நாட்டுப்புறக்கதை

 

பொன்னோ பூவோன்னு பொத்தி பொத்தி வளத்த தங்களோட ஒரே பொம்பளை புள்ளைக்கு நாலா திசையிலும் திரிஞ்சி மாப்பிள்ளை தேடுனாங்க புருசனும் பெண்சாதியும்.

பெண்டாட்டி பாக்கிற மாப்ளே புருசனுக்கு பிடிக்காது. புருசன் பாக்கிற மாப்ளே பெண் டாட்டிக்குப் பிடிக்காது. “ஒரு நல்ல மாப் பிள்ளையா பாருய்யான்னா கொண்டு வந்தவன் ஊரைப் பார்ரான்னா ஊரணியப்பாக்குறான் “ அப்படீன்னு பெண்டாட்டிக்காரி புருசனை நையாண்டி பண்ணுவா.

“நீ ஒருத்தனைக் கூட்டியாந்தியே..! ஊருக்குள்ள இவன் வச்சதுதான் சட்டம்ன்னு பெருமை கொழிச்சியே போயி விசாரிச்சேன். உதுத்த கழுதை ஊருக்கு பெரிய கழுதைன்னு அலையுறான்” அப்படீன்னு இவன் மடக்குவான்.

“அந்த வமிசமே பலதார வமிசம். அந்த வகையில எவனாவது ஒத்தப் பெண்டாட்டி வச்சு பிழைக்கிறானா. ஆசைக்கு அவளைக்கட்டி அழகுக்கு மகளைக்கட்டி கூடிவாழ கொழந்தியாளைக்கட்டி சேர்ந்து  வாழ நங்கையாளைக் கட்டி நாலுஞ்சேந்து நாசமாப் போனாகன்னு சொலவஞ் சொன்ன மாதிரி சீரழியுதுக”

“நீ பாக்குற வளசலெல்லாம் பாக்கத்தான் பவுசா வெள்ளையுஞ் சொள்ளையுமா திரியுவாங்க. அங்கெ வாக்கப்பட்டுப் போனவ ஒவ்வொருதியும் கஞ்சிக்கில்லாமத்தான் செத்துருக்காளுக. ‘தேரு ரதமேறி வந்தேன்டி, தெருவிலே புடம் போட்டு சிவந்தேன்டி, நல்லதை பொல்லதை தின்னேன்டி,  கடைசியில் நாய்க்கு கிடையா கிடந்தேன்டி’ன்னு சட்டி பானை சொலவடை போட்ட மாதிரி நாதியத்துக் கிடக்க வேண்டியதான்”.

இப்படியே வீட்டுல நிதாசரியும் சண்டை நடந்தது. நாளும் கிழமையும் போய்க்கிட்டிருந்தது.கடைசியா ஒருநா புருசன்காரன் நல்ல வாட்டசாட்டமான இளந்தாரி மாப்பிள்ளையை ரெண்டேரு விவசாயம் பாக்கிற ஒரு உழைப்பாளியை வீட்டுக்கு கூட்டியாந்தாரு.

“இந்தா பாருடி நம்ம பொண்ணுக்கு அறிவாளி மாப்பிள்ளையா பாத்து கொண்டாந்திருக்கேன்”னான்.

“ஆமலு! ஏ அப்பானெல்லாம் அப்படியா பாத்து என்னை கட்டிக் கொடுத்தாரு?” அப்படின்னு சடைச்சாள்.

“இல்லடி நல்ல உழைப்பாளி பையன். பொழுது புறப்படுறது நின்னாலும் நிக்கிம். பையன் பாடுக்குப் போறது நிக்காது. காலு கையி திடம் உள்ள வரைக்கும் நம்ம புள்ளைக்கி அன்ன ஆகாரத்துக்கோ குண்டித்துணிக்கோ தரித்திரம் இல்லாம பாத்துக்கிடுவாரு, .மண்ணைக் கிண்டி விளைய வைக்கிறவனை விட உலகத்துல யாரு பெரிய மனுசன் ?”புருசன் அடிச்சுப் பேசினான்.

