இரா.இராஜேந்திரன், கடலூர்
6 மணிநேரம் 7 மணி நேரம் மின்சார வெட்டில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது. இதைச் சரிசெய்ய ஒரு துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை தமிழக அரசு. சென்னை, திருச்சி நகரங்களில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா என்ன வேண்டிக் கிடக்கு?
மின்வெட்டைப் போக்கத் தமிழக அரசு ஏதும் செய்ய வில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது! கூடங்குளம் அணுமின் திட்டம் துவங்கப்படாமல் இழுத்துக் கொண்டு போவதில் தமிழக அரசும் தன்னாலான 'பங்களிப்பைச்" செய்து கொண்டு தானே இருக்கிறது!

கே.அரங்கராஜன், பாதிரக்குடி
ஜெயலலிதாவின்அதிரடி நடவடிக்கையான பால்விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, உத்தேச மின் கட்டண உயர்வு ஆகியவை முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதே..?
ஜெயலலிதாவுக்கு உள்ளூர மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் இது தற்காலிகமானதே. அந்தக் கொடூர விலை உயர்வுகள் மக்களின் அடிமனசில் இருக்கத்தான் செய்யும்; அது என்றாவது ஒருநாள் வெடித்துக் கிளம்பத்தான் செய்யும். அதுமட்டுமல்ல, முல்லை பெரியாறு விவகாரமும் சாதாரணமானதல்ல. அண்மைக்காலத்தில் இத்தகையதொரு தன்னெழுச்சியான வெகு மக்கள் போராட்டத்தைத் தமிழகம் கண்டதில்லை. இது பிரிவினைவாதிகள் மற்றும் அராஜகவாதிகளின் கைகளுக்குப் போய்விடாமல் தடுத்துக் கொண்டே இந்தப் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியாக வேண்டும். தமிழக முதல்வரின் சகல திறமைக்கும் சவால் விடுக்கும் பிரச்சனை இது. இதில் ஜெயிப்பாரா ஜெயலலிதா என்று பார்ப்போம்!

2 ஜி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த கனிமொழிக்கு கொடுக்கப்பட்டவரவேற்பு பற்றித் தங்கள் கருத்து என்ன?
தமிழர்களை இழிவுபடுத்தினார்கள் என்று வடபுலத்தவரான கனகவிஜயர் தலையில் கல்லை வைத்துக் கொண்டு வந்தார்கள் தமிழக மன்னன் என்று கதை கூறுவார்கள். இப்போதோ தமிழகத்தின் கனிமொழி தலைமீது 2 ஜி ஊழல் எனும் பாறாங்கல்லைத் தூக்கி வைத்து, திகார் சிறையில் அடைத்திருந்தார்கள் டில்லிக்காரர்கள். அதிலிருந்து இன்னும் விடுவிக்கப்படவில்லை; வெறும் ஜாமீன்தான். இதற்கே வரவேற்பு - ஏதோ இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் சிறைக்குப் போய் வந்தது போல! இத்தகைய மனிதர்களுக்கு கூச்சமே இருக்காது போலும்!

"டேம் 999" திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்படாமல் தடை செய்தது சரியா? தங்களின் நிலைப்பாடு என்ன?
தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்கத் தடை செய்திருக்க வேண்டும். இந்தப் படம் கேரளத்தில் வெளியிடப்பட்டது அங்கே தமிழர்கள் மீதான எதிர்ப்பு உணர்வு எழுந்ததற்கு ஒரு முக்கியமான காரணமாகும். மலையாளிகளிடம் இனவெறி இருந்ததில்லை. அங்கே எல்லா மொழி பேசுவோரும் இணக்கமாக வாழ்ந்து வந்தார்கள். அந்த பூமியையும் கெடுத்துவிட்டார்கள் இத்தகைய சினிமாக்காரர்கள்.  வெகுஜன ஊடகம் வழி நல்லதோ, கெடுதலோ இரண்டையும்  பரந்துபட்ட அளவில் செய்ய முடியும். உச்சநீதிமன்றத்தில் இருக்கும் ஒரு விவகாரம் பற்றி ஒருதலைப்பட்சமாகப் படம் எடுத்து கேரள மக்களிடையே தேவையற்ற பீதியைக் கிளப்பியது கலைச்சுதந்திரம் ஆகாது. இது கொலைச்சுதந்திரம். இரு புறத்திலும் பொதுமக்கள் அல்லவா தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆர்.கே.எஸ்.சம்சுகனி, டி.மாரியூர்
தூத்துக்குடி மாவட்டம் தி.க. துணைத்தலைவர் பெ.காலாடி என்பவர் தனது "மனித சக்தி" மளிகைக் கடைச் சுவரில்  "இருமுடி சுமக்கும் பக்தரைவிட பொதி சுமக்கும் கழுதையே மேல்" என்று எழுதியிருக்கிறார். பக்தர்களைப் பண்படுத்துவது சரியா? புண்படுத்துவது சரியா?

