நாட்டுப்புறக்கதை

தொம்பய்யாவுக்கு ரொம்ப வயசாயிருச்சி. முன்னம் மாதிரி அலைஞ்சி நடந்து திரிய முடியல. அதனால குதிரை ஒண்ணு வாங்கீட்டாரு. அவருக்கென்னய்யா குதிரையென்ன யானை கூட வாங்க வகையிருக்கு.

தங்க நகை வேலைக்கு இந்த சுத்துப்பட்டி பூராத்துக்கும் இவருதான் பிரபல்யம். புதுநகைகள் செய்யிறதானாலும் பழையதை அழுச்சி மாடலா செய்யணும்ன்னாலும் நகைகள்ல அழக்கெடுக்க மெருகு போடன்னு காலையில கிளம்பிப் போனால் ராத்திரி வரைக்கும் வேலை சரீயாயிருக்கும்.

மகாலிங்கம் செட்டியார் வீட்டுக்கு தண்ணியெடுத்து வைக்கிறதுக்கு பத்து வயசுல வந்த மனுசன். அப்படியே மகாலிங்கம் ஜூவல்லர்ஸ் கடையை தூத்து தொளிக்க, கடைக்கு வர்ற வாடிக்கையாள்களுக்கு கலர், காபி, வெத்தலைபாக்கு வாங்கிக் கொடுக்கும் எடுபிடியா வாரம் ஆறு ரூபாய் சம்பளத்துக்கு இருந்தவர்தானே.

சாதியா இனமா சனமா பரம்பரை தொழில நேர்த்தி தெரிஞ்சவரா ஒண்ணுங் கிடையாது. செட்டியார் செத்ததுக்கப்புறம் கடைக்கு வர்ற வாடிக்கையாளர்களை இவரு தேடிப் போய் வேலையில அரையுங் குறையுமா இருந்தாலும் செட்டியார் பேரை வச்சி தொழிலை தொடங்குனாரு. துட்டு மளமளன்னு கொட்ட ஆரம்பிச்சிருச்சி. இவருக்கும் முன்னாடி தொழில் செய்ற பரம்பரைதொல்லாளிகள் பூராவும் பட்டறையில உட்கார்ந்து ப்பூ ப்பூன்னு ஊதாங்குழலை வச்சி ஊதுனதத்தான் கண்டது. அந்த அழுக்குவேட்டிய மாத்த ஒரு உடுமாத்து துணியில்லே.

பட்டி தொட்டி சனங்கள்ட்ட எப்படி பேசணும்ன்னு கோளாறு தெரிஞ்சு வச்சிருந்தாரு. "தொழிலோட சம்பந்தப்பட்டவன் தொழில் நுணுக்கம் தெரிஞ்சவன் எவன்ய்யா முன்னுக்கு வந்திருக்கான். சம்பந்தா சம்பந்தம் இல்லாதவன் தடபுடான்னு ரெண்டு வரிசைகள் விட்டு குறுகுன காலத்துல சம்பாத்யம் பண்ணிட்டு வகையாயிபோறாங்க. அதெல்லாம் அவனவன் வேளை. இன்னக்கி உலகமே அதான்யா" என்கிறது அவரு சூத்திரம். அப்படி லட்சக்கணக்குல சொத்து சேர்த்து என்ன செய்ய? தொம்பய்யாவுக்கு மிஞ்சுனது ஒரே ஒரு பேரன் தான். வேற வீட்டுல பொங்க பொரிக்க யாரும் கிடையாது. அப்பேர்பட்ட செட்டியார் பேரை கெடுத்து சம்பாத்யம் பண்ணதுனால கடைசி காலத்துல அவருக்கு இந்த தண்டனைன்னு ஒரு நாலுபேரு பேசிக்கிட்டாங்க. அவங்க கிடக்கான் வேலையத்தவங்க.

