட்டு தூங்குனாலும் கை எப்பவும் சுருக்குப் பை இருக்கிற எடத்த கெட்டியா புடுச்சிண்டிருக்கும்.

பணத்த ஊருக்கு குடுத்த உடணும்னு பார்த்தா தொழில் நல்லா நடக்குறதுனால இந்த தொழில உட்டுட்டு யாரும் ஊருக்குப்போறதா தெரியேல... காஞ்சு கெடந்ததுக்கு இப்ப நடக்குற தொழில உட்டிண்டு யாருதான் ஊருக்குப் போவா சொல்லுங்க...

"அதுவும் நல்லதுதான் ஏற்கனவே ரண்டு ஓட்டு பணம் ஒம்பதாயிரம் தேறும். இன்னும் ரண்டு ஓட்டுக்கு உள்ள பங்க தட்டி கழிச்சா எப்பிடியும் இருபதாயிரம் கெடச்சும். புது நன்ம செலவு... தம்பிக்கு பிரிஜ் வாங்கிக் குடுக்கிறது. வீட்டுச் செலவு எல்லாம் போக பழைய கடத்துல ஒரு ஐயாயிரம் கடன் மூட்டலாம்"

மனசுக்குள் பலப்பல கணக்கு ஓடுது அம்புறோசுக்கு...

போட்டு அழிக்கு உள்ள ஏறுனதுதான் தாமசம் எட்டிச்சாடி ஓடி ஆத்துல போய் குளிச்சிட்டு வந்த அம்புறோஸ் போட்டுக்காரனிடம்,

"ஒரு இருபதினாயிரம் ரூபா குடுங்க... நான் ஊருக்குப் போவணும் நாளை கழிச்சு எனக்க மோளுக்கு புதுநன்ம. நான் போய் தான் துணி எடுக்கணும். சீக்கிரம் குடுங்க... "

"பங்கு பயிராம எப்பிடி... "

"பங்கு பெறவு பயிருங்க... இருபதாயிரம் மட்டும் எனக்குக் குடுங்க... பங்கு பயிந்து மிச்சம் மீதி இருந்தா நான் ஊருக்குப் போவுண்டு வந்து வாங்குதேன்".

போட்டுக்காரன் சாரத்தைத்தூக்கி ஜட்டிக்கு உள்ள கைபோட்டு சுருக்குப் பையில இருந்து பிளாஸ்டிக் பொதிய எடுத்து அதைப் பிரிச்சி ரூபாயை எண்ணிக் கொடுத்தார். சூடா இருந்த பணத்த எண்ணிக் கூடப்பாக்காம அவசர அவசரமா வேட்டி மடக்குல சுருட்டி வச்சு அழகா இறுக்கமா வேட்டிய கட்டிண்டு ஓடினான்.

"இப்பவே மணி பதினொண்ணரை ஆச்சு... எப்பிடியாவது ஊருல வாற லாஸ்ட் வண்டிய புடுச்சணும்"

திருவனந்தபுரம் வந்து எறங்கும்ப இருட்டத் தொடங்கிட்டது. பஸ்டாண்டிலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்க ஒரு ஜவுளி கடையில கண்ணை பீசாக்கக்கூடய அளவுல ஆயிரம் லைட்டு போட்டு மினுக்கி வச்சிருந்தாங்க. அந்த கடையின் வெளிச்சம் அம்புறோசை தூண்ட போட்டு இழுத்தது. துணி விரிச்சுப்போடும் றாக்குக்கு மேல இருந்த மஞ்ச கலரு லைட்டு எல்லாம் எரிஞ்சது. அதுல கெடக்குற துணி எல்லாம் பளபளன்னு ஒரே சைனிங்...

