எழுத்தாளர் உஷாதீபனின் ஒன்பதாவது தொகுப்பாக "தனித் திருப்பவனின் அறை" என்ற சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது. இருபத்தியொரு சிறுகதைகள் இருக்கின்றன. நிவேதிதா பதிப்பகத்தின் வடிவமைப்பும், அச்சமைப்பும் வெகு நேர்த்தியாக அமைந்திருக்கிறது.

உஷாதீபனின் எழுத்துலகப் பரப்பும் வெளியும், அவரது வாழ்வுலகப் பரப்புடனும் வெளியுடனும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. கற்பனையான-செயற்கைத் தன்மையான - சித்தரிப்பு எதையும் இவரிடம் காண முடியாது. மொழியை வசீகரப்படுத்துவதற்கான எவ்வித எத்தனிப்பும் இருக்காது. மேதமைப் பகட்டும் அறிவார்ந்த பாவனையும் சுத்தமாக இருக்காது.

சத்தியத்தைப் போன்ற எளிமையான மொழிநடை. வாழ்வின் சத்தியத்தை மட்டுமே வெளிப்படுத்துகிற செறிவான மொழிநடை. வாசித்து முடித்த வாசகரின் சிறுமைகளைச் சலவை செய்து, நல்லுணர்வை பளிச்சிட வைக்கிற ஆற்றல் மிக்கது, இவரது கதை உலகம்.

தம்மைச் சுற்றி நிகழ்கிற வாழ்வியல் அனுபவங்களை மட்டுமே நேர்மையுடனும் உண்மையுடனும் கதைகளாக்குகிற அவரது மனிதநேயம் அசலானது. கதைகளின் வழியாக சமூகத்தின் அவலங்களையும், முரண்களையும், சிக்கல்களையும், சிடுக்கல்களையும் உண்மையுடன் வெளிக் கொணர்கின்றார். முதிய தாயின் உடல் நலத்துக்காக தன் உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்கிற மகனை 'உணர்வின் விளிம்பில்' பார்க்க முடிகிறது.

இயலாத தாய் தந்தையரை தனி வீட்டில் குடியமர்த்தி கொடூரமௌனம் காட்டுகிற மகனை காட்டுகிற சிறுகதையும் இத் தொகுப்பில் உண்டு ("வாடகைச் சுமை")

'பிறழ்தடம்' கதையின் நாயகர் நடேசன் நெஞ்சில் நிற்கிறார்.

"பாக்கி" கதையின் பையன் நேர்மை, நம்மை திகைக்க வைக்கிறது.

'ஒரு நாள் ஒரு பொழுது' கதையின் கடைசி வரி வாசகனை உலுக்கிவிடுகிறது. "எல்லாரும் இதுக்குத் தான்சார் போயிருக்காங்க"

'நோக்கம்' கதை இந்தத் தலைமுறை இளம் ஊழியர்களின் குணாம்சத்தை விமர்சிக்கிறது.

எல்லாமே படைப்பாளியின் அனுபவ எல்லைக் கண்கொண்டு பார்க்கப்படுகிற சமூக நிகழ்வுகள்.

வாசக மனதை உணர்ச்சிப் பூர்வமாக தன்வயப்படுத்தி அலைக்கழித்து விடாத அளவுக்கு மொழிநடையின் சித்தரிப்பு நிதானமும் அமைதியும் மிக்கதாக இருப்பது; பலமா, பலவீனமா என்று நிர்ணயிக்க முடியவில்லை.

சிறுகதைத் தொகுப்புகள் அருகி வருகிற ஒரு காலச் சூழலில் மனிதநேய யதார்த்தவாதச் சிறுகதைத் தொகுப்பாக வந்திருக்கிற உஷாதீபனின் "தனித்திருப்பவனின் அறை" யை வரவேற்கலாம்.

-

வெளியீடு

நிவேதிதா பதிப்பகம்,

எண், 1, புதூர் 13 வது தெரு

அசோக் நகர், சென்னை-82

விலை

ரூ. 75.

Pin It