நாட்டுப்புறக்கதை:

மூளிப்பட்டிக்காரிக்கு மூணு மருமகன்ங்க. மூணாவது மருமகன் டவுன்காரரு. நாளைக்கு விருந்தாடியா பெண் சாதியோட வர்றாரு. மற்ற மருமகன்ங்க மாதிரி பராக்க இருந்திர முடியாது. டவுன்ல விதவிதமா சாப்பிட்டிருப்பாரு. எதோ நம்மலாள எவ்வளவு நல்ல விதமா பலகாரங்க செய்து போட முடியுமோ நம்ம மூளைக்கு எட்டுமான மட்டும் நாலா சேர்மானங்கள சேத்து நாவுக்கு ருசியா அவ்வளவும் செய்து கொடுக்கணும்.

முன்னவங்க ரெண்டு மருமகன்களும் நமக்கு துணைப்போனதுக. நாகரீகமில்லாததுக. இவரு அப்படி கிடையாது. பெண்டாட்டிய இழுத்துப் பிடிச்சு அணைச்சமட்டுலதான் ஊருக் குள்ளே நடந்து போவாரு. நடுத்தெருவுல வச்சி முன்னப்பின்ன ஆளுக வந்து போய்க் கிட்டிருக்கிறதை சட்டைபண்ணாம மொச்சுமொச்சுன்னு முத்தங் கொடுத்திருவாரு. எப்ப பாத்தாலும் அவ கையோட இவரு கையை பிணைஞ்ச மட்டுலதான் இருப்பாரு. குசுகுசுகுசுன்னு என்னதான் காதோட காதா பேசுவாரோ! இதைப்பாத்து ஊர்ல மத்த பொண்ணுகளும் கொமருகளும் எச்சி ஊறித்திரிவாங்க. வீட்டுக்குள்ளிருந்து ஓடியாந்து ஒண்ணையொண்ணு முண்டியடிச்சிக்கிட்டு எட்டிஎட்டிப் பாப்பாங்க. அவங்க போற சித்திரத்தை ஊருக்குள்ள சனங்களுக்கு பதிலு சொல்லி முடியல. ‘ஏத்தா மூளிப்பட்டியா! ஒன்டவுனு மருமகன் விட்டா தெருவுலயே குடும்பம் நடத்திருவாம் போலுக்கோன்னு மானத்தை வாங்குறாங்க. ‘ஆமாமா டவுன்லயல்லாம் அப்படித்தானாம்னுட்டு நில்லாம ஓடிப் போயிருவா. ஆனா ரொம்பப்பேரு இந்த ஊர்லயே இவ்வளவு நாகரீகமான மாப்பிள்ளை இதுவரைக்கும் யாரும் கொண்டு வரலைன்னு சொல்லச் சொல்ல அத்தைக்காரிக்கி பெருமைக்காலு தாங்கலை.

ராத்திரியெல்லா தூங்கலை. நாளைக்கு காலையில பளபளன்னு விடிய வந்து இறங் கீருவாக. விதைக்குன்னு வெச்சிருந்த சின்னப்பக்காவுக்கு ஒரு பக்கா தினையை எடுத்து நல்ல நயங்கருப்பட்டி ஒண்ணுக்கொண்ணு சேத்து உரல்ல மாங்கு மாங்குன்னு ரெண்டு கையால மாத்துலக்கை போட்டு மாவு இடிச்சி வீட்டுல உருக்குன நெய் சேர்த்து உருண்டை பிடிச்சு வச்சா.