பெரியாரின் அடிப்படையான கோட்பாடு பிராமணிய எதிர்ப்பே தவிர, கடவுள் மறுப்பு அல்ல. பின்னது முன்னதின் நீட்சியாகத் தனது கடைசி காலத்தில் அவர் எழுப்பியது. தி.க. கடவுள் மறுப்பை மட்டுமே அடிப்படையான விஷயமாக்கி அவரது சிலை பீடத்தில் பொறித்துவிட்டது.

இதனால் கடவுள் நம்பிக்கையாளர்களை எல்லாம் இழிவு செய்யும் நிலைக்குப் போனார்கள் திக.வினர் சிலர். அவர்களும் தமிழர்கள், அதிலும் உழைப்பாளர்கள் என்பதை மறந்தார்கள். அவர்களிடம் கடவுள் மறுப்புச் சிந்தனையை பதமாக எடுத்துச் சொல்ல வேண்டுமே தவிர கேலி செய்வது நியாயமில்லை. அதிலும் கடவுளின் பெயரால் சாதியம் புகுத்தப்படுவதிலிருந்து விஷயத்தை ஆரம்பிப்பது நல்லது. உதாரணமாக,  கர்நாடகத்தின் குக்கி சுப்பிரமணியா கோயிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சி இலையில்  பிற சாதியினர் உருண்டால் தோல் வியாதியெல்லாம் தீரும் என்று உருள வைக்கிறார்களே அதைச் சொல்ல வேண்டும். அதையும் நியாயப்படுத்தியதே அங்குள்ள பாஜக அரசு, அதைச் சொல்ல வேண்டும். இவர்கள் மத்தியிலும் ஆட்சிக்கு வந்தால் பிராமணரல்லாதாரையெல்லாம் எச்சில் இலையில் உருள வைத்து விடுவார்கள் என்பதைச் சொல்லவேண்டும். இவர்களது கடவுள் சாதி காக்கும் கடவுளாக இருக்கிறாரே அவரைக் கும்பிட வேண்டுமா என்று  கேட்க வேண்டும். இந்த மளிகைக் கடைக்காரர் விஷயத்திலேயே கவனியுங்கள், தனது கடைக்கு "மனித சக்தி" என்று பெயர் வைத்திருக்கிறார். அந்த மனித சக்தியும் சமத்துவத்தால் முன்னேறும்போது "கடவுள் சக்தி" ஏன் வேண்டியிருக்கிறது சாதியம் என்று கேட்க வேண்டும். பிறகு, கடவுள் இல்லை என்பதற்கான தர்க்க ரீதியான  வாதங்களை எடுத்து வைக்க வேண்டும். அதை விடுத்து கோடிக்கணக்கான வெகு மக்களைப் பகைத்துக் கொள்வது பிராமணியவாதிகளுக்கே உள்ளார்ந்த மகிழ்ச்சியைத் தரும். அந்த மளிகைக் கடைக்காரர் அதைத்தான் செய்கிறார்.