தொம்பய்யா ஒண்ணுங்கிணுங்கலை. 'அடியில பண்டமில்லை. இழுவையில கொன்னு போட்டான்னு' சொலவம் சொன்ன மாதிரி இன்னும் வாய் வீச்சுல வலைபோட்டு ஆள்களை மயக்கிக்கிட்டுத்தான் இருந்தாரு. தொழிலைவிட அவருக்கு அதுதான் மொதுலு. இப்பவெல்லாம் வரவர தன்னோட பேரனைப்பற்றி அவருக்கு ரொம்பக் கவலையாய்க்கிட்டே வந்தது.

நாலு கழுதை வயசாச்சி. ஒரு கூறுபாடில்லாத பயலா இருக்கான். தாத்தாவுக்கு ஒரு ஒத்தாசையா இருக்கணும்ன்னு அக்கறை கிடையாது. அவனிலும் சின்னப் பயல்களோட போயி கிட்டிப்புல் விளையாட, கிணத்துல இறங்கி புறாக்குஞ்சு புடிக்க, கூறுபாடில்லாம யார்கிட்டெயும் வாக்கொடுத்து உதை வாங்கன்னு அலையுறான். அவனை நெனச்சுத்தான் அவருக்கு மனச்சங் கட்டம். அவனை எப்படியும் தான் கண்ணு மூடுறதுக்குள்ள ஒரு வகை யாக்கிறனும்ன்னு அவரும் கால்மாடு தலமாடா அடிச்சி சொல்லிப் பாக்காரு ஒண்ணும் ஆகல.

இப்படித்தான் ஒருநாள் ரெண்டுபேரும் வழக்கம்போல தொழிலுக்கு வெளியூர் போனாங்க. இவரு குதிரை மேல உட்கார்ந்துக்கிட இவன் கடிவாளத்தை கையில பிடிச்ச மட்டுலகூட நடந்து போனான். பல ஊர் சுத்தி வரும் போது. நல்லா இருட்டிப் போச்சி.

பையில ரூபாயி நகைகள் இருந்தது. ரப்பட்டுல கள்ளன்கள் பெருவாரியா திரிஞ்சி வழிப்பறி பண்ணிக்கிட்டிருந்தாங்க. எதுக்கு வம்புன்னு வர்ற வரத்துல நடுக்காட்டுல ஒருமண்டபம் இருந்தது. இவரு மடத்துக்குள்ளே போய் பத்திரம்மா படுத்துக்கிட்டார். பேரனை வெளியே வராண்டாவில படுத்து மரத்துல கட்டிப்போட்ட குதிரைக்கு காவலிருக்கச் சொல்லீட்டாரு. அப்பைக்கப்போ எழுந்திருச்சி பயல் தூங்கிருவானோன்னு சோதனை பண்ணிக் கிட்டேயிருந்தாரு.

சாமம் போல "லேய் என்னடா பண்றேன்னு" உள்ளேயிருந்து சத்தங்காட்டுனார். அவன் மல்லாக்க படுத்தமட்டுல "தாத்தா! வானத்துல இருக்கிற நிலா ஒரு பிடிமானமில்லாம எப்படி அந்தரத்துல தொங்குது? இந்த நட்சத்திரங்கள்லாம் அதுவா முளைக்குதா இல்லே யாராச்சும் செய்ஞ்சு தொங்க விடுறாகளான்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கேன் அப்படீன்னான். பய முழிப்பாகத்தான் இருக்கான்னு படுத்துக்கிட்டாரு.

கொஞ்ச நேரங்கழிச்சி பழையபடி 'டேய்... அடேய்... என்னடா பண்றேன்ன சத்தங் கொடுத்தார். "தாத்தா! இந்த ஊதக்காத்து சிலு சிலுன்னு அடிச்சி மேலெல்லாம் சுகம்மா புல்லரிக்குதே இது தன்னால வீசதா இல்லே யாரும் அந்தப்பக்கமா நின்னு விசிறி விடுறாகளான்னு ஓசனை பண்ணிக்கிட்டிருக்கேன்னான். பய கண்ணுங்கருத்துமாத்தான் இருக்கான்னு படுத்துக்கிட்டாரு.