இளைய மருமகனுக்கின்னே மெனக்கிட்டு வெண்ணெயை சேத்து வச்சிருந்தா. வத்துப் பால்மாடு. வத்துப்பால் எருமையில பால் பீச்சுற மாதிரி சங்கட்டம் வேறெதிலயும் கிடையாது. கன்னுக்குட்டி பெரிசா வளர்ந்திருக்கும். அதை அவிழ்த்து விட்டதும் குதி குதின்னு குதியாளம் போட்டுப் போயி ஆவல்லயும் வெறிச்சலயும் தாய் மடுவுல டமால் டமால்ன்னு முட்டி மோதும். தட்டுத்தடுமாறி காம்புல வாய் வெச்ச நாலு இழுப்புல மடுவுல பால் ‘கிண்’ ணுனு இறங்கிரும். ரெண்டு சொர்க் பால் நாவுல விழுந்ததுதான் தாம்சம் அதைச் சங்கோட பிடிச்சு மல்லுக்கட்டி பலங்கொண்ட மட்டும் இழுத்திட்டுப் போயி கட்டிப்போடு முன்னே கிழவிக்கு அத்தாவுத்தியாகிப்போகும். அசந்தா ஒரு வீச்சுல ஒட்டகுடிச்சிரும். கறவைச்சட்டி விளிம்புல ஒட்டவச்சிருந்த பாக்குத்தண்டி வெண்ணெயை விரலால எடுத்து நாலு விரல்லயும் பெரு விரலால பரத்தி காம்புகள்ல இழுகினதும் மாடு சுகம்மா காலை அகட்டிக் கொடுக்க சொருசொருன்னு ஒரு வீச்சுல கறந்து முடிச்சிருவா.

பட்டணத்துக்காரு பட்டணத்துக்காருதான். இங்கேயிருக்கிற சோறு தண்ணி எதுவும் அவருக்கு செல்லுமானம் ஆகலையே. என்ன செய்து கொடுக்கேன்னாலும் நொட்டைச் சொல்லு சொல்லிக்கிட்டேயிருக்காரு.

“கறி எடுத்து காய்ச்சட்டுமா மருமகனே”

“ஆமா பெரிய்ய தலப்பாக்கெட்டு பிரியாணி காணாது பாரு”

“வடைக்கு போடட்டுமா மாப்பிளே”

“ஆமா பெரிய்ய அந்திக்கடை ஐயரு பொடி வடை காணாதாகுக்கும்”

“இட்லிக்கு நனையப் போடட்டுமாய்யா தம்பி”

“ஆமா பெரிய்ய முருகன் இட்லிக்கடை மாதிரி அஞ்சுவகை சட்னி வச்சித் தள்ளீருவீக”

“இடியாப்பம் எடுத்து தேங்காப்பால வச்சுத் தாரேன்”

“ஆமா பொல்லா நூடுல்ஸ் பண்ணப் போறீகளாக்கும்”

இப்படியே சொல்லுக்குச் சொல்லு கிராக்கி பண்ணி பச்சைத்தண்ணி பல்லுல படாம பெண்டாட்டி கிடைச்சாப் போதும்ன்னு ‘காணாத கழுதை கஞ்சியைக் கண்டதாம் ஓயாம ஓயாம ஊத்திக் குடிச்சதாம்ன்னு’ பெண் சாதியை நோண்டு றதுலதான் குறியா இருந்தாரேயொழிய மாமியா ளுக்கு எந்த மருவாதியுங் கிடையாது. இந்தத் தடவை வர்ற மனுசனுக்கு ஒரு வாய்ப் பலகார மாவது திங்க வச்சே தீரணும்ன்னுதான் இந்தப் பரப்புல அலையுறா.

இப்படித்தான் ஒருநா ராத்திரி மூத்த மருமகன் திடுதிப்புன்னு வந்துட்டாரு. ஆட்டுச் சந்தைக்கு இந்தப் பக்கமா வந்தவரு வியாபாரம் ஒண்ணும் கை கூடாததுனால செலவழிக்க மனசில்லாம அத்தை வீடு பக்கந்தானே அங்கே போய் கை நனைச்சிக்கிடலாம்ன்னு நம்பி வந்துட்டாரு. மூளிப்பட்டிக் கிழவிக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. எப்பவும் போல கால்ப்படி அரிசி போட்டு பொங்கி அதை மூணு தேறம் சாப்பிட்டது போக ஒரு சிரங்கைச் சோறு மிச்சம் இருந்தது. வேற இந்நேரம் போல அவக்குன்னு எதுவும் செய்து தர முடியாது. என்ன செய்றதுன்னு தெரியல. ஆளும் கொறாவிப் போயி இருக்காரு.