செ.சத்தியசீலன், கிழவன் ஏரி
அன்னா ஹசாரேயின் ஊழல் தடுப்பு இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, தளர்ச்சி பற்றி....?
ஆஹா! அப்படியென்ன நீண்ட வரலாறைக் கொண்டிருக்கிறது அவரது இயக்கம்? எல்லாம் சில மாதங்களுக்குள் நடந்த சித்துவேலைதானே? ஊடகங்கள் நினைத்தால் இன்னொரு தேசப் பிதாவை உருவாக்கிவிட முடியும் என்று கருதப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. நாடாளுமன்றத்தில் சிபிஐ கட்சியின் குருதாஸ் தாஸ் குப்தா பேசியதுதான் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. "நமது  தேசப்பிதா ஒருவர்தான். அவர் மகாத்மா காந்தி. இன்னொரு தேசப்பிதா என்று ஒருவர் தோற்றங்காட்டுகிறார். அது நடக்காது. ("அவர் ஊடகங்களின் தயாரிப்பு" என்று சபையில் சிலர் சத்தம் கொடுத்தார்கள்.) அவர் ஊடகங்களின் தயாரிப்பு மட்டுமல்ல, அவற்றின் சொந்தக்காரர்களாகிய பெரும் தொழில் நிறுவனங்களின் தயாரிப்பு  என்பதை மறந்துவிடாதீர்கள்" இதுதான் உண்மை நிலவரம். இதிலே மூன்று நாள் உண்ணாவிரதம் என்று மும்பையில் உட்கார்ந்தவர் இரண்டாம் நாளே எழுந்துவிட்டார். கூட்டம் சரியாகக் கூடவில்லை எனப்படுகிறது. ஊழல் ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான பிரச்சனைதான். ஆனால், அதை லோக்பால் எனும் ஒரு சட்ட விவகாரமாக சுருக்குவதும், ஒரு கட்சி எதிர்ப்பாக மாற்றுவதும் எப்படிச் சரியாகும் என்று புரியவில்லை. வருகிற ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரசை மட்டும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்வாராம் அன்னா. பாஜகவை ஏன் விட்டுவிட்டார்? "அன்னா ஆர்.எஸ்.எஸ்.சின் ஏஜென்ட்" 1983ல் அவர் அங்கு வேலை பார்த்தார் எனும் காங்கிரஸ் திக்விஜயசிங்கின் குற்றச்சாட்டுக்கு இவரே ஏன் தீனி போடுகிறார் என்பதும் புரியவில்லை.

எஸ். விஜயலெட்சுமி, திருவள்ளூர்
சசிகலா வெளியேற்றம் விவகாரத்தில் துக்ளக் சோவுக்கு பங்கு உண்டா? அவரது குமுதம் (4-1-12) பேட்டியை பார்த்தீர்களா?
தனக்கு இதில் பங்கு இல்லை என்று அவர் மறுத்திருக்கிறார். அதே நேரத்தில் சசிகலாவும் அவரது கோஷ்டியாரும் அ.தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதை மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றிருக்கிறார்.
"நிர்வாகத்தில் அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட சக்திகளின்  தலையீடு, கட்சியில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய குறுக்கீடு  போன்றவை இந்த நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டுள்ளன" என்று  பிரமாதமாக வருணித்திருக்கிறார். இது மிகவும்  வினோதம். இதே சசிகலா கோஷ்டியாருடன்தானே ஜெயலலிதா சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கினார். அப்போதெல்லாம் இந்தப் பிரச்சனையை சோ இப்படி எழுப்பியதாகத் தெரியவில்லையே! காரியம் முடிந்ததும் கழட்டிவிடும் திட்டம் ஏற்கெனவே  இருந்ததோ? போயஸ் தோட்டத்து ரகசியங்களை அவ்வளவு எளிதில் யாராலும் கணித்து விட முடியாது. சசிகலா கோஷ்டியாரின் தில்லுமுல்லுகளை இடதுசாரிகளும் அறிவார்கள். ஆனால், அண்ணா பெயரால் உருவாக்கப்பட்ட கட்சி அவரது சமூகநீதிக் கோட்பாட்டுக்கு முற்றிலும் விரோதமான சங் பரிவாரத்தினுடைய செல்வாக்கின்  கீழ் போய்விடக்கூடாது என்பதே அவர்களது கவலை.

எல்.எஸ். பாண்டி, திருநெல்வேலி
"ஒய் திஸ் கொலைவெறி" பாட்டு கேட்டீர்களா? எப்படி?
அதைக் கேட்காமல் விட முடியுமா? டி.வி.யோ, வானொலியோ எதைத் திருகினாலும் அதுதான் கேட்கிறது. முதலில் தலையாட்ட வைக்கிற இத்தகைய பாடல்கள் எல்லாம் வெகு சீக்கிரத்திலேயே காணாமல் போய்விடுகின்றன. "நாக்கு முக்கா"  என்றொரு பாட்டு என்ன போடு போட்டது! இன்று என்னாயிற்று? விஷயம் இதுதான் - உள்ளே சரக்கோ, சத்தோ இல்லையென்றால் வெறும் இசை மட்டும் காலங்கடந்து  நிற்காது. அதிலும் இந்தக் கொலைவெறியில் ஒரே ஆங்கில மயம். தமிழ்த்தாய் மீது இவர்களுக்கு ஏனிந்தக் கொலைவெறி?