நேரம் விடிவெள்ளி முளைச்சிருக்கி. 'டேய் ஐயா பேராண்டி என்னய்ய பண்றே? "தாத்தா இங்கே கட்டிக்கிடந்த நம்ம குதிரை அதுவா அவுத்துட்டுப் போயிருச்சா இல்லே எவனும் அவுத்துக்கிட்டு போயிட்டானான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்' போச்சு போ'- குதிரையை எவனோ ஆத்திக்கிட்டு போயிட்டான். பழைய குருடி கதவைத் திறடின்னு தொம்பைய்யா எப்பவும் போல நடந்தே போனார். கூட கை காவலுக்கு பேரனையும் இழுத்துக்கிட்டுப் போனார்.

போன இடங்கள்ல பூராவும் தொம்பையாகிட்டே ஆளுகள் 'என்ன பெரிசு! ஒம் பேரன்ங்கிற. அதுவும் ஒரே பயங்குற. இப்படி மொட்டக்கட்டையா வச்சிருக்கியே அவனுக்கு எதாவது ஒரு சாமான் செய்து போடப்பா. வயசுப்பையனில்லையா பாக்க கொஞ்சம் பளிச்சுன்னு இருக்கட்டும்ன்னு ஆளாளுக்கு சொன்னாங்க.

 

இவரும் அடடே நமக்கு இவ்வளவு நாளும் அப்படி ஒரு நெனப்பு தோணாமப் போச்சேன்னு உடனடியா பயலுக்கு கனம்மா தங்கக் காப்பு ஒண்ணு செய்து போட்டுட்டாரு. இவனும் ரொம்ப பவுசா அதை எல்லார்க்கும் ரொம்ப பகுமானமா காட்டிக்கிட்டு திரிஞ்சான்.

அப்பொ ஒருநாள் இப்படித்தான் பட்டி தொட்டிகளெல்லாம் சுத்தி அலைஞ்சிபோட்டு திரும்பி வரும்போது கிய்ய்ய்ன்னு இருட்டிப்போச்சி. ரெண்டு பேரும் நடுக்காட்டுல மாட்டிக் கிட்டாங்க. இதுக்கப்புறம் மேக்கொண்டு நடந்தா பையில இருக்கிறதை திருடன்கிட்டெ பறிகொடுக்க வேண்டியதான்னு பேராண்டியை வழிமேல காவலுக்கு படுக்கச் சொல்லிப்புட்டு இவரு ஓடையைத் தாண்டிப்போயி கம்மங்காட்டுக்குள்ள பதுங்கிக்கிட்டாரு.

நெனச்ச மாதிரியே அஞ்சாறு திருடங்க ஓட்டமும் நடையுமா அப்படிக்கூடி வந்தாங்க. இருட்டுல வழிமேல மொட்டிங்காலைக்கூட் சுருண்டு படுத்துக்கிடந்தவனைப் பாத்து முதல்ல போன திருடன் 'டேய் வழியில என்னம்மோ பெரிய கட்டை கிடக்குடா அது மேல தடுமாறி விழுந்திராம விலகி வாங்கோ அப்படீன்னான். எல்லோரும் விலகி விலகி நடந்து ரொம்ப தூரம் போயிட்டாங்க.

இவன் சும்மாயிருக்க மாட்டாம தலையை ஒசத்தி 'ஓய்! விவரங் கெட்டவங்களா ஒங்க ஊர்கள்லயெல்லாம் கட்டைகளுக்கு கையில விரத்தண்டி காப்பு போட்டிருக்குமோ இல்லே தெரியாமத்தான் கேக்கேன் அப்படீன்னான்.