சாப்பிடுறீகளா மருமகனேன்னு கேட்டதுதான் தாம்சம் தலையை பலம்மா ஆட்டி சம்மணம் போட்டுட்டாரு. பாவம் எவ்வளவு பசியோ மனுசனுக்கு. ஐயையோ... இன்னும் என்ன செய்யன்னு வட்டில்ல அந்த ஒரு கை பருக்கைகளை எடுத்துப் போட்டு முன்னாடி வெச்சாள். வெச்சும் வெக்கெ முன்னே சோத்தை ஒரு பெரட்டு பெரட்டுனதும் ஒரே கவளமா வாயில போட்டுட்டாரு.

அவ்வளதான் கவளம் போன போக்கைப் பாத்ததும் மாமியாக்காரி ஓடிப்போயி அடுப்பாங் கடைக்குள்ளே ஒளிஞ்சிக்கிட்டாள். மருமகன் அங்குட்டும் இங்குட்டும் திரும்பி மாமியாரைத் தேடுறாரு. மருமகன் விட்டபாடில்லே. யத்தே.. யத்தே... யத்தேன்னு அந்த அர்த்தராத்திரியிலே அடுத்த வீடுகளுக்கு கேட்கும்படியா கூக்காடு போட ஆரம்பிச்சிட்டாரு. ஐயையோ இன்னும் என்ன செய்யன்னு மூளிப்பட்டியா இந்தா வந்துட் டேன் மருமகனேன்னு முன்னாடி வந்து நின்னா. அவளுக்கு ஒரே தவிப்பு மருமகனுக்கு மறு சோறு கேட்டு போட முடியலையேன்னு.

மருமகனுக்கு அத்தைகிட்டெ இன்னுங் கொஞ்சம் சோறு வேணுமின்னு கேட்க வெட்க மாயும் ராஞ்சனையாவும் இருந்தது. எப்படி கேட் கிறது. உள்ளே போன சிறு கவளம் வேற பெரும் பசியை கிளப்பி விட்டிருச்சி. திடீர்ன்னு மருமகன் அத்தையைப் பார்த்து சாப்பிட்டவெறும் வட்டிலை தலைக்கு மேலே தூக்கி கவிழ்த்துக் காட்டி, ‘யத்தே... யத்தே இங்கெ பாருங்க... இந்தா பாருங்க இந்த வட்டிலை எங்கெ வாங்கினீகன்னு எச்சிக் கையால துழாவிக் காட்டுனாரு.

அடாடா! மருமகன் சோறு காணலைன்னு நமக்கு இப்படிச் செய்து காட்டுறாரு. நாம எப்படி இதுக்கு பதில் சொல்றதுன்னு அவ ஒரு உத்தி பண்ணுனா. உள்ளே போய் சோத்துச்சட்டியை எடுத்துவந்து அவளும்அதை தலைக்கு மேல கவிழ்த்திக்காட்டி அன்னக் கரண்டியை உள்ளே விட்டு கொடகொடன்னு குடைஞ்சி ஆட்டி “இங்கே பாருங்க மருமகனே இந்தா பாருங்க. இந்தச் சட்டியையும் இந்தக் கரண்டியையும் எங்கே வாங்குனேனோ அங்கே தான் அந்த வட்டிலை வாங்குனது.” மருமகன் எந்திரிக்கிற வரைக்கும் ஆட்டிக்கிட்டே நின்னா.