"இப்பிடிதான் சாதாரண துணியையும் ஷைனிங் துணியா காட்டி ஏமாத்துவானுவளோ. . நமக்கு ஏமாற எடமில்ல... ஏன்னா நாம வெள்ள துணி தானே எடுக்கப்போறோம்... "

"32 அளவுல பிறாக்கு வேணும்... "

தொழிலுக்குக் கிளம்பும்ப

"ஏய் ... நீங்க கேரளாவுல இருந்து வரும்ப தொழிலுல ஒண்ணும் கெடச்சாட்டாலும் யாரட்டயாவது கடன வுடன வாங்கி புள்ளைக்குத் துணி எடுத்திண்டு வருங்க என்னா... "

"எனக்கு எங்க துணி எடுக்கத் தெரியும்... !"

"இதுக்கு என்னத்த தெரியணும்... வெள்ளையில 32 அளவுன்னு சொல்லி பிறாக்கோ, மிடி செட்டோ கேளுங்க... " மனைவி சொன்னது ஞாபகம் வந்ததால சொல்லிக் கேட்டான். "

"32 அளவுல பிறாக்கு வேணும்"

ஒரு நாலஞ்சு உடுப்பு எடுத்து போட்ட ஒடனே... அதில இருந்த ஒண்ணை எடுத்தான்.

"நெறய மாடலு எடுத்துப்போட்டா எத எடுக்கிறதுன்னு... கொழப்பமாயிடும், அதுனால இதுபோதும்... "

1799 ரூபா வெல சொன்னார்கள்,

"அடேயப்பா... இவ்வளவு வெலயா? சரி... புதுநன்ம ஒரு தடவத்தானே வரும். இருக்கட்டு... " ஆனா புது நன்மை உடுப்ப அதுக்குப்பெறவு போடுறதில்லைன்னு நினைக்கவில்லை...

"சரி இதே அளவுல ஒரு மிடி செட்டு எடுங்க... "

அதிலும் நாலஞ்சு மாடல் எடுத்து போட்டதும் முத்து கோத்த ஒரு மிடி அவனுக்கு நல்லா புடுச்சிருந்தது.

"இது என்ன வெல... "

"2001 ரூபா... "

"சரி இருக்கட்டு... இத உறுதி பூசுதலுக்குப் போடுவா... "

அந்த காலத்துல புதுநன்ம எடுத்திட்டு உறுதி பூசுதல் எடுக்கணுமின்னா... 10, 12 வருசம் காத்திருக்கணும். அம்புறோசின் மகளுக்கு புதுநன்ம எடுத்த ரண்டாவது நாளுல உறுதி பூசுதல். அவ குடுத்துவச்சவதான்...

"ஆமா... இந்த உறுதி பூசுதலுல அப்பிடி என்னதான் இருக்கு. பழங்காலத்துல மதம் மாறி கிறிஸ்தவத்துல வந்தவங்க திரும்பவும் மனம் மாறி தாய்மதத்துக்குப் போயிடக்கூடாதுன்னு அவுங்கள கிறிஸ்துவத்துல கட்டிப் போட உறுதிபூசுதல்னு ஒண்ண வச்சிருந்தாங்க. உறுதி பூசுதல் எடுத்திட்டா மதத்துல உறுதியா(?) இருப்பாங்களாம். இப்பதான் தலைமுறை தலைமுறையா கிறிஸ்தவத்துல இருக்கிற மக்களுக்கு உறுதிபூசுதல் சடங்கு எதுக்கு? ஒரு எண்ணெயை தடவி மெட்ராணி ஆண்டவருகன்னத்துல தட்டுறதுல அப்பிடி என்ன உறுதி வந்திரப்போகுதுன்னு தெரியில்ல... அது ஒரு சடங்கு அதுக்கு ஒரு தயாரிப்பு... என்னத்த சொல்ல... "

பஸ் ஏறி மார்த்தாண்டம் வந்து எறங்கும்ப மணி ஒம்பதரை ஆயிட்டது.

"லாஸ்ட் வண்டி இப்ப வரும்... "

வண்டியை எதிர்பார்த்து நின்ற அம்புறோசின் பக்கத்தில் ஒரு வெள்ளை நிற ஜீப் வந்து உரசிண்டு நிக்குது. அம்புறோஸ் பெடச்சுபோய் தெறிச்சு உளுந்தது போல ஓடையில சரிந்தான். எப்பிடியோ பொத்துன்னு உழாம அப்பிடியே பெலத்த குடுத்து நின்னிட்டு திரும்பி பார்த்தா... அது ஒரு போலீசு வண்டி...