அவ்வள தூரம் போனவங்க பேச்சு சத்தங்கேட்டு திரும்பி வந்தாங்க. 'ஏய் ஆமாப்பா பய கையில வகையாவுள காப்பு ஒண்ணு கிடக்கு' அப்படீன்னு வளைஞ்சிட்டாங்க. அதுல ஒருத்தன் 'அட வாங்கப்பா வேலையத்துப்போயி இந்தப் பொடிப்பயகிட்டெ நின்னுக்கிட்டு அந்த மட்டுல தங்கத்துல செஞ்சி பயமில்லாம வந்து நடுக்காட்டுல படுத்துக்கிடப்பானாக்கும். வாங்கப்பா போவோம். எதாவது தகரத்துல வளைச்சி போட்டுருப்பான் வாங்க வாங்க. "

அவ்வளதான் இந்தப்பயலுக்கு ரோசம் வந்திருச்சி. "என்னது தகரமா எது தகரம்? இது தகரமா தங்கமாங்கிறதை கம்மபந்தட்டைக்குள்ள இருக்கிற தாத்தா தொம்பய்யாகிட்ட கேட்டா தெரியும். அடி சக்கைனைக்கா தகரமாம்ல தகரம்". வலிப்பம் காட்டுனான்.

அவ்வளதான் கம்மந்தட்டைகளுக்குள்ள கிடுகிடுன்னு நடுங்கிக்கிட்டு நகை பணப்பையை இறுக்கி பிடிச்சமட்டுல படுத்திருந்த தொம்பைய்யா அவ்வளவும் பறி கொடுத்ததுமில்லாம ஒளிஞ்சுக்கிட்டாயிருக்கேன்னு உதை வேற. இந்தப்பயலுக்கும் செமத்தியான அடி. கைக்காப்பும் பறிபோயிருச்சி.

பேரனை தொழிலுக்கு பழக்க கொண்டுவந்து ஏகப்பட்ட நட்டம். அடி மேலஅடி வாங்குனதுல மலைச்சிப்போயி தொம்பைய்யா வீட்டுல கிடையா படுத்துட்டாரு. வயசும் இந்தா அந்தான்னு முக்காலரைக்கா பருவத்தை நெருங்கிருச்சி. வருமானமில்லாம கைத்துட்டை செலவு செய்யுற கவலைவேற. லட்சக்கணக்குல துட்டு இருந்தாலும் இருப்புத்துட்டுயெடுத்து வீட்டுச்செலவு பண்றது தொம்பைய்யா மனசுக்கு ஒவ்வாத சமாச்சாரம். 'இருந்து தின்னா இரும்பும் கரையும்ங்கிறது அந்தக்காலத்துச் சொலவடை.

தற்சமயம் உடம்பு கொஞ்சம் தேறி வர்ற வரைக்கும் இதுக்கு ஒரு உபாயம் பண்ணினாரு. பித்தளையில சங்கிலி செய்து அதை தகதகன்னு தங்கம்போல பாலீஸ் பண்ணி சின்னக் குழந்தைக வியாபாரமா ஒரு சங்கிலி அஞ்சு ரூபா மேனிக்கு பேரனைப் போயி வித்துட்டு வரச் சொல்லி அனுப்புனாரு. எதோ அன்னாடு செலவுக்கு ஆனால் போதுமின்னு அவரு கணிப்பு.

அவனும் சந்தோசமா வியாபாரத்துக்கு கிளம்புனான். போன அன்னைக்கே வியாபாரம் அத்தனையும் வித்து முடிச்சி திரும்பிட்டான். தொம்பைய்யாவுக்கு பெருமைக்காலு தாங்கல. "என் ராசா ஏங் ராஜாஜி, ஏங் ஜி. டி. நாயுடு, எந்தானாவதி, எஞ்சீனாவெடி எஞ்சீனிசக்கரை அவ்வளவுமா ஒரே நாள்ல வியாபாரம் பண்ணிட்டேன்னு அவருக்கு ஆனந்தங் கொள்ளலை. சந்தோசத்துல பேரனை ஏற இறங்க பார்த்துக்கிட்டேயிருந்தார்.