நடுவுளமகளும் மரு மகனும் ஒரு தடவை ஊர்ப் பொங்கலுக்கு வந்திருந் தாக. “என்னடி ஒம்புருசன் ஒன்னய எப்படி வச்சிக் கிறாருன்னு மகளைக் கேட்டா. அதிலெல்லாம் ஒண்ணும் குறைவில் லம்மா நல்லா பாடுபடுற மனுசன்தான் பெரிய செலவாளியெல்லாங் கிடையாது. துட்டுக்கு மேல துட்டு சேக்கத்தான் ஆசைப்படுவாரு. திங்கிற சோத்துக்கும் குண்டித் துணிக்கும் ஒண்ணும் தரித்தியம் கிடையாது. ஆனா இந்த மனுசன்ட்டெ ஒரே ஒரு கொறவு. பல்லே தேய்க்க மாட்டேங் கிறாரு. ராத்திரி மனுஷி பக்கத்துல படுக்க முடியல.” அப்படீன்னு கவலைப் பட்டாள்.

இவ்வளதானே அதுக்கு நா ஒரு உபாயம் பண்றேன்னு மருமகனை கூப்பிட்டு, “ மருமகனே மருமகனே இந்தாங்க அஞ்சு ருபா. இந்த ஊரு கரும்பு திங்கத்திங்க அவ்வளவு ருசியாஇருக்கும் போயி கரும்பு வாங்கித் தின்னுங்கன்னு ருபாய கொடுத்து அனுப்பி வச்சாள். கரும்பு தின்னா பல்லுப்பாசியெல்லாம் போயி பல்லு பளிச்சின்னு ஆகிப்போகுமுன்னு அவ ஓசனை.

மருமகன் கரும்புக்கடை பூராம் ஏறி இறங்கி னாரு. கரும்பு விலை ரொம்பக் கிராக்கியா இருந்தது. கரும்பு ஒண்ணு ஒத்தருபா விலை சொன் னாங்க. இவரு நாலணவுக்கு கேட்டுப் பாத்தாரு. விலை மசியலை. அப்படியே கேட்டு வரும்போது ஒரு இடத்துல செக்கு ஆட்டி எண்ணை எடுத்துக் கிட்டு இருந்தாங்க. அங்கே போய் நாலாணாவுக்கு புண்ணாக்கு கொடுங்கன்னு கேட்டாரு செக்குக் காரன் கடலைப்புண்ணாக்கு ரெண்டு கைபிடிக்காத அளவுக்கு அள்ளிப் போட்டான். சொச்சம் நாலே முக்காருபா சில்லறை வேற கொடுத்தான்.

அதை ஒரு ஓரமா உக்காந்து திங்கத்திங்க ஊத்தைப்பல்லுக்கும் கடலைப் புண்ணாக்குக்கும் அப்படியொரு தொந்தமாகிப்போயி அடிச்சிலு வாயும் மேச்சிலுவாயும் கிச்சுன்னு காங்கிரீட் போட்டு கிட்டிச்ச மாதிரி வாயையே திறக்கவிடாம பிடிச்சுக்கிடுச்சி.

வீட்டுக்கு திரும்புன மருமகன் பல்லைப்பாக்க மாமியாளும், புருசனைப்பாக்க பெண் சாதியும் ஓடியாந்தாங்க. “என்ன மருமகனே கரும்பு தின்னீகளா”ன்னு மாமியா ஆவலாக் கேட்க ‘ம்...ம்...ம்..ம்...’ன்னு கண்ணை திரட்டி திரட்டி முழிச்சி இடவலமாவும் வலஇடமாவும் தலையை உருட்டுறாரேயொழிய வாய் திறக்க முடியல. நாலே முக்கா ருபா மிச்சத்துட்டும் மடியிலிருந்த புண்ணாக்கையும் பாத்ததும்தான் இவங்களுக்கு விசயம் புரிஞ்சது.

