மேலே இருப்பவை வெறும் எண்கள் அல்ல. இயக்கத்தின் வரலாற்று நினைவுகளை குறிக்கும் எண்கள். வருகின்ற 2009 நவம்பர் 3ஆம் தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் துவங்கி தனது 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்திய சமூகத்தில் 30 ஆண்டுகளாய் இளைஞர்களுக்கு என்று இளைஞர்களால் நடத்தப்படும் ஒரே அமைப்பு டி.ஒய்.எப்.ஐ மட்டுமே. தேசப்பிரச்சனைகள் துவங்கி தெருப்பிரச்சனைகள் வரை ஆயிரக்கணக்கான போராட்டங்களை இந்த 30 ஆண்டுகளில் டி.ஒய்.எப்.ஐ நடத்தியுள்ளது.

சுதந்திரம் கிடைத்த நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இந்த நாட்டு மக்களை வேதனையில் உழல வைத்தார்கள். நாட்டின் இளம் தலைமுறையை வீதிகளில் வேலைத்தேடி அலைய வைத்தார்கள். சரித்திரத்தின் பக்கங்களில் பயணிக்கும் போது சரித்திரத்தின் சக்கரங்களை சுழல வைப்பது இளமை என்கிற சக்திதான் என்பதை எவரும் உணர்வார்கள். இங்கும் அதான் நடந்தது. வேலையற்ற இளைஞர்களின் சக்தி தடம் புரலாமல் ஒருங்கிணைந்த போராட்ட சக்தியாய் ரூபம் கொள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்ற அமைப்பு உருக்கொண்டது. வேலை கேட்பது இளைஞனின் உரிமை! வேலை கொடுப்பது அரசின் கடமை! என்ற முழக்கத்துடன் தேசம் முழுவதும் வேர்கொண்டது. 18 வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வெற்றி அடைந்ததும், பல மாநிலங்களில் வேலையில்லாக் கால நிவாரணம் கேட்டு வெற்றி அடைந்ததும் வாலிபர் சங்க வரலாற்றில் மைல்கல்கள்.

தமிழகத்தில் நாம் வாலிபர் அமைப்பை துவக்கியவுடன் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இளைஞர்கள் இல்லாதவர்கள்தான் இளைஞர் அமைப்பை துவக்குவார்கள் என்று நக்கல் மொழிகளை கூறினார்கள். ஆனால் தமிழகத்தில் தொடர் போராட்டங்களை வாலிபர் சங்கம் நடத்தி வளரும் சக்தியாக மாற மாற வேறு வழி இல்லாமல் அவர்கள் இளைஞர் அணியை துவக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். கடந்த 2007ஆம் ஆண்டு வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு திரட்டிய இளைஞர் பட்டாளம், திமுக 25 ஆண்டுகள் கழித்து இளைஞர் அணி மாநாட்டை நெல்லையில் கூட்டியது. அதிமுக இளைஞர்கள் பாசறை, பாட்டளி மக்கள் கட்சி இளைஞர் அணி மாவட்ட மாநாடுகள், இளம் சிறுத்தைகள் துவக்கம் என தமிழக அரசியல் களம் இளைஞர்களை மையம் கொண்டு அசையத் துவங்கியது.

நாடு முழுவதும் இன்று டி.ஒய்.எப்.ஐ உறுப்பினர் எண்ணிக்கை 1.75 கோடி. உலகின் இரண்டாவது மிகப்பெரிய இளைஞர் அமைப்பு டி.ஒய்.எப்.ஐதான். இந்திய நாட்டின் இளைஞர்களின் நம்பிக்கையை ஏதோ சாதி, மத, இன, வட்டார, தேசிய உணர்வுகளைக் கிளப்பி பெறவில்லை. கடுமையான போராட்டத்தால், நூற்றுக்கணக்கான இளைஞர்களின் தியாகத்தாலும் காவல்துறையோடு, பிரிவினைவாதிகளோடு, சமூக விரோதிகளோடு நடந்த மோதலில் சிந்திய உதிரத்தாலும் பெற்ற அங்கீகாரம் இது. இத்தகைய இளைஞர் அமைப்பை தமிழகத்தின் வீதிகள் தோரும் விதைப்பது நமது கடமை. வீதிதோரும் வாலிபர் சங்கக் கிளைகள்! வீடுகள் தோரும் நமது உறுப்பினர் என்ற இலக்கை கொண்டு செல்வோம்!

தமிழகத்தில் பல ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் ஆட்சி செய்துவருகின்றனர். அவர்களிடம் பணபலம், ஆட்சியதிகாரம் அனைத்தும் இருந்தும் கூட இளைஞர்களுக்கான ஒரு பத்திரிகையை நடத்த இயலவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக இளைஞர் முழக்கம் தமிழக இளைஞனின் குரலை ஒலித்துக்கொண்டே இருக்கிறது. எண்ணற்ற இன்னல்கள், கடுமையான நிதி நெருக்கடி இருப்பினும் தனது பயணத்தை நிறுத்தவில்லை.

1984ஆம் ஆண்டு இந்த இதழ் துவக்கப்பட்டபோது தனக்கென சில இலக்குகளை தீர்மானித்தது.

அமைப்பை விரிவுபடுத்துவதையும் உறுப்பினர்களின் தத்துவ, அரசியல், சமூக உணர்வுகளை மேம்படுத்துவதையும் இந்த இதழ் நோக்கமாகக் கொண்டு செயல்படும்.

வாலிபர் சங்க உறுப்பினர்களில் பலர் எழுத்தாற்றல் மிக்கவர்கள், கலை இலக்கிய உணர்வு கொண்டவர்கள் அவர்களது திறன் மேலும் மேலும் வளர வேண்டும் என்று விரும்புகிறோம்.அவர்களது படைப்புகள் இந்த இதழில் இயன்ற அளவு பிரசுரிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.