"அட தள்ளே... "

என்று தன்னையறியாமல் வந்த கெட்ட வார்த்தைய உளுங்கிட்டு அப்பிடியே நின்னான்.

ஜீப்பில இருந்து எறங்குன மூணுபோலீசு காரங்க அம்புறோசின் பக்கத்துல வந்து...

"நீ தொறயக்காரந்தானா... ?"

கறுத்த தேகமும், ஒயரமான தோளும், மடிப்பு ஏறிய உருண்டு தெரண்ட கையும், வீரத்தை காட்டி நிற்கும் முகமும், சுருட்டி மடக்கி வச்ச சட்டை கைமடக்கும், தூக்கிக் கட்டிய வேஷ்டியும், கையில் கொள்ளாம இருக்கும் பார்சலும் அம்புறோசை துறை காரனாக போலீசுக்கு அடையாளம் காட்டியிருக்கு.

"ஆமா... " அம்புறோஸ் ஒரே வார்த்தையில் பதில் சொன்னான். அடுத்த நொடி.

"ஏறுடா வண்டியில மண்டாமோன... "

சட்டைக்காலரை ஒரு போலீசு புடுச்சு இழுக்க... சட்டை பட்டன் எல்லாம் பொடு பொடா பொட்டிப் போச்சு. முதுகைப்புடுச்சு ஒரு போலீசு பெலத்தக் கூட்டித்தள்ள... லத்தியால காலுல ஒரு போலீசு போட்டான் ஒரு அடி.

என்னநடக்குதுன்னு சுதாரிக்கிறதுக்குள்ள ஜீப்பில் ஏற்றப்பட்டான் அம்புறோஸ்.

"ஐயா! என்ன ஏன் புடிக்கிறீங்க... நான் எந்த தப்பும் பண்ணேலையே!"

"என்ன. . தப்பு பண்ணேலையா... வா, ஸ்டேசனுக்கு. . அங்க தெரியும் நீ பண்ணுன தப்பு என்னண்ணு"

"ஐயா! நான் கேரளாவுல தொழிலுக்குப் போயிட்டு இப்பதான் வாறேன். . கடைசி வண்டிக்கு ஊருக்குப் போறதுக்குத்தான் நிண்ணுண்டிருக்கேன்" பரிதாபமாகக் கெஞ்சினான் அம்புறோஸ். அவன் கெஞ்சல் எதுவும் போலீசின் காதுல விழல்ல.

'தேவடியாப்பசங்க... இவனுவ என்ன, நெலத்த உளுதானுவளா... பாத்திகட்டி நீரெறச்சு பாச்சுதானுவளா... நாத்து நட்டுதானுவளா... களையெடுக்குதானுவளா... என்ன கஷ்டபடுதானுவ... கடல்ல போனா வலை நெறய மீன் அள்ளிட்டு வாறானுவ. . அந்த பணத்த செலவழிச்ச தெரியாம கொளுப்பெடுத்து போய் மாறி மாறி குண்டு வீசுதானுவ இவனுவளசும்மா உடப்படாது"

எங்கோ பாண்டியில இருந்து வந்த போலீசு கண்டபடி திட்டிட்டிருந்தார். அம்புறோசுக்கு புரிந்துவிட்டது. பக்கத்து ஊரு பயங்கர அடி வந்து மாறி மாறி குண்டு வீசுனாங்களாம்.

அதுக்கு என்னை ஏன் புடிக்கணும். நான் அடி வந்த ஊருக்காரன் கூட இல்ல... . அதுவும் ஒரு மாசமா கேரளாவுல தொழிலு செஞ்சிட்டு மோளுக்க புதுநன்மைக்காக ஊருக்கு வாறேன். என்ன ஏன் புடிக்கணும்? தொறைக்காரன்னா எங்க அடி நடந்தாலும் யாரையும் புடிப்பாங்களா?