"ஆமா தாத்தா போன ஒரு வீச்சுல அவ்வளவும் மளமளன்னு வித்துப்போச்சி. ஆனா தாத்தா ஒரு சின்னத்தப்பு பண்ணீட்டேன் தாத்தா. சங்கிலி ஒன்னுக்கு அஞ்சு ரூபான்னு பெட்டி மேல எழுதி ஒட்டியிருந்தியா நான் சரியா கவனிக்காம அஞ்சஞ்சு பைசான்னு வித்துப்போட்டேன் தாத்தா"

"அட கோட்டிப்பய கெடுத்தியே. மொத மொத வியாபாரத்துக்குப் போயி இப்படியா கோட்ட விடுவே. அஞ்சு ரூபாய்க்கு பதுலா அஞ்சு பைசான்னு வித்திட்டு வந்து நிக்கிறியே முட்டாப்பயலே. சரி தொலையட்டும் போ. பரவாயில்லே. அதுலயும் நமக்கு மூணு பைசால மிச்சமிருக்கு. பாதகமில்லே. அப்படீன்னு பேரன் தலையை வாஞ்சையா தடவிக் கொடுத்தாரு. முகத்துல வியாபாரிக்கான களை கட்டி நிற்கிறதா அவருக்கு பேரனைப் பார்க்க பார்க்க சந்தோசம் சொல்லி முடியல.

இப்பொவெல்லாம் தொம்பைய்யாவுக்கு எழுந்திருச்சி நடமாடவே முடியல. கம்பு ஊனித்தான் லேசா நடமாடுறார். பேரனைப் பார்த்து பார்த்து கண்ணீர் விட்டார். எப்படிரா பொழைக்கப்போறே நைனா எப்படி பொழைக்கப் போறேன்னு ரெண்டு கையையும் விரிச்சு அழுதார். கவலைப்படாதே தாத்தா நானும் நாலு பேரைப்போல நகைப்பட்டறை வச்சு பிழைச்சிக்கிடுவேன் தாத்தா" அப்புராணியாய் சொன்னான்.

"அதான் எப்படி செய்து கொடுப்பே? எப்படி? சொல்லு பாப்போம்.

"அந்தத் தொழில் பாரம்பர்யம் தெரிஞ்ச ஆள்ககிட்டேப்போயி நீக்குப் போக்கா கத்துக்கிடுவேன் தாத்தா"

"அடேய் இப்படி வா....அப்படீன்னு பக்கத்துல உட்காரவச்சு மெதுவா காதோடு காதா தொழில் ரகசியங்களைச் சொல்ல ஆரம்பிச்சார். பூர்வீகமா இந்தத் தொழில் பண்றவங்க மாதிரி நீயும் தொழில் பண்ணுனீயின்னா உலையை ஊதி ஊதி நெஞ்சு உணந்து சாக வேண்டியதான். ஒண்ணுந் தெரியாட்டாலும் அவங்களைவிட தெரிஞ்ச மாதிரி தாம்தூம்ன்னு பேசி அப்படியாக்கும் இப்படியாக்கும்ன்னு ரெண்டு கஜகர்ணம் கோகர்ணங்களைப்போட்டு விலைச்சவுகரியம் பண்ணுற மாதிரி ஏதோ நாம நட்டப்பட்ட மாதிரி ஜனங்களை நம்ப வைக்கணும். ஊர்க் கதை பேசிக்கிட்டே அவங்கள்ல ஒருத்தரா சாதூர்யம் பேசணும். பேரனை ரொம்ப நெருங்கி,

"அடேய் நகை செய்து கொடுக்கும்போது செட்டி, முதலி, பிள்ளை, ஐயரு, ராஜூக்க இவன்களுக்கு ஒண்ணுக்கு முக்கால் கொடுத்திரணும். ஆன நிலுவையில ஒரு பவுன் இருக்கணும்.

"ஒரு பவுன்னா நகையை ஒரு பவுன் செய்யப்படாதா தாத்தா"

"சே..கூடாதுப்பா கூடாது. பேரனைப் பார்த்து இடவலமாய் தலையை ஆட்டி அதுவும் இவங்களுக்கு ஏன் முக்கால் கொடுக்கணும்ன்னா இவங்க எப்பவும் நகையில புழங்கிக்கிட்டேயிருக்கிறவங்க. இதர சேர்மானம் நிறையச் சேர்த்தம்ன்னா வேர்வை பட்டு பட்டு நிறம் மங்கி காட்டிக் கொடுத்திரும். அதனால முக்கால்த்திட்டம் சேத்துதான் தீரணும்.