பிறகென்ன செய்ய அடிச்சிலுவாயை ஒருத்தியும் மேச்சிலுவாயை ஒருத்தியும் பிடிச்சி இழுத்துக் கிட்டு கிடந்தாங்க.

இந்த ரெண்டைப் பார்க்கிலும் இளைய பட்டணத்து மருமகன் எவ்வளோ மேம்பிக்கை யான ஆளு. மகளும் மருமகனும் மினி பஸ்ஸுல வந்து இறங்க ராத்திரி ஆகிப்போச்சி. மூளிப் பட்டியா ஓட்டமா ஓடி பக்கத்து வீட்டுலருந்து ஒரு நாற்காலியை கொண்டு வந்து மருமகனுக்கு போட்டா. மாப்பிள்ளை சட்டை பட்டனை கழற்றி விட்டு மொகட்டை மொகட்டைப்பாத்தாரு. ஓடிப்போயி ஒரு வீட்டுலருந்து விசிறி வாங்கி யாந்து கொடுத்தா.

“உஸ்ஸ்... வீட்டுல ஏ.சி. போடலையா”ன் னான். அத்தைக்காரி “ஆமா மருமகனே எல்லாம் ஓசியாத் தான் வாங்கியாந்தேன்” அப்படீன்னாள்.

“நான்சென்ஸ்” சொல்லிப்புட்டு பெண் சாதியைப் பார்த்தான். அவள் அவனை கர்ண கடூரமா பாத்த மட்டுலயிருந்தாள். ஆத்தாள் நெனச் சிட்டிருக்கிற மாதிரி இவளும் இவன் பந்தாவைப் பாத்துதான் ஏமாந்து கழுத்தை நீட்டீட்டாள். போய்ப் பார்த்தாதான் தெரியுது ஒரு வேலை வெட்டியில்லாம டவுன்லருக்கிற ஒயின்ஷாப் ஒயின் ஷாப்பா அலைஞ்சி எவன்டா கட்டிங் வாங்கிக் கொடுப்பான்னு ராத்திரி வரைக்கும் பல்லைக் காட்டி அலைஞ்சி குடிச்சுப் போட்டு வீடுவந்து சேருவான். பாவம் இவள் ஒருத்தி ரைஸ் மில்லுல வேலை செஞ்சி வயித்துக்குப் பாக்குறாள். அவனுக் கும் கொட்டுறாள்.

இந்த லக்ஷணத்துல மாமியா வீடு வந்ததும் உப்புப்பெறாத நாயி இல்லாத அம்பலமெல்லாம் பண்றது. மொகரக்கட்டைக்கு இங்கிலீஷ் வேற.

மாப்பிள்ளை வேண்டா வெறுப்பா விசிறி வெச்சு வீசி நாற்காலியில உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்து மூளிப்பட்டியாளுக்கு நெஞ்சு படபடன் னது. எதுவும் சாப்புட கொடுத்தா என்ன சொல் றாரோ...

“அடியேய் நீ எங்கெயோ ஒரு கூறுகெட்டவ. மசமசன்னு நிக்கலையின்னா அந்தா அந்த நார்ப் பெட்டியில மாவு வச்சிருக்கேன் அந்தப் பிள்ளைக்கு ரெண்டு எடுத்துக்கொடு நீயும் சாப்பிடுன்னா. அவள் அப்பவும் புருசனைப் பாத்தமட்டுல பல்லைக் கடிச்சுக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தாள்.

‘இவ சொன்னா கேக்க மாட்டா’ அப்படீன்னு மகளைப் பாத்து சடைச்சதும் மூளிப்பட்டியா ரெண்டு மாவுருண்டையை எடுத்து மருமகன் முன்னாடி ‘இந்தாங்க மருமகனே தினை மாவு நெய் போட்டு பிணைஞ்சது’ அப்படீன்னு நீட்டுனா.