அம்புறோசின் மனதில் ஆயிரம் கேள்விகள். எதுக்கும் பதில் இல்லை.

போலீஸ் ஸ்டேசன் போனதும் ஒரு போலீஸ் அம்புறோசை ஜீப்பிலிருந்து இறக்கி 'நடை' அடி குடுத்து ஸ்டேசனுக்குள் தள்ளினான்.

கையிலிருந்த பார்சலை ஒரு போலீஸ் புடுங்கிக் கொண்டான்.

"ஐயா! எனக்க மோளுக்கு புதுநன்மை. அதுக்கும் உறுதி பூசுதலுக்கும் உடுப்பு எடுத்து வச்சிருக்கேன். எனக்க தம்பிக்க வீடு பால்காய்ப்பு அதுக்கு ஒரு "பிரிஜ்" எடுத்துக் குடுக்கணும். அதுக்குள்ள ரூபாயையும் வச்சிருக்கேன். என்ன விட்டுடுங்கய்யா".

அப்பாவியாகக் கெஞ்சினான் அம்புறோஸ். அவனிடமிருந்த பதினஞ்சாயிரத்து சில்லரை ரூபா பணத்தை ஒரு போலீஸ் புடுங்கிட்டான்.

"ஐயா! நான் போவேலேன்னா எனக்க புள்ளைக்கு புது நன்மை நடக்காதய்யா" அழுதுவிட்டான் அம்புறோஸ்.

என்ன அழுது என்ன செய்ய... பணத்தைப் பங்கு போடுவதில் குறியாக இருந்தது போலீசு.

அம்புறோசின் துணியை யெல்லாம் அவுத்துட்டு ஒரு நாலுக்கு நாலு இருட்டு அறையில வெறும் ஜட்டியோட தள்ளி இரும்பு கம்பி போட்ட கதவால பூட்டினாங்க.

அவமானத்தால் கூனிக்குறுகிப் போன அம்புறோஸ் நிலைதடுமாறி தலையில் விழுந்தான்.

கொஞ்ச நேரம் கழிச்சு எழும்பின அம்புறோஸ்,

"ஐயா! எனக்க வீட்டுக்கு ஒரு தகவல் சொல்லுங்க நான் வீட்டுக்கு வராததால வீட்டுல பயந்து போய் கிடப்பாங்க... "

அவர் வீட்டில் சொல்லுவதிலும் ஒரு ஆபத்து உண்டு. ஆள் காணாமல் போனா கூட நாளைக்கு வருவாங்கன்னு இருப்பாங்க... போலீஸ் ஸ்டேசன்ல இருக்கான்னு சொன்னா இன்னும் பதறிப் கிடப்பாங்க... . "

பாவம் பாத்து ஒரு போலீஸ்காரரு வீட்டு போன் நம்பரைக் கேட்டு வீட்டுக்குத் தகவல் சொன்னாரு.

ஒரு ஆளை கைது செய்யும் போது பத்து விதிமுறைகளைக் கண்டிப்பா கடைப்பிடிக்கணும்னு சுப்ரீம் கோர்டு சொன்ன தீர்ப்பை யாரும் மதிக்கிறதில்லையோ.

அடுத்த அரைமணி நேரத்தில் அம்புறோசின் தம்பியும் அவரோட கூட்டுக்காறங்க ரண்டு பேருமா ஸ்டேசனுல வந்து சேர்ந்தாங்க.

என்னன்னு விசாரிச்சா

அம்புறோசு பக்கத்து ஊருல நடந்த கலவர கேசுல ஒரு பிறிதியாம். அந்த கலவரத்துல குண்டு எறிஞ்சிட்டு ஓடிவந்து உதயமார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டில பஸ் ஏற நிக்கும்ப போலீசு கைது பண்ணுச்சாம். அவரு பாக்கெட்டுல வெடிக்காத ரண்டு குண்டும் இருந்திச்சாம்.

போலீஸ்காரங்க வழக்கின் தன்மைய தத்ரூபமா எடுத்துச் சொன்னாங்க.