ஜே.முருகுபாண்டி, திருவாதவூர்
சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகம் பற்றிக் கூறுங்களேன்?
மறைந்த பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் எழுதிய "தி இன்சைடர் " (உள்ளாள்) படித்தேன். "இது முறையான சுயசரிதையும் அல்ல, அல்லது முழுமையான ஒரு புனை கதையும் அல்ல" என்று குறிப்பு தந்திருக்கிறார் நூலின் ஆரம்பத்தில். அதாவது ரெண்டுங்கெட்டான் படைப்பு. இதிலும் சில முக்கியமான தெறிப்புகள் உள்ளன. அப்போதுதான் விவாகரத்து பெற்ற அந்த இளம்  நிலப்பிரபு தனது முன்னாள் மனைவியோடு மன்மத லீலையில் ஈடுபட்டிருந்தார். அந்த இரவில்தான் இருவருக்கும் முழு திருப்தி. அவர்கள் தலைக்கு மேலே அவர்களின் விவாகரத்துப் பத்திரம் அழகான சட்டம் போட்டு மாட்டப்பட்டிருந்தது. அடுத்த நாள் காலை ஆத்திரத்தோடு அதைப் போட்டு உடைத்தார்கள். என்ன காரணம் தெரியுமா? ஆந்திர முதல்வரான நரசிம்மராவ் அன்று காலைதான் ஓர் அவசரச் சட்டம் போட்டிருந்தார். அதன்படி நில உச்சவரம்புப் படியான உபரி நிலக் கணக்கீட்டிற்கு அதற்கு முந்தைய ஆறு  மாதங்களுக்குள் நடந்த விவாகரத்துகள் பொருந்தாது! இதை அறிந்துதான் தங்களது விவாகரத்துப் பத்திரத்தைப் போட்டு உடைத்தது  அந்த ஜோடி! நிலத்திற்காகப் புனிதமான பந்தம் எனப்பட்ட விவாகத்தையும்  போலியாக  ரத்து செய்யத் தயங்கவில்லை நிலப்பிரபுக்கள் "எண்பது சதவீத விவகாரத்துக்கள் இந்த ஆறுமாத காலத்திற்குள் வாங்கப்பட்டுள்ளன" என்கிறார் அரசு அதிகாரி முதல்வரிடம்! தன்னை மிகப்பெரிய நிலச்சீர்திருத்தவாதி போலக் காட்டிக்கொள்ள நரசிம்மராவ் முயன்றிருந்தாலும் நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் எப்படியெல்லாம் மீறப்பட்டன என்பது ஒரு காங்கிரஸ் முதல்வரின் வாக்குமூலமாகவே  வந்திருப்பது முக்கியம். அதுமட்டுமா? இந்த மீறல்களைத் தடுக்க முயன்ற காரணத்தாலேயே முதல்வர் பதவியிலிருந்து இவரை நீக்கினார் இந்திராகாந்தி என்றும் எழுதியிருக்கிறார் ராவ்! நூல் வெளிவந்த ஆண்டு 1998.

கே.ராஜசேகரன், குளித்தலை
கடைசியில் லோக்பால் மசோதா நிறைவேறவில்லையே?
அதை நிறைவேற்றுவதில் காங்கிரஸ், பாஜக இரண்டுக்குமே  அக்கறை இல்லை என்பது தெரிந்ததுதானே. லோக்பால் அமைப்பில் மதச் சிறுபான்மையோருக்கு இடம் தருவதை ஏன் எதிர்க்கவேண்டும் பாஜக?  லோக் அயுக்தா என்று தேவையே இல்லாமல் மாநில விவகாரத்தை ஏன்  நுழைக்க வேண்டும் காங்கிரஸ்?  இதிலிருந்தே புரியவில்லையா இவர்களது நோக்கம்?  இந்த இரு கட்சிகளைப் பொறுத்தவரை இந்த விவகாரம் முழுவதும் கனவில் காய்ச்சிய பாயாசம்!  இதில் சர்க்கரை போதவில்லை அல்லது கூடுதல் என்று சத்தம் வேறு! மக்கள் பணத்தில்  மூன்று நாட்கள் நாடாளுமன்றம் நடத்தியதுதான் மிச்சம்-அதாவது எம்பி.க்களுக்கு மிச்சம்!

Pin It