அதைப் படீர்ன்னு தட்டிவிட்ட பட்டணத்தான் “இதுக்குத்தான் இதுக்குத்தான் இந்த ஊருக்கே நான் வரமாட்டேன்னேன். இதெல்லாம் நாந்திங்கிற வனா. லாலாக்கடையில ஸ்வீட் சாப்டுவேன். ஆர்ய பவன்ல ஜாங்கிரி சாப்டுவேன். மால்குடி ஸ்வீட்ஸ்ல அல்வா சாப்பிடுவேன். என்னைப் போயி... தினை மாவாம் தினை மாவு”. இருட்டில விழுந்த மாவுருண்டையை தேடிக்கிட்டிருந்தா அத்தைக்காரி. அதுக்கு மேல அங்கே நின்னுக்கிட் டிருந்தால் வீட்டுக்காரி, மாமியாளுக்கு முன்னாடி யே தூக்கிப்போட்டு மிதிச்சாலும் மிதிச்சிரு வான்னு ஒரே ஓட்டமா கொல்லைப்புறத்துக்கு ஓடியாந்துட்டான். அங்கே கயித்துக்கட்டில் கிடந் தது. தூரத்துல எருமைமாடு கட்டிக் கிடந்தது. பக்கத்துல கன்னுக்குட்டி கட்டிக் கிடந்தது. இருட்டா யிருந்தாலும் விசாலமான தொளுவா இருந்தது.

உடுத்தியிருக்கிற துணிமணி தவிர வேற மாத்து துணி கிடையாது. அதுக அழுக்காயிறப்படாதுன்னு ஜட்டி மொதக் கொண்டு கழட்டி கொடியில போட் டுட்டு அதிலிருந்த ஒரு சீசன் துண்டை இடுப்புல கட்டி கயித்துக்கட்டில்ல படுத்தான். இந்த இருட் டுல இங்கே யாரு வரப்போறா அப்படீன்னு காத் தாட படுத்திருந்தான். பசியோ பசி. மாமியாள்ட்ட ரொம்ப பெருமையா பேசிப்புட்டு வந்தது எவ் வளவு தப்பாப்போச்சி. சிறுகுடலை பெருங்குடல் கவ்வுதே!

ஏ யப்பா! அந்த தினை மாவோட வாசனை இன்னும் ஜமாலிக்குதே. பயலுக்கு எச்சில் ஊறுனது. மே காத்து சுழட்டி சுழட்டி வீசுனது. கொல்லைப் புற வெளி ரொம்ப சுகம்மா இருந்தது. இதுக்கு மேலயா ஏசி வேணும். பசிக்கிறக்கம் அவம்மேலே யே அவனுக்கு எரிச்சலை உண்டு பண்ணுனது. ஏது தினை மாவோட வாசனை இருக்க இருக்க கூடுத லையா மணக்கே. எழுந்திருச்சி இருட்டில சுத்தும் முத்தும் தேடுனான். எருமைமாடும் கன்னுக் குட்டியும் கரேர்ன்னு தெரிஞ்ச இடத்துல இன்னும் ஏதோ கருப்பா தெரிஞ்சது. மெல்லப் போயி குனிஞ்சு தெலாவிப் புடிச்சான்.