"அதெப்படிய்யா... அவரு ஒரு மாசமா கேரளாவுல போட்டு தொழிலுக்குப் போயிட்டு இப்பதான் ஊருக்கு வாறாரு. அவரு எப்பிடி பக்கத்து ஊரு கலவரத்துல குண்டு வீசுனாரு".

"நாங்க என்ன செய்யிறது... எங்களுக்கு நாளைக்குள்ள எப்பிடியாவது கொஞ்சபேர அரஸ்ட் பண்ணியாவணும். கேசுல பிறிதியா இருக்கிறவனுக எங்கேயோ ஒழிச்சு போயிட்டானுவ. . அதுனால எங்க கையில மாட்டுறவனுவள 'கண்டால் தெரியும்' லிஸ்ட்டுல சேத்து கோட்டுல ஒப்படச்சிடுவோம். அங்க பாருங்க தனுஷ்கோடி போறதுக்காக நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டுல நின்ன வேறொரு ஊரச் சேந்த தொறகாரனையும் பிடிச்சு கேசுல சேத்திருக்கோம்". போலீஸ்காரர் தன்னோட சாதனைய அடுக்கினார்.

அந்த ஆளப்பாத்தா அம்புறோசவிட அப்பாவியா தெரிஞ்சுது

"அடப்பாவிகளா இப்பிடியெல்லாம் அநியாயம் செய்வீங்களா?"

மனசுக்குள்ள நெனச்சான் தம்பி.

போன வருசம் இப்பிடி ஒரு சம்பவம் நடந்தது அவன் நினைவுக்கு வந்தது. அப்ப அவுங்க ஊருல ரண்டு கோஷ்டிக்கு இடையில ஒரு சண்ட வந்தது. அப்ப ரண்டு தரப்பில இருந்தும் கேசு குடுத்தாங்க. அவங்கமேல 'நான் பெயிலபிள்' செக்சன்ல கேசுபோட்டுட்டாங்க. ஒரு எஸ். ஐ. ரண்டு போலீஸ்காரங்களோட அம்புறோசின் தம்பிக்க வீட்டுல வந்து,

"இந்த தகராறுல ஒங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லைன்னு எங்களுக்குத் தெரியும். ஆனா 'கண்டால் தெரியும்' லிஸ்டுல ஒங்க பேர சேக்கணும்னு ஒரு குரூப்பு எங்ககிட்ட வந்து பிறஸர் குடுக்குது. எங்கமேலதிகாரிக கிட்டயிருந்தும் பயங்கர பிறசரு. அதுனால நீங்க கொஞ்சம் பணம் குடுத்திங்கண்ணா எல்லோருக்கும் குடுத்து கேசுல ஒங்க பேரு வராம பாத்துகிடுதோம்" னு சொல்லி இல்லாத ஒரு கேசுக்கு அவன்கிட்டயிருந்து சொளையா பத்தாயிரம் ரூபா வாங்கிட்டு போயிட்டானுக. அது மாதிரிதான் அப்பாவியான அம்புறோசையும் கேசுல மாட்டி உட்டுருக்கானுக. இப்பிடி எத்தன பேர்கிட்ட 'கண்டால் தெரியும்' பிரிவு காட்டி பணம் புடுங்கியிருப்பானுக... எத்தனபேர அரஸ்ட் பண்ணியிருப்பானுவ.

"பணம் தாறேன் அண்ணன உட்டுருங்க"ன்னு கெஞ்சினான் தம்பி.