அடுத்து இந்த ரெட்டி, கவுண்டரு, ஆசாரி, நாயுடு இப்படியாப்பட்ட ஊடுதட்டு ஆளுகளுக்கு பாதிக்குப்பாதி சேர்த்து கொடுத்தாப்போதும். இவங்க அவங்களுக்கு அடுத்தபடியா பிறந்ததிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் காதுல மூக்குல பொடிபொட்டு சாமான்களை போட்டுக்கிட்டு திரியுறவங்க. பாதியெடுத்தா பாதகமில்லே பொடிபொட்டுச்சாமான் பெரிசா காட்டிக் கொடுத்திராது. அடுத்து இந்த கோனாரு, வேளாரு, பள்ளு, பறை, மூப்பரு, மறவரு இவங்களுக்கு கால்வாசி தங்கம் சேர்த்தா போதும். இவங்க எந்தக்காலம் பவுனு வாங்கி மேனியில போட்டான்? கையில வாங்குனதும் ரெமி பவுடர் டப்பாவுல போடுறவன் தான். நல்லது பொல்லதுக்கு அதைக்கிண்டி கிளச்சி பாத்து மூடி வச்சிருவான். வெறும் பித்தளை செம்பை கொஞ்சம் பளிச்சின்னு பார்வையா இருக்கும்படி செய்து கொடுத்தாலும் சொக்கத்தங்கம்ன்னு வாங்கிட்டுப் போயிடுவான் இருந்தாலும் அதுலெ ஒண்ணொன்னு ரெண்டு விபரங்தெரிஞ்சது கொஞ்சம் நிறம் மங்குனதும் அரிவா, கம்பு, கத்தின்னு தூக்கிக்கிட்டு வந்திருவான். அதனால கால்வாசி தங்கம் சேர்த்துத்தான் ஆகணும். " சொல்லிப்புட்டு சோர்வா தலைய கவிழ்ந்து ஆசுவாசமானார்.

அப்படி சேர்க்கிறது கூட தொம்பைய்யாவுக்கு ரொம்ப கவலையாயிருந்தது. திடீர்ன்னு ஞாபகம் வந்தவனாய் பேரன் தாத்தாவைப் பார்த்து "அப்பொ இந்த சங்கிலிய சாதிக்கு?" அப்படீன்னு கேட்டான். அவ்வளதான் கட்டில்ல எழுந்திருக்க மாட்டாம கிடந்த தொம்பைய்யா தடாபுடான்னு எழுந்திருச்சி பக்கத்திலிருந்த தன் ஊனுகம்பை எடுத்து பேரனை விரட்டி விரட்டி அடிச்சார். அவன் அடிதாங்க மாட்டாம ஓடினாலும் விடாம வீட்டை சுத்தி சுத்திப் போயி அடிச்சார். அவன் ஐயோ, ஐயோன்னு கதறுனான். "நீ உருப்படமாட்டே நீ பொழச்சுக்கிட மாட்டே... சக்கிலிய சாதிக்கு தங்கம் கொடுக்கணும்ன்னு நெனச்ச அன்னக்கி நீ விளங்க மாட்டே. அடேய் அவங்களுக்கு என்னடா தெரியும்? தங்கம்ன்னா தெரியுமா. பித்தளை, செம்புன்னா கண்டிருக்கானா? அவங்களுக்கு தங்கம் எவ்வளவு சேர்க்கணும்ன்னு கேக்கிறியே அட பைத்தியக்காரப்பயலே... ஒரு பவுனுக்கான ரூபாய் வாங்கிக்கிட்டு அந்தா அந்த அஞ்சு பைசான்னு வியாபாரம் பண்ணுனியே அந்த சங்கிலி கூட அவனுக்கு ஜாஸ்திடா. ஐயையோ இதைக்கூட உனக்கு சொல்லித் தரவேண்டியிருக்கே... ஏ....பகவானே உனக்கு கண்ணில்லையா. இவன் எப்படி பொழைக்கப்போறானோ...

Pin It