பால்குடி மறக்காத
எங்களின் கனவுகளுக்கு
பல் தெளித்துவிட்டு
பள்ளிக்கூடம் சேர்க்கிறீர்கள்
உங்கள் கனவுகளை நனவாக்க!

பள்ளியில் அடியெடுத்து வைக்கும்போதே
 வினாக்களோடு தான் எங்களை
வரவேற்கிறார்கள்.

உங்களுக்கு
நாங்கள் விழுந்தால்
வலிக்கிறது.
எழுந்தால் இனிக்கிறது.
பிறகு ஏன்
எங்களின் சின்னஞ்சிறு சிறகுகளை
வெட்டி எறிகிறீர்கள்?

மைதானமே இல்லாத பள்ளிகளில்
மனிதாபிமானமே இல்லாமல்
விளையாட்டுப் பாட வேளையை
கால அட்டவணையில் மட்டும்
இட்டு நிரப்புகின்றவர்களை
எந்த எண்ணெய்க்கொப்பறையில் போட?

எங்களைப் போலவே
விளையாட்டுகளை மறந்து
தெருக்களெல்லாம் சோகமாய்
வெறிச் சோடிக் கிடக்கின்றன!

வினாத்தாள்களுக்கெல்லாம்
விடை எழுதி வரச்சொல்லி
விடுமுறை விடுவதைவிட
விடுதியிலேயே எங்களை
விடுதியிலேயே எங்களை
வைத்துக் கொள்ளுங்கள்.

விலங்கிடப்படாமலேயே
வீட்டுக்கும், பள்ளிக்கும்
சிறப்பு வகுப்புகளுக்கும்
போய் வருகிறோம்
கைதிகளைப் போல!

ஐந்தில் வளையுங்கள்
மூன்றிலேயே வளைத்து
எங்களை முறித்து விடாதீர்கள்.

ஆச்சரியக்குறிகளாய் எங்களைப் பார்க்க
ஆசைப்பட்டால்...
இனி தேர்வுகளை
எங்களிடமே விட்டுவிடுங்கள்.

எங்களின் கனவு தேசத்தில் கூட
உடையாத மணல் வீடுகளெங்கும்
உடையாத பலூன்களையே
ஊதிக்கட்டுகிறோம்!
உடைத்து விடாதீர்கள்
எங்கள் கனவுகளை!

இயற்கை அன்னை
பூத்துக் குலுங்குகிறான்
ரணப்படுத்தாமல் ரசிக்க விடுங்கள்.

ஏரி மீன்களும்
பட்டாம்பூச்சிகள் நிறைந்த
எள்ளுப்பூ வயல்களும்
எங்கள் வருகைக்காக
ஏங்கி நிற்கின்றன!

தும்பிகளும்
தும்பைப் பூக்களும்
வயல் வரப்புகளில்
வரிசையாய் விரையும் வாத்துகளும்
குழந்தைப் பருவத்தைக் கொண்டாட
'வா', 'வா' ... என்று அழைக்கின்றன!

இயற்கையிடம் கற்றுக்கொள்ள
ஏராளமாய் இருக்க. .
நீங்கள் மட்டுமேன்
விடுமுறை நாட்களில் கூட
எதையாவது கற்றுக்கொள்ள
'போ'... 'போ' ... என்று
கட்டாயப்படுத்துகிறீர்கள்?

கடந்து போனால் கிடைக்காதது
காலம் மட்டுமல்ல
குழந்தைப் பருவமும் தான்!

. எப்போது எங்களுக்குக் கிடைக்கும்
விடுதலையாய்
ஒரு விடுமுறை நாள்?

- கவி.வெற்றிச் செல்வி சண்முகம்

Pin It