"நாங்க இனி எதுவும் செய்ய முடியாது. எப். ஐ. ஆர் எல்லாம் போட்டாச்சு. நீங்க பணம் குடுத்தீங்கண்ணா அண்ணன் மேல ஒரு அடிபடாம கோர்ட்டுல ஒப்படைக்கிறோம். கோட்டுல போய் ஜாமின் எடுத்துக்குங்க"

தம்பிக்கு ஒண்ணும் ஓடல்ல... கடக்கரை மக்களுக்கு மட்டுந்தானா இந்த கண்டால் தெரியும் பிரிவு? மற்ற சமுதாயத்துல இப்பிடி ஒரு பிரச்சனையே இல்லையே! அங்க குற்றவாளியின்னு யாருக்க பேரு இருக்கோ அவுங்களத்தான் கைது பண்றாங்க... அவுங்கதானான்னு பல தடவை உறுதிப்படுத்துன பிறகுதான் கைது பண்றாங்க... ஆனா தொறயில மட்டும் இப்பிடி அப்பாவிங்கள புடுச்சு கண்டால் தெரியும் லிஸ்டுல சேக்கிறது... புள்ளி புடிக்கிறோம்னு சொல்லி பெண்களையும், குழந்தைகளையும் தொந்தரவு பண்றது... எல்லா மக்களையும் ஊர விட்டு ஓட ஓட விரட்டுறது... அந்த ஊருக்கு பஸ் எதுவும் போவ விடாம நிறுத்துறது... கரண்ட, குடிதண்ணீர 'கட்' பண்றது... இது என்ன அநியாயம்...

தம்பிக்கு ஒண்ணும் ஓடல்ல...

கொஞ்ச நாளைக்கு முன்னால கடக்கரை ஊருல உள்ள ஒரு மாதா குருசடிய இடிச்சப்ப... இடிச்ச குற்றவாளி இவங்கதான்னு பேர வச்சு ஊரு மக்க புகார் குடுத்தப்ப

"நீங்க சொல்றதுனால நாங்க யாரையும் அரஸ்ட் பண்ண முடியாது. நாங்க தெளிவா விசாரிச்சு அவரு குற்றவாளின்னு முடிவு பண்ணுன பெறகுதான் அரஸ்ட் பண்ணுவோம். "

இப்பிடி சொன்ன காவல்துறை இங்க மட்டும் இப்பிடி நடக்குதே! இத கேக்க எந்த நாதியும் இல்லையா?

தம்பிக்கு ஒண்ணும் ஓடல்ல...

அம்புறோசை கோட்டுக்கு கொண்டுபோய் மாஜிஸ்திரேட் முன்னால் நிறுத்தியது போலீஸ். மாஜிஸ்திரேட், பதினஞ்சு நாள் ரிமாண்டுனு சொல்லிட்டாரு. அவரு என்ன செய்வாரு பாவம். நிரபராதின்னு தெரிஞ்சாலும் "பதினஞ்சுநாள் ரிமாண்டு"ன்னு சொல்லுற வார்த்தைய மாத்த முடியாதுல்ல!

ஊரில் ஒரே கொண்டாட்டம். புது நன்மை வாங்கும் பிள்ளைகளெல்லாம் வெள்ளை வெள்ளையா துணி உடுத்திட்டு, ஜோடிச்ச மெழுகுதிரிய கையில பிடிச்சிட்டு சொந்தக்காரங்க வீட்டுல எல்லாம் ஏறி சிலுவ வாங்கிட்டு அவுங்க குடுக்கிற தட்சணய வாங்கிட்டு சந்தோசமா கோயிலுக்குப் போயிட்டிருந்தாங்க...

அம்புறோசின் மகளும் இப்பிடி ஸ்டோன் வச்ச வெள்ள உடுப்ப உடுத்திட்டு காலுல சாக்சு, வெள்ள சூ வெல்லாம் போட்டுட்டு தலையில் ரீத்தும், கழுத்துல நெக்லசும் மாட்டிட்டு அழகா ஜோடிச்ச மெழுகுதிரியயும் புடுச்சிட்டு போவான்னு தான் நெனச்சிட்டிருந்தா

ஆனா உடுப்பும் இல்ல; நெற்றும் இல்ல; ரீத்தும் இல்ல; சூ-சாக்சும் இல்ல; அப்பாவும் இல்ல; அதனால புதுநன்மையும் இல்ல; உறுதி பூசுதலும் இல்ல. உருகிப்போய் நின்றாள் அம்புறோசின் மகள்.

Pin It