ஆலமரம் போல
எங்கள் வீட்டுவாசலில்
ஒரு முருங்கை மரம் இருந்தது.
மார்கழி மாதம்
பூசணிப்பூ கோலத்தின் மீது
தன் வெள்ளைப்பூக்களைத் தூவி
அக்காவை விட
மிகச் சிரத்தையாய்
கோலத்தை மிக அழகாக்கும்.
“இதற்கு இதே பொளப்பாப் போச்சு
கவட்டையை எடுத்து
கரையும் காகத்தை விரட்டு”
என பணிக்கும் அப்பா
இரவு முழுவதும் முருங்கையில் அமர்ந்து
கீச்சிடும் குருவிகளின் சத்தங்களை
குதூகலமாய் இரசிப்பார்.
வகை வகையாய் வரும்
வண்டுகளைப் போல்
தேனடை, கரிச்சான்
மைனா, சிட்டுக்குருவி என
தேனெடுக்க வரும்
பறவையினங்களால்
மதுரம் நிரம்பி வழியும் அத்தெரு.
பூக்கள் உதிர உதிர
பிஞ்சுகள் தலைகாட்ட ஆரம்பித்தவுடன்
உயரம் குறைவாகி விடும் அம்மரம்.
வாத்தியாரின் பிரம்பாய்
பச்சைப்பாம்பாய்
நீண்டு தொங்கும் அம்மரம்
பாதங்கள் இல்லாமலேயே
செருப்புகளை
அணிந்து கொள்ளும்.
ஒரு நாள் நள்ளிரவில் பெய்த
அடைமழையில்
வேரோடு சாய்ந்தது அம்மரம்.
மதுரம் நிரம்பி வழிந்த
அந்த தெருவில்
இப்போது குருவிகள் வருவதில்லை.

- ப.கவிதா குமார்

Pin It