‘‘இந்த ராமசாமியினால் எவ்வளவு பிரச்சனை. ஒழுங்கா வேலைக்கு வரமட்டான். வீட்டிலேயும் அடிதடி. எந்நேரமும் தண்ணிலே தான் மிதப்பான். கெஞ்சினால் மிஞ்சுவான். மிஞ்சினால் கெஞ்சுவான். கடைசியாக பித்தளைக் கட்டியை இடுப்பிலே சொருகிக் கொண்டு வந்து சிக்கி இப்படி எல்லாத்தையும் செக் பண்ற மாதிரி ஆயிடுச்சே”. எனப் புலம்பினான் பாண்டி.

“அந்த ராஸ்கல் பண்ணுன காரியத்தால இந்த வாட்ச்மேன் நம்மளை இப்படி செக் பண்றான். வேஷ்டியை அவருங்கான். உருமாலை அவருங் கிறான் இடுப்பை தடவிப் பாக்கிறான். செருப்பைக் கழற்றச் சொல்லி கீழே பாக்கிறான். கோவணம் ஒண்ணுதே பாக்கி. என்ன பொழப்பு இது மானங்கெட்ட பொழப்பு” மாரியப்பனும் கூடச் சேர்ந்து பொறுமினான்.

முதலாளியும், கணக்குப்பிள்ளையும் கேட் டின் உட்புறமாக நிற்க வாட்சுமேன் தினமும் எல்லா தொழிலாளிகளையும் இவர்கள் சொல்கிற மாதிரி செக் பண்ணுவதும், டிபன் பாக்ஸை திறந்து காட்டச் சொல்வதும் பெண்கள் என்று கூடப் பாராமல் இப்படித் திரும்பு அப்படித் திரும்பு, மாராப்பு சீலைய அவுத்து உதறிக்காட்டு என அத்துமீறலாக் கடந்த ஒரு வாரமாக நடந்துகிட்டு இருப்பதை பார்த்து அந்த ரோலிங் மில்லில் வேலைபாக்கிற 15 பேரும் கோபமாய்த்தான் இருந்தனர். வருஷாவருஷம் சேர்த்திக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை சேர்த்தி ஒசத்தாம இருக்கிறதுக்கு இப்படி பண்றாங்களோ என்கிற சந்தேகம் கூட அவர்களுக்கு வந்தது.

பாண்டியும் இரண்டு மூன்று நாளா போகிறப்பவும், வரப்பவும் மில்லுக்குள்ளும், வீட்டிலேயும் இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும் என்கிற சிந்தனையிலேயே இருந்தான்.

பாண்டிக்குள்ளாக பலவிதமான யோசனை கள் ஓடிற்று. கெடுபிடியாக இருக்கிற முதலாளி, ரொம்ப ஆச்சாரம் பாக்கிறவர். நெத்தியிலே நல்லா தெரிகிற 3 கோடு திருநீறு, கதர்ச்சட்டை, நல்ல அய்யர் மாதிரி சிகப்பு. செருப்புகூட போட மாட்டார். ஆனால் மகா கஞ்சன். ஈவு இரக்கம் கொஞ்சமும் இல்லாதவர். காசு கேட்டால் கதை சொல்லியே திருப்பியனுப்பி விடுவார் இதெல் லாம்  பாண்டி மனசிலே படிஞ்சு போயிருந்தது.

அன்றைய தினம் பாண்டி ஷிப்ட் முடிவதற்கு முன்னால் கை கால் முகமெல்லாம் கமுவி பனியனைக் கழற்றி தோள் மேல் போட்டுக் கொண்டு குறும்புச் சிரிப்புடன் கேட்டை நோக்கி வந்தான்.

வழக்கம் போல் முதலாளியும் கணக்குப் பிள்ளையும் முன்னால் நிற்க ஆட்களை வரிசையாக் நிற்கச் சொல்லி ஒவ்வொருத்தராக செக் பண்ணிக் கொண்டிருந்தான் வாட்சுமேன். 4 பேர் தள்ளி நின்று கொண்டிருந்ததான் பாண்டி. இவன் முறை வந்தது. பனியனை ஏற்கனவே கழற்றியிருந்ததால் அப்படி திரும்பு இப்படி திரும்பு எனக் கூறி விட்டு இடுப்பை நிரவி விட்டு வேஷ்டியை அவுத்து  ஒதறு என்றான் வாட்சுமேன்.

“செக் பண்ணியாச்சுல்ல இனி உட்டுறுங்க. வேஷ்டியெல்லாம் அவுக்க வேணாம்`` என்றான் பாண்டி”.

“ஏப்பா அவுத்து ஒதறுன்னா ஒதற வேண் டியதுதானே? ராமசாமி இப்படித்தானே பித்தளைக் கட்டிய இடுப்பிலே சொருகிக்கிட்டு போய் நாங்க புடுச்சோம்”.

“வேண்டாங்க, ஒருத்தன் திருடினா எல்லோ ரும் திருடுவாங்களா? அதுவும் இப்படி செக்அப் பண்றபோது எவனாவது திருடுவானா?”

“அந்தக் கதையேல்லாம் வாண்டா. வேஷ்டி யை அவுத்து ஒதறுன்னா ஒதறு”.

“வேணான்னா கேக்கமாட்டீங்கறீங்க உங்க பிரியம்...” எனச் சொல்லிக் கொண்டே ஒரு பக்கம் தைரியத்தையும் மறுபக்கம் வருகிற சிரிப்பையும் அடக்கிக் கொண்டே வேஷ்டியை அவுத்து தோளில் போட்டு, வீர நடை போட்டான் அம்மணமாய் ! முதலாளியும் கணக்கும் ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பிக் கொண்டனர்.

“த்தோ... கருமம் கருமம்! இந்த பாண்டி இப்படி அண்டர்வேர் இல்லாமெ வருவான்னு தெரியலீங்க மொதலாளி” - புலம்பினான் கணக்கு.

“இவங்க எப்படி வேணுமானாலும் வரு வாங்கய்யா இப்படி செக் பண்ண வேண்டா மய்யா. வேணும்னா மெட்டல் டிடெக்டர் ஒண்ணு வாங்கீர்லாம்” எனக்கூறிக் கொண்டே கோபமாய் நடந்தார் முதலாளி.

அன்றோடு ஒழிந்தது இந்த செக்அப் முறை.

இல்லாதவனுக்கு அம்மணமும் ஓர் ஆயுதம் தான் போல..!

Pin It