“அதெல்லாங் கூடாது, அன்னாடு காச்சிக்கெல்லாம் எம்புள்ளைய தரமாட்டேன். எம்புள்ளெ வெயில்ல மழையில அலையப்படாது. நான் பாக்கிற மாப்பிள்ளை அவளை உள்ளங்கையில வச்சு தாங்குற மாதிரி பாத்துக் கொண்டு வருவேன்”னு ஒத்தகால்ல நின்னா.

“உனக்கென்ன தெரியும், நீ பொல்லாக் கண்டயோ, பெத்த பிள்ளையை ஆத்துல கிணத்துல பிடிச்சு தள்ளுற மாதிரி தள்ளுறயே நீ விளங்கமாட்டே  தொளங்கமாட்டே”.

“ நீ தான் அவளைக் கொண்டு போய் பாழுஞ் சமுத்திரத்திலே தள்ளி தவிக்க விடப்போறே``.

பழையபடியும் சண்டை  வழக்கம் போல ஆரவாரமாய் ஆரம்பமாயிருச்சி. அப்போ  மகள்க்காரி ஊடே விழுந்து, “நிறுத்துங்க நிறுத்துங்க உங்க சண்டையை. எனக்கும் நல்லது கெட்டது தெரியும். எனக்கு வர்ற மாப்பிள்ளை எப்படி இருக்கணும்னு எனக்குத் தெரியும். உங்க சோலி என்னமோ அதை மட்டும் பாருங்க. உங்களை மாதிரி கைக்கு எட்டுன மட்டும் போயி மாப்பிள்ளை பாக்காம உலகஞ்சுத்தி பாக்கப் போறேன். இந்த ஊரும் உலகமும் யாரை ஒசந்த மனுசன்னு கையெடுத்துக் கும்பிடுதோ அந்த ஆள்தான் எம் புருசன். அதை நானா தேடிக்கிடுவேன் வரட்டுமா?” அப்பன், ஆத்தாள்ட்ட சொல்லிட்டு மாப்பிள்ளை தேடி உலகஞ்சுத்தப் புறப்பட்டுட்டா.

அப்படியே பல ஊரு நாடு கண்டு சுத்தி வந்துக்கிட்டீருந்தவளுக்கு ரொம்ப அலுப்பாயிப் போச்சி. பாத்த மனுசர்கள்லயும் ஒருத்தனுக்கொருத்தன் விட்டவனாத் தெரியல. யாரை இருக்கிறதுலயே உசந்தவன்னு இவளோட புத்திக்கு அடபடலை.

ஒரு நா பொழுதிலே  இவ வழிப்போக்கா போய்க்கிட்டிருக்கும் போது அந்த நாட்டு ராஜா ரொம்ப தடபுடலா பல்லக்குல வந்துக் கிட்டிருந்தாரு. மொதல்ல கணக்குல இல்லாத ரதங்க அசைஞ்சி அசைஞ்சி வந்தது. அதுக்குப் பின்னாடி யானைகள் வரிசை பிடிச்சு போனது. பிறகு எங்குட்டாகப்பட்ட குதிரைகள்  அணி அணியாப் போச்சுதுக, அதுக்குப் பின்னாடி சிப்பாய்க ஒண்ணு சொன்னது மாதிரி நடந்து போய்க்கிட்டிருக்க, கடைசியா சூரியன் கிளம்பி வந்த மாதிரி மகாராஜா வந்துக்கிட்டிருந்தாரு.

ஊரு மனுச மக்க ஒருதர் விடாம அவருக்கு நின்று மரியாதை செஞ்சாங்க. வணங்காத ஆளில்லை, கும்பிடாத கைக இல்லே.