உரலு. அட இதிலிருந்துதான் தினை மாவு வாசம் மணக்குதோ. குனிஞ்சு முகர்ந்து பாத்தான். ஏ பாவி மட்டை! நாசியோட உச்சியைப் புடிக்குதே வாடை. நிமுந்து சுத்தும் முத்தும் பார்த்துட்டு பழையபடி குனிஞ்சு உரலுக்குள்ளே தலையைக் கொடுத்து நாக்கால லேசா நக்கிப் பாத்தான். உமிழ் எச்சில் புளிச்சின்னு ஊறி விழுந்தது. அவ்வளவு தித்திப்பு. அவ்வளதான் பசிக்கும் அந்த சுவைக்கும் ரொங்கிப் போயி உரலை வளைச்சு வளைச்சு மண்டி கல்லோட மணம் வருந்தண்டிக்கும் நக்கினதும் தலையை மேலே தூக்கிப் பாத்தான் முடியல. அடப் பாரெழவே இதென்ன சங்கட்டம். தம்பிடிச்சு முக்கி தலையை தூக்கிப் பாத்தான் உரல் ஒரு இஞ்ச் எழும்புச்சேயொழிய தலை விடுதலை யாகக் காணோம். உரல்ல மேல்பகுதி அகவாய் விழுந்து இருந்ததுனால தலை நுழையும் போது அவ்வளவு சங்கட்டமில்லை. அடியில இறங்கி தலையக் கொடுத்தது எவ்வள தப்பாப்போச்சி. பேசாம ஒரு உருண்டை மாவை வாங்கி தின்னு தொலைச்சிருக்கலாம். இப்படியும் அப்படியும் உரலோட ஆடிக்கிட்டே கிடந்தான். நேரஞ் சாமத்தைத் தாண்டிருச்சி. ஆளுகள் வராம ஒண் ணும் ஆகாது போலுக்கோ. இதை மாமியாக்காரி வந்து பார்த்திரக் கூடாதே. அவள் கிட்டெ எவ்வள தபர்தஸ்து பண்ணுனோம். பழையபடி தம் கட்டி உரலோட மல்லாடுனான். அவ்வளதான் உடுத்தி யிருந்த ஒரு முழம் துண்டும் அவிழ்ந்து விழுந் திருச்சி.

நாசமாப்போச்சி. இதை எடுத்து இடுப்புல கட்டவும் பின்பக்கம் கீழே கை எட்டலை. அவன் மனசுல மாமியாக்காரிதான் வந்து நின்னுக் கிட்டிருந்தா. விடிஞ்சா மானம் போயிருமே. அத்தைக்காரி வந்து நிக்கிற மாதிரி மனசுல தோணும் போதெல்லாம் தலையை அசைச்சு அசைச்சு புடுங்கிப் பாத்தான். ம்ஹூம்...

பொடதி வலியெடுத்ததுதான் மிச்சம். இவன் உரல்ல தலையைக் கொடுத்து இப்படியும் அப்படி யும் ஆட்டிக்கிட்டே நின்னது, அங்கே கட்டிக்கிடந்த கன்னுக்குட்டிக்கி அதோட தாய் மாதிரி தெரிஞ்சது. நேரமும் விடியுற கட்டம். டிப்போவுக்கு பால்கறக்க தெருவுல பால் மாடுகள் கன்னுக்குட்டியோட போகவும் வரவும் இருந்தது.

அவ்வளவுதான் இந்த கன்னுக்குட்டிக்கு அம்மா ஞாபகம் வந்து கயித்தை படக்குன்னு அத்துக்குட்டு விறுவிறுன்னு ஓடியாந்ததும் வழக்கம் போல டமால் டமால்ன்னு அவன் புட்டாணியில் நாலஞ்சு முட்டு முட்டுனது இந்தச் சத்தம் வீட்டுக்குள்ளே தூங்கிக்கிட்டிருந்த அத்தைக்காரி பாம்புக் காது களுக்கு கேட்டிருச்சி. ‘ஐயையோ நான் என்னங் கட்டும் கன்னுக்குட்டி அவுத்துக்கிடிச்சே. பாலு ஒரு சொர்க் இல்லாம உறிஞ்சிருமே. விருந்தாடியா வந்த எம்பிள்ளைக்கு ஒரு சொட்டு கூட இல்லாம பாழாக்கிருமே’ கறவைச் சட்டியில வெண்ணை யை எடுத்து விளிம்புல இழகிக்கிட்டு இருட்டுல தட்டுத் தடுமாறி ஓடியாந்தா.

Pin It