இந்த ஆள்தான் நமக்கேத்த மாப்பிள்ளை. நமக்கு கடைசி காலம் வரைக்கும் வச்சுக் காப்பாத்த  தோதுள்ள ஆளு. இவருக்கு மேலே உலகத்துல ஆள் கிடையாதுன்னு இவளுக்கு சந்தோசம் புடிபடலை. வேகமாப்போய் ராஜாவைப் பார்த்து விசயத்தைச் சொல்ல ஒட்டமா ஒடுனா.

எல்லாந்தாண்டி படைகளையெல்லாம் கடந்து மகாராஜாவை பார்க்கும் போது அவரு பல்லக்கை நிறுத்தி இறங்கிப் போயி எதிரே வந்துக்கிட்டிருந்த ஒரு சாமியாரை காலில் விழுந்து கும்புட்டுக்கிட்டிருந்தார். சாமியார் தாடி மீசை தலைமயிரெல்லாம் நரைச்சு புளிச்சுப்போயி இடுப்புல ஒரு கோவணம் மட்டும் கட்டியிருந்தார்.

மகாராஜாவை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிட்டு இவர் பாட்டுல நடக்க ஆரம்பிச்சார். இவ யோசிச்சா, என்னடா இது இந்த உலகத்துலயே இந்த ராஜாதான் ரொம்ப ஒசத்தியான புள்ளின்னு பாத்தா, இந்த ஆள் இந்த சாமியார் கால்லயில்ல விழுந்து கிடக்கான்.அப்போ இந்த சாமியார்தான் உலகத்திலேயே பெரிய ஆள், சகல வித்தைகளும் தெரிஞ்சவனாயிருப்பாம் போலுக்கு. நாம கல்யாணம் மூச்சா இவனைத்தான் முடிக்கணும்னு ராஜா நெனைப்பை விட்டுட்டு சாமியார் பின்னாடி நடந்தா.அந்தச் சாமியார் நடையா நடந்து போயி அந்த ஊருக்கு வெளியேயிருந்த ஒரு கண்மாய்க் கரை பிள்ளையார் கோயிலுக்கு வந்து சேந்தான். சனங்களோட சனங்களா பிள்ளையார் சாமியை மூன்று தடவை சுத்தி வந்து தலையில குட்டி மூன்று தடவை உக்கி போட்டு நெடுஞ்சாண்கிடையா விழுந்து கும்பிட்டு  பக்கத்திலிருந்த ஆலமரத்து நிழல்ல போய் கையை தலைக்கு அணவு கொடுத்து படுத்துட்டான். அடடா ராஜா பெரியாள்ன்னு நெனச்சோம். இந்த சாமியார் கால்ல விழந்தாரு. அப்போ இவர் தான் ஒசத்தின்னு நெனச்சு வந்தா இவரு பிள்ளையாரை இத்தனை கும்பிடு  போடுறாரே. அப்படீன்னா இந்த பிள்ளையாரையே நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டியதான்னு கூட்டம் குறைஞ்சப் பிறகு பிள்ளையார்கிட்ட விபரத்தை சொல்ல வேண்டியதான்னு கரையோரமா ஒக்காந்தா. பிள்ளையாரை சேவிக்க வந்த கூட்டம் கொஞ்சம் குறைய ஆரம்பிச்சது. இவள் போய் பிள்ளையார்ட்ட தன்னோட விரதத்தை சொல்லணும்னு நெருங்கி போனாப்போ எங்கிருந்தோ வந்த நாய் ஒண்ணு பிள்ளையாருக்கு எதுக்காக வந்து ஒரு காலைத் தூக்கி சொர்க் சொர்க்குன்னு பிள்ளையார் மூஞ்சி மொகரையெல்லாம் மோண்டுவிட்டுருச்சி. பிள்ளையார் ஒண்ணும் சொல்லல. சனங்க பால் ஊத்தும் போது எப்படி உக்காந்திருந்தாரோ அப்படித்தான் இப்பவும் உட்கார்ந்திருந்தார்.

அப்பேர்ப்பட்ட ஊராளுத ராசா. அவர் வணங்குற சாமியார். அந்த சாமியார் கும்பிடுற பிள்ளையார். அந்தச்சாமியை கொஞ்சங்கூட தாட்சண்யம் பார்க்காம இந்த நாய் இவ்வளவு ரூட்டியா வந்து மேலுகாலெல்லாம் வளைச்சு மோண்டுவிடணும்னா இந்த நாய் எப்பேர்க்கொத்த கீர்த்தியுடையதாயிருக்கும். விடப்படாது இந்த நாயை நான் கல்யாணம் பண்ணி உலகப் பெரும் புள்ளியை கட்டிக்கிட்டவான்னு பேரை வாங்கியே தீரணும்ன்னு நாய்க்கி பின்னாடியே ஓடுனா.நாயி லொங்கு லொங்குன்னு ஓடிக்கிட்டேயிருந்து. நாய் நடந்து யாரும் பாத்துருக்காகளா? நாய்க்கு வேலையில்லே உக்காரத் தேறமில்லேன்னு அந்தக்காலத்துல சும்மாவா சொன்னாங்க. இவளும் விடாம இளைக்க இளைக்க நாக்கைத் தொங்கப் போட்டு அதே மாதிரியே ஓடுனா.

திடீர்ன்னு ஒரு சந்துக்குள்ளிலிருந்து ஒருத்தன் விருட்டுன்னு ஓடியாந்து அந்த நாயை விரட்டி விரட்டி கல்லால் எறிஞ்சான். அது கால்க்கால்ன்னு கூப்பாடு போட்டு திரும்பிப் பார்க்காம ஓடுச்சி.

“தொட்டியில ஊத்துன கஞ்சியை குடிக்காம எங்கே போய் ஊர் சுத்திட்டு வர்றே. உன்னை கட்டிப்போட்டு உதைச்சாத்தான் சரிப்படுவே” நாயை விட கெதியா ஓடுனான்.

ஊரையே ஆட்டிப்படைக்கிற ராஜாதி ராஜன். அவரு மரியாதைக்கான சாமியார். அந்த சாமியாருக்கு ஒரு பிள்ளையார் சாமி துணையிருக்காரு. அந்த  சக்தி வாய்ந்த சாமி மேலே மோள்ற நாய் எவ்வளவு சக்தியுள்ளதாயிருக்கும் அப்பேர்ப்பட்ட நாயையும் ஒருத்தன் விரட்டி  விரட்டி கல்லைக் கொண்டு எறியுறான்னா அவனை விட பெரிய புள்ளி இந்த உலகத்துலயே கிடையாதுன்னு அந்த மனுசனை விரட்டி இவ பின்னாடியே ஓடுனா.

அந்த ஆள் ஒரு சின்ன குடிசை வீட்டுக்குள்ளே போயி ஒரு மண்வெட்டியை எடுத்து தோள் மேல போட்டுக்கிட்டு வயல்காட்டுக்குப் போனாரு. வயலுக்கு மடையை திறந்து விட்டு தண்ணி பாய்ச்ச ஆரம்பிச்சாரு. கவலையில்லாம பாட்டுப்பாடி ஆடிக்கிட்டே வேலையெல்லாம் மலைக்காம செய்தாரு.

உலகத்து சனங்களெல்லாம் கையெடுத்துக் கும்பிடுற அந்த மனுசரை தனக்கு புருசனாகப் போறவரை பக்கத்துல போயி நேருக்கு நேர் நின்னு பாத்தாள். அன்னைக்கி அவளோட அய்யா அவளுக்காக வீட்டுக்குக் கூட்டி வந்த அந்த அறிவாளி மாப்பிள்ளைதான் அந்த மேப்புள்ளி.